உளவு நிறுவனங்கள்!… 15 …. மௌனவதானி.

விடுதிகளுக்கு வரும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் இரகசியங்களை ஒற்றர்கள் அறிந்து கொள்வதற்கு விடுதிகளிலிருக்கும் முகாமையாளர் தொடக்கம் சாதாரண பணியாளர்கள் வரை உதவி செய்வார்கள்.
இந்த முகாமையாளர்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொள்வதில் ஒற்றர்கள் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஒருவருடன் பேசும் போதே அவரவர்களின் தேவை என்னவாகவிருக்கும் என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள்.ஏற்கனவே இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்றும், ஆங்காங்கே சில இடங்களில் குறிப்பிட்டது போன்றும் மூன்றே மூன்று விடயங்களை பயன்படுத்தியே உளவு நிறுவனங்கள் மற்றைய நாடுகளின் இரகசியங்களை அறிந்து கொள்கின்றன.பணம், பெண், பொருள் என்பனவாகும்.
இரகசியங்களை அறிந்து கொள்வதில் தனது நாட்டுக்கு அது மிக மிக முக்கியமென்றால் மட்டுமே உளவு நிறுவனங்கள் பெண்களை பயன்படுத்துவார்கள்.
சுதேச அதிகாரி தான் ஒற்றர்களுக்கு கொடுக்கும் இரகசியங்களால் தனது பதவிக்கு ஆபத்து வரலாம் சிறைத்தண்டனை அல்லது மரண தண்டனைகூடக் கிடைக்கலாம் என்பதை அறிந்து கொண்ட போதும் வளமான வாழ்க்கைக்காக தமது சொந்த நாட்டையே காட்டிக் கொடுப்பார்கள்.
சில அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடமும் இராணுவத்தில் பணியாற்றும் அதிஉயர் அதிகாரிகளிடமும் பெண்களை அனுபவிக்கும் மிதமான ஆசையிருக்கும்.
வெளிநாட்டுப் பெண்ணுடன் உறவு கொள்ளும் விருப்ப மிகுதியால் அத்தகு பெண்களுக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள்.முக்கிய புள்ளிகளுடன் உறவு கொள்பவளும் மன்மதக்கலையை அக்கு வேறு ஆணி வேறாக கரைத்துக் குடித்தவளாகவே இருப்பாள்.
அவளுடைய நோக்கம் இரகசியங்களை அறிந்து கொள்வதேயாகும்.பெண்களை ஈடுபடுத்தும் உளவு நிறுவனங்கள் பெண்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுப்பபார்கள்.
பண்பாட்டு ரீதியாக பெண்களை மதிக்கும் நாடுகளில்கூட உளவு நிறுவனங்கள் தமது நாட்டின் பாதுகாப்பு என்பதற்காக சில விதிவிலக்குகளை கொள்ளலாம் என அரசு பெண்களை பயன்படுத்துவதற்கு அனுமதி அளித்திருக்கும்.
சுதேச நாட்டின் சினிமா அழகிகளும், மாடல் அழகிகளும்கூட முக்கிய புள்ளிகளிடமிருந்து இரகசியங்களை அறிவதற்காக உளவு நிறுவனங்களுக்கு உதவி செய்வார்கள். அதற்காக கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு கொடுக்கப்படும்.பெண்களின் அரவணைப்பை விரும்பும் அதிகாரிகளுக்கு மது மாது என விருந்துகளுக்குகூட மிகச்சிறந்த நவீன விடுதிகளில் விருந்துகளுக்கு
ஏற்பாடு செய்வார்கள்.உளவு நிறுவனங்கள் மிகப்பெரிய உலகமாக இயங்கி வருகின்றது.
உலக நாடுகள் எல்லாவற்றிலும் உளவு பார்ப்பதற்கான சாதகமான சூழ்நிலை இருப்பதில்லை.எப்படி இரகசியங்கள் கசிந்தன என்பதற்கு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலிருப்பதால் பல நாடுகளில் அத்தகைய அதிகாரிகள் மீது தேசத்துரோக குற்ற விசாரணை நடத்தப்பட்டு சிறைத்தண்டனை, அபராதம் மட்டுமல்ல மரண தண்டனையும் வழங்கப்படுகின்றன.
எனினும் வல்லமை பொருந்திய நாடுகள் வலிமையிழந்த நாடுகளில் மட்டுமல்ல சம வல்லமையுள்ள நாடுகளின் இரகசியங்களை அறிந்து கொள்வதில் பல நுட்பங்களைக் கையாள்கின்றன.
தமக்குச் சாதகமான அரசினை அமைப்பதில் உளவு நிறுவனங்கள் மூலம் சதியை மேற்கொள்வது மன்னர்களின் காலத்திலிருந்து இன்றுவரை நடைபெறும் அரசியல் நடவடிக்கையாகும்.
உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பதற்காகவும்,பிராந்திய பிரதேசங்கள் தமது ஆளுமைக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தமக்குச் சாதகமான அரசொன்றினை தமது சொல்படி நடக்கும் அரச தலைவர்களை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதற்கான சதியினை வல்லமை பொருந்திய நாடுகள் செய்கின்றன.
பொருளாதார ரீதியான மேம்பாடு தேவையென்பதால் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தமக்குச் சாதகமான அரசினை நிறுவுவதற்கு தமது உளவு நிறுவனங்கள் மூலம் அவற்றை முன்னெடுக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் அளுங்கட்சி எதிர்க்கட்சி என நாடாளுமன்ற அமைப்புமுறை இ;ருந்து வருகின்றது.
கொள்கை ரீதியாக தமக்குள் கொண்டிருக்கும் கோட்பாடடுக்கமைய அரசாளும் அரசுக்கு ஆதரவு எதிர் என இருபக்க நடவடிக்கைகளை எதரிக்கட்சிகள் அளித்தாலும் அக்கட்சிகளும் ஏதோ ஒரு விதத்தில் வெளிநாட்டுத் தொடர்பு கொண்டவையாகவே இருக்கும்.
சில நாடுகள் வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்து உள்நாட்டு உற்பத்திகளில் கவனம் செலுத்துகின்றன.
வெளிநாட்டு உற்பத்திகளை தடை செய்த அல்லது உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஊக்கம் கொடுக்கின்ற அரசுகளை அப்புறப்படுத்த உளவு நிறுவனங்கள் வழியாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
தமது பொருட்களை ஒரு நாடு வாங்குகின்ற சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக பல திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
இத்தத் திட்டங்கள் யாவும் நுட்பமான அறிவு கொண்ட இராஜதந்திரிகளால் வகுக்கப்படுகின்றன.வகுக்கப்பட்ட திட்டங்களை தமது உளவு நிறுவனங்களிடம் கையளிப்பார்கள்.அதனை அவர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
உள்நாட்டு உற்பத்திக்கு அதிக செலவாகும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து அறிக்கை சமர்ப்பிக்கும் நிலையை முதலில் ஏற்படுத்துவார்கள்.பொறுப்புக்கூறல் அதிகாரியை உளவு நிறுவனங்கள் விலைக்கு வாங்கிவிடும்.
உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தமது சொந்த நாட்டில் கிடைக்காது அவற்றை வெளிநாட்டில்தான் வாங்க வேண்டும் என்ற நிலையை தோற்றுவிப்பார்கள்.
வெளிநாடுகளில் அம்மூலப்பொருட்கள் அதிக விலையாகவிருக்கின்ற நிலையை உளவு நிறுவனங்கள் ஏற்படுத்தும்.எப்படியெனில் அந்தந்த திணைக்களங்களில் உளவு நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்பட்ட தமது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சுதேச ஒற்றர்களிருப்பார்கள்.அவர்கள் மூலப்பொருட்களின் விலை கோருதல் விபரங்களையும் எந்தெந்த நிறவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்தி விடுவார்கள்.
உளவு நிறுவனங்கள் அந்த நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு மூலப்பொருட்களின் விலையை அதிகரிக்கவோ அல்லது மூலப்பொருட்களை குறிப்பிட்ட நாட்டுக்கு விற்பனை செய்வதை நிறுத்திவிடுவார்கள்.
எனவே தமது நாட்டில் உற்பத்தியாக்குவதைவிட இறக்குமதி செய்வதே இலாபகரமானது என்ற முடிவுக்கு வரும் அரசு தமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யத் தொடங்கிவிடும்.
உலகத்தில் பலம் பொருந்திய உளவு நிறுவனங்களை வைத்திருக்கும் நாடுகளாவன அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஸ்யா, இஸ்ரேல் ஆகியவை முதன்மை வகிக்கின்றன.
அண்மை நாட்களில் இலங்கையில் நடந்த ஆட்சிமாற்ற சதிக் குழறுபடிகளுக்கு காரணமாக இருப்பது இந்திய உளவு நிறுவனமே.
இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமென்பதில் திட்டமிடலுக்கு அமைய இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன.
இலங்கையின் தோற்ற வெளிப்பாடு, இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறி வருகிறதா என ஐயப்பட வேண்டியுள்ளது.இலங்கைக் கடைகளில் இந்திய உற்பத்திப் பொருட்களே அதிகம் விற்பனையாகின்றன.விளம்பரப் பலகைகளில் இந்தியப் பொருட்களாகவே இருக்கின்றன.
யாழ்ப்பாணம் சென்னையாக மாறிவருவதை காண முடிகிறது.அதே போல இலங்கை எங்கும் சுற்றுலாப்பயணிகளாக சீனர்கள் காணப்படுகின்றனர்.
இவர்களுக்குள் பலர் உளவு நிறுவனங்களால் அனுப்பப்பட்ட ஒற்றர்களாக இருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
தானே நிறுவிய அரசு காலப் போக்கில் வேறு திசையில் செல்லும் போது அவ்வரசை அகற்றிவிட்டு மீண்டும் அப்புறப்படுத்தப்பட்ட அரசை இந்தியா கொண்டு வந்தமைக்கு பிராந்திய ஆளுமையும் தனது பொருளாதார
விஸ்தரிப்புமேயாகும்.இந்தியா தனது திட்டத்தை உளவு நிறுவனத்தைக் கொண்டு செயல்படுத்தியுள்ளது.
(தொடரும்)
![]()