குடும்பத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும்!… அவதானி.

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே ! !
அவதானி.
“ தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் “ என்ற குரலை எழுப்பிய முண்டாசுக்கவிஞனின் நினைவு நூற்றாண்டு காலத்தில் இந்தப்பதிவு வெளியாகிறது.
அந்தக்கவிஞன் கண்ட கனவுகள் பல இன்னமும் நனவாகவில்லை. எனினும் தீர்க்கதரிசனத்துடன் அவன் நூறாண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்துள்ள காக்காய் பார்லிமண்ட் என்ற கதை இன்றைக்கும் பொருந்துகிறது.
காகங்கள் தங்களுக்கு கிடைக்கும் உணவை பங்கிட்டுக்கொள்வது பற்றிய கதை. அதில் ராஜா காகம் – மந்திரி காகம் எல்லாம் வருகிறது.
இந்த கொவிட் நெருக்கடி காலத்தில் ஆளும்தரப்பு எம்.பி. ஒருவர் மக்களிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
” மக்களே ஒரு நாளைக்கு இரண்டுவேளை உணவு மாத்திரம் உண்ணவும் “ என்பது தான் அவரது வேண்டுகோள். அவ்வளவுக்கு நாட்டில் உணவு உட்பட பொருளாதார நெருக்கடி வந்துவிட்டதாம்.
அன்றாடம் பிச்சை எடுத்து உணவுண்ட ஏழைகளும் தற்போது ஒரு வேளை உணவுக்கே தவித்துக்கொண்டு தெருவோரங்களில் பசியின் கொடுமையால் சுருண்டு படுத்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கையில் அந்த எம்.பி.யின் குரல் ஒலித்துள்ளது.
இதுவரைகாலமும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி , மற்றும் முப்படைத்தளபதிகள் அனைவரும் இன்றும் எத்தனை வேளை உணவு உட்கொள்கிறார்கள் என்பதை தங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுச்சொல்லட்டும்.
இவர்களின் அமைச்சரவைச் செலவீனங்களையும் தங்களது உள்நாட்டு வெளிநாட்டு போக்குவரத்துச் செலவீனங்களையும் கடந்த காலத்தில் கட்டுப்படுத்தினார்களா..?
மேலைத்தேய நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்கள் வாகனங்களை தாங்களே செலுத்திச் செல்கிறார்கள்.
அவர்கள் வெளியே புறப்படும்போது, முன்னும் பின்னும் பல வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதில்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தாங்களே காரை விட்டு வெளியே வந்து தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் கொடுக்க செல்வார்கள்.![]()
இத்தகைய அபூர்வ காட்சிகளை இலங்கையில் காணமுடியுமா..? ஆனால், விதிவிலக்காக இலங்கையின் முன்னாள் கல்வி அமைச்சரும் பிரதமரும் காலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தகநாயக்கா அவர்கள் எம். பி. யாக செயற்பட்ட போது இ.போ. ச. பஸ்களில்தான் பயணம்செய்தார். நாடாளுமன்றத்திற்கும் பஸ்ஸில்தான் வந்தார்.
ஆனால், கடந்த காலத்தில் இலங்கைப்பிரதமர் ஒருவர் கெலிகொப்டரில் வந்து இறங்கினார்.
1970 இல் ஶ்ரீமாவோ என். எம். பெரேரா , பீட்டர் கெனமன் ஆகியோர் அங்கம் வகித்த கூட்டரசாங்கத்தின் காலத்திலும் பொருளாதார நெருக்கடி வந்தது. உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவேண்டும் என்ற பொருளாதார கண்ணோட்டத்தில் வீட்டுக்கு வீடு மரவள்ளி செடியை வளர்க்கச்சொன்னார்கள். அத்துடன் சீனிக்குப்பதில் தென்னம் கருப்பட்டி, பனங்கருப்பட்டி, கித்துல் கருப்பட்டி பாவிக்கச்சொன்னார்கள்.
அப்போது “ அம்மா கிழங்கு நடச்சொல்கிறார் “ என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அவரை ஏளனம் செய்தது. அன்றிருந்த பொருளாதாரக்கொள்கைகளினால் வடக்கில் விவசாயிகள், வெங்காயம், மிளகாய் , உளுந்து உற்பத்தியில் தன்னிறைவு கண்டார்கள்.
ஆனால், அதன்பின்னர் 1977 இல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கைகளினால், அனைத்தும் பாழாகிவிட்டன. அதிலிருந்து இலங்கை அதன்பின்னர் மீளவேயில்லை.
கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தபோது அங்கு அமைச்சராகவிருந்த தோழர் ஏர்ணஸ்ட் சேகுவேரா, தனது அமைச்சகத்தை விட்டு வெளியேறி ஒரு கரும்புத்தொழிற்சாலையில் வேலை செய்தார்.![]()
நல்லதோர் குடும்பத்தலைவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் கருதி என்ன செய்வார்..? தன்னை தியாகம் செய்து குடும்பத்தை காப்பாற்றி நல்லநிலைக்கு உயர்த்துவார். தனது பிள்ளைகளின் கல்வி, மற்றும் அனைத்துத் தேவைகளுக்காகவும் அவர் உழைப்பார். யாருக்கு கீழேயோ வேலைசெய்துதான் அவர் அதற்கான வருமானத்தை தேடல்வேண்டும்.
தனது பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே குடும்பத்தலைவர் அயராமல் இயங்குவார்.
ஏனென்றால் அந்தப்பிள்ளைகள் அவரது வாரிசுகள். அவரும் அவரது மனைவியும் இணைந்து பெற்றெடுத்த செல்வங்கள்.
அரசியல் தலைவர்கள் என்பவர்கள் யார்? இவர்கள் மக்களால் தெரிவானவர்கள். மக்கள் அளித்த பொன்னான வாக்குகளால் நாடாளுமன்றம் சென்று அனைத்து வசதி, வாய்ப்புகளையும் சௌகரியங்களையும் வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்பவர்கள். இவர்களுக்குரிய சம்பளம் மக்களின் உழைப்பிலிருந்தும் அவர்கள் அரசுக்கு செலுத்தும் வரியிலிருந்தும் வழங்கப்படுகிறது.
குடும்பத்தலைவர் வெளியே சென்று உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்றும்போது, அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருக்கும். “ தனது உழைப்பினால் தனது குடும்பம் வாழவேண்டும். அத்துடன் தனது பிள்ளைகள் படித்து முன்னேறி, தன்னைப்போன்று குடும்பஸ்தனாகி, தத்தம் குடும்பங்களை முன்னேற்ற உழைக்கவேண்டும். “ என்ற சிந்தனைவயப்பட்ட தீர்க்கதரிசனம்தான் அது.
ஆனால், மக்களின் வாக்குரிமை ஆதரவைப்பெற்று நாடாளுமன்றம் செல்லும் தலைவர்கள், தங்களை நம்பிய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்..? என்பதை தீர்க்கதரிசனக் கண்ணோட்டத்தில் சிந்திக்கின்றார்களா..?
எதிர்பாராமல் தோன்றியிருக்கும் கொவிட் தொற்றினால் இறந்துவிடுபவர்களின் சடலங்களை எரிப்பதற்கும் மின்மயானம் அமைப்பதற்கு மக்களிடமே உதவி கோரும் அவல நிலையில்தான் இந்தத் தலைவர்கள் இருக்கின்றனர்.
வடமாகாணத்திற்கு இன்று அவசரத் தேவையாக இருப்பது மேலதிகமான மின் மயானங்கள். இது இவ்வாறிருக்க, பிரதமரின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ அங்கே தமது பரிவாரங்களுடன் வந்து, வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்யப்போவதாகவும், யாழ்ப்பாணம் விளையாட்டரங்கில் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளை நடத்தப்போவதாகவும் சொல்கிறார்.
எப்படி இருக்கிறது இவரது தீர்க்கதரிசனம்..?
குடும்பத்தலைவர், தனது குடும்பத்தின் உடனடித் தேவைபற்றித்தான் சிந்தித்து கருமமாற்றுவார்.
ஆனால், அரசியல் தலைவர்கள் தமது வாக்கு வங்கியை கவனத்தில்கொண்டுதான் கருமமாற்றுகிறார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு மக்கள் இரண்டுவேளைதான் உணவு உண்ணவேண்டும் எனச்சொல்லும் அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர், தமது எஜமானர்களான நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தங்களின் ஒரு வேளை உணவுக்கும் எவ்வளவு செலவிடுகிறார்கள்..? என்பதை வெளிப்படுத்துவாரா..?
“ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே “ என்று மக்கள் கடந்துசெல்லவேண்டியதுதான் !
—0—
![]()