கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்!… தொடர் 10 …. சங்கர சுப்பிரமணியன்.

இப்போது தமிழர் கொதித்தெழுந்துள்ளார்களே அது ஏன்? முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தால் கொதித்தெழாமல் கும்பிடவா செய்வார்கள்? அப்படி என்ன நடந்தது? எளிமையான நடையில் வெளியிடப்பட இருக்கும் சங்க இலக்கியம் தமிழர் இலக்கியம் அல்லவாம் திராவிடக் களஞ்சியமாம். சங்ககாலத்தில்
திராவிடர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இன்னும் கொஞ்சம் விட்டால் சங்ககாலத்திலும் அதற்கு முன் குமரிக்கண்டத்தில் தியாகராஜ கீர்த்தனை எல்லாம் பக்றுளி ஆற்றங்கரையில் நடைபெற்றது என்பார்கள் போலுள்ளது?

அதன்பின் இதுசம்பந்தமாக சலசலப்பு ஏற்பட முற்றுப்புள்ளி அரைப்புள்ளி என்று சில சமாளிப்புகளைத் தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளிவைக்கப்பட்டது. இந்த சலசலப்பபே தேவையில்லை செய்திகளை விபரமாக வெளியிட்டிருந்தால் இதுபோன்றவற்றை தவிர்த்திருக்கலாம். ஒருவேளை தமிழரின் நிலைப்பாட்டினை சோதித்து அடையாளத்தை மறைக்க எடுக்கப்பட்ட நிலைப்பாடாக இருக்குமோ என்ற ஐயப்பாடு தமிழன்பர்கள் மனதில் எழுவதை விலக்கிவிடவும் முடியாது.

கடைசியாக தெரியவந்திருப்பது கடந்த நூறு ஆண்டகளாக தமிழ்நாட்டில் நடைபெற்றவைகள் மற்றும் இலக்கியங்களைத் தொகுத்து திராவிடக் களஞ்சியமாக திரட்டி வெளியிட இருப்பதாக
சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். அதையும் அவ்வடிப்படையில் ஏற்றுக் கொள்வது சிரமமே. அந்த நிகழ்வுகளும் இலக்கியங்களிலும் தமிழ்நாட்டிலே தோன்றியதுதான். எழுதப்படுவதும் தமிழ் மொழியில் என்றிருக்க அது எவ்வாறு திராவிடக் களஞ்சியமாகும்?

சோழப் பேரரசு ஆதிக்கம் பெற்றிருந்த ஆந்திரா, ஒடிஸா, மற்றும் வங்கத்தில் அக்காலத்தில் நடைபெற்ற அந்தந்த பகுதிகளில் நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து தமிழிலேயே எழுதி ஆந்திர களஞ்சியம், கலிங்க களஞ்சியம், மற்றும் வங்க களஞ்சியம் என்று மாற்றினால் எப்படி?
அது சோழப்பேரரசு களஞ்சியம் என்பதை இருட்டடிப்பு செய்வதாகாதா? இந்திய வரலாற்றை, ஆங்கிலேயர் வரலாற்றை மட்டுமோ அல்லது மொகலாயர் வரலாற்றை மட்டுமோ எழுதி அதற்கு தனிப்பெயரிட்டு ஒட்டு மொத்த இந்திய வரலாற்றை இருட்டடிப்பு செய்ய யாரேனும் முயன்றால் அதை இந்திய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?

தமிழ், தமிழர் எனும் வாய்ச்சொல் வீரர்கள் வேண்டுமெனில் இதுபோன்று மொழிக்கு இடையூறு வரும் நேரங்களில் அமைதி காக்கலாம். ஆனால் தமிழுக்காக அறுபதுகளில் தம்மையே மாய்த்துக் கொண்டவர்களைப் போன்றோர் அமைதி காக்க மாட்டார்கள். இதுவரை தமிழ்மொழிமேல் பற்றுகொண்டு
மொழிகடந்தும் உயிரினை மாய்த்துள்ளார்கள் என்பதை வரலாற்றிலிருந்து எளிதில் அகற்றிவிட முடியாது.

சங்ககால நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று திரிக்க முயன்றால் உலகளவில் உள்ள வரலாற்று ஆசிரியர்கள் வாய்பொத்தி சும்மா இருந்து விடுவார்களா? எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வெளுத்ததை எல்லாம் பாலென்று எண்ணிய மனநிலை கொண்ட மனிதர்கள் அல்ல இன்றைய தமிழர். சங்ககாலத்து இலக்கியங்களை திராவிட களஞ்சியம் என்று பெயர்மாற்றி ஏமாற்றுவேலை செய்ய சங்க இலக்கியங்கள் திராவிடர் என்று நாட்டை ஆளும் தமிழ்நாட்டினர் சொத்து மட்டும் அல்ல. அது உலகெல்லாம் வாழும் அனைத்து தமிழரின் சொத்தாகும்.

எனவே தமிழர் இலக்கியங்களிலோ மரபிலே கைவைத்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் உலகுவாழ் தமிழர் கொதித்தெழுந்து விடுவர். தமிழரை எல்லா இடத்திலும் இப்படி பந்தாடக் காரணம் என்ன?

தமிழரிடம் சாதி, மதம், ஏழை, பணக்காரன், கற்றவன், கல்லாதவன், நாடு, அந்த நாட்டிலும் இந்தப் பகுதியில் இருப்பவனுக்கு இரண்டு கொம்பு முளைத்துள்ளது அந்தப் பகுதியில் வாழ்பபனுக்கு கொம்பில்லை, தமிழர்களுக்குள்ளே நாடுவிட்டு பிழைக்வந்திருந்தால் அவன் இழிவானவன், அகதியாக வந்திருந்தால் வேறுமாதிரி, அப்படி உடை உடுத்தியிருந்தால் உயர்ந்தவன், இப்படி உடை உடுத்தினால் இழிபிறவு, அந்த உணவை உண்டால் அறிவாளி, இந்த உணவை உண்பவன் மூடன் என்று வகைவகையாக தமிழர் பிரிந்து கிடக்கும் வரை தமிழருக்கு விடிவென்பது வெறும் கானல்நீர்தான்.

உலகில் அறிவார்ந்த சமூகமான தமிழன் ஏன் ஒன்றை மட்டும் எண்ணிப்பார்க்கவே மாட்டேன் என்கிறான்? தமிழரை அழித்தொழித்து விடவேண்டும் என்று ஆர்வமோடு இயங்குபவர் எல்லாம் எப்படி எல்லாவகையான முரண்பாடுகளையும் களைந்து ஒன்றாக இணைந்து சதித்திட்டம் தீட்டுகின்றனர்? தமிழன் மட்டும் பிரிந்து கிடந்தே பலவீனமாகி அவர்களின் வஞ்சக வலையில் சிக்குண்டு ஏன் சின்னாபின்னமாகிறான்?

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் அரிசியை கோதுமை என்று மாற்றிவிட முடியுமா? அரிசி தமிழ் நாட்டில எப்போதிலிருந்து இருக்கிறது கோதுமை தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தது என்பதுகூடத் தெரியாதவர்களா தமிழர்? அல்லது உலகம் முழுக்க இருக்கும்
உலகுவாழ்  தமிழ்மக்களும் ஒன்றும் தெரியாதவர்களா? அப்படியே ஏற்றுக் கொள்வார்களா?

சிந்து சமவெளி நாகரிகத்தையே தமிழர் நாகரிகம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கீழடி ஆய்வும் ஹரப்பா ஆய்வும் ஒத்துப் போகிறது. ஹரியாணாவில் ஒரு கிராமத்தருகே செய்யப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த மண்டையோடு நீலகிரிவாழ் பழங்குடி மக்களின் மண்டையோடு ஒத்துப்போவதால் இந்தியா முழுவதுமே ஏன் உலகம் முழுக்க தமிழர் நாகரீகம் பரவிக்கிடந்ததாக நிரூபணமாகிக் கொண்டிருக்கும் போது இந்த துரோகச்செயலான திராவிட இலக்கியம் எப்படி முளைக்க முற்பட்டது.

பலர் திராவிட அரசியலும் ஆரிய அரசியலும் வெவ்வேற அல்ல என்று கூறக்கேட்டுள்ளேன். அதெல்லாம் அப்படி இருக்காது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கூறுகிறார்கள் என நான் எண்ணியதுண்டு. ஆனால் அது உண்மயாய் இருக்குமோ என்று எண்ணும் வகையில் சாயம் வெளுத்து வருகிறது. இயற்கையான நிறமன்றில் செயற்கையான சாயம் வெளுக்கத்தானே செய்யும். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து இப்போது மனிதனைக் கடித்த கதையாக மாறிவருவதை மறைக்க இயலாது.

தமிழ்நாட்டு கீழடி நாகரிகத்தை பாரத நாகரிகம் என்று உயர்த்திப் பிடிக்க முயல்பவர்கள் தமிழ்மொழியை உயர்த்திப் பிடித்து தமிழ்மொழிதான் பாரதமொழி என்று சொல்லமுயலாமைக்கு காரணம் என்ன?
அடுத்தவர் பொருளை திருடி தம்பொருளாக உயர்த்திக் காட்டுவதில் தவறில்லையாம்
ஆனால் அப்பொருளின் உரிமையாளரை உயர்வானவர்கள் என்றுமட்டும் சொல்லமாட்டார்களாம். அதுபோல்
தமிழர் நாகரிகத்தை திராவிடர் நாகரிகம் என்போம் தமிழர் இலக்கியத்தை திராவிடர் இலக்கியம் என்போம் என்று சொல்லமுயல்வதை பார்க்கும்போது பலர் சொல்வதுபோல் ஆரியமும் திராவிடமும் ஒன்றோ என்று எண்ணவைக்கிறது.

இன்னொரு சந்தேகமும் வலுக்கிறது. ஆரம்பத்தில் தமிழ் தமிழனென்று
தமிழ்நாட்டை ஆண்டவர்கள் தமிழினத்துக்கு
ஒரு பேரழிவு வந்து துவண்டிருந்த சமயத்தில் தமிழ்நாட்டிலும் தமிழின் சிறப்பை மெது மெதுவாக தகர்த்து திராவிடம் என்று புகுத்தி விட்டால் தமிழ் அழிந்துவிடும் என்று நினைத்திருக்கலாம்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களே அவர்கள் உடலில் ஓடும் குருதி மாறுபடாதது போல் தாய்மொழி மாறாதிருந்தாலும் வேற்றுமையை விதைக்கும்போது, சித்தப்பன் பெரியப்பன் பிள்ளைகள்போல் கலப்பு ஏற்பட்டபின் வேற்றுமை பாராட்டாமல் எப்படி இருப்பார்கள? நாம் என்னதான் திராவிட மொழியினர் எல்லாம் நம் சகோதரர்தான் என்று நினைத்தாலும் அவர்கள் அப்படி நினைக்க வேண்டுமே?

இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்வோம். சிங்கப்பூர்வாழ் வட இந்தியர்கள் சிங்கப்பூர் அரசிடம் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? நாங்கள் இங்கு தமிழரைவிட அதிகமிருக்கிறோம் தமிழ் தேசிய மொழியாக இருக்கும்போது இந்தியை ஏன் தேசிய மொழியாக வைக்கக்கூடாது? என்பதே அக்கோரிக்கை. இப்போது ஒன்று என் நினைவில் வருகிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *