கட்டுரைகள்

“மீசை மாதம்” ….. ( கட்டுரை ) …. எஸ் ஜெகதீசன் …. கனடா.

அதென்ன புதிதாய் முளைத்துள்ள மீசை மாசம் என்ற சந்தேகம் உங்களைப் போலவே எனக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது.

நவம்பர் மாதம் முழுவதும் உங்களின் மகனோ அல்லது இளைய சகோதரனோ அல்லது அயலில் உள்ள இளைஞனோ திடீரென மீசை வளர்க்க ஆரம்பித்திருப்பதை அவதானித்திருந்தால் மனதுள் நீங்களும் மெலிதாக முறுவலித்திருப்பீர்கள்.

அவர்கள் தமது மீசையை அடிக்கடி வருடிப்பார்ப்பதும் வாரம் ஒரு முறையேனும் அதன் வளர்ச்சியைப் படம் பிடித்து முகநூலில் இட்டு அழகு பார்ப்பதும் சர்வசாதாரணமாகி உங்களை சலனப்படுத்தி இருக்கும்.

ஒரு நல்ல நோக்கத்துக்காகவே நவம்பர் மாதம் முழுவதும் அவர்கள் மீசை வளர்த்தனர்.

உடல் மொழி மூலம் வித்தியாசமாக சாதிக்க முனைந்தனர்.

உலகம் ஒதுக்கித்தள்ளும் சங்கதியை உற்றுப்பார்க்க வைத்து ஜெயித்தனர்.

‘பக்குவப்பட்ட’ எவருமே இதில் பங்கு பெறலாம் என்பது நினைவில் வருமெனின் இப்பொழுது வயதானவர்களின் முகத்திலும் புன்னகை பூக்கும்!

தைரியமான தன்னலமற்ற ஆண்களே மீசை வளர்ப்பதில் முன் நிற்பர் என்பது பொதுவான உளவியல் தத்துவம்.

தனிநபராகவோ குழுக்களாகவோ பொதுவாகவோ மூன்று பிரிவுகளில் இயங்கலை (Online) மூலம் நிதி சேகரிப்பில் ஈடுபாடு காட்டுவது அவர்களின் தனித்துவம்.

நவம்பர் மாதத்தின் 30 நாட்களுக்கும் மீசை வளர்க்கும் இதன் அங்கத்தவர்கள் பேசி நடமாடும் விளம்பரப் பலகைகள் போலாகி தொண்டு மனப்பான்மையுடன் இணைய மூலம் நிதி திரட்டுவார்கள்.

இத்திட்டத்திற்காக மீசை வளர்ப்பவர்களை Mo Bros என்று அழைக்கின்றார்கள்.

உதவியும் ஒத்தாசையும் புரியும் மகளிரை Mo Sistas எனவும் நவம்பர் மாதத்தை Movember மாதம் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

Mo என்பது அநாதியில் ஆங்கிலத்தில் மீசையை குறித்தது. அதனுடன் November மாதத்தின் பின் எழுத்துக்களை சேர்த்தது தான் Movember என்றாகியது.

இதனால் மீசை வளர்ப்பவர்களுக்கு நவம்பர் மாதம் மட்டும் மொவம்பர் மாதமாகவோ மீசை மாதமாகவோ மாறிப்போனது.

Movember Foundation என்ற தர்மஸ்தாபனம் Movember.com என்ற இணையம் ஊடாக உலகெங்கும் வருடா வருடம் நவம்பர் மாதம் முழுவதும் இதனை நடத்துகின்றது.

சுக்கியன் புற்றுநோய் (Prostate Cancer) ,விதைகளில் புற்று நோய் (Testicular Cancer), மன ஆரோக்கியம், தற்கொலைத் தடுப்பு போன்றவற்றின் விழிப்புணர்விற்காகவும் நிவாரணத்துக்காகவும் நிதி திரட்டுதல் என்ற உன்னத குறிகோள் அவர்களது இலட்சியம்.

Movember.com என்ற இணையத்தில் பதிவு செய்து உறுப்பினராகும் ஒருவர் Movember மாதம் முதலாம் திகதி முழுமையாக முகச்சவரம் செய்துள்ளவராகக் காணப்படவேண்டும்.

Movember மாதம் முழுவதும் மீசையைச் சவரம் செய்யக் கூடாது. விரும்பினால் சிறிது கத்தரிக்கலாம்.

கன்னத்தாடியுடனோ அல்லது நாடித்தாடியுடனோ மீசையை இணைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்பவை அடிப்படை நிபந்தனைகளாகும்.

கடந்த வருடம் பதிவு செய்தவர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மீசையுள்ளவர்கள் சவரம் செய்து மீள்வர்.

உங்கள் நன்கொடையை எங்கு எப்படி வழங்கலாம் போன்ற விபரங்களையும் அந்த இணையம் காட்டும்.

பதிவு செய்யும் பொழுது கிடைக்கும் அறிவுறுத்தல்கள் தேவை என நீங்கள் கருதும் சகல விபரங்களையும் புலப்படுத்தும்.

நீங்கள் அன்பளிப்பு செய்யவுள்ள நாட்டை தெரிவு செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு.

உதாரணமாக au.movember.com என்ற இணையம் உங்கள் விருப்பத் தெரிவானால் உங்கள் பெயரால் திரட்டப்படும் நன்கொடைகள் அவுஸ்திரேலியாவில் வழங்கப்படும்.

நோ ஷேவ் நவம்பர் என்றும் அமைப்பு ஒன்று உள்ளது.

அதன் அங்கத்தவர்வர்கள் நவம்பர் மாதம் முழுவதும் மீசையை மட்டுமல்ல தாடியையும் தலைமுடியையும் மழித்துக் கொள்வதி்ல்லை.

பெண்கள் சிலருக்கும் மீசை உண்டு என சில பெண்ணிய அமைப்புகள் முறுக்கியதில் மீசை உள்ள பெண்களுக்கென mov.ember என்ற அமைப்பு புதிதாக முகம் காட்ட ஆரம்பித்துள்ளது

இந்த அமைப்புகளில் ஏதாவதொன்றினுடன் உறுப்பினரான பின் ஒவ்வொரு மாதமும் 60 கி.மீ. நீங்கள் ஓடுவதோ அல்லது நடப்பதோ வெறுமனே உடற்பயிற்சியாக மட்டும் அமையாது.

உங்களை உற்சாகமூட்டுவதற்காக பிறரால் உங்கள் கணக்கில் வைப்பிலிடப்படும் பணம் ஆண்கள் ஆரோக்கிய மேம்பாட்டு மையத்தைச் சென்றடைய வழியும் வகுக்கும்.

1999ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் மெல்போனில் மொவம்பர் மாதத்திற்கான திட்டம் தீட்டப்பெற்றதற்கு டிராவிஸ் கரோன் (Travis Garone), லூக் ஸ்லேட்டரி (Luke Slattery) என்ற இரு நண்பர்கள் காரணமாயினர்.

ஆண்கள் மீசை வளர்ப்பது அருகி வருவதால் அதனை ஒரு நற்செயலுக்காக அருகில் அழைத்தாலென்ன என்ற அபிப்பிராயம் இருவரது முகங்களிலும் முளைத்தது.

நவம்பர் மாதம் முழுவதும் மீசை வளர்ப்பதென்றும் சவரம் செய்யாமலிருப்பததால் மீதமாகும் பணத்தை விழிப்புணர்வை ஊக்குவிக்க பயன்படுத்துவதெனவும் பொது மக்களை கவர்ந்து வரவேற்பு பெறும் பட்சத்தில் வருடாவருடம் அதனை தொடர்வது எனவும் தீர்மானித்தார்கள்.

2003 ம் ஆண்டிலேயே அவர்களால் மேலும் 28 பேருடன் இணைந்து அதற்கு முழு வீச்சுடன் செயல் வடிவம் கொடுக்க முடிந்தது.

முதலாம் வருடம் 450 பேர் கலந்தனர். 54 ஆயிரம் டாலர்கள் சேகரிக்கப்பட்டது.

இன்று பல நாடுகளுக்கு விரைந்து செறிந்து படர்ந்துள்ளது.

இது வரை 5.2 மில்லியன் ஆண்கள் அதன் உறுப்பினராக கலந்து தத்தமது முகங்களை மீசையால் மெருகூட்டியுள்னர்.

உலகெங்குமிருந்து எதிர்பாராத விதமாக எக்கச்சக்கமான நிதி திரள ஆண்கள் ஆரோக்கிய மேம்பாட்டு மையத்துக்கு நன்கொடை எகிறுவதும் தனி அழகுதான்.

சுக்கியன் புற்றுநோய் நிவாரண விழிப்புணர்விற்காக மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் 716 மில்லியன் டொலர்கள் உலகெங்குமிருந்து திரட்டப்பட்டதில் 1400 ஆண்கள் நலமடைந்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு சிட்னி பேருந்துகள் மீசை வரையப்பட்ட முகப்புடன் நவம்பர் மாதம் முழுக்க சேவையிலிருந்தன.

அவை வயதுக்கு வந்து விட்டனவா? அல்லது ஆண்களா? என்று கிண்டலடித்தனர் பெண்கள்.

பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது எனினும் வெகு சீக்கிரமாகவே பெரு வெற்றியை ஈட்டியது.

சிற்றுந்துகள் – பேருந்துகள் – இரட்டை அடுக்கு பேருந்துகள் – சொகுசு பேருந்துகள் – தொடருந்துகள் மட்டுமின்றி சில வானூர்திகள் – உல்லாச உலங்கு வானூர்திகள் என முகப்பில் மீசை அலங்காரம் பரவியதுடன் படு வேகமாக உலகெங்கும் வியாபகம் பெற்றது.

பங்கு பற்றும் வாகனங்களுள் உண்டியல் மூலமாகவோ பதிவு செய்யும் பொழுது விருப்பத்தின் பெயரில் மேலதிகமாகவோ நிதி சேகரிக்கப்பட்டது.

மீசை வளர்ப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது என்கிறது அவுஸ்திரேலியாவின் தென் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக ஆய்வு அறிக்கையொன்று.

மீசையின் நீளமும் பருமனும் சூரிய கதிர் வீச்சை மட்டுப்படுத்து வதால் தோல் புற்று நோய் பீடிப்பது தளர்வுறுவதாக அந்த அறிக்கை சுட்டுகின்றது.

மீசையின் வளர்த்தி ஏனையவற்றை விட மிகவும் துரிதமானது. தலை முடியை விட வேகமாக மீசை நரைத்தும் விடும்.

மீசை மாற்று சத்திர சிகிட்சை மிகவும் இலகுவானது.

இந்தியா – மெக்சிக்கோ – பாகிஸ்தான் – ஜேர்மனி – ஈரான் – எகிப்து – துருக்கி – அமெரிக்கா – ஹங்கேரி – பல்கேரியா ஆகிய நாடுகள் மீசை வளர்ப்பதில் முறையே முதல் பத்து இடங்களையும் வகிப்பது வேறு கதை என்பது உட்பட movember க்கு அப்பாற்பட்ட மீசை சுவாரஸியங்கள் ஏராளம்.

பல் துலக்கும் துரிகையை ஒத்ததாக அமைந்த சார்லி சப்பிளினின் வித்தியாசமான மீசை வடிவமைப்பால் கவரப்பட்ட அடோல்ப் ஹிட்லரும் அதனைப் போலவே தானும் வைத்துக் கொண்டாராம். இருவருமே சம காலத்தவர்கள்.

உலகின் பெரிய மீசைக்குரிய ராம் சிங் சவுகான் என்ற இந்தியர் 1982 லிருந்து வளர்க்கும் மீசையின் அளவு ஒரு நுனியிலிருந்து மறு நுனி வரை 14 அடிகளாகும்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் காவற் துறையினர் மீசை வைத்தால் அவர்களின் ஊதியத்தில் சிறிது உயர்வு கிடைக்கும்.

அமெரிக்க ராணுவ வீரரின் மீசை அவர்களுக்கோர் அடையாளமாக முதலாம் யுத்தத்திலிருந்தது.

ஒவ்வொருவருடைய மீசையும் அவரவர் பதவிக்கேற்ப அமைந்திருந்தது.

பதவி உயர உயர மீசையும் அடர்ந்தது.

அரை அங்குல மீசைக்காரர் என அமெரிக்க கடற்படைக்கு எதிரி நாடுகளில் ஒரு குழு குறியீடும் உண்டு.

சீட்டுக் கட்டில் உள்ள நான்கு ராஜாக்களில் இருதயத்துடன் கூடிய ராஜாவிற்கு மட்டும் மீசை இருப்பதில்லை.

நாமறிந்த மீசைகளில்தான் எத்தனை ரகம்! பாரதி மீசை- ஹிட்லர் மீசை- மா.பொ.சி மீசை- கட்டபொம்மன் மீசை – அரும்பு மீசை- பென்சில் மீசை- முறுக்கு மீசை- தொங்கு மீசை!

தமிழ் திரைப்படங்களில் மட்டும் கதாநாயகன் காவற் துறையிட மிருந்து தப்பிக்க நேரிடின் ஒட்டு மீசை நல்ல கவசமாகும் என்ற நிலை என்றுதான் மாறுமோ!

Shave it ! or Save it !! என்பதை டிசம்பர் முதலாந்திகதி முடிவெடுப்பது அவரவர் விருப்பமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *