கட்டுரைகள்

விண்ணைத் தொடலாம் வாங்க!…. கிறிஸ்டி நல்லரெத்தினம்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரூ.1500 கோடி செலவு செய்து பயணம் செய்த நால்வரைப் பற்றிய செய்தியை கடந்த வாரம் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இங்கு செல்வந்தர்கள் போய் வருவது பழைய செய்தியே. ஆனால் இம் முறை இவர்களின் பயணம் நாசாவுடன் இணைந்து ஆக்சியம், ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய தனியார் விண்வெளி நிறுவனங்கள் இந்த விண்வெளிச்சுற்றுலாவை சாத்தியப்படுத்தியதே விசேட அம்சம் ஆகும்.
நாசாவின் முன்னாள் விண்வெளி வீரருடன் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும், கனடா நாட்டின் முதலீட்டாளரும், இஸ்ரேலின் முன்னாள் போர் விமான விமானியுமே அந்த நான்கு பாக்கியசாலிகள்.
சர்வதேச விண்வெளி நிலயம் அதன் பெயருக்கேற்ப ரஷ்ய, அமெரிக்க கனடிய, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நாடுகளின் கூட்டு முயற்சியினால் கட்டமைக்கப்பட்டது.
இதற்கு வித்திட்டது ரஷ்யாவினால் முதலில் விண்ணுக்கு நவம்பர் 1998ல் அனுப்பப்பட்ட Zarya எனும் கலமே. இதுவே சர்வாதச விண்வெளி ஆராச்சி நிலயத்தின் முள்ளம் தண்டு. இதன் பின்னர் ரஷ்யாவினாலும் பங்காளி நாடுகளாலும் அனுப்பப்பட்ட 32 விண்வெளி பயணங்களில் மிகுதிக்கலங்கள் துண்டு துண்டாக கொண்டு செல்லப்பட்டு ஒன்றாக பொருத்தப்பட்டன.
2021ம் ஆண்டு வரை 19 நாடுகளில் இருந்து 251 விண்வெளி வீரர்கள் இங்கு விஜயம் செய்துள்ளனர். இது மட்டுமன்றி மனிதர்கள் பயணம் செய்யாத ‘வினியோக பயணங்களும் ‘ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கம் அங்கு வாழும் வீரர்களுக்கு தேவையான பொருட்களை வினியோகிப்பதுடன் விஞ்ஞான உபகரணங்களை எடுத்துச் செல்வதுமே.
இந்நிலயம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதியை ரஷ்யாவும் மிகுதியை அமெரிக்கா தலைமை வகிக்கும் கூட்டணியும் நிர்வகிக்கிறது. இதன் நிர்வாக பொறிமுறை பற்றி ஒரு உடன்படிக்கையில் சம்மந்தப்பட்ட நாடுகள் கைச்சாத்திட்டிருப்பதனால் இங்கு முறுகல்களுக்கு இடமில்லை. எந்த பங்காளி நாடும் இந்நிலயத்திற்கு விண்கலங்களை அனுப்பினாலும் ரஷ்யாவின் பகுதிக்கூடாகத்தான் அவை உள்ளே நுழைய வேண்டும் என்பது மரபு.
புவியில் இருந்து ஏறத்தாள 400 கி.மீட்டர்கள் தொலைவில் மிதக்கும் இந்த 444,615 கிலோ எடையுள்ள ‘விண் நகரம்’ பூமியை 93 நிமிடங்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. 2010ல் இவ் விண்வெளி நிலயத்தின் மொத்த பெறுமதி 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.
2001ல் இங்கு பொருத்தப்பட்ட Canadarm2 எனும் 17.6 மீட்டர் நீளமுள்ள இயந்திரக் கை லாவகமாக அருகே நெருங்கும் விண்கலன்களை பற்றி ‘இறங்கு தளத்துடன்’ (docking station) மெதுவாய் இணைக்கும். பின்னர் என்ன? ஒரு ஆகாய விமானத்தில் இருந்து பயணிகள் இறங்குவது போல் விண்வெளி பயணிகள் விண்வெளி நிலையத்தினுள் மிதந்து நுழைய வேண்டியதுதான் பாக்கி! முன்னர் பல தடவைகள் விண்வெளி நிலயத்துடன் இணையும் போதே விபத்துக்கள் நடப்பதுண்டு. இந்த இயந்திரக் கையினால் இவை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன எனலாம்.
விண்வெளி விபத்தை துல்லியமாய் எடுத்துக் கூறிய Gravity எனும் 3D திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன்.
2015ல் ரஷ்யா விண்வெளி நிலயத்தை 2024ல் மூடிவிட உத்தேசித்திருப்பதாய் அறிவித்தாலும் பின்னர் தன் முடிவை மாற்றிக் கொண்டது.
தற்போதுள்ள தகவல்களின்படி இந்நிலயம் 2030 வரை செயல்பட்டு மனிதகுல மேன்மைக்கு உதவும் என உறுதி கூறலாம்.
இவற்றையெல்லாம் தள்ளி நின்றே அவதானித்துக் கொண்டிருந்த சீனா 2011 செப்டெம்பரில் தனது சொந்த Tiangong 1 எனும் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுள்ளது. சீனாவின் பல விண்வெளி வீரர்கள் இந்நிலயத்திற்கு பயணித்து பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு இந்நிலயம் முழுவதுமாய் பூர்த்தி செய்யப்படுவதுடன் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலயத்திற்கு ஒரு சவாலாக அமையும் எனவும் சொல்லலாம். ஆனால் அமெரிக்காவின் நாசா அமைப்போல் அல்லாது சீனா தனது விண்வெளி திட்டங்களைப்பற்றி முன்கூட்டியே அறிவிப்பது கிடையாது. அவர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிமிப்பு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை பாதித்ததா என்ற கேள்விக்கு விடை இல்லை என்பதே. ரஷ்யாவும் அமெரிக்கவும் விண்ணில் கைகோர்த்து ஒரு உன்னத இலக்கை நோக்கி பயணிக்கின்றனர்.
இப்போர் தொடங்கிய பின்னர் விதிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக தடைகள் மண்ணைத்தாண்டி விண்ணை எட்டவில்லை என்றே கூறலாம்.
விண்வெளி நிலையத்தின் ‘உந்துவிசை கட்டுப்பாட்டு அமைப்புகளை (propulsion control systems) ரஷ்யாவே தன் கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளது. எனவே நிலையத்தை நகர்த்தும் விசை இவர்கள் கையிலே! சிறு உந்துவிசை இன்றி இந்த நிலையமே வான்வெளிக்குள் நுழைந்து எரிந்து சுக்குநூறாக உடைந்து பூமியில் மோதும் ஆபத்து உண்டு. ரஷ்ய விண்வெளி உயர் அதிகாரியான Dmitry Rogozin சில மாதங்களுக்கு முன் இதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். அது காற்றோடு போன கதையானது.
ஆனால் அமெரிக்காவின் Northrop Grumman, ஈலான் மாஸ்க்கின் SpaceX ஆகிய நிறுவனங்கள் உந்துவிசை தொழில்நுட்பத்திற்கான சாதனங்களை தாமும் தயாரித்து நாசாவிற்கு வழங்க முடியும் என தெரிவித்துள்ளன.
முன்னைப்போல் அல்லாது விண்வெளி நிலயத்திற்கு சென்று வர ரஷ்ய ராக்கெட்டுகளை நம்பிய காலம் மலையேறிவிட்டது. 2020 ஆண்டு முதல் SpaceX போன்ற தனியார் ராக்கெட்டுகள் நாசாவுடன் கூட்டுச் சேர்ந்து ‘இ.போ.ச’ யின் பணிகளை ஆற்றுகின்றன.
கடந்த மாதம் ரஷ்யா தன் விண்வெளி விஞ்ஞான ஆராய்ச்சியில் ஜேர்மனியை சேர்த்துக் கொள்ளாது என்றும் அமெரிக்கவிற்கான ராக்கெட்டுகள் விற்பனைத் தடையை செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தல் விடுத்தது. மேலும் ஐரோப்பிய யூனியன் நாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ராக்கட் மூலம் அனுப்பும் வேலைகளையும் ரஷ்யா பிற்போட்டுள்ளது.
(கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலயத்தில் வந்திறங்கிய ரஷ்யாவின் மூன்று விண்வெளி வீரர்கள் யுக்ரேனின் தேசியக்கொடியின் நிறமான மஞ்சள் நிறத்தில் உடைகளை அணிந்து ஒரு சர்ச்சையையே ஏற்படுத்தியது ஞாபகத்தில் இருக்கலாம்.)
இதே வேளை இவ்வருட இறுதியில் SpaceXஇன் Crew Dragonஇல் பயணிக்க ரஷ்ய ‘விண்ணழகி’ Anna Kikina அமெரிக்காவில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் அமெரிக்க – ரஷ்ய உரசல்கள் விண்ணைத்தொடும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
அமெரிக்கா Artemis Program எனும் முன்னெடுப்பின் கீழ் சந்திரனில் மனித காலனிகளை அமைப்பது பற்றி திட்டங்கள் வகுக்கின்றது. செவ்வாய் கிரகத்தை ஆக்கிரமிக்க பல பில்லியன் டாலர்களை செலவு செய்ய தன் கஜானாவை அகலத்திறந்துள்ளது அமெரிக்கா!
இதேவேளை ரஷ்யா சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து விண்ணை ஆழ திட்டங்கள் வகுக்கின்றது.
இந்நாடுகளுக்கிடையிலான போட்டி விஞ்ஞான மேன்மைக்கும் மனிதகுல மேம்பாட்டிற்கும் உதவுமேயானால் அதை கைதட்டி வரவேற்போம்!
முற்றும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *