அம்பலப்படுத்துதல் எனும் கலை!…. அண்டனூர் சுரா.


தேர்தல் அலுவலராக ஒரு கிராமத்தில் பணியமர்த்தப்படுகையில், குறிப்பிட்ட நேரத்திற்கு அவ்வூருக்குச் சென்று, வாக்குச்சாவடியில் தங்கியிருந்து, ஊரார் யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல், தேர்தலை நடத்திக் கொடுத்துவிட்டு, வாக்குப் பெட்டியை எடுத்ததும் பத்திரமாக வீடு திரும்புவதே வழக்கம். இந்த முறை தேர்தலுக்குச் செல்லும் கிராமம், அவ்வூரின் வரலாற்றுச் சிறப்பு, பெயர்க்காரணம், வரலாற்றுத் தொன்மையான இடங்கள் ஏதேனும் இருந்தால் நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும், என்று தேர்தல் பணிக்குச் சென்றேன். தேர்தல் அலுவலர்களுக்குப் பேருந்து வசதி செய்து தரப்படும், என அறிவித்த மாவட்ட நிர்வாகத்தால் சொன்னபடி அவ்வசதி செய்துகொடுக்க முடியவில்லை. பல பேருந்துகளில் ஏறி இறங்கி, தேர்தல் பணியாற்ற வேண்டிய கிராமத்தைச் சென்றடைகையில், அப்பாடா என போதும்நிலை என்றாகிவிட்டது.
தேர்தல் பணி என்பது மிகவும் சவாலான பணி. அதில் பணியாற்றும் அதிகாரிகள் அதிகாரமற்ற அதிகாரம் கொண்டவர்கள். அவரவர் உடைமை, உயிர், பணிப் பாதுகாப்பை அவரவர் பாதுகாத்துக்கொண்டால்தான் உண்டு, என்பதால் ஊரின் சிறப்பு குறித்து, தெரிந்துகொள்ள இது தகுந்த நேரமல்ல, என வாக்குச் சாவடிக்கும் வெளியே ஒரு மரத்தடியின் கீழ் அமர்கையில், ஒரு நண்பரிடமிருந்து அலைபேசி வழி அழைப்பு வந்தது. இருவரும் பரஸ்பரம் அவரவர் வாக்குச்சாவடியைப் பற்றி விசாரித்துக்கொண்டோம். எனக்கு பணிக்கப்பட்ட ஊர் லெம்பலக்குடி, எனச் சொன்னேன். லெம்பலக்குடியா, இலெம்பலக்குடியா எனக் கேட்டார். அப்படியாகக் கேட்டவர், தமிழாசிரியர். தமிழ் இலக்கணப்படி ல – வரிசைக்கும் முன்பு இ இடம்பெற வேண்டும். லக்குமணன் – இலக்குமணன், லட்சியம் – இலட்சியம் இப்படியாக. அக்கணம் தொட்டே, ஊர்ப் பெயர் சரிதானா, என்கிற சிந்தனையில் இறங்கினேன். தமிழாசிரியர் சொல்வதைப் போல இலெம்பலக்குடி என்றுதான் இருக்க வேண்டுமோ?, நம் தமிழ்ப்பற்றாளர்களுக்கு இந்தப் பிழை எப்படி கண்ணுக்குத் தெரியாமல் போனது? ஊரை ஒரு சுற்று வலம் வந்தேன். அங்காடி, அங்கன்வாடி, கடைத்தெரு, பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம்,… என அனைத்திலும் லெம்பலக்குடி என்றே இருந்தது. ஊரின் பெயர்க்காரணத்தை விசாரிக்கத் தொடங்கினேன். கல்லூரி பருவ இளைஞர்களிடம் இதற்கான பதிலை எதிர்பார்க்க முடியவில்லை.
குறைந்த வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி என்பதால், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வராத நேரத்தில், ஊரின் காரணப் பெயரின் மீது என் சிந்தனை குவிந்தது. தேர்தல் முடிந்ததற்குப் பிறகு, ஊர்ப் பெரியவரிடம் விசாரித்தேன். ஏழு அம்பலக்குடி என்பதே இவ்வூரின் பெயர். அது மெல்ல மருவி லெம்பலக்குடி என்றாகிவிட்டது, என்றார்.
தமிழில் ழ வரிசை எழுத்துகள் மக்களிடம் வழக்கொழிந்து வந்திருக்கிறது, என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில், அழும்பில் என்றொரு ஊர் உண்டு. அகநானூற்றில் இடம் பெற்றுள்ள ஊர் இது. இவ்வூரை மதுரைக்காஞ்சியும் பாடியுள்ளது. ‘மானவிறல் வேள்’ என்கிற குறுநில மன்னன் ஆண்ட பகுதி என்று. அவ்வூரிலுள்ள ழ வரிசை எழுத்தான ‘ழு’ மக்கள் நாவில் நுழையாமல், அந்த எழுத்து ‘நா’க்களால் விலக்கப்பட்டு, அம்பில் என்றாகிப் போனது.
பாண்டிய ஆட்சியின் கீழிருந்த அழும்பில், பிற்கால சோழ ஆட்சியின் கீழ் சென்றதன் பிறகு, அவ்வூரில் ஒரு சிவன் கோவில் எழுப்பப்பட்டது. அதன்பிறகு, அவ்வூர் அழும்பில் கோவில் என அழைக்கப்பட்டு, அதுவும் மெல்லத் திரிந்து அம்பில் கோவில் என்றாகி, தற்போது அம்புக்கோவில் என அழைக்கலாகிறது. அதே போன்றுதான், ஏழு அம்பலக் குடி என்கிற ஊர் லெம்பலக்குடியாகியிருக்கிறது, எனப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஏழு அம்பலக்குடி என்பது என்ன, என்று அடுத்த விசாரணையில் இறங்க வேண்டியதாகிவிட்டது. ஏழு அம்பலக்காரர்கள் இந்த ஊரை ஆண்டதாக ஒருவர் பெருமிதமாகச் சொன்னார். இப்படியாகச் சொல்லுகையில் அவரது பின்னால் நின்றிருந்தவரின் முகம் மாறத் தொடங்கியது. அவரிடம் விசாரிக்கையில், அம்பலம் என்பது அம்பலக்காரர்கள் அல்ல, அவை. ஏழு அவைகள் கொண்ட ஊர், என்றார். இதை நான் சொன்னால் யாரும் ஏற்கப்போவதில்லை, ஏனென்றால், ‘ஏழைச்சொல் அம்பலம் ஏறாது’ என்றார். இங்கு அம்பலம் என்பதன் பொருள் அவை அல்லது சபை. ஏழு அம்பலக்குடி என்பது ஏழு அம்பலத்தார்கள் ஆண்ட ஊரா, அல்லது ஏழு அவைகள் கொண்ட ஊரா? என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்துமுடிந்ததற்குப் பிறகு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குப் பெட்டியை எடுக்க வந்தார்கள். வந்தவர்கள், பக்கத்து ஊரில் நடந்த ஒரு பிரச்சனையைச் சொன்னார்கள். வயதான ஒரு மூதாட்டி வாக்களிக்க வாக்குச்சாவடி வந்திருக்கிறார். அவர் கண் பார்வையற்றவர். அவருக்குத் தேர்தல் அலுவர் உதவி செய்திருக்கிறார். மூதாட்டி ஒரு சின்னத்தைச் சொல்ல, அலுவலர் அவரது விரலைப் பிடித்து அவர் சொன்ன சின்னத்தில் அழுத்தியிருக்கிறார். தேர்தல் அலுவலர் பாட்டி சொன்ன சின்னத்தில் அழுத்தாமல், வேறொரு சின்னத்தில் அழுத்திவிட்டதாக, ஒரு கட்சியினர் பிரச்சனையை எழுப்பியிருக்கிறார்கள். பிரச்சனை பூதாகரமான பிரச்சனையாகிவிட்டது. அவர்கள் பிரச்சனையை ஊடகத்தில் அம்பலப்படுத்திவிட்டார்கள், என்றார். இங்கு அதே அம்பலம் என்கிற சொல், வேறொரு பொருளில் பொருள் தருவதாக இருந்தது. அம்பலப்படுத்துதல் என்பது, வெளிப்படாமலிருக்கும் ஒன்றைப் பலருக்கும் தெரியும்படியாக வெளிப்படுதல் என்கிற பொருளில் பொருள் தந்தது. அதாவது ஊழலை, அதிகார மீறலை, உரிமை மீறலைப் பலருக்கும் தெரியும்படியாக அறிவிப்பது.
அம்பலம், அம்பலப்படுத்துவர், அம்பலக்காரர் இம்மூன்றும் ஒரே வேர்ச்சொல்லைக் கொண்ட வெவ்வேறு சொற்கள். அம்பலப்படுத்தும் வேலையை அரசாட்சிக் காலத்தில், யார் செய்தார்கள்? முரசறைவோன், தண்டோராக்காரர், தூதுவன். இன்றைக்கு அவ்வேலையைச்
செய்வது பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையவெளி தொடர்பு சாதனங்களான புலனம், முகநூல், வலையொளி,…இத்யாதிகள்.
கணையாழி ஆசிரியர் முனைவர் ம.ராசேந்திரன் அவர்கள், ப்ளோவர்ஸ் (Whistle Blowers ) என்கிற ஆங்கில சொல்லுடன் அம்பலப்படுத்துதலைத் தொடர்புபடுத்தி கட்டுரை எழுதியுள்ளார். விசில் ப்ளோவர்ஸ் என்பதற்கு ஆற்றுமணல், கொள்ளை, கிரானைட் ஊழல், கள்ளச்சாராயம், சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகள், ஏமாற்றும் சீட்டு நிறுவனங்கள், அரசின் ஊழல் நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களுக்கும் உரிய அமைப்புகளுக்கும் அம்பலப்படுத்துதல் என்றிருக்கிறார். இதன் தொடர்புடைய சொற்களாவன – பறைஞர், தம்பட்டக்காரன், குற்றம் சாட்டி, கிண்ணாரக்காரன்,உண்மை விளம்பி. இதை திருவள்ளுவர் இடித்துரையாளர் என்கிறார்.
இதுதவிரவும் அம்பலம் என்கிற சொல்லுக்குப் பொது மண்டபம் என்றொரு பொருளுண்டு. பொது இடத்தைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. இதே சொல், சிங்களத்தில் அம்பலம என்று உள்ளது. பாதசாரிகள் ஓய்வு கொள்ளும் இடத்திற்கு அம்பலம் என்றே பெயர். மடத்தைக் குறிக்கும் சொல்லாகவும் அம்பலம் இருக்கிறது.
பிற்கால சோழர், பாண்டியர்கள் காலத்திற்குப் பிறகு கிராமப்புறத்தில் நிலவரிகளை வசூலித்து குறுநில மன்னர்களிடம் வழங்கும் மணியக்காரர்கள் அம்பலம் என அழைக்கப்பட்டார்கள். இங்கு அம்பலம் என்பது கிராம மக்கள் தன் நிலத்தில் விளைவித்த தினைப் பொருட்களை, மூட்டையாகக் கட்டி, வரிகளைக் கொண்டுச் சேர்க்குமிடம். இந்த இடம் மழை வெயிலுக்கு ஒழுகாத கூரை வேயப்பட்ட இடமாக இருந்திருக்கிறது. அந்த இடத்தின் பெயரே அம்பலம். அந்த இடத்தில் மணியக்காரர் உட்கார்ந்து வரி வசூல்களைக் கணக்கிட்டு வாங்கியதால், அம்பலம் என அழைக்கப்பட்டார்கள். ஆனால், அதே சொல், இன்றைக்கு குறுநில மன்னர் அளவிற்கும், ஊர் நாட்டாண்மை என்கிற அளவிற்கும் பொருள்கொள்ளப்பட்டு வருகிறது. இதே சொல் ஒரு சாதியின் பெயராகவும், மற்றொரு சாதியின் உட்சாதி பெயராகவும் திரிக்கப்பட்டு விட்டது. .
அம்பலம் என்பதற்கு ஆகாயம் அல்லது வெளி என்றொரு பொருளும் உண்டு. திருச்சிற்றம்பலம். திரு+சிறு+அம்பலம் = திருச்சிற்றம்பலம். இங்கு அம்பலம் என்பது சிறிய வெளி என்று பொருள். இச்சொல் சைவத்துடன் தொடர்புடையது. தமிழ்நாட்டில் ஐம்பெரும் அம்பலங்கள் உண்டு. அவை பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம். இதன்படி பொன்னம்பலம் என்பது சிதம்பரம் நடராஜர் கோவிலைக் குறிக்கும். வெள்ளியம்பலம் என்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள நடராஜர் சன்னதி. இரத்தின அம்பலம் – திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் கோவில். தாமிர அம்பலம் – திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சித்திர அம்பலம் – குற்றாலநாதர் கோவில்.
அம்பலம் என்பது பாடுவோனின் சிறப்புப் பெயராகவும் இருந்திருக்கிறது. கவி புனையும் புலவர். உதாரணமாக, ஆதி கருநாடக மும்மூர்த்திகளில் ஒருவரான அருணாசலக் கவிராயரின் குமாரராவார், அம்பலவாணக் கவிராயர். இவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
மருதூரில் பிறந்த கவி வல்லவர். ஆதித்தபுரி புராணம் பாடியவர். இவரைத் தவிர அம்பலவாண தேசிகர் என்றொரு கவிராயர் இருந்திருக்கிறார். உபதேச வெண்பா, உயிரட்டவணை, சித்தாந்த பஃறொடை, நிட்டை விளக்கம் இயற்றியவர். இவரது காலத்தையொட்டிய யாழ்பாணத்து வித்வான்களில் ஒருவரான அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாண தமிழ்ப் புலவர்களில் முக்கியமானவர்.
பள்ளி, அம்பலம், மன்றம், திண்ணை, இவை நான்கும் வெவ்வேறு காலத்துடன் தொடர்புடைய பாதசாரிகள் தங்கிச் செல்லும் இடத்தைக் குறிக்கும் சொற்கள். பள்ளி என்பது சமண சமயத்துடன் தொடர்புடையது. அம்பலம் என்பது சைவம். மன்றம் சங்கக்காலச் சொல். திண்ணை பிற்பகுதி காலம்.
அவை என்பதும் சபை என்பதும் ஒன்றே. இரண்டும் அம்பலம் என்கிற சொல்லால் குறிக்கப்பட்ட ஒரே சொல். அவ்வுதல் என்கிற சொல்லின் மருவிய சொல் அவை. இதற்கு அழுந்துதல் , வீழ்தல் என்று பொருள். வீழ்தல் என்றால் மனஞ்செலுத்துதல். அதே பொருளில் பயன்பாட்டிற்கு வந்த சொல் சபை. ஆனால் பிற்காலத்தில் அவை வேறு, சபை வேறு என்றாகி பிறகு சபை, சபா, சவை என பல சொற்களாக பொருள் கொள்ளப்பட்டன. இதைப் போன்றே அம்பலமும். அம்பலம் என்பதற்கு அவை, கவி, செய்தி பகிர்வோர், வெளி எனப் பொருள் கொண்ட அச்சொல், இன்று ஒரு சமூகத்தின் அடையாளமாகவும், சமூகத்தின் உள் அடையாளப் பட்டப் பெயராகவும் சுருங்கிப் போயிருக்கிறது. அம்பலம் என்கிற சொல் மட்டுமல்ல, இப்படியாக பல சொற்கள் தமிழில் உண்டு. அச்சொற்களை அம்பலப்படுத்தி, அதாவது இடித்துரைத்து அதற்குரிய பொருளில், பொருள் காண வேண்டியது தமிழுக்கு செய்யும் பெருந்தொண்டு!
அண்டனூர் சுரா (எழுத்தாளர்)
![]()