கட்டுரைகள்

அலப்பறைக்கு அளவில்லையா?… சங்கர சுப்பிரமணியன்.

உலகம் தோன்றிய நாளில் இருந்து இந்த அலப்பறைகளும் தோன்றிவிட்னன போலும். முதலில் பகுத்தறிவாளர்களுக்கும் நாத்திகர்களுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல ஆத்திகர்களுக்கும் இயற்கைதான் இறைவன் என்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளன. பகுத்தறிவு என்று பேசுபவர்களை நாத்திகர்கள் என்று எண்ணுவதும் இயற்கைதான் இறைவன் என்பவர்களை ஆத்திகர்கள் என்று எண்ணுவதும் முரணாகும்.இறைவனை மனதில் எண்ணினால் போதாதா? எப்போதும் அவன் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கவேண்டுமா? தொடர்பு சாதனங்களின் முன்னேற்றம் வந்தாலும் வந்தது யார் என்ன செய்கிறார்கள் என்பதையே அறியமுடியவில்லை. கைபேசியில் ஏர்பாட்ஸ் மூலம் பேசுகிறாரா? மன உளைச்சலால் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்களா? என்பதெல்லாம் தெரிவதே இல்லை.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இதுபோல் தனியாகப் பேசிச் சென்றால் ஐயோ பாவம் யார் பெற்ற பிள்ளையோ பைத்தியம் பிடித்து தன்னால் பேசியபடியே போகிறார் என்று அனுதாபப் படுவார்கள். அதற்காக அப்படித் தனியாக பேசுபவர்கள் எல்லாம் அவர்கள் யாருடனோ பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று இக்காலத்தில் ஒரேயடியாய் நம்பிவிடவும் முடியாது. அதற்கு உண்மைச்சம்பவம் ஒன்றையும் சொல்கிறேன்.ஒருமுறை நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த விழாவிற்காக சென்றிருந்தார் ஒருவர். பத்து பன்னிரெண்டு பேர் வந்திருந்தனர். அவர்களில் ஒருசிலரை அவர் பார்த்ததே இல்லை. அவர்களுள் ஒருவர் அவருக்கு சற்று வித்தியாசமாகப் பட்டார். அந்த வித்தியாசம் அவரை உற்று நோக்க வைத்தது. அவரை கவனிக்க ஆரம்பித்ததில் இருந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். ஒருமணி நேரம் சென்றபின்னும் அவரைக் கவனித்தபோதும் பேசிக்கொண்டேதான் இருந்தார்.ஏதோ பிரச்சனைபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் வந்த இடத்தில் இப்படி பேசிக் கொண்டே இருப்பாரா?ஆனால் அவரிடம் ஒரு வேறுபாட்டைகாணமுடிந்தது. என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்களா? அது என்னவெனில் பேசும்போது யாரும் முகத்தில் சிறுமாற்றமோ கைகளை ஆட்டாமலோ சிலைபோல அசையாது இருக்கமாட்டார்கள். குறைந்த பட்சம் முகத்தில் ஒரு புன்னகையோ சோகமோ எதிர்பார்ப்போவென ஏதாவது ஒரு உணர்ச்சிதென்படும்.இவரோ முற்றிலும் வேறுபட்டிருந்தார். இன்னும் கொஞ்சநேரம் போனால்ஆர்வத்தை அடக்க முடியாமல் கவனித்துக் கொண்டிருந்தவர் யாரிடமாவது கேட்டிருப்பார். படிக்கும் காலத்தில்தான் அவ்வளவு எளிதாக பாடத்தில் சந்தேகம் தெளிந்து உடனே விடை கிடைக்காது. இப்போதெல்லாம் இதுபோன்றவற்றிற்கு எல்லாம் பகவான் கிருபையால் உடனே விடை கிடைத்துவிடுகிறது. அது அவருக்கும்நடந்தது.சிறிது நேரத்தில் அவர் தற்செயலாக கடந்து சென்றார். அப்போது மர்மத்தின் முடிச்சும் அவிழ்ந்தது. அவர் யாருடனும் பேசிக் கொண்டிருக்கவில்லை. வியப்பின் எல்லைக்கே சென்றார் அவரை கவனித்துக் கொண்டேயிருந்தவர். பகவான் பெயரைத்தான் விடாமல் தொடர்ந்துசொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்தது. அவர் பெரிய கடவுள் பக்தராம். அதற்காக இப்படித்தான் மற்றவர்களுக்கு விளம்பரம் போட்டு காட்டவேண்டுமா? வந்த இடத்தில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதை விட்டு இப்படியும் ஒரு பக்தியா?இதுபோல் என் உறவினர் ஒருவரின் கதை என்னை தூக்கிவாரிப் போட்டது. அவர் வாழ்ந்த வீட்டின் ஒரு பெரிய அறையே சிறு கோவில்போல் இருக்கும். அந்த பகவான் அருளால் ஒருமாடி வீடு வாங்கினார். பகவானை குடியமர்த்த கீழ்தளத்திலேயே நல்ல பெரிய அறை இருந்தது. மனமகிழ்ந்து பகவானைக் குடியேற்றி பரவசமடைந்தார். சில மாதங்கள் சென்றன. அவர் வீட்டிற்கு வந்த நண்பர் குடும்பத்தில் குட்டையை குழப்பிவிட்டு சென்றார்.குட்டையை குழப்புவதில் சிலர் வல்லவர்கள். அதுபோல் வந்த நண்பர் குழப்பியது அவரை மனம் கலங்க வைத்தது. நண்பர் என்ன சொல்லி குழப்பியிருப்பார்? வேறொன்றுமில்லை, அதாவது கீழே பகவான் இருக்க மேல் தளத்தில் நடப்பது சரியா? என்று கேட்டுத்தான் குட்டையை குழப்பிவிட்டு சென்றிருக்கிறார் வந்திருந்த நண்பர். நண்பர் சொன்னதை வேதவாக்காக எண்ணியவர் பகவானுக்கு பாதகம்செய்கிறோமோ என்று எண்ணி வருந்தினார்.முடிவில் பகவானை மேல்தளத்தில்புலம்பெயர வைத்ததோடு மிகவும் சிறிய அறையில் சிறைபடவும் வைத்தார் உறவினர். எல்லாம் பகவான் செயல் என்று எண்ணுபவர்இதை அப்படி எண்ணாமல் நண்பர் சொன்னார் என்பதற்காக நண்பர் சொன்னதை செயலாக்கி விட்டாரே என எண்ணினேன். சில ஆண்டுகள் சென்றன. அவருக்கு பலமாடிக் கட்டிடத்தில் பகவான் அருளால் ஆடம்பரமான அபார்ட்மண்ட் வாங்கும் வாய்ப்பு கிடைக்கவும் அந்த அபார்ட்மண்டை வாங்கி அங்கே குடியேறினார். எல்லோரையும் அழைத்து விருந்து கொடுத்தார்.நானும் சென்றிருந்தேன். வீடு மிகவும் பிரமாதமாகவே இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் எனது மனதை உறுத்தியது. அதாவது மாடி வீட்டில் பகவான் கீழ் இருந்தார் என்பதால் நண்பன் சொன்னான் என்று மேலுள்ள சிறிய இடத்துக்கு பகவானைபுலம்பெயர வைத்தார். ஆனால் இப்போது இந்த அபார்ட்மண்டுக்கு மேல் இருபது தளங்கள் உள்ளனவே அவர்கள் எல்லோருமே இப்போது கீழிருக்கும் பகவான் நடப்பார்களே இதற்கு என்ன செய்யப் போகிறார் என எண்ணினேன்.என்னிடம் உள்ள கெட்ட பழக்கம் மனதில் பட்டதை கேட்டு விடுவேன் என்பதால் உறவினரிடம் கேட்டே விட்டேன். இன்னும் ஒருபடி மேலேசென்று அவரது நண்பரைப் பற்றியும் ஞாபகப் படுத்தினேன். இப்போது அந்த நண்பர் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் எனக்கேட்டேன். உடனே அவர் முகம்மலர்ந்து இப்போது அவனால் ஒன்றும் என்னிடம் சொல்லமுடியாது ஏனென்றால் அவனே கீழ்தளத்தில் ஒரு அபாரட்மண்டில்தான் இருக்கிறான் என்றார்.நான் உறவினரை விடவில்லை. சரி உன் நண்பனை விடு. இப்போதும் நீ கீழே இருப்வர்களின் அறையிலுள்ள பகவான்களின் மேல் நடக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஒவ்வொரு தளத்தில் இருப்பவர்களும் அவர்கள் வாழும் தளத்தின் கீழுள்ள தளத்தில் வசிப்பவர்கள்பகவான்களின் தலைக்குமேல்தான் நடக்கிறார்கள். அதற்காக எல்லோருமேமேலேயுள்ள கடைசித் தளத்திற்கா செல்ல முடியும். பகவான் எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறார். அதைப் புரியாமல் கீழே இருக்கிறார் மேலே இருக்கிறார் என்கிறீர்களே என்று என்னையே திருப்பிக் கேட்டார்.என்னால் அவரா தத்துவமெல்லாம் பேசுகிறார் என்று நம்ப முடியவில்லை. வாயைமூடி அமைதியானேன். என்னடா இது உலகம்? இதையே நான் சொன்னால் பகுத்தறிவுடன் சொல்கிறேன் என்பதை ஏற்காமல் என்னை நாத்திகன் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் அவர்கள் பகுத்தறிவு பேசினால் அது ஆத்திகம் என்றே அறியப்படும்.இன்னொரு கூட்டம் புதிதாக தோன்றியிருக்கிறது. உலக நாடுகளில் வாழும் அனைவரும் தொலைபேசியில்அழைக்கும்போதும் அல்லது அழைப்பை ஏற்கும் போதும் “ஹலோ” என்பார்கள். ஆனால் இந்த கூட்டத்தினரோ தொலைபேசியில் அழைக்கும் போதும் அல்லது அழைப்பிற்கு பதிலளிக்கும் போதும் “ஹலோ” என்று சொல்லமாட்டார்கள் அதற்கு பதில் கடவுள் பெயரைச் சொல்வார்கள். இதோடு மட்டும் இந்த கொடுமை நின்று விடுவதில்லை.ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும் வணக்கம் என்றோ அல்லது குட்மார்னிங் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் வணக்கம் சொன்னால் அவர்கள் பதிலுக்கு வணக்கம் என்று சொல்லாமல் கடவுளின் பெயரைச் சொல்வார்கள். அவர்களும்வணக்கம் சொல்லவும் மாட்டார்கள் கடவுள் பெயரைச் சொல்வார்கள். வணக்கத்தைத்தான் அப்படிச் சொல்கிறார்களாம். நாம் அதை வணக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமாம். நாமும் வணக்கம் என்று சொல்லாமல் கடவுள் பெயரைத்தான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். புதுக் கலாச்சாரத்தை உருவாக்குகிறார்களாம்.இப்போது ஒரு கற்பனை செய்வோம். இந்த புரட்சியாளர்கள் நமக்கு வணக்கம் சொல்லாமல் வணக்கத்திற்கு பதிலாக கடவுள் பெயரைச் சொல்வதுபோல் நாமும் கடவுள் பெயரைச் சொல்லலாம் அல்லவா? அவர்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் கடவுள் பெயரைச் சொல்லாமல் நம் கடவுள் பெயரைச் சொன்னால் எப்படியிருக்கும்? உதாரணத்துக்கு அவர்களுக்கு பதில் வணக்கமாக நாமும் ஆத்தா கருமாரி என்றோ முனீஸ்வரா என்றோ சொன்னால் எப்படி இருக்கும்?

இவர்களது புரட்சி பிற மதத்தினரிடமும் அப்படியே இருக்குமா? வெள்ளையர்களிடமும் கூட வணக்கத்திற்கு பதில் கடவுள் பெயரைத்தான் சொல்வார்களா? சந்தேகம் தான். ஏனென்றால் இப்படிப்பட்ட புரட்சியாளரில் ஒருவர் தன் சகோதரரை என் முன்னால் தொலைபேசியில் அழைத்தார். ஆனால் கடவுள் பெயரைக் கூறவில்லை. ஊருக்குத்தான் உபதேசம் என்பதை அறிந்து கொண்டேன். வேறு மதத்தினர் இவர்களை அழைக்கும்போது ஹலோ என்றோ வணக்கம் என்றோ சொல்லாமல் அவர்களது கடவுள் பெயரைச் சொன்னால் எப்படி இருக்கும்? இது கூடவா தெரியாது.போனஸாக இன்னொன்றையும் சொல்கிறேன் சில வெள்ளையர்கள் நம் பெயரை சொல்லத் திணறுவதுபோல் நடிப்பார்கள். இது ஒரு இண்டர்வியூவிலோ அல்லது நாம் அவர்களிடம் எதையாவது எதிர்பார்த்து செல்லும்போதோ நடக்கும். அதுவே ஒரு வெள்ளையர் நம்மைநாடி வந்தால் அல்லது நம்மால் ஒன்று நடக்க வேண்டும் என்றால் நம் பெயர் சரியான உச்சரிப்புடன் வரும். இதுதான் உலகம்.மற்றவர்களைப் புரிந்து கொள்ளாத இந்த அலப்பறைக்கு அளவே இல்லையா? என்று எண்ணத்தான் என்னால் நம்மால் முடியும்.-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *