Featureகதைகள்

நடுகைக்காரி!…. 35 …. ஏலையா க.முருகதாசன்.

தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து மேற்குப்புறமாகச் செல்லும் வீதியில் இருக்கும் சந்தையடிப் பாலத்தால் பாறுவின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஞானத்தின் மனம் ஏதேதோ கற்பனை செய்து தவித்துக் கொண்டிருந்தது.

பாறு எனக்கு கிடைக்காமலே போய்விடுவாளோ என பதைபதைத்தான்.பாறுவைக் கல்யாணம் கட்டுவதில் அப்பா அம்மா சகோதரங்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அடம்பிடித்து விடாப்பிடியாக நின்று பாறுவை எனது மனைவியாக்கிவிடுவன் ஆனால் பாறுவின் தாய் தகப்பன் நீ எட்டாத ஒன்றுக்கு ஆசைப்படுகிறாய் மனதைக் கட்டுப்படுத்தி எங்கடை ஆட்களுக்குள்ளை கட்டு,நீயும் பிடிவாதம் பிடிச்சியெண்டால் வீணான சண்டைதான் வரும்.

இப்ப உன்ரை வயசும் ஞானத்த்தின்ரை வயசும் ஒன்றையும் யோசிக்காத வயசு, இரண்டு பேரும் ஏதோ வேகத்திலை முடிவெடுப்பியள் பிற்காலத்திலை அங்கையும் சேர முடியாமல் இங்கையும் சேர முடியாமல் அந்தரப்படுவியள் என்று சொல்லி பாறுவைக் குழப்பியிருப்பார்களோ, பாறுவின் வீடு இப்ப என்ன நிலைமையிலருக்குமோ என்று யோசித்தபடியே போய்க் கொண்டிருந்தவன்,இண்டைக்கு பாறுவின் தாய்க்கும் தகப்பனுக்கும் தனக்கும் பாறுவுக்குமிடையில் உள்ள காதலைச் சொல்லி அவளை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகப் போறன் என்று துணிஞ்சு முடிவெடுத்துச் சொல்ல வேண்டியதுதான்.மலையே வந்தாலும் தலையே சும என்று வெட்டு உண்டு துண்டு இரண்டென்று முடிவெடுக்க வேண்டியதுதான் என தீர்க்கமான முடிவுடன் போய்க் கொண்டிருந்தவன பாறுவின் வீட்டுப் படலையடிக்குப் போகும் போது அங்கே பாறு கிழக்குப் பக்கமாக நடந்து போய்க் கொண்டிருந்த ஒரு ஆணையும் பெண்ணையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

தனக்கருகில் சைக்கிளொன்று வந்து நிற்பதின் அசிகையை உணர்ந்த பாறு திரும்பிப் பார்க்கிறாள்.அவள் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்திருப்பதைக் கண்ட ஞானம் தான் கற்பனை பண்ணியதற்கு மாறாக பூரிப்புடன் பாறு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவன்ரை முகமும் இறுக்கம் குறைந்து பழைய நிலைக்கு வருகிறது..

„வந்திட்டியளா,இன்றைக்கு வரமாட்டியளோ என்று நினைச்சு ஏக்கத்துடன் இருந்தன் „என்று சொல்லும் போது ஞானம் திறந்திருந்த படலையின் இடைவெளிக்கூடாக பாறுவின் வீட்டைப் பார்க்கிறான்.

அங்கே தாயும் தகப்பனும் விறாந்தையிலிருந்து கதைச்சுக் கொண்டிருப்பதைக் கண்ட அதே நேரத்தில் பாறுவின் தாயும் தகப்பனும் படலையடியில் ஞானம் நிற்பதைக் காண்கிறார்கள்.

„போங்கள் போய் அவை யாரென்று போய்ப் பாருங்கள் கெதியிலை போங்கள் அவை றோட்டிலை ஏறி பஸ் எடுக்க முந்திப் போங்கள் நான் இங்கையே நிற்கிறன்

போய்ப் பாரத்திட்டு வாருங்கள் „ என்று உரிமையுடன் அவனின் முதுகைத் தள்ளினவள் கடைக்கண்ணால் தாயையும் தகப்பனையும் பார்க்கிறாள்.

யாராக இருக்கும் பாறு ஏன் போய்ப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள் என யோசித்தவாறு நடந்து போய்க் கொண்டிருந்தவர்களை நோக்கிப் போனவன் அவர்களருகில் போக அந்த ஆணும் பெண்ணும் திரும்பிப் பார்க்க,நேற்றுத் தன்னோடும் பாறுவோடும் அருகருகே உட்கார்ந்து படம் பார்த்த அண்ணன் தங்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு „ நீங்களா’ என ஒரு பக்கம் மகிழ்ச்சியும் இன்னொரு பக்கம் வியப்புமாகக் கேட்க,அண்ணன் „ நாங்களேதான் நீங்கள் ஏதேதோ யோசித்துக் கவலைப்பட்டிருப்பீர்கள், உங்கள் இரண்டு பேற்றை காதலும் தூய்மையான உண்மையான காதல் அது ஒருநாளும் தோற்றுப் போகாது உங்களுடைய லவ்வர் நீங்கள் யார் எந்தக் குடும்பத்தைச் சேர்த்தனீங்கள் முதலிலை எங்கை சந்திச்சனீங்கள் என்ற விபரத்தை எல்லாம் சொன்னா, ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ,எங்களுக்கு நேரமாகுது கோபிக்காதையுங்கோ நின்று கதைக்க நேரமில்லை, நாங்கள் கதைப்பதை யாராவது பார்த்தாலும் அதுவும் பிரச்சினையாகிவிடும், இன்னொருமுறை எங்கையாவது ஒரு இடத்திலை சந்திப்பம், எங்களுக்கும் பஸ்சுக்கு நேரமாகுது,இன்றைக்கு நடந்த எல்லா விசயத்தையும் உங்கடை பாறு சந்தோசமாய்ச் சொல்லுவா , உங்களுக்காக உங்கடை வருங்கால மனைவி பார்த்துக் கொண்டிருப்பா,நாங்கள் வாறம் என்று புறப்பட நினைச்சவர்களிடம்’உங்கடை பெயரை நேற்றும் கேட்க மறந்திட்டம் …’என்று ஞானம் இழுக்கும் போதே, „என்னுடைய பெயர் வரதராஜன் வரதர் என்று கூப்பிடுவினம், தங்கச்சியின்ரை பெயர் மணிமேகலை மேகலா என்று கூப்பிடுவினம்’ என்று வரதராஜன் சொல்கிறான்.

அவர்களிருவரும் ஞானத்திடம் சொல்லிப் போட்டு போக பாறுவின் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தவன் அவள் சொன்னது போலவே தனக்காக அவள் படலையடியிலேயே நிற்பதைக் காண்கிறான்.

அவளருகில் வந்ததும் கையில் சில்வர் பேணியில் தேத்தண்ணியும் வாழையிலையில் மூன்று உழுந்து வடைகளும் பச்சைமிளகாய்ச் சம்பலும் இரண்டு கொழுக்கட்டைகளையும் வைத்துக் கொண்டு நிற்பதைக் காண்கிறான்.

„ சைக்கிளை நிற்பாட்டிப் போட்டு, இதைச் சாப்பிட்டு தேத்தண்ணியையும் குடியுங்கோ,முதலிலை மகிழ்ச்சியான விசயத்துக்காக கொழுக்கட்டையைச் சாப்பிடுங்கோ’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ பாறு அவரைக் கூட்டிக் கொண்டு உள்ளை வந்து வீட்டிலை வைச்சு சாப்பிடக் குடு, இது என்ன பழக்கம் ஒழுங்கையிலை வைச்சுக் குடுக்கிறது’ என் பாறுவின் தாய் சொல்ல, „ம் வாங்க உங்கடை மாமி வரட்டாம்’ என்று பாறு பூரிப்புடன் ஞானத்தை வீட்டடிக்கு கூட்டிக் கொண்டு போகிறாள்.

நீக்கியிருந்த படலையை பாறு அகலத் திறந்துவிட,ஞானம் சைக்கிளை உருட்டிக் கொண்டு உள்ளை போகும் போது, சைக்கிளில் போன ஒருவர் „நல்லாயிருக்குது’

என்று நையாண்டியாக சொல்வதைக் கேட்ட ஞானம் இது மணியத்தின்ரை குரல்தான் என முடிவெடுக்கிறான்.

„நல்லாயிருக்குது’ என்று சொன்னது பாறுவின் காதில் விழ,ஒழுங்கையால் போன யாரோ ஒருவர் எங்கள் இரண்டு பேரையும் பார்த்து கேலி பண்ணியிருக்கிறார் என்று அவள் நினைச்சக் கொண்டாள்.

ஆனால் ஞானம், மணியம் தன்னை உளவு பார்க்கத் தொடங்கிவிட்டார் என நினைச்சுக் கொண்டாலும் „நல்லாயிருக்குது’ என்று சொல்லால் தான் பாதிக்கப்படவில்லை என்பதை முகத்தில் காட்டாதிருந்தான்.

பாறுவின் வீட்டு விறாந்தையிலிருந்து உழுந்துவடையை சம்பலோடு சாப்பிட்டபடியும் தேத்தண்ணியைக் குடிச்சபடியும் இருந்த ஞானத்தின் மனதில் வந்தவர்கள் யாரென்ற தெரிந்தாலும்,அவர்கள் வந்து நின்ற நேரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதை அறிய ஆவலானவன் சுற்று முற்றும் பார்க்கிறான் பாறுவின் தாய்தகப்பனைக் காணவில்லை என்பதை அறிந்தவன் „ எங்கை அப்பா அம்மாவைக் காணவில்லை’ என்று கேட்க,’அவை பின் வளவிலை புடலங் கொடிக்கு தடி நட்டுக் கொண்டிருக்கினம்…’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „புடலங் கொடிக்கா „ என்று அவன் கேட்க ,’ம்.. நீங்கள் புடலங் கொட்டைகள் தந்துவிட்டனீங்களல்லோ அதை அப்பாவிடம் குடுத்தனான் அதை அவர் ஊன்றி இப்ப முளைச்சு வளரத் தொடங்கிவிட்டது „ என்றவள் தலையைத் திருப்பிப் பார்க்கிறாள் அவளின் தாய் வந்து அவர்கள் இரண்டு பேரையும் பார்த்துவிட்டுபு; போகிறாள்.

„ஆர்’ என்று ஞானம் கேட்க „அம்மாதான் வந்து பார்த்துவிட்டுப் போனவர்’ என்றவளை „ அது சரி இன்டைக்கு என்ன நடந்தது அதைச் சொல்லுங்கள் என்கிறான்.

பாறு சொல்லத் தொடங்கினாள், „அம்மா காலமை ஐஞ்சு மணிக்கே என்னை எழுப்பி,சீயாக்காய் வெந்தையம் அவிச்சு அரைச்சு வைச்சிருக்கிறன் நல்லாய்ப் பிரட்டி தோய்ஞ்;சு போட்டு வா’ என்று சொன்னவுடன் எனக்கு பகீர் என்றது.ஏன் இண்டைக்கு விடிஞ்சது என்ற மாதிரி இருந்துது’

„காலமைச் சாப்பாட்டை சாப்பிட்டு முடிச்சதும் அம்மா சொன்னா கெதியிலை வடிவாய்ச சாறியைக் கட்டிக் கொண்டு, தலையை வழிச்சு இழுக்காமல் கொஞ்சம் தொய்யவிட்டு இழுத்து பிடரிக்கு கீழை பின் கழுத்தோடை போல்ஸ் றப்பர் பாண்டைப் போட்டு பிறகு இடைக்கிடை போலஸ்;றப்பாண்டால் தலைமயிரை அணைச்சு போடு என்றார்….’

„அம்மா இதையெல்லாம் சொல்லச் சொல்ல எனக்கு விசர் விசராயிருந்தது, புளியடி வைரவரே என்னைப் பார்க்க வாற பொடியன் என்னைப் பிடிக்கேலை வேண்டாம் என்று சொல்ல வேண்டும், உனக்கு வடைமாலை சாத்தி பொங்குவன் என்று வேண்டிக் கொண்டேயிருந்தன்….’

„அறைக்குள் போய் கதவைச் சாத்திப் போட்டு இருந்தன்.கைகால் எல்லாம் நடுங்கி சொண்டுகள் இரண்டும் குளிருக்கு நடுங்கவது போல நடுங்கிக் கொண்டிருந்து….’

„ மனசுக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டன்.வாற பொடியன் என்னைப் பிடிச்சுவிட்டது என்று சொன்னால் உங்களோடு வைச்சிருக்கும் காதலையும், கல்யாணம் செய்யப் போறதையும் எல்லாருக்கு முன்னாலையும் போட்டு உடைப்பது என்றும் அப்பா அம்மா திட்டினாலும் அடிச்சாலும் பரவாயில்லை வாறது வரட்டும், தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்பது போல மனசை இறுக்கமாக வைச்சிருந்தன்…..’

„நேரம் போய்க் கொண்டிருந்தது.வெளியே புதியவர்கள் வருகின்ற ஆளரவமும்,வாங்கோ என்று அப்பாவும் அமமாவும்; அவையைக் கூப்பிட்டு கதிரையில் இருத்தும் சத்தமும் கேட்டது….’

„வந்தவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்க வேண்டும்.இந்தாங்க எங்கடை வீட்டிலை உங்களிடம் குடுக்கச் சொல்லித் தந்தவை என்று எதையோ அம்மாவிடம் குடுப்பதும், அம்மா ஏன் உங்களுக்கு இந்தக் கஸ்டம் என்று சொல்லிக் கொண்டே, இருங்கள் முதலிலை கோப்பியைக் குடிச்சு வடையைச் சாப்பிடுங்கள் என்று சொல்லிக் கொண்டே அம்மா அடுப்படியடிக்கு போகும் அசிகை தெரிந்தது…’

„இஞ்சரப்பா பிள்ளையைக் கூப்பிடுவம் என்று அப்பா சொல்வதும் ஓம் கூப்பிடுங்கள் என்று அம்மா அடுப்படிக்குள் இருந்து சொல்வதும் கேட்க அப்பா தம்பியிடம் கொக்காவை வரச் என்று சொல்ல,தம்பி கதவைத் தட்டித் திறந்து கதவைப் பிடித்துக் கொண்டே அக்கா வா, உன்ரை ஆள் வந்திருக்கு என்று சொன்னான்….’

„அவன் உன்ரை ஆள் என்று சொன்னதும்,அவனை அடிக்க வேணும் என்று கோபம் கோபமாக வந்தாலும்…கலக்கத்துடன் வெளியே வந்தன்…’

„ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அங்கை உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது….’

„நீங்களா எனக் கேட்க என் வாய் உண்ணியது ஆனால் அதை அடக்கிக் கொண்டன்.என்னைப் பார்த்ததும் அந்த ஆணும் பெண்ணும் வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் நிமிர்ந்து பார்க்க,அந்தப் பெண் என்னைப் போல வாயை உண்ண முயற்சிக்க பக்கமாக இருந்த ஆண் அவளை வேகமாப் பார்த்து அவளின் கையை மெதுவாகச் சுரண்டி,சொல்ல வேண்டாம் என்பதைப் போல மெதுவாகத் தலையாட்டியதைக் கவனிச்சன்….’

„ அப்பா அவர்களுக்கு எதிராக கதிரையில் உட்கார்ந்hதிருந்தார்.நான் அப்பாவுக்கு பக்கத்தில் உட்கார்ந்தன்.தம்பி அப்பா உட்கார்ந்திருந்த கதிசை; சட்டத்தில் உட்கார்ந்திருந்தான்….’

„அப்பொழுது அந்தப் பெண் ஒன்றுக்கும் பயப்படாதையுங்கோ, யோசிக்காதையுங்கோ என்பது போல கண்சாடை காட்டினாள்…’

„ அவள் கண்சாடை காட்டிய விசயம் எனக்கு விளங்கியதாக நானும் மெதுவாக தலையாட்டினேன்…’

„ என்னுடைய முகமலர்ச்சியையும்,அவர்களிருவரின் முகமலர்ச்சியையும் கவனித்த அப்பா எனக்குப் பொடியனைப் பிடிச்சுவிட்டதாக நினைச்சதை அவரின் முகம் காட்டியது….’

„ ஆனால் தம்பி எங்களுக்கு எதிரேயிருந்த பெண் கண்சாடை காட்டியதைக் கவனித்துவிட்டான்,என்பக்கம் திரும்பி கண்களை மேலை உயர்த்தி என்னைப் பார்த்தவன், எழும்பி வந்து எனது கதிரைச் சட்டத்தில் உட்கார்ந்து,எனக்கு எல்லாம் விளங்குது, அவை இரண்டு பேரையும் முந்தியே உனக்குத் தெரியும் போல என்று இழுத்தான்….’

„அம்மா, ராஜா இங்கை வா என்று சொல்ல அவன் அடுப்படிக்குப் போய்க் கொண்டிருந்தான்..

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *