Featureகட்டுரைகள்

மக்கள் ஒரு திசையில், தலைவர்கள் வேறு திசையில்!…. அவதானி.

வீடில்லாதவர்களுக்கு வீடு அமைத்துக்கொடுத்தால் அது பெரும் புண்ணியம் என்று சொல்லப்பட்ட காலம் மறைந்து, மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கு வசதி செய்துகொடுத்தால், அதுவே தற்போது பெரும் பெரும் புண்ணியமாக கருதப்படும் காலத்திற்கு வந்துள்ளோம்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனோ தொற்றால் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு மின்மயானம் தேடி அலையவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நிருவாகம் வந்துள்ளது.

யாழ். குடாநாட்டிலிருக்கும் மின்மாயனத்தின் குறிப்பிட்ட வாயு இயந்திரத்திலும் சிக்கல்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அதனால், சடலங்கள் வவுனியாவுக்கும் எடுத்துச்செல்லப்பட்டன.

ஒரு காலத்தில், நடந்த கலவரத்தில் அநுராதபுரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதால், அதனை அநியாயபுரம் என்று வர்ணித்தவர்கள் நாம்.

இன்று அதே அநுராதபுரத்திற்கு வடபகுதித்தமிழர்களின் சடலங்களை எடுத்துச்செல்லவேண்டிய நிலை வந்திருக்கிறது இந்தக் கொரோனோவினால்.

மன்னாரில் மின்மயானம் அமைக்க பொதுமக்களிடம் நிதி உதவி கோரப்படுகிறது.

சடலங்கள் மாறிவிடுவதனால், அஸ்திகளை உறவினர்களிடம் வழங்கும்போதும் சிக்கல்கள் தோன்றுகின்றன.

சில பிரதேசங்களில் தொற்றினால் இறந்தவர்களை எரியூட்டவும் அப்பகுதி மக்கள் விரும்புவதில்லை.

மயானங்கள் மாநகர சபையின் பொறுப்பிலிருக்கிறதா..? அல்லது மாகாண சபைகளின் நேரடிக்கவனிப்பிலிருக்கிறதா..? என்பது பற்றியும் மக்களுக்குத் தெளிவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இந்தத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொலன்னறுவைக்கு எடுத்துச்சென்று தகனம் செய்யவேண்டியிருப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரான பெண்மணி வருத்தம் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பிலிருந்து சுமார் நூறு கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பொலன்னறுவைக்கு சடலங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

சடலத்தை எடுத்துச்செல்ல ஒரு வாகனம், சடலத்தை எரிக்கும் பணியிலீடுபடுபவர்களை அழைத்துச்செல்ல மற்றும் ஒரு வாகனம். இவ்வளவும் சாத்தியமாவதற்காக சடலமானது இறந்த இடத்தின் சவச்சாலையில் காத்திருக்கவேண்டி அவலம்.

தனித் தமிழ் ஈழம்தான் எமது குறிக்கோள் என்று முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள் இன்று உள்ளக சுயநிர்ணயம் பேசியவாறு ஜனநாயக வழியில் நாடாளுமன்ற பாதைக்கு வந்துள்ளனர். அவர்களின் தேர்தல் தொகுதிகளில்தான் அவர்களது மக்கள் மேற்சொன்ன அவதிகளுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்கள் கருதிய தமிழ்ப்பிரதேசங்களான மட்டக்களப்பு – திருகோணமலை – யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த கொரோனோவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு அநுராதபுரத்திற்கும் பொலன்னறுவைக்கும் செல்லவேண்டியிருக்கிறது !

இவ்வளவு பிரச்சினைகள் இறந்தவர்களின் உறவினர்களை வாட்டிக்கொண்டிருக்கையில், அங்கர் பால் மாவுக்கும் மண்ணெண்ணைக்கும் சீனிக்கும் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

மறைகரங்களால் மக்களின் அத்தியாவசியப்பொருட்கள் பதுக்கப்படுகின்றன.

மாணவர்களின் கல்வி பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தங்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதனால், ஆசிரிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தன.

க.பொ.த. உயர்தர – சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகவேண்டிய மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு பிரச்சினைகளினாலும் துன்பப்பட்டிருப்பவர்கள், தேர்தல்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு தமது பொன்னான வாக்குகளை வழங்கிய மக்கள்தான்.

நாட்டின் ஜனதிபதி அமெரிக்கா செல்லத்தயாராகின்றார். பிரதமர் இத்தாலிக்குச் செல்லவிருக்கிறார். ஜெனீவாவுக்கு செல்ல முடியாத எமது தமிழ்த்தலைவர்கள் மெய்நிகரில் பட்டிமன்றத்திற்கு தயாராகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மட்டக்களப்பிலும் மின்மயானத்தின் அவசியத்தேவை குறித்து மக்களும் ஊடகங்களும் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெனீவா மனித உரிமை ஆணையாளருக்கு அறிக்கை அனுப்புவதில் எமது தமிழ்த்தேசியத்தலைவர்கள் குடுமி பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்கள், அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்வது,,? உறவினர் தொற்றினால் இறந்துவிட்டால், எங்கே தகனம் செய்வது, எவ்வாறு அஸ்தியை பெறுவது என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றில் ஜனாதிபதியின் அவசரகால சட்டத் தீர்மானம் விவாதத்திற்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறது.

அதனை எதிர்த்து வாக்களிப்பதிலும் தமிழ்த்தலைவர்களுக்கிடையில் ஒருமித்த கருத்து இல்லை.

ஒரு காலத்தில் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகட்டிக்கொடுப்பதற்காக கிராமோதயம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ரணசிங்க பிரேமதாச. அதனால் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்தனர். எனினும் மலையகத்திலும் வடக்கு – கிழக்கிலும் அந்தத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த கொரோனோ, ஆட்சியாளர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு முக்கிய செய்தியை வழங்கியிருக்கிறது.

ஒவ்வொரு ஊர்களிலும் வீடற்றவர்களுக்கு வீடுகள் மாத்திரமல்ல ஏற்கனவே இயங்கும் மருத்துவமனைகளின் அடிப்படைத்தேவைகளையும் கவனித்து, தொகுதிக்கு தொகுதி மின்மயானங்களை அமைப்பதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வரல் வேண்டும் என்ற செய்தியையும் இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ் சொல்லியிருக்கிறது.

கண்கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் என்பதுபோன்று, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியையடுத்து, அமைச்சுகளின் செலவீனங்களை அரசு கட்டுபடுத்தப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இவ்வளவு காலமும் அமைச்சுகளினால் வீண் விரையம் செய்யப்பட்ட ஆளணிகள் பற்றியும் அரசு ஆராய்தல் வேண்டும்.

ஒவ்வொரு அமைச்சரின் தேவைக்காகவும் அரசு செலவிடும் பணம் மக்களின் பணம்தான். ஆனால், மக்களுக்கு ஒரு கஷ்டம் வந்துவிட்டால், அதுவும் இந்த பேரிடர்காலத்தில் வந்துவிட்டால்,

அவர்களின் துயர்துடைக்க அமைச்சர்களோ, அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ மக்களைத் தேடிச்செல்வதில்லை.

அவசரகால சட்டம் நடைமுறைக்கு வந்தால், அரசிலிருக்கும் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாமதிக்காமல் தத்தம் தொகுதிகளுக்கு அவசரமாகச்சென்று அம்மக்களின் அவசியத்தேவைகள் என்ன என்பதை பார்ப்பதற்கும் அச்சட்டம் வழிவகை செய்தல் வேண்டும்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களான அரிசி – சீனி – மாவு மற்றும் பால் மாவு ஆகியனவற்றை பதுக்கும் பகல் கொள்ளைக்காரர்கள் அதிகரித்துள்ளனர்.

அவர்கள் பதுக்கியவற்றின் படங்களை ஊடகங்களில் பார்க்கின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக எமது தமிழ் எம். பி.க்களும் தலைநகரத்தை விட்டு வெளியே வந்து தத்தம் தொகுதிகளுக்குச்சென்று சமூக இடைவெளியோடு மக்களை சந்திக்கவேண்டும்.

தமது மாதவேதனங்களை மின்மயானங்கள் அமைப்பதற்கு வழங்கினாலும் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

அதற்கு முதலில் ஆவனசெய்யட்டும் . அதன்பின்னர் ஜெனீவாவுக்கு அறிக்கை அனுப்புவது எவ்வாறு என்பது பற்றி யோசிக்கட்டும்.

ஜெனீவா எங்கும் ஓடிவிடாது, 2010 இலிருந்து வருடாந்த உற்சவத்திற்கு செல்வதுபோன்று அங்கு சென்று வரும் எமது தலைவர்கள், இந்த ஆண்டை நெருக்கடி காலமாக கருதி முதலில் செய்யவேண்டியதை செய்யவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *