கண்ணுக்குத் தெரிந்தவர்களினால் காணாமல் போனவர்களும்!..?…. அவதானி.

கடந்து சென்ற ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனவர்கள் தினம் !
இந்தத் தினம், கண்ணுக்குத் தெரிந்தவர்களினால் காணாமலாக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் தொடர்ந்து நடத்திவரும் அறப்போராட்ட காலத்தில் மீண்டும் வந்துள்ளது.![]()
அதேசமயத்தில் கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸின் தாக்குதலினால் உலகெங்கும் இலட்சக்கணக்கானோர் பூவுலகிலிருந்து காணாமலாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இந்தத் தினம் வந்துள்ளது.
வருடாந்தம் இந்தத்தினம் வரத்தான்போகிறது.
ஆனால், அதற்கான நீதியும் காணாமலாகிக்கொண்டுதானிருக்கிறது.
“ ஒருவர் காணாமல்போயிருந்தால், அவர் என்ன காரணத்திற்காக காணாமல் போனார் என்பதை விசாரிக்கத் தேவையில்லை. அதுவிடயத்தில் குற்றம் ஏதும் நடந்துள்ளதா என்றும் பார்க்காதீர்கள். அதை மறந்துவிடுங்கள். அவர் ஏன் காணாமல்போனார் என்பதையும் தேடாதீர்கள். அவர் எந்தப்பக்கம் என்றும் பார்க்காதீர்கள். அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, காணாமல்போனவர் எங்கள் ஶ்ரீலங்கா நாட்டவர் என்ற அடிப்படையில் அதனால் ஏற்பட்ட வலியை உணர்ந்துகொண்டு உரிய இழப்பீடுகளை வழங்கவேண்டும். “ என்று ஜனாதிபதி அமைச்சரவையிலும் வெளியிலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். “ என்று நீதி அமைச்சர் அலி சப்ரி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதை அண்மைக்கால ஊடகங்களில் அவதானிக்க முடிந்தது.
இன்றைய ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளராகவும் அவரது அண்ணன் ஜனாதிபதியாகவும் பதவியிலிருந்த காலப்பகுதியில் நடந்த இறுதி யுத்த காலத்தில் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துவரும் அறப்போராட்டம் ஆயிரத்து எழுநூறு நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தத் தகவல் வெளியாகியிருக்கும்போது, கண்ணுக்குத் தெரியாத வைரஸின்
தாக்கத்தினால் பத்தாயிரம் பேரளவில் இந்த இலங்கை பூமியிலிருந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு கண்ணுக்குத் தெரியாத எதிரியினால் காணாமலாகிக்கொண்டிருப்பவர்கள், ஏன் காணாமல்போனார்கள்..? , அவர்கள் எந்தப்பக்கத்தை சார்ந்தவர்கள்..? என்ன காரணத்திற்காக காணாமல்போனார்கள்…? என்பதை வேண்டுமானால், அவர்களின் உறவினர்கள் விசாரிக்கவேண்டிய அவசியம் இல்லை. தெளிவான பதில் உண்டு.
ஆனால், 2009 ஆம் ஆண்டு உறவினர்களின் ( மனைவி – மக்கள் ) முன்னிலையில் சரணடைந்தவர்கள் அதன்பின்னர் காணாமல் போயிருப்பதனால், அவர்கள் பற்றி அறிந்துகொள்ளும் அடிப்படை மனித உரிமைகூட அந்த சொந்தங்களுக்கு இல்லையா..?
அவ்வாறு சரணடைந்து அதன்பின்னர் காணாமல்போனவரின் குழந்தைக்கு தற்போது பத்துவயது கடந்திருப்பின், “ அம்மா.. அப்பா எங்கே..? “என்று கேட்டால், ஜனாதிபதி சொல்லியிருக்கும் அந்தத் தீர்க்கமான பதிலைத்தான் சொல்லவேண்டுமா..? என்று மாண்புமிகு நீதியமைச்சரிடம் கேட்கத் தோன்றுகிறது.
கொரொனோ வைரஸினால் இந்த பூமிப்பந்திலிருந்து காணாமல் போயிருப்பவரின் மரணச்சான்றிதழாவது உறவினர்களுக்கு கிடைத்திருக்கும்.
ஆனால், உயிரோடு சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டிருந்தால், அவர்களில் பலர் வெளிநாடுகளில் வேறு வேறு பெயர்களில் நடமாடுகிறார்கள் என்று நாக்கூசாமல் சொல்லும் அமைச்சர் ஒருவரும் இன்றைய அமைச்சரவையில்தானே இருக்கிறார்.
நீதியற்ற ஊரில் நாதியற்றவள் பிள்ளை பெற்றால் என்ன நடக்குமோ அதுதான் தற்போது ஜனநாயகம் பேசும் எமது நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.
இலங்கையில் 1971 ஆம் ஆண்டு ஏப்ரில் கிளர்ச்சியை முன்னெடுத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கொல்லப்பட்டனர். பலரது சடலங்கள் களனி கங்கையில் மிதந்து கடலில் சங்கமித்தன.
புனிதபூமி எனச்சொல்லப்படும் கதிர்காமத்திலும் ஒரு சிங்கள யுவதி பிரேமாவதி மனம்பேரி மானபங்கப்படுத்தப்பட்டு மண்ணுக்குள் புதையுண்டாள். கிரிசாந்தி என்ற தமிழ்ச் சிறுமி செம்மணியில்
புதையுண்டாள். அவளது புதைகுழியிலிருந்து மேலும் பலர் சடலங்களாக கிடைத்தனர்.
மீண்டும் 1987 – 88 – 89 காலப்பகுதியில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களுக்காக நீதி கேட்டு ஐ.நா. முன்றலில் துண்டுப்பிரசுரம் கொடுத்தவரின் அதிபர் பதவிக்காலத்தில்தான் இன்றைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்தார்.
இவர்களின் அரசியலில் நேற்று – இன்று – நாளை என்ற வரலாறுதான் எதிர்காலத்தில் எழுதப்படும்.
இலங்கையில் 1971 இலும் அதன்பின்னர் 1987 – 88 – 89 இலும் , அதற்கும் பிறகு 2009 இலும் அதற்கு முன்னரும் காணாமல்போனவர்களுக்கு இன்றுவரையில் நீதி கிடைக்கவில்லை.

கொல்லப்பட்ட ஆத்மாக்கள் உயிர்த்தெழுந்து வந்து நீதிகோரமாட்டாது. ஆனால், அவற்றின் இரத்த உறவுகள் தொடர்ந்து நீதியை நாடி ஓடிக்கொண்டுதான் இருக்கப்போகின்றன.
கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொடிய வைரஸ், இனம் – மதம் – மொழி – பார்க்காமல், ஏழை – செல்வந்தர் என்ற பாகுபாடின்றி, பிரதேச வேறுபாடு இன்றி அனைவரையும் தொற்றி அழைத்துச்செல்கிறது.
ஆனால், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபோது, இனமறிந்து – மொழி அறிந்து ஆயுதப்படையினால் அழைத்துச்செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது..? என்பதை கேட்கும் வலிசுமந்தவர்களின் குரல்தான் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஒலிக்கிறது.
அவர்களுக்கான தனது தார்மீக ஆதரவைத்தான் ஐ. நா. சபை காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் என்று ஒரு நாளை குறித்து பிரகடனம் செய்கின்றது.
இவ்வேளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குரல் ஒலிப்பதற்கு பிரதான காரணியாக இருந்தவரின் தரப்பிலிருந்து வந்துள்ள செய்தி, நீதிதேவனையே கேள்விக்குள்ளாக்குகிறது.
ஒரு ஒலிவாங்கி உட்கொண்டதை, ஒரு ஒலிபெருக்கி வெளிப்படுத்தியிருக்கிறது.
எனினும் , காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் பொது வெளியில் தங்கள் குரலை ஒலித்துக் கொண்டேயிருப்பார்கள்.
இறுதியில் அது குரலற்றவர்களின் குரலாக இருந்தாலும், தொடர்ந்து ஒலிக்கும்.
—0–
![]()