கட்டுரைகள்

ஒப்பற்ற அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா!…. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா.

அறிஞர் அண்ணா என்று அனைவராலும் அன்போடும், மதிப்போடும் அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர், பேரறிஞர் அண்ணா அவர்கள் உலகத் தமிழர்கள் அனைவரதும் உள்ளங்களில் வீற்றிருக்கும் ஒப்பற்ற தலைவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்னிகரற்று விளங்கிய மேதை. இணையற்ற பேச்சாளர். சுவைமிக்க எழுத்தாளர். எதிர்தரப்பில் இருந்தவர்களாலும் ஏற்றுப் புகழப்பட்ட அறிஞர். மாற்றாரையும் மதித்து நடந்த பண்பாளர். தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தற்கொடையாளர்.

பாமர மக்களை நோக்கித் தமிழ் இலக்கிய வெள்ளத்தைப் பாய்ச்சிய கவிஞன் மகாகவி பாரதி என்றால், பாமரரையும், படித்தவரையும் கவர்ந்திழுக்கும் விதத்தில் மேடைப் பேச்சினை ஒரு கலையாக மேன்மைப் படுத்திய தலைவன் பேரறிஞர் அண்ணா அவர்களே.

வளம் மிகுந்த தமிழ் நாட்டில், வரலாற்றுப் புகழ் நிறைந்த நகரம் காஞ்சிபுரம். பட்டுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற இடம். ஒரு காலத்தில் அது பல்லவ வேந்தர்களின் தலை நகராகப் புகழ்பெற்று விளங்கியது. பண்டைய இலக்கியங்களில் இடம் பெற்று இலங்கியது. பக்திக் களமாக எண்ணற்ற கோவில்களைக் கொண்டு துலங்கியது. காஞ்சிபுரம், சைவமும், வைணவமும், சமணமும், பௌத்தமும் வளர்ந்த இடம். கலைகள் பலவும் வளர்ந்து சிறந்த இடம். திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் பிறந்த இடம். அங்குதான் நாகரிகத் தமிழுக்கு நல்லுரை வகுத்த பேரறிஞர் அண்ணா பிறந்தார்.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் திகதி நடராசன், பங்காரு அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக அண்ணா பிறந்தார். சிற்றன்னையான இராஜாமணி அம்மாளின் தயவிலே வளர்ந்தார். கல்லூரிக்கல்வி வரை காஞ்சியிலேயே பயின்றார். தனது பட்டப்படிப்பைச் சென்னை, பச்சையப்பன் கல்லூரியிலே நிறைவு செய்தார்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அண்ணாவுக்குப் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் நடந்தது. இராணி அம்மாள் அண்ணாவின் வாழ்க்கைத் துணைவியானார். பச்சையப்பன் கல்லாரியிலே முதுமாணிப் பட்டம் பெற்றதும் பெற்றோரின் வறுமையாலும், குடும்பத் தலைவன் என்ற நிலைமையாலும் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை அண்ணாவை அழுத்தியது. கல்லூரியொன்றிலே ஆசிரியராகச் சேர்ந்து கடமை புரிந்தார். நான்கு மாதங்களிலேயே அந்த வேலையைத் தாமாகவே துறந்தார்.

பொதுப்பணிக்கென்றே பிறந்துவிட்ட அண்ணாவுக்கு சொந்த நலனுக்காக மட்டுமே வாழ்கின்ற சிந்தை இருக்கவில்லை. புறப்பட்டார். மூட நம்பிக்கைகளில் முடங்கிக் கிடக்கின்ற மக்களுக்கு விழிப்புணர்வூட்டப் புறப்பட்டார். மக்களைச் சுரண்டுகின்ற சுயநலம் மிகுந்த அரசியலைச் சுத்தப் படுத்தப் புறப்பட்டார். சாதிகளின் பெயரால் தாழ்த்தப்படுகின்ற மக்களுக்கு

நீதி கேட்கப் புறப்பட்டார். பாமரராய் அடிமைகளாய் வாழ்கின்ற மக்களுக்குப் பகுத்தறிவு ஊட்டப் புறப்பட்டார்.

நீதிக்கட்சியிலே இணைந்தார். ஆரம்பத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களின் ஆங்கிலப் பேச்சுக்களை தமிழில் மொழிபெயர்க்ககும் பணியிலே சிறந்தார். அதனால் அக்கட்சித் தலைவர்களைக் கவர்ந்தார். நீதிக்கட்சியின் கூட்டங்களிலே ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசினார். அற்புதமான கருத்துக்களை அடுக்குமொழியிலே அள்ளி வீசினார். தலைவர்கள் வியந்தனர். மக்கள் மகிழ்ந்தனர். அண்ணாவின் புகழ் நாடெங்கும் பரந்தது. மக்கள் கூட்டம் அண்ணாவின் பேச்சைக் கேட்கத் திரண்டது. மாணவர் சமுதாயம் அண்ணாவின் கருத்துக்களைக் கேட்டு உயர்ந்தது.

1935 ஆம் ஆண்டு, திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டிலே தந்தை பெரியாரை அண்ணா சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கவர்ந்தனர். அன்று முதல் அண்ணா பெரியாரின் சீடரானார். புதுயுகம் படைக்கும் பணியிலே பகுத்தறிவுத் தந்தைக்குத் தளபதியானார்.

ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்திலே ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி. அதனால் அக்கட்சியின் தலைவர்கள் ஆங்கிலேயர்களை எதிலும் அனுசரித்தே நடந்தார்கள். ஆங்கிலேயர் கொடுக்கும் பட்டங்களிலும், பதவிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களின் இந்தப் போக்கு அண்ணாவுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது. மூடத்தனங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கின்ற அதேவேளை அடிமை உணர்வுகளில் இருந்து தலைவர்களை மீட்டெடுப்பதும் அவசியம் என்று அவர் கருதினார். அதனால், 1944 ஆம் ஆண்டு, சேலத்திலே நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டிலே அதிரடியான சில தீர்மானங்களை முன்மொழிந்தார்.

நீதிக்கட்சியின் பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்ற வேண்டும் என்பது ஒன்று. ஆங்கிலேயர் கொடுத்த விருதுகளையும், கௌரவப் பட்டங்களையும் துறக்க வேண்டும் என்பது மற்றொன்று. ஆங்கிலேயர் இதுவரை அளித்திருந்த பதவிகளைத் துறப்பதுடன் இனிமேல் எந்தப் பதவிகளையும் அவர்களிடம் இருந்து பெறுதல் கூடாது என்பது இன்னொன்று. சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதால் இனிமேல் எவரும் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் போடுதல் கூடாது என்பதுவும் அண்ணா முன்மொழிந்த பிரேரணைகளில் ஒன்றாக இருந்தது.

அண்ணாவின் இந்தப் பிரேரணைகளுக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆதரவு தந்தார்கள். பட்டங்களிலும், பதவிகளிலும் ஆசைகொண்ட பலர் கடுமையாக எதிர்த்து நின்றார்கள். செல்வாக்கு மிகுந்த பலர் தீர்மானங்களைத் தோற்கடிக்க முயன்றார்கள். முப்பத்தைந்து மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அண்ணாவின் ஆணித்தரமான வாதங்களை யாராலும் அசைக்க முடியவில்லை. அதனால் திர்மானங்கள் நிறைவேறுவதை எவராலும் தடுக்க முடியவில்லை. அன்றுமுதல் நீதிக்கட்சி, “திராவிடர் கழகம்” ஆனது. தமிழ் நாட்டில் புதுயுகம் ஆரம்பமானது.

அண்ணா அவர்கள் மேடைப் பேச்சோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆற்றல் மிகுந்த தனது எழுத்தாலும் மக்களைக் கவர்ந்தார். நீதிக்கட்சியின் ஏடான “விடுதலை”யிலும், “நவயுகம்” என்ற பத்திரிகையிலும் நல்ல கருத்துக்களை எழுதினார். “திராவிடநாடு” என்ற பத்திரிகையைத் தாமே ஆரம்பித்து நடாத்தினார். ஆங்கிலத்தில் “ஹோம் லான்ட்” என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். பரதன், சௌமியன் என்று புனைபெயர்களிலும் பத்திரிகைகளில் எழுதினார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழினம் பற்றி மட்டுமல்லாது அரசியல், அறிவியல், சமூகவியல் என்று பல்வேறு துறைகளிலும் அண்ணா தன் எழுத்துக்களால் மக்களுக்கு அரிய கருத்துக்களை வழங்கினார். காதலைப் பற்றியும் கற்கண்டாய் இனிக்கும் தமிழில் அண்ணா எழுதியுள்ளார்.

“பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின் வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக் கொண்டவனைத் தொந்தரவு செய்தால், அவன் புலியினும் சீறுவான். எதுவும் செய்வான், எவர்க்கும் அஞ்சான், எதையும் கருதான்.”

என்று காதலின் வலிமையை மிகப்பொருத்தமாக எடுத்துரைக்கின்றன அண்ணாவின் வரிகள்.

அவற்றோடு மட்டும் அண்ணா விட்டுவிடவில்லை. பாமர மக்களின் மனங்களில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பக்குவமாகப் பதியவைப்பதற்கு உகந்த சாதனம் நாடகமே என்பதில் அண்ணா உறுதியான நம்பிக்கை கொண்டார். அதனால் ஏராளமான நாடகங்களை எழுதினார். சந்திரோதயம், சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்யம் முதலிய வரலாற்று நாடகங்களும், வேலைக்காரி, ஓர் இரவு, நீதிதேவன் மயக்கம், காதல்ஜோதி ஆகிய சமூகநாடகங்களும் அவற்றுள் அடங்கும். ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல், நல்லதம்பி, நல்லவன் வாழ்வான் என்பன அண்ணாவின் எழுத்திலே உருவான திரைப்படங்கள். ரங்கோன் ராதா முதலிய நாவல்களையும், எத்தனையோ சிறுகதைகளையும் கூட அண்ணா எழுதியுள்ளார். மக்களிடம் பகுத்தறிவுக் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவதற்கும் நாடகங்களையும், திரைப்படங்களையும், இலக்கியங்களையும் முதன் முதலில் முறையாகப் பயன்படுத்தி, அதில் மாபெரும் வெற்றிகண்டவர் அறிஞர் அண்ணா அவர்களே.

அண்ணா அவர்களின் எழுத்துக்களால் தமிழ் வளம் பெற்றது. புதுமைத் தரம் பெற்றது. இனிமை நலம் பெற்றது. அண்ணாவின் எழுத்துக்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் அந்நாளிலும், பின்னாளிலும் உருவானார்கள். தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவில் மட்டுமன்றிக் கடல் கடந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்களின் மனங்களில் எல்லாம் அண்ணாவின் எழுத்துக்கள் அறிவொளியைப் பாய்ச்சின. தமிழ் உணர்ச்சியை ஊட்டின, தமிழ் எழுச்சியைக் கூட்டின.

பொதுப்பணிக்கென்று வந்தவர்கள் இமைப்பொழுதும் சோராது, எப்போதும் மக்களுக்காகவே உழைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்துடையவர் அண்ணா அவர்கள். தமது அந்த எண்ணத்தை அவர் இப்படி வெளிப்படுத்துகின்றார்.

“நாட்டு மக்களின் நலனுக்கு நாம் நேற்று என்ன செய்தோம், இன்று என்ன செய்கிறோம், நாளை என்ன செய்யப்போகின்றோம் என்ற அடிப்படையில் நாம் பணிபுரிய வேண்டும். அந்த மக்கள் பணியில் வெற்றி பெறவேண்டும்.”

பேச்சினால் மட்டுமன்றிச் செயலாலும் அப்பழுக்கற்ற தூய்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து காட்டியவர் அண்ணா அவர்கள். முதலமைச்சராகும் வரை, முதலமைச்சர் பதவிக்கான வேதனத்தை வங்கிக்கு அனுப்பவேண்டிய அரசின் சட்டரீதியான தேவைப்பாடு ஏற்படும் வரை, தனக்கென வங்கிக் கணக்கொன்றை வைத்துக்கொள்ளாத எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் அவர்.

தந்தை பெரியார் அவர்கள் தமது சொத்துக்களின் வாரிசு உரிமையை நிலைநாட்டுவதற்காக, தமது 72 ஆவது வயதில் 26 வயதுடைய மணியம்மை அவர்களைத் திருமணம் செய்யத் தீர்மானித்தார்கள். அந்தத் திருமணம் தாம் பரப்பி வரும் பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறனதாயிற்றே என்று அண்ணா பதறினார். எவ்வளவோ முயன்றும் தந்தை பெரியாரின் திருமணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. அது 9.7.1949 ஆம் திகதி நடந்தேறியது. அதனால், ஆறாத் துயருற்ற அண்ணா திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். அவரோடு, ஈ.வெ.கி. சம்பத், இரா.நெடுஞ்செழியன், கலைஞர் மு.கருணாநிதி, மதியழகன், என்.வி.நடராசன் போன்ற முக்கிய தொண்டர்களும் இணைந்து கொண்டார்கள்.

சோகத்தால் கனத்த இதயத்தோடும், துயரத்தால் சுரந்த கண்ணீரொடும் கழகத்தை விட்டுப் பிரிந்த அண்ணா, தன்னுடன் சேர்ந்து வந்தவர்களோடு கலந்து ஆலோசனை செய்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை 17.09.1949 இல் ஆரம்பித்தார். அப்போதும்கூட, தாம் ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரது நாற்காலி காலியாகவே இருக்கும் என்றும், அதில் தலைவரவர் (தந்தை பெரியார்) என்றேனும் வந்தமர்வார் என்றும் கூறிய அண்ணா, தன் இறுதிக்காலம் வரை கழகத்தின் பொதுச் செயலாளராகவே பணியாற்றினார்.

எதிர்காலத் தமிழ்ச்சமூகம் கல்வியறிவில் உயர்ந்து விளங்க வேண்டும் என்று அண்ணா, ஆசைப்பட்டார். ஆதனால், மாணவர்களின் கல்வியிலே அதீத அக்கறை காட்டினார். கற்கும் காலத்தில் மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுக் கல்வியை இடை நிறுத்திவிடக்கூடாது என்று கவலைப்பட்டார். அதனால்தான், “மாணவர்கள் அரசியலைப் புரிந்து கொள்வது பாங்கு, வரிந்து கட்டிக்கொண்டு இறங்குவது தீங்கு” என்று எடுத்தரைத்தார். அதேவேளை கற்றறிந்தோரும், கல்வியில் உயர்ந்தோரும் அரசியலுக்கு வரவேண்டும், அப்படியானால்தான் அரசியல் வளமாகும். நாடு நலமாகும்

என்கின்ற கருத்தினை அடிக்கடி வலியுறுத்தினார். அதுபற்றி ஓரிடத்தில் அண்ணா இப்படிக் குறிப்பிடுகின்றார்:

“படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதால்தான், கற்றறிவாளர்கள் அரசியலில் கருத்துச் செலுத்தாமையால்தான் யார்யாரோ அரசியலில் ஈடுபட்டு, தாம் படித்த அளவுக்கு-தமக்குத் தெரிந்த தரத்துக்கு அரசியலை இறக்கிவிட்டார்கள்.”

1957 ஆம் ஆண்டுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாகப் போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பதினைந்து பேர் சட்ட மன்ற உறுப்பினர்களாகவும், இருவர் மத்திய பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அண்ணாவின் தலைமையிலே, தமிழ்நாட்டு அரசியலில் புதியதோர் மாற்றம் உருவாகத் தொடங்கியது.

கட்சித் தொண்டர்களை வெறும் உறுப்பினர்களாகக் கருதாமல், உடன்பிறந்த தம்பிகளாகத் தன் இதயத்தில் நினைத்து, வாய்நிறைய அழைத்து, பாசத்தைப் பொழிந்து, கட்சியை நடாத்திய முதல்வர் அகில உலகத்திலும் அண்ணா ஒருவரே என்றால் அதற்கு எதிர்வாதம் இருக்கமுடியாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றை வாழ்விலே கடைப்பிடித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அவற்றை வலியுறுத்தினார். அவற்றுக்கு அமைவாகவே கழகத் தொண்டர்களையும் வளர்த்தெடுத்தார்.

1962 ஆம் ஆண்டுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ஐம்பது பேர் சட்டமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். அண்ணா சட்டமன்றத்திற்குத் தெரிவாகாமல் விட்டாலும், மத்திய அரசின் மேலவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். அதன் மூலம் இந்திய அரசியல் எழுச்சிமிக்க மாற்றம் ஒன்றை உணரத் தொடங்கியது. அண்ணாவின் அறிவுப் புலமையையும், அரசியல் பண்பாட்டுச் செழுமையையும் அகில இந்தியாவுமே அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அண்ணா எதிர்க் கட்சியில் இருந்த போதிலும், ஆளும் கட்சி கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஆதரித்தார். பாராட்டிப் பேசினார். அரசியல் தலைவர்கள் வியந்தார்கள். அண்ணாவின் அரசியல் நாகரிகத்தை நயந்தார்கள். எதிர்க்கட்சியென்றால் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பது என்று அன்று வரை இருந்த நிலைமையை அண்ணா மாற்றினார்.

மக்களுக்காக, மக்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்த முயன்றமைக்காகப் பலமுறை சிறை சென்றவர் அண்ணா அவர்கள். 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடாத்தி யமைக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 1949 இல் ஆரியமாயை என்ற நூலை எழதியதற்காகச் சிறைவாசத்தை அனுபவித்தார். 1953 இல் மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக மூன்றுமாதச் சிறைத் தண்டனை பெற்றார். 1958 ஆம் ஆண்டு நேருவுக்குக் கறுப்புக்கொடி காட்டுவது தொடர்பான கூட்டத்தில் உரையாற்று வதற்காகச் சென்றபோது கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டார். 1962 இல்

அரசியல் காரணங்களுக்காகப் பத்து வாரங்கள் சிறையிருக்கவேண்டி ஏற்பட்டது.

1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தமிழ் நாட்டின் வரலாற்றில் மட்டுமல்லாது, இந்தியாவின் அரசியல் வரலாற்றிலும் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றியீட்டி தமிழக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். தலைமைச் செயலகத்திலே முதலமைச்சராகப் பதவியேற்றதும் அரசு ஊழியர்களின் முன்னிலையில் அண்ணா ஆற்றிய உரை எந்தத் தலைவரும் என்றுமே கூறாத கருத்துக்களைக் கொண்டிருந்தது.

“கானம் பாடும் வானம்பாடிகளைப் போலத் திரிந்தவர்கள் நாங்கள். எங்களைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைப்பதைப் போலப் பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். பொறுப்புத் தீர்ந்து விட்டதாகக் கருதிப் போய்விடாதீர்கள். பொறுப்பு இனிமேல்தான் அதிகமாகப்போகிறது. என்னை உங்கள் குடும்பச் சகோதரனாக எண்ணிக்கொள்ளுங்கள். ஆட்சிக்கு முற்றிலும் புதியவர்கள் நாங்கள். எனவே தவறு நிகழ்ந்தால் தயங்காமல் எடுத்துக் கூறுங்கள். என்னுடைய கடமையை நிறைவேற்ற எனக்கு உதவுங்கள். பொறுமையாக இருங்கள். தேவைப் படும்போது என்னைத் திருத்துங்கள். என்னுடைய குறிக்கோள் உங்களுக்கு உழைப்பதுதான். முதலில் நான் மக்கள் தொண்டன். பிறகுதான் முன்னேற்றக் கழகத்தவன், முதலமைச்சன்”

இவ்வாறு பேசிய அண்ணா “பணியுமாம் என்றும் பெருமை” என்னும் வள்ளுவரின் வாக்குக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். எல்லோரின் இதயங்களிலும் மென்மேலும் உயர்ந்தார்.

அண்ணா என்றுமே பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்லர். அதனால்தான் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கும் போது, சுதந்திரமாக மக்களுக்குப் பணிசெய்ய முடியாத “சூழ் நிலயின் கைதி” யாக இருப்பதாக நினைத்தார். திராவிடநாடு இதழில் தம்பிக்கு வரைந்த கடிதம் ஒன்றில் அண்ணா இப்படிக் குறிப்பிடுகின்றார்:

“ எந்தப்பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ, எந்தப்பணியில் நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்ட வந்தேனோ, எந்தப் பணிமூலம் என் கருத்துக்களை உனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று, அந்தக் கருத்துக்களின் வெற்றிக்கான வழிகளைக் காண முடிந்ததோ, எந்தப்பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கோர் இடம் கிடைத்ததோ, அதுகுறித்து நான் அளவற்ற மகிழ்ச்சி பெற முடிந்ததோ, அந்தப் பணியினை முன்போலச் செய்ய முடியாதவன் ஆக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக ஆக்கப்பட்டுக் கிடக்கிறேன்.”

முதல் அமைச்சர் பதவிக்கு முழுச் சிறப்பையே கொடுத்தவர் அண்ணா அவர்கள். மாற்றுக் கட்சியினரையும் அவர் மதிப்போடு நடாத்தினார். மூத்த

அரசியல்வாதிகளை ஏற்றிப் பணிந்தார். மக்களிடம் எப்போதும் மாறாத அன்பு கொண்ட அண்ணா அவர்கள் மக்கள் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்தார்கள்.

தமிழ் மொழியில் தணியாத பற்றுக்கொண்ட அண்ணா அவர்கள். அனைத்துலகும் வியக்கும் வண்ணம், 1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தினார்கள். மாநாட்டை ஒட்டி தமிழ் வளர்த்த அறிஞர்கள் பத்துப் பேருக்கு சென்னையிலே நினைவுச் சிலைகள் நிறுவப்பட்டன. அவ்வாறு, பத்துச் சிலைகளை வைத்த அண்ணாவுக்கும் ஒரு சிலை வைத்தபோது உலகமே அண்ணாவின் ஒப்புயர்வற்ற சிறப்பை உணர்ந்து வியந்தது.

மொழிவழி மாநிலம் முழு உரிமை பெற்றுத் திகழ வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னுரை எழுதியவர் அண்ணா அவர்களே. அதுவரை “மெட்றாஸ் ஸ்டேட்” என்று அழைக்கப்பட்டு வந்த தமிழக மாநிலத்திற்கு, “தமிழ்நாடு” என்று சட்டபூர்வமாகப் பெயர்மாற்றம் செய்து சரித்திரத்தில் ஏற்றம் பெற்றார் அண்ணா அவர்கள்.

உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் உள்ள உன்னதங்களை அறிந்துகொண்டார். தமிழ்நாட்டையும் அவ்வாறு அபிவிருத்தி செய்யச் சன்னதங்கொண்டார். உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் உரையாற்றி, அறிஞர்களையும் மாணவர்களையும் கவர்ந்தார்.

“மனம் பெரியது, உயிரல்ல. மக்கள் பெரியவர், மதமல்ல. எவருக்கும் நாம் அடிமையல்ல. நமக்கு யாரும் அடிமையாக இருக்க வேண்டாம். இதுவே நமக்குக் கீதை”

என்று சொன்ன அந்த மேதை, கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டபோது உலகத் தமிழினமே கலங்கியது. அண்ணா அவர்களுக்கு அமெரிக்காவிலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால், உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இறவாது வீற்றிருக்கும் அந்த உத்தமத் தலைவர், இருபதாம் நூற்றாண்டில் தனது தனித்துவத் தமிழ் நடையால் தரணியெங்கும் தமிழ் மணம் பரப்பச்செய்த தமிழ்த் தாயின் தவப் புதல்வர், 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு தாண்டிச்சில நிமிடங்களில் (அதாவது 3 ஆம் திகதி சூரியன் உதிப்பதற்கு முன்னரே 12.22 மணிக்கு) இவ்வுலகை விட்டு நீங்கினார்.

1967 அம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதல் இன்றுவரை, அண்ணாவின் பெயர் சொல்லும் ஆட்சியே நடைபெற்று வருகின்றது. அவர் தோற்கடித்த காங்கிரஸ் கட்சி அதற்குப்பிறகு ஆட்சிக்கு வந்ததே இல்லை. அண்ணா அவர்கள் தோற்றுவித்த கட்சியையும், அவரது பெயரில் தோன்றிய கட்சியையும் தவிர வேறு யாராலும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. ஆளும் கட்சியினரும் அண்ணாவின் பெயராலேயே ஆட்சியை நடாத்துகிறார்கள். எதிர்க்கட்சியினரும் தங்களை அண்ணாவின் வாரிசுகளாகவே நினைக்கிறார்கள். இதர கட்சிகள் சிலவற்றில் இருப்பவர்களில் பலரும் அண்ணாவையே தங்கள் அரசியல் குருவாக மதிக்கிறார்கள். இந்த அதிசயம்

உலகில் வேறெந்த நாட்டு அரசியலிலும் நிகழ்ந்ததேயில்லை. இந்தப் பெருமை உலகில் வேறெந்த அரசியல் தலைவருக்கும் கிடைத்ததேயில்லை. அந்த அளவிற்கு மறைந்தபிறகும், தமிழ்நாட்டு அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்குகின்றார் அறிஞர் அண்ணா அவர்கள்.

வாழ்க தமிழ்! வாழ்க அண்ணா புகழ்!!

Loading

One Comment

  1. ஒப்பற்ற அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களைப்பற்றி ஒப்பற்ற ஐயா திரு. பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்களால் மட்டுமே இவ்வளவு சிறப்பான ஒரு கட்டுரையை படைக்க முடியும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. நான் அறிஞர் அண்ணா பற்றி பலர் எழுதியவற்றை படித்துள்ளேன். அவைகள் எல்லாம் எனக்கு பிடித்திருந்தாலும் இக்கட்டுரை என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நடந்ததைத்தான் அவர் சொல்லியிருந்தாரும் அக்கட்டுரையே எடுத்துச் சென்றுள்ள பாங்கு பாராட்டுக்குரியது. ஒருவரது வரலாற்றை பதிவிடுவதுபோல மிகவும் வளமிகு நடையோடு வலம் வந்துள்ளது. கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள்! கட்டுரையாளருக்கு எனது வாழ்த்துக்கள்!!

    -சங்கர சுப்பிரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *