மகனை அடித்துக்கொன்றது ஏன்?-கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம்
ஆட்டையாம்பட்டியில் மகனை அடித்துக்கொன்றது ஏன்? என்பது குறித்து கைதான தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொழிலாளி கொலை ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). விசைத்தறி தொழிலாளி.
இவருடைய மகன் மணி (37). கேட்டரிங் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தந்தை, மகன் 2 பேருக்கும் மதுஅருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மதுபோதையில் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 23-ந் தேதி இரவு சுமார் 10.30 மணிக்கு சுப்பிரமணி மற்றும் மணி ஆகியோர் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, தனது மகன் மணியை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்றார். பரபரப்பு வாக்குமூலம் இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த சுப்பிரமணியை கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- எனது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து விட்டார். எனக்கு 2 மகன்கள் இருந்தனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு கல்வடங்கம் ஆற்றில் எனது மகன் வடிவேலு நீரில் மூழ்கி இறந்து விட்டான்.
இதைத்தொடர்ந்து மற்றொரு மகன் மணியும், நானும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், போதையில் அடிக்கடி குடிபோதையில் தகராறில் ஈடுபடுவோம். பணம் கேட்டான் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் மணி என்னிடம் போதையில் மேலும் மது குடிக்க பணம் கேட்டான்.
நான் இல்லை என்று மறுத்தேன். பணம் கொடுக்க மறுத்ததால் கட்டையால் என்னை அடித்தான். அவன் அடித்த கட்டையை பிடிங்கி அவனை நான் கழுத்து பகுதியில் அடித்தேன். இதில் சுருண்டு விழுந்து மணி இறந்து விட்டான். தந்தைக்கு மகன் பணம் கொடுத்து காப்பாற்றுவதை விட்டுவிட்டு, என்னிடம் பணம் கேட்டதால் ஆத்திரத்தில் அடித்துக் கொன்று விட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
![]()