மூத்தவளாய் நீயிருந்தாய்!…. சட்டத்தரணி… செல்வத்துரை ரவீந்திரன்.

![]()
மறைந்துவிட்டவரின் வாழ்வுபற்றி, அவரின் நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் அன்னாரின் மரணச்சடங்குகளிலோ அல்லது அந்தியேட்டி நிகழ்வுகளிலோ பேசுவதைக் கேட்கும்போது, இவையெல்லாவற்றையுமே அன்னார் வாழ்ந்த காலத்திலேயே அவரது காது குளிர சொல்லியிருப்பார்களா என நினைத்துக்கொள்வேன்.
சில இடங்களில் மறைந்துவிட்டவரை பற்றி உருகுபவர்களையும் அவதானித்திருக்கின்றேன். மறைந்தவர் வாழ்ந்த காலத்தில் அவர் அன்னாரோடு முரண்பட்டு, அவரை திட்டித்தீர்த்தவராகவும் இருப்பார். அவற்றை மறந்து அல்லது, மற்றவர்கள் அவைகளை மறந்திருப்பார்கள் என எண்ணிக்கொண்டு மறைந்தவரின் அகப்பண்புகள் பற்றி அளப்பார். இதைவிட, கல்வெட்டுக்கள் எனப் பல.
“ என்னடா பரமானந்தா இந்த உலகம் “ என நினைப்பதைத் தவிர வேறு வழியிருப்பதில்லை. நண்பர்கள் உறவினர்களிடையே இவைபற்றி பேச்செழும்போதெல்லாம் அவர்கள் தமிழரது பண்பாட்டில் இறந்தவரைப்பற்றி அவதூறு பேசக்கூடாது. அது அதர்மம், பண்பல்ல என்று நியாயம் கூறுவார்கள்.
அப்படியானால், தமிழரது வழக்கங்களில் இன்னொரு அதர்மமும் காலம் காலமாகவே வளர்ந்து வேரோடியிருக்கிறது என்பதையும் சொல்லத்தான் தோன்றுகிறது.
நல்ல ஜீவன் ஒன்றை, திறமை கொண்டவரை, தனது வாழ்வையே மற்றவர்களுக்காக அர்ப்பணித்தவரை, அவர் வாழ்ந்த காலங்களிலேயே போற்றி கௌரவிக்காமல், அவர் இருக்கிறாரா…? இல்லையா…? என்று கூட கண்டுகொள்ளாமல், கடந்துவிட்டு, அவரது மரணத்தின் பின்னர், கண்டுபிடித்து நினைவுநாட்களும் , நினைவேந்தல் நிகழ்வுகளும் ஏற்படுத்தி அவரது உருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து பிரபல்யப்படுத்தும் பண்பும் வளர்ந்திருக்கிறது.
செக்கிழுத்த செம்மல் வ. உ.சி என்ற சிதம்பரப்பிள்ளை தனது செல்வத்தை எல்லாம் இந்திய விடுதலைக்காக சுதேசிய கப்பல் கம்பனி நடத்தி, தாரைவார்த்து நொந்து நலிந்தவர். தனது சிறைவாசத்தின் பின்னர், அவரது சட்டத்தொழிலுக்கும் அவர் சிறை சென்று வந்ததால் மக்கள் ஆதரவு தரப்பயந்தனர். அவர் சிறை சென்று வந்ததால் இருந்த பயம். ஆகவே அவர் புண்ணாக்கு, எண்ணெய்
வியாபாரங்களிலும் ஈடுபட்டு நட்டப்பட்டு, கடன் சுமைகள் ஏறி, வாங்கிய சிறிய தொகையைக்கூட திருப்பித்தர முடியாமல் மரணிக்கும் வேளையிலும் ஏங்கி ஏங்கி வறுமையுடன்தான் இயற்கை எய்தினார்.
அவர் இருந்த காலத்தில் அந்தச் சிறிய கடனை தியாகங்கள் கருதி அடைக்கவும் எவரும் முன்வரவில்லை.
இன்றெல்லாம் வீரம் நிறைந்த கண்களுடனும் மீசை முண்டாசுடனும் காணுமிடமெல்லாம் எம்மை ஊன்றிப்பார்த்திருக்கும் பாரதியார், வாழ்நாளில் அடுத்த நாள் சமைப்பதற்கு அரிசி எங்கிருந்து வரும் என்று ஏங்கிக்கொண்டுதான் சீவியம் நடத்தினார்.
அடிவயிறு பசியால் எரிந்தாலும், “ தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திவிடுவோம் “ என்ற பாரதியார், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் சிதறுதேங்காயை பசிக்கு கடித்துக்கொண்டே கவிதை சொன்னார். இன்று பாரெங்கும் பாரதி துதி பாடுகின்றோம்.
ஆனால், அவர் வாழ்ந்து இளம் வயதிலேயே மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவரைப்பற்றி அந்த மரணச்சடங்கில் கூட பேசுவதற்கு பலரில்லை.
இதைப்போல எமது தாயகத்தில் நம்மவர்களுக்காக தியாகங்களோடு வாழ்ந்து மறைந்துவிட்ட காந்தீயம் டேவிட் ஐயா, டாக்டர் இராஜசுந்தரம், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழத்தின் சட்டத்தரணி கே. கந்தசாமி என பலர் அந்த வரிசையில் அடங்குவர்.
ஆனால், மறைந்தவர்களின் வாழ்வுதனை அவர்களின் காலங்களிலேயே கண்டுகொள்ளாத தமிழ்ப்பண்பிலே அதன் மரபுகளில் அதர்மம்தான் முன்னுக்கு நிற்கிறது.
மெல்பனில் எனது சட்டத்தொழில் நிமித்தம், பல அகதி விண்ணப்பதாரிகளுக்காக எழுதிய கோரிக்கையின் கதைகளுடன் , அவர்களது குடும்பம், வாழ்வு, எதிர்பார்ப்புகள் என்ற நிஜங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பு வந்தது.
அகதிகளாக இங்கு வருவதற்காக கடன் சுமைகளை குடும்பத்துக்கு ஏற்றி, அவற்றை அடைப்பதற்காக இங்கிருந்து சொந்த ஆசைகளையெல்லாம் புதைத்துவிட்டு கடனை அடைக்க பொருள்தேடி, பின்னர் குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் முதுகில் சுமந்து, தம்பி படிக்கவேண்டும் , குடும்பத்திலிருந்து யாரும் பிடிபட்டால் ஆமியிடமிருந்து அவர்களை வெளியே எடுக்க பணம் புரட்டவேண்டும், தங்கை, அக்காமாரின் கல்யாணம் நடக்கவேண்டும்,
குடும்பம் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காகவெல்லாம் தன்னை ஒறுத்து, நான்கு ஐந்துபேருடன் இணைந்து ஒரு அறையில் குடியிருந்து, ஒரு புரொய்லர் கோழியை வாங்கி எல்லோருமாகச் சேர்ந்து சமைத்து, டொலர்கள் சேமித்து அனுப்பினர். அதன் மூலம் அவர்கள் ஆத்ம திருப்தியடைந்தார்கள்.
அவர்களில் சிலர் குடும்பத்துக்குப்பின்னர்தான் ஊர் தேசம் என்றும் எண்ணி, தாங்கள் செய்யவேண்டியவற்றையெல்லாம் செய்தார்கள். அவர்கள் இங்கிருந்த சமூகத்துடன் தங்களையும் இணைத்து உறவாடியதால், அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் இங்கிருந்த சமூகத்தவர்களும் பங்குகொண்டார்கள்.
இவர்கள் படும் கஷ்டங்களையோ இவர்கள் அனுபவிப்பதையோ தாயகத்தில் வாழும் குடும்பத்தினர் அறிந்தார்களோ என்னவோ, இவர்கள் அனுப்பும் வெளிநாட்டு டொலரை மாற்றுகையில் அவை தரும் தொகை மாத்திரமே அவர்களுக்குத் தெரிந்தது.
இங்கிருக்கும் அகதித் “தம்பி “ இங்குள்ள பாதையில் நின்ற காரோடும், யார் வீட்டுக்கு முன்பாகவோ தோன்றி எடுத்த புகைப்படங்களைப்பார்த்துவிட்டு, “தம்பி நன்றாத்தான் வாழுகின்றான் “ என்ற சந்தோஷம் அவர்களிடம் காணப்பட்டது.
அந்த சந்தோஷங்கள் பலரை ஊக்குவித்தது. சில வருடங்களின் பின்னர், படகுகளில் வந்து தடுப்புக்காவலிலிருந்து வெளியேறியவர்களில் அநேகர், தாங்கள் அரசாங்க திணைக்களங்களின் உதவியோடு உதவிப்பணங்களோடு நாட்டிலே குடியமர்த்தப்பட்டதனால் “தாம் வென்றவர்கள், தாம் வெல்லுவோம் “ என்று சமுதாய நீரிணையில் சேராமலும் “ மக்டொணால்ட்ஸும் – கே. எஃப். சி. யும் அதற்கு இணைந்த பானமும் பருகி, கடன் அட்டைகளில் எவ்வளவு எடுத்தும் வாழலாம் என்று வாழ்ந்தும் கூட குடும்பத்தின் சுமையின் வாட்டல் எவ்வகையானது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.
தனது சிறுவயதிலேயே தகப்பனை இராணுவத்துக்கு பலிகொடுத்துவிட்டு, போர்க்காலங்களில் இந்திய அகதிமுகாம்களில் தஞ்சமடைந்து குடும்பத்தினரை அங்கே விட்டுவிட்டு, தனியாகவே குடும்பத்திற்காக புறப்பட்டு வந்த இளைஞனொருவனை நன்கு அறிந்திருந்தேன்.
குடும்பமே சிந்தனையாக அவர்களது வாழ்வாதாரத்துக்கு பணமனுப்பி, தம்பி ஒருவனை பல்கலைக்கழகத்தில் படிப்பித்து, பின்னர் பட்ட மேற்படிப்பிற்காக கனடா அனுப்பி, ஒரு சகோதரிக்கு திருமணமும் முடித்துவைத்து, அவற்றுக்கும் பொறுப்பேற்று,
இன்னுமொரு சகோதரியையும் படிக்கவைத்து, மாடாக உழன்றுகொண்டிருந்தபோது, இன்னுமொரு தம்பி அகதிமுகாமில் தான் காதலித்த பெண்ணை மணந்து குழந்தைகளுக்கும் தந்தையானதும், அவர்கள் எல்லோரையும் ஊருக்கு அனுப்பி, வீடு கட்டிக்கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர வைப்பு நிதிக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, தொடர்ந்து அக்குடும்பத்தின் தலைமகனாக அதே அகதி வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கின்றான்.
தனக்கென்று, தனது பிரியத்துக்கென்று, ஒரு கார் வாங்கி ஓடாமல், ஏதோ ஒன்று நாலு சில்லில் ஓடினால் போதும் என்றதுதான் அவனது வாகனம். வந்த நாட்களிலிருந்து தனது பிரியத்திற்கென்று இருந்த பஜோரா கனவுகள், பின்பு லாண்ட் குருஷர் , போட் ரேன்ஜர் என்று ஒவ்வொரு வண்ண வாகனமும் நெஞ்சில் நிறைந்தாலும் இன்னுமொரு குடும்ப பாரம் வந்து சேரும்போது அந்த ஆசையும் ஓடிவிடும்.
“ உனது வாழ்க்கை, உனது கல்யாணம் “ என்று நினைவூட்டிப் பேசினால், “ நான் ஒருவன்தானே..? குடும்ப சுமையை பொறுக்கவேண்டியிருக்கிறது. அம்மாதான் என்ன செய்வா..? “ என்ற ஆதங்கம்தான் அவனிடமிருந்து வெளிப்படும்.
தனது தகப்பனை இளம் வயதிலேயே பறித்துவிட்ட ஆர்மியில் ஆத்திரம். அப்பொழுதெல்லாம் ராஜபார்ட் தங்கத்துரையில் வந்த சிவாஜியைத்தான் அவனுக்கு நினைவூட்டுவேன்.
அவன் மறையும்போது சொந்தங்கள் வருமா..? அல்லது அற்ற குளத்தில் அறுநீர் பறவைகளாகுமா..? அன்றில் அவன் இருந்ததால்… ஆஸ்திரேலியா போனதால் இவைகளைச் செய்தான் என்று சொல்லி ஆறுமா..?
எங்களது சமூகத்தில் இப்படியான பலரை சர்வதேசத்தில் உருவாக்கிவிட்டு, அவர்களின் எதிர்காலங்களைப் பற்றி அக்கறையின்றி ஆமைவேகத்தில் நகர்கின்றோம். “ தம்பி இருந்தான், பார்த்தான். “ என்பதோடு எதிர்பார்ப்புகளுக்கான நன்றியையும் முடித்துக்கொள்கின்றோம்.
புலம்பெயரில் ஒரு அகதி தன்னை மாய்த்துக்கொண்டாலோ மரணித்துவிட்டாலோ ஒரு அக்கறையாளர் ஏற்படுத்தும் GO Fund இற்கு தங்களது மனச்சுமையை குறைக்க சில டொலர்களை அனுப்பிவிட்டு, அவனையும் குடும்பத்தையும் மறந்தேவிடுகின்றோம்.
சர்வபரித்தியாகம் என்று வடமொழியில் கூற்று ஒன்று உண்டு. தன்னுடைய வாழ்க்கையை பொருட்படுத்தாது, அதனைத் தியாகம் செய்து, தனது உடன்பிறந்தவர்களை காப்பாற்றுவதற்கு என்றே
பாடுபடுவதை அந்தக் கூற்று விளக்கும். குடும்பங்களில் சிலர் மட்டுமே அப்படி பிறக்கிறார்கள். அல்லது அதற்காகவே அவதரிக்கிறார்கள். சிலர் ஆகிறார்கள். இன்னும் சிலர் அப்படி ஆக்கப்படுகிறார்கள். அவர்களது தியாகங்களை நாம் அனுபவித்தும், கண்டுகொண்டும் கடந்து போகிறோமே தவிர, அவைகளை அவர்களது வாழ்நாட்களில் காதுகுளிர நன்றியுணர்வுடன் பேசுவதும் , பகிர்வதும் குறைவு.
சர்வபரித்தியாகங்களால் தங்களது குடும்பங்களை மாத்திரமல்ல, தாங்கள் வளர்ந்து வந்து வெளியேறிய சமுதாயத்தையும் கட்டிக்காத்தார்கள் என உணரலாம்.
முகஸ்துதி செய்வது சரியல்ல. அது பழக்கமல்ல என்ற தர்மமும் அதற்குத் துணைவரும். மரணத்தின் பின்னர், அவரது காதுகேட்காத நேரத்தில் ஊர்கேட்க சொல்லலாம் என ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.
இந்தப்பின்னணிகளில்தான் எனது குடும்பத்தின் மூத்த சகோதரி பற்றி சொல்ல வருகின்றேன். முன்னையவர்கள் போல, அவள் அரசியலிலோ பொதுவாழ்விலோ ஈடுபட்டதில்லை. நிலைமைகளால் அகதியானவளும் அல்ல. தனது குடும்பத்துக்கு ஆதாரமாக ஆகவேண்டும் என தானாகவே நினைத்து பாடுபட்டவள். நாங்கள் ஒவ்வொருவரும் எமது மனத்திரைகளை ஓடவிட்டால் இப்படியான சர்வபரித்தியாகங்கள் ஒவ்வொரு குடும்பங்களில் இருந்ததையும் அப்படியான மனிதர்கள்தான் தங்களது சர்வபரித்தியாகங்களால், எங்களது சமுதாயத்தை வளர்த்தார்கள் என பார்க்கலாம். ஆனால், மரணங்களால்தான் அவர்கள் நினைக்கப்பட்டார்கள்.
எங்களது வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த எங்கள் மூத்த சகோதரிக்கு இந்த ஆண்டு அகவை எண்பது ஆயிற்று.![]()
அவர் லண்டனில் தனது குடும்பத்துடன் நீண்டகாலமாக வசிக்கின்றார். நாம் வசிக்கும் மெல்பனுக்கு அவரை அழைத்து, இங்கிருக்கும் எல்லாச் சகோதரங்களுடனும் அவரது பிறந்த தினத்தைக்கொண்டாடி மகிழவேண்டும் என்ற நினைப்புகளுக்கெல்லாம் சமகால கோவிட் பெருந்தொற்று நெருக்கடியினால் வந்த பயணத்தடைகள் முட்டுக்கட்டை இட்டது.
அவர் ஏதோ ஒரு வழியாக வந்து சேர்ந்தபோது வீட்டில் ஒரு “ கூழ் விருந்து “ வைத்து இவற்றைப்பேசலாம் என்று நினைத்தேன். அன்று அவருக்கு கோவிட் தொற்று வந்துவிட்டது.
ஆனால், எங்களுக்கெல்லாம் ஆதாரமாக இருந்த அந்த மூத்த சகோதரியின் சர்வபரித்தியாகத்தை மனதால் நெருடாது இருக்க முடியவில்லை.
அவைகளையெல்லாம் ஏதோ ஒரு நாளுக்காக என்று மூட்டை கட்டி வைத்துவிடாமல், அந்த உணர்வுகளை அவர் பார்க்க முடிந்தபோதே பகிர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம் உந்தியதால் இந்த ஆக்கமேயன்றி, அந்த சர்வபரித்தியாகம் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்காகவல்ல.
சுமித்திரையை தாயாகப் பெற்ற இலட்சுமணன் மாத்திரமல்ல இராமாயணத்தில் வலம்வந்தோர் எல்லோரிலும் ஒரு இலக்கண தேவதையாகத்தான் மூத்தவள் சுமித்திரை இருந்தாள்.![]()
அவளைப்போன்று வாழ்வில் தனக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு இன்பங்களையெல்லாம் உடன்பிறந்தோர்களுக்கு பங்குவைக்கும் ஒரு தேவதையாகத்தான் எங்கள் குடும்பத்தின் இந்த மூத்தவள் இன்றும் வாழ்கிறாள்.![]()
எமது குடும்பத்தில் பிள்ளைகள் ஏழுபேர். தந்தையோ அரச உத்தியோகத்தர். தாய் குடும்ப பொறுப்புகளை சுமந்தவர். அய்யாவுக்கு அளவான சம்பளம். ஆனாலும், தனது பெண்குழந்தைகள் அழகாக உடுத்தவேண்டும் கல்யாணம் மற்றும் சடங்குகளிலே தனித்துவமாக நிற்கவேண்டும் என்பதில் அலாதிப்பிரியம் கொண்டாலும், ஆண்பிள்ளைகளோ தங்கள் வயதை ஒட்டிய மற்ற உறவுக்குழந்தைகள் போல அவர்களது நிலைகளையும் அனுசரித்து உடுத்தவேண்டும் என்ற முரண்பாடும் அவரில் இருந்தது.
அக்காவுக்கும் ஆடை அலங்காரத்தில் பற்று அதிகம். அவர் ஊரில் பள்ளிக்கூடம் செல்லும்போது “ஆடை அலங்காரி வருகிறாள் “ என பையன்கள் சைக்கிள்களை பாதையோரம் நிறுத்திவிட்டு, “ அலங்காரத்தேர் “ கடந்துசெல்லும்வரையில் நின்று பார்ப்பார்களாம்.
அலங்காரத்தில் பற்றிருந்தாலும் அக்காவுக்கு நாட்டம் என்னவோ படிப்பில்தான். பட்டம் பெற்று உயர்ந்த பதவி வகித்து உழைத்து குடும்பத்தை உயர்த்தவேண்டும் என்பதே சிந்தனை. எங்களுக்காக எவ்வளவோ பாடுபட்ட தாயும் தந்தையும் மறைந்தாலும், நாங்கள் அவர்களின் நினைவுகளை பாதுகாக்கவேண்டும். அதை எப்படியும் செய்யவேண்டும். மறந்துவிடக்கூடாது என்பவையெல்லாம் இளம்பிள்ளைகள் யாவருக்கும் எழும் பாசமான சிந்தனைகள். யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத பருவங்கள். ஆனால், அவளுக்கு அதுவே அந்த வயதிலிருந்தே சிந்தனை ஓட்டமாக இருக்கும். அதுதானோ என்னவோ மகன்கள் செய்தாலும் அவர்களது திவசங்களை, நினைவு நாட்களை இன்றும் அனுட்டித்து படைத்து பரிமாறுவதை தனது பண்பாக கொண்டிருக்கிறாள்.
விதியும் சம்பிரதாயங்களும் அவளது படிப்புக்கும் ஆசைகளுக்கும் குறுக்கே வந்து குழிபறித்தன. வயது வந்ததும் கல்யாணம் செய்து பொறுப்பை முடித்துவிடவேண்டும் என்ற கட்டாய ஊர்ச்சம்பிராயங்கள், அவைகளை மீறாமல் கடைப்பிடித்த உறவுகள், இவைகளுக்கிடையே தெரிந்த நம்பிக்கையான சொந்தம் செறிந்த குடும்பத்திலிருந்து பெண்கேட்டு வந்ததும் அதனைச் செய்து தனது கடமையை முடித்துவிடவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற அம்மாவின் முயற்சிகளுக்கு மறுதலிப்பு தருவதற்கு சுற்றங்கள் இடம் தரவில்லை. மற்றவர்கள் எல்லோரும், நான் கூட இளையவன். எந்த குடும்ப அதிகாரத்திலும் இல்லை. ஆகவே, எல்லா எதிர்பார்ப்புகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு வாழ்க்கைப்பட்டாள்.
கணவரோ பாசமானவர். வந்த குடும்பத்தில் எல்லோரிடத்திலும் அன்பு வைத்தவர். ஆனால், அக்காவும் வேலைபார்க்காத நிலையில் அவரது சகோதரங்கள் வா வா என்று அழைக்கவும் லண்டனுக்கு குடிபெயர்ந்து சென்றதும் அவளது வாழ்வும் பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதையின் ஒரு பிம்பமாகவே மாறியது.
கணவனுக்கு ஊக்கம் தந்து, அவர் படித்து கணக்காளனாகிவிடவேண்டும், குழந்தைகளது பராமரிப்பு என்பதோடு தம்பிகள் படிக்கவேண்டும் தங்கைகளுக்கும் கல்யாணம் ஆகவேண்டும், அவர்களது மகிழ்ச்சியை கண்குளிர, மனம் மகிழ பார்க்கவேண்டும் என்ற வாஞ்சைதான் அவளை அந்த லண்டன் குளிரிலும் வாழவைத்தது. அந்த நாட்களில் அவள் சம்பாதித்ததோ வாரத்திற்கு 14 பவுண்கள்தான்.
வாழ்க்கையில் இடைவந்த பனிமூட்டங்களின் ஊடே பட்ட அவஸ்தைகளையெல்லாம் தாங்கிக்கொண்டு குளிர் காயவும் கணக்குப்பார்த்து செலவழித்து அவற்றை தாங்கிக்கொண்டு இன்பங்களையெல்லாம் உடன்பிறந்தார்க்கு பங்கு வைக்கும் எங்கள் குடும்பத்தின் சுமித்திரையிடமிருந்து தவறாது வரும் கடிதங்கள் ( கைத்தொலைபேசியும் வாட்ஸ் அப்பும் தலைகாட்டாத நாட்கள் ) வரிக்கு வரி ஒவ்வொருவரது வளர்ச்சியையும் கேட்டு,( சேர்ட், காற்சட்டை அளவுகள் உட்பட ) என்ன செய்யவேண்டும்..? என்ன தேவை…? என்று ஆராயும். தேவைகளுக்கும் எப்படியோ ஆதரவும் வரும்.
அதைவிட ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் எடுக்கும் தொலைபேசி அழைப்பின்போது சின்னத்திரையில் சீரியல் பார்க்கக் கூடும் குடும்பம் போன்று, எல்லோரையும் கூட்டி இணைத்து வைத்து செய்யப்படவேண்டியவை பற்றி உரையாடுவதும் குற்றம் குறைகள்
கூறப்பட்டாலும் அவற்றையும் பொறுத்து அணைத்துக்கொள்கின்ற பெரும் குணம் படைத்த அத்தகைய ஒரு சகோதரி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.
நான் எழுதுவதை பலர் அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்ளுவார்கள்.
விதம் விதமான பட்டுப்புடவைகள் உடுத்துவதிலும் வகைவகையான நகைகள் அணிந்து கல்யாண சடங்குகளில் தான் நிற்கவேண்டும் என்று பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர் கதை நாயகியின் ஆசைகள் போன்ற போக்குகளுக்கு வாய்த்த கணவனோ அவையெல்லாம் வாங்கிக்கொடுத்து விதம் விதமாக அலங்காரம் செய்து அழைத்துச்செல்வதும் அவளது பாக்கியம்.
அந்தப் பாக்கியம் அவளது தாராள குணத்தால் எங்கள் எல்லோருக்கும் கூட வாய்த்தது. குடும்பத்தில் எந்த கல்யாணமோ நிகழ்ச்சிகளோ இருந்தாலும் அவைகளை அவள் தவறவிட்டதில்லை. பயணக்களையைக்கூட பார்க்காது, வந்த அடுத்த நாளே ஊரிலானால் தும்புத்தடியுடனும் விளக்குமாறுடனும் வீடு சுத்தம்செய்வதும், ஏசிப்பேசி அனைவரையும் வீட்டு வேலைகளுக்காக முடுக்கிவிடுவதும்தான் அவளுக்கு முக்கியம். மெல்பன் வந்தாலும் அவளது இயல்பு அவ்வாறுதான்.
அவள் வந்தவுடன்தான் எங்கள் வீடுகள் களைகட்டும். பலகார பட்சணங்களுக்கு பொருட்கள் வாங்குவதிலிருந்து அவற்றைத்தயாரிக்க அடுப்பு வைப்பதும் தொடங்கும்.
எனது திருமணத்திற்காக அன்று ஒரு காலத்தில் அவள் வந்த நிலையோ வேறு. நான் காதலித்த பெண்ணை மணம் முடிக்க உடும்புப்பிடியாய் நிற்கிறேனே, இந்த கல்யாணத்தை நடத்துவதா என்ற முடிவுகளும் அவளில்தான் இருந்தது. மாமன்மாரையும் பெற்றோரையும் சமாளித்து நடத்தி வைத்தாள்.![]()
உளமார்ந்த தெய்வ நம்பிக்கை அவளுக்கு, கண்ணில் பட்ட கோயில்களிலெல்லாம் பூசை கைங்கரியங்களிலும் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சமயம் சார்ந்த பணிகளிலும் ஆன்மீகத்திலும் நிறைந்த ஈடுபாடு , காஞ்சிபுரம் ஞானானந்தர், அவரது சீடர் ஹரிதாஸ் குருஜியின் வழிகாட்டலில் நிறைந்த நம்பிக்கை, உரும்பராய் கற்பக விநாயகர் கோவிலுக்கு பணிவிடைகள், ஏழாலை அம்மனுக்கு மூலஸ்தானத்தில் பதிக்க புதிய அம்மனின் சிலை, அதேபோல், வேலணை சரவணை நாச்சியார் கோவில் அம்மனுக்கு பிரதிஷ்டை மூலவிக்கிரகம், , சென்ற கோவில்களிலெல்லாம் நேர்த்தி – பணிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.![]()
“ ஆலயங்கள் ஆயிரம் நாட்டலிலும் பார்க்க ஆங்கோர் ஏழைக்கு அறிவு தருதல் தருமம் “ என்று நான் பேசுவது வழக்கம். அதற்காக கொடுத்தாலும், கடவுள்களின் உபாசணைகளால் புண்ணியங்கள் செய்துவிடவேண்டும் என்ற எண்ணப்பாங்கினால், சகோதரங்களுக்கும் அவைகள் தேறவேண்டும் என்று அவர்களையும் அழைத்துச்செல்வது அவளது வழக்கம்.
தான் காசிக்குச் சென்ற இருதடவைகளும் பத்ரிநாத், கேதாரிநாத் , காசி முதலான ஆலயங்களுக்கும் அவளோடு சென்று எனது பாவ சங்கீர்த்தனங்களை நான் செய்துகொள்ளவில்லை என்ற ஆதங்கமும் அவளுக்கிருக்கிறது. இவன் செய்வானோ என்ற கேள்வியும் அவளுக்குத் தொக்கி நிற்கும்.![]()
இலட்சுமணன் அயோத்தியில் பரதனோடு நின்று அவனுக்கு உதவி புரியவேண்டும் என்றல்ல, அவன் இராமனுக்கு துணையாக வனவாசம் செல்லவேண்டும் என்றுதான் சுமித்திரை பணித்து, சத்துருக்கனை அயோத்தியில் வைத்திருந்தாள்.
அவளைப்போல தனது சொந்த ஆசைகளையெல்லாம் ஆற்றில் கரைத்துவிட்டு, தாங்கள் பிறந்த குடும்பத்தின் நலனைக் கவனிக்க யார் எந்தப்பணியை செய்யவேண்டும் என்று கணக்கிடும் எங்களது மூத்தவள்போல எத்தனையோ இலக்கண மானிடர் பலர் எங்களிடையே இன்றைக்கும் இல்லாமலில்லை.
அவர்களை, அவர்கள் இருக்கும்போது காது குளிர கேட்க பேசுங்கள். அதிலே ஆத்ம திருப்தியை பெறுவது மரணச்சடங்குகளில் எடுத்துரைப்பதிலும் சிறந்தது.
நாம் எல்லோரும் பயணம் முடிந்து ஒரு நாள் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டும்.
எவர் மீதும் எவ்வளவு அன்பு, பாசம், கோபம் என்று பல இருந்தாலும் எல்லோரையும் எல்லோரும் விட்டு மறைந்தேயாகவேண்டும். அது நியதி. பிறந்த நாட்களைக்கொண்டாடுகிறோம். இறப்புக்கு எம்மிடம் திகதியில்லை. அது ஆண்டவனிடமோ, அன்றில் இயற்கையின் கையிலோ இருக்கிறது. இறந்துவிடப்போகும் நாளை தெரிந்துகொள்ளாததால்தான் எல்லோருமே நிரந்தரம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
எதுவும் நிரந்தரமில்லை. எதுவும் நம்முடையதுமில்லை. என வேதாந்தரி மகரிஷி அறிவுறுத்துவார். ஆகவே அன்பு, பாசங்களை நன்றியை ஒவ்வொருவரின் வாழ்வின் சிறப்புகளை அவர்களின் வாழ்நாட்களிலேயே எடுத்துரைப்பதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும். சொந்தங்களுக்கு அவற்றை கொடுக்கவேண்டும்.
![]()
இறுதிச் சடங்குகளிலோ கல்வெட்டுக்களிலோ இறந்தவரின் புகழ் பாடுவதுதான் நம்மவர்களின் தலையாய கடமையாக இருக்கிறது.
மனிதர் இருக்கும் போது இயலுமான உதவிகளை செய்தல் நல்லது. இறந்த பின் அழுது புலம்புவதில் பயனில்லை.
அருமையான முன்னுரை.
Renee Acca and Nithi Annai worked as a team and they are a blessing to all their siblings. They are a very loving couple and meant well for everyone. We have great admiration for this beautiful couple. Typical role models for all. Wonder why we cannot be like them???
May the good Lord continue to bless you and your family. Happy 80th Birthday Ranee Acca.
Thank you Ravi mama. A beautiful piece. I must have done something great in my previous life to have been born to my best friend. Amma was not an openly affectionate person but her every thought word deed and action expressed her love had no bounds. She fulfilled and continues to fulfil her dharmic role as a wife, delivering support to my father in building a common goal for us a family. She was fearless and determined in ensuring that we had the right foundation academically and spiritually so we too could deliver our duties in the future. Time and time again, I would see her sacrificial and charitable nature giving up what she had to make someone else happy, giving the little that she had to ensure someone less fortunate than herself could have. In many ways she became the Guru teaching us silently through her actions. In every birth I pray that she will be My Mother.
Rani Acca is very kind&affectanate withall of us.Even she’s always in front to help everyone.She never say no if she not well as well.We have to learn so many things from her.Specially helping people,religious&never
tired.This Link very much helps to tell our feelings Ravi Annai
This is good one for us to tell about Rani Acca. Thank you Ravi Annai.Actually she is a role model for us.She’s very helpful,religious .&treat all of us same like her family.I pray god to give her&Athan good health.