கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்….. தொடர்…11…. சங்கர சுப்பிரமணியன்.

தமிழ் நாட்டில் மதம் இனம் கடந்த திருநெல்வேலித் தமிழருக்கு தமிழ்மீது அதீத காதல் உண்டு. அதற்கு சான்றாக பலர் உள்ளனர். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் கானோம் என்றார் திருநெல்வேலித் தமிழர் ஒருவர். இன்னொரு திருநெல்வேலித் தமிழர்
காயிதே மில்லத் என்ற முகம்மது இஸ்மாயில். இவர் போன்ற உயர் பண்பாளர்களால்தான் அனைவருக்கும் இஸ்லாமியர்களின்மேல் அளவுக்கு அதிகமான அன்பு ஏற்பட்டது.

ஒருமுறை இந்திய நாடாளுமன்றத்தில் நேருவுக்கும் காயிதே மில்லத் அவர்களுக்கும் விவாதம் ஏற்பட்டது. இந்தியாவில் இந்திபேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அதனால் இந்தியைத்தான் தேசியமொழி ஆக்கவேண்டும் என்றார் நேரு. உடனே காயிதே மில்லத் சிறிதும் சளைக்காமல் இந்தியாவில் தெருநாய்களே அதிகமிருக்கின்றன. அப்படியிருக்க தெருநாயை விட்டு ஏன் புலியை தேசிய விலங்காக அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றார். அத்தோடு விடவில்லை. இந்தியாவில் காகங்கள் அதிகமுள்ளன. ஆனால் காகத்தைவிட்டு மயில் ஏன் தேசிய பறவையானது என்றார்.

அதற்கு காயிதே மில்லத் அவர்களை மடக்குவதாக எண்ணிய நேரு அவர்கள் நக்கலாக அப்படியானால் உருது மொழியைத்தான் தேசியமொழியாக வைக்கவேண்டும் என்கிறீர் போலத் தெரிகிறதென்றார். அதற்கு சற்றும் அயராத காயிதே மில்லத் நான் அல்லா என்று சொல்லும்முன் என் தாய்மொழியில் அம்மா என்று சொன்னவன். இந்தயாவுக்கு தேசியமொழி என்று ஒன்று வேண்டுமானால் மிகப்பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழியாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லி நேருவை திக்குமுக்காட வைத்தார்.

இதைப்போலவே சிங்கப்பூர் அரசும் வட இந்தியரிடம் தமிழை சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக்கியதற்கு காரணம் தமிழர் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல அவர்கள் எங்களோடு இணைந்து விடுதலைக்கு போராடியதால் மட்டுமே தமிழை ஆட்சி மொழியாக்கினோம் என்றனர். வட இந்தியராவது பரவாயில்லை அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இந்த ஆட்சிமொழி சம்பந்தமான சர்ச்சை எப்பவும் இந்தியாவிலேயே இருந்து வருகிறது.

ஆனால் நாம் திராவிடம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மொழிகளில் ஒன்றான மலையாளத்தைப் பேசும் மலையாள சகோதரர்களும் அவர்கள் பங்கிற்கு இந்தியாவில் முல்லைப் பெரியாறு என்றால் சிங்கப்பூரில் ஆட்சிமொழி என்று வட இந்தியர்களைப் போன்றே பிரச்சினை செய்தனர். அவர்களுக்கும் சிங்கப்பூர் அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளது? எப்படி? நீங்கள் இங்கு சம்பாதிக்க வந்துள்ளீர்கள். சம்பாதித்து விட்டு போங்கள். தமிழ் ஆட்சிமொழி ஆனதைப்பற்றியோ தமிழரைப்பற்றியோ பேசவேண்டாம் என்றதாம் சிங்கப்பூர் அரசு.

அடுத்தபடியாக நாம் திராவிடம் என்று போற்றும் தெலுங்கு சகோதரர்கள் எப்படி என்று பார்ப்போம். சமீபத்தில் நடிகர் விஜய் அவர்களை கதாநாயகனாக நடிக்க ரூபாய் 120 கோடிக்கு ஒப்பந்தம் செய்து பெரிய அளவில் படம் தயாரிக்க தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதையறிந்த தெலுங்கு நடிகர்கள் தயாரிப்பாளரிடம் சென்று நாங்கள் இருக்க எப்படி தமிழ் நடிகரை ஒப்பந்தம் செய்யலாம் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு தயாரிப்பாளர் இந்திய அளவில் விஜய்யைப் போல் அறியப்பட்ட நடிகர்கள் தெலுங்கில் இல்லை என்று சொன்னதும் தயாரிப்பாளரை மிரட்டியிருக்கிறார்கள். இருப்பினும் தயாரிப்பாளரும் இயக்குனரும் படம் எடுப்பதென முடிவு செய்துள்ளதாக செய்தியொன்றை அறிந்தேன். இதுதான் திராவிடம் நம் மீது வைத்துள்ள பற்றும் பாசமும். ஆனால் தமிழரோ வந்தாரை வாழவைக்கிறோம் என்பதோடு நின்று விடாமல் தெலுங்கர்களை ஆளவைத்திருக்கிறோம். அத்தோடு நின்று விடாமல் எம்மொழியைச் சார்ந்தவராயினும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவும் வைக்கிறோம்.

ஆனால் மற்ற மொழியினர் நம்மிடம் அந்த பெருந்தன்மையை காட்டுவதில்லையே, ஏன்? அது மட்டுமா தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழர் என்றால் யார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழரை இளித்தவாயனாக எண்ணி வருகிறார்கள். நாமெல்லாம் திராவிடர்கள் என்று கூறி தமிழின அடையாளத்தையே மாற்ற முயன்று வருகின்றனர். இப்போது தமிழ்நாட்டின் நிலை முன்போலில்லை. விழித்துக் கொண்டனர். குறிப்பாக தமிழ்தேசியம் பேசிவருபவர்கள் தக்க பதிலடி கொடுத்து அவர்களது தில்லுமுல்லுகளை அரங்கேற விடாமல் தடுத்து விடுகின்றனர்.
இப்படி தமிழ்நாட்டை சுற்றியுள்ள சகோதர மொழியினர் நம்மிடம் வஞ்சம் காட்டும்போது இன்னும் எத்தனை நாள் இந்த திராவிட சித்தாந்தத்தை ஏற்று வாழ்வது?

தீண்டாமை, அடிமை, சுய உரிமை ஏதுமின்றி அடிமைப்பட்டிருந்த இனம் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோதும் அடிமைத்தனம் என்னவோ தொடர்ந்தது. ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லும்போது அதில் சிக்குண்ட மனிதன் சிந்திப்பது ஏதாவதொன்று கிடைக்காதா? பற்றிக்கொண்டு உயிர்காக்க என்று எண்ணுவதே. அப்படி எண்ணம் எழுந்ததில் தப்பில்லை. பற்றிக்கரையேற கிடைத்தது
ஒரு மரத்துண்டானாலும் அவ்வேளை அது உயிர்காத்தது. அது முருங்கை மரமா அல்ல தேக்கு மரமா என்று யோசிக்கமுடியாது.

அது எந்த மரமாயிருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் எமது மொழி இந்தித் திணிப்பில் இருந்து தப்பியது. அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு சுயமரியாதைக்கு வழிவகுத்தது. இப்படி தமிழருக்கு பல நல்லவைகள் நடந்தன என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் திராவிடக் கட்சிகளுக்குள்ளே
பிளவு வந்ததும் அவர்களது நலன்களிலே
கவனம் சென்றதேயொழிய பொது நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.

ஆண்டுகள் பல கழிந்தன அப்போதுதான் தெரிந்தது தாம்பற்றி வந்த கட்டை சற்று அசையத் தொடங்கியது. பிடியை விட்டால் ஆற்று வெள்ளம் அடித்துச்சென்று விடும். பிடித்திருந்ததும் திமிற ஆரம்பித்தது. தமிழரின் வாழ்வில் அழுகின்ற குழந்தைக்கு இனிப்பு கிடைத்ததுபோல்  நன்மைகள் கிடைத்தன. முழுச்சுதந்திரமும் முழுதாய் கிடைக்கவில்லை. முதலில் கச்சத்தீவு பறிபோனது. அங்கு தமிழரின் உரிமை எல்லாம் பறிபோனது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *