மேதகு படம்பற்றி ஒரு மேன்மையான பார்வை!… சங்கர சுப்பிரமணியன்.



இப்படத்தினைப் பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்பிராயம் இருப்பினும் இக்கட்டுரையில் அதைப்பற்றி பேசவோ அல்லது அதை நியாயப் படுத்தவோ இங்கு முற்படவில்லை என்பதை முதலில் இங்கு நான் சொல்லிவிடுகிறேன். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. V. பாலு என்பவர் காணொலியில் மேதகு படம் பற்றி குறிப்பிட்டவற்றைத்தான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்படம் வருவதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில்
கலந்து கொண்டபோது பேமிலிமேன்2 வந்த சமயம் தமிழர் சமூகம் மற்றும் வரலாறு பற்றி கூறும்படம் இதுவரை வரவில்லையே என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது இதுபோல் ஒருபடம் தயாராகி வருவது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
இப்படத்தை பார்த்ததும் பல நூற்றாண்டுகளாக மானுடம் அடக்கி வைத்திருந்த நெருப்பு வெடித்துக் கிளம்பும் போது உலகப் பரப்பில் எப்படிச் சென்று தாக்கும் என்பதைப் பற்றி அவரைப் பேசத்தூண்டியதாக குறிப்பிடுகிறரர்.
ஒரு மலையாளப்பாடலை கூறுகிறார். அப்பாடல் “தோக்கு தோக்கின்ன காலம் வரும்வரை என் பாட்டு தோக்கில்லடா, தோக்கு தோக்கின்ன காலம் வரும்வரை என் வாக்கு தோக்கில்லடா” என்பதே அப்பாடல். அப்பாடலின் அதிர்வும் வலியும் கோபமும் எப்போதும் என்னை கவலையில் ஆழ்த்தியது என்கிறார்.
எனக்கு ஏற்றவகையில் ஒரு பாடல் எப்போது வரும் என்றிருந்தவேளை பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலை மேதகு படத்தில் கேட்டேன். அப்பாடலை படமாக்கியிருக்கும் விதம் எனக்குள் ஒரு அதிர்வையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்தியது என்கிறார். நான் அப்படியே அப்படத்தில் ஒன்றிப்போன இடம் அப்பாடலும் அப்பாடலை பதிவாக்கியிருக்கும் விதமும் என்பதுடன் தமிழிப் பறையின்
அதிர்விலிருந்து புறப்படும் அதிர்வலைகள் உலகின் எல்லைக் கோடுகளைக்கடந்து அந்த அதிர்வுகளைப் பரப்பும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
அத்தோடு இப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் போற்றியும் தூற்றியும் வந்தவண்ணம் இருக்கிறது என்றவர்
மனிதர்கள் எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல தவறுகளை செய்பவர்களே, மனிதர்கள் தவறுகளைப் பேசுபவர்களே மற்றும் மனிதர்கள்
தறுகளை திருத்திக் கொள்பவர்களே.
என்கிறார். மேதகு பிரபாகரன் அவர்கள்கூட தன் தவறுகள் விமர்சிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்தவர் என்றும் குறிப்பிடுகிறார்.
இப்படத்தின் துவக்கம் ஒருசின்னஞ்சிறுவன் தன் வீட்டைத்துறந்நு தன் இனத்துக்காக போராடுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்ற பின்புலத்தில் மட்டுமே சொல்லப் பட்டிருப்பதால் நாம் அந்த பின்னணி பற்றியும் அக்கால கட்டத்தைப்பற்றியும் பேசினால்தான் சரியாக இருக்குமென எண்ணுகிறேன். ஏனென்றால் உலகத்திலுள்ள எல்லா மொழிப் போராட்டங்களும் இனப்போராட்டங்களும் மேலாதிக்கத்தின் வழியாகவும் வன்மத்தின் வழியாகவுமே உருவாக்கப்படுகிறது என்பதே வரலாறு கூறும் உண்மை.
மேதகு பிரபாகரன் அவர்களை எது போராட்டத்தில் தள்ளியிருக்கிறது என்று பார்த்தால் உள்ளேயிருந்து செய்யப்படுகின்ற துரோகங்களும் பகையும் தான் அவரை தள்ளியிருக்கிறது என்பதை வலுவாகவும் ஆணித்தரமாகவும் இக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களே சொல்லியிருப்பதுபோல் பின்னால் வரும் தொடர்களில் அவர்களது நிலைப்பாடுகள் குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரிவினைகள் அங்கே ஒத்துழைப்பு கொடுத்த மக்கள் ஒத்துழையாதவர்கள் இவைகளைப்பற்றி எல்லாம் நேர்மையான கருத்துக்களை சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்.
இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையைச் சொல்கிறேன். முப்பது வருடங்களாக நடைபெற்ற இப்போராட்டத்தின் தீக்கனலாக எது இருந்தது என்றால் மொழியின் அடிப்படையில் தகுதியின் அடிப்படையில் தமிழர்களுக்குண்டான வேலைவாயப்பு மறுக்கப்படும். அவர்கள் உயர்பதவியில் இருந்தால்கூட அவர்களுக்கு சிங்கள மொழி கட்டாயம் தேவை.
சிங்கள மொழிக்கு மேலாதிக்கம் கொடுக்கப்பட்டு தமிழர் இரண்டாந்தர குடிகளாக மாற்றப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக சிங்கள மொழியோடு தமிழ் ஆட்சிமொழியாக இருப்பினும் மாற்றாந்தாயின் மனப்பான்மையோடுதான்
நடப்பார்கள். அப்போது மொழியினமுடைய
அடிப்படையில் இனம் என்பது ஒடுக்கப்படுகிறது என்பதை சொல்கிறார்.
2019ல் தமிழீழம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வல்வெட்டித்துறை சென்றேன். கொழும்பும் சென்றிருந்தேன். அப்போது சில நிகழ்ச்சிகளில் இலங்கையின் தேசியகீதம் பாடப்பட்டது. அதன் தமிழ்வடிவத்தையும் கேட்டேன். நல்லதம்பி என்பவர் அந்தகாலத்தில் மொழிபெயர்த்திருந்தார்.
அந்த தேசியகீதத்தின் வரலாற்றை ஆராய்ந்தேன். ஒருமொழி என்று வருகிறபோது அந்தமொழியின் கவிஞன் எப்படி எடுத்துக் கொள்வான் என்பதை அறிந்தேன். இலங்கை தேசியகீதத்தை எழுதியவர் ஆனந்த் சமரகோன் என்பவர் என அறிந்தேன். அவர் ரபீந்திரநாத் தாகூரின் சாந்தினிகேதனில் அவருடைய மாணவனாக இருந்து இசைபயின்றவர்.
தாகூரின் உதவியோடு இலங்கை சுதந்திரம் அடைந்தபின் சில குழுக்கள் அமைத்து இருபாடல்கள் தேர்வு செய்யப்படுகிறது. கடைசியாக சமரகோன் எழுதிய பாடல் தேர்வு செய்யப்படுகிறது.
அந்த பாடல் நமோ நமோ மாதா என்று ஆரம்பிக்கும். இந்த பாடலை ஏற்றுக் கொண்டபின் சில அகால மரணங்கள் ஏற்படுகிறது. அதனால் ஏற்பட்ட மூட நம்பிக்கையால் இந்த பாடலின் அமைப்பினால்தான் மரணங்கள் ஏற்பட்டன என எண்ண இரண்டு வார்த்தைகளை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் சமரகோனிடம் பத்தாவது வரிகளில் இருந்து சிலமாற்றத்தை செய்ய கேட்டு அவரும் சம்மதிக்கிறார். ஆனால் சமரகோனின் அனுமதியின்றி நமோ நமோ மாதா என்ற வரிகளை மாதா ஶ்ரீலங்கா என்று மாற்றினார்கள்.
அந்த கவிஞர் அம்மொழியின் மீது கொண்ட பற்றினால் அவர் எழுதிய பாடலில் அவர் எழுதிய வரிகளை அவரின் அனுமதியின்றி
மாற்றியதால் தற்கொலை செய்து கொண்டதாக வரலாறு சொல்வதாக வழக்கறிஞர் அக்காணொலியில் சொல்லியிருக்கிறார். அந்த தேசியகீதம்தான் இன்றைக்கும் ஒலிக்கிறது.
ஆனால் இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டில் தமிழ்வடிவத்திலுள்ள தேசியகீதத்தை பாடக்கூடாது சிங்களத்தில் மட்டுமே பாட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இப்படி மொழி ஒடுக்கப்படுகிறது மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள் உள்ளே இருப்பவர்களே துரோகம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் சிறுவன் கேட்கிறான் அவர்கள் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள் நாம் ஏன் திருப்பி அடிக்கக் கூடாதென்று.
தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும்பொது கிளர்ந்து எழுவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு இனத்தின் அடக்குமுறையை இருப்புக்காக ஏற்றட்ட போராட்டத்தை தீவிரவாதமாக மாற்றியது எது என்றால் அது ஒரு இனத்தின் அடக்குமுறைதான்.
இந்த படத்தின் துவக்கமும் அது பேசியிருக்கின்ற பொருளும் அது எடுக்கப்பட்டிருக்கின்ற விதமும் உலகத்திலுள்ள எல்லா தலைவர்களையும் பதிப்பித்த படம் என்றவகையில் இந்த படத்திற்கு ஒரு நிரந்தரமான இடமுண்டு. அதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இதை வாழ்த்தவும் வேண்டும் வரவேற்கவும் உலக அளவில் இப்படத்தை பரப்புரைகளை செய்வதிலும் தவறில்லை.
இலங்கைப் படுகொலையின் விளைவாக அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தமிழரின் புலம்பெயர்வுகளாலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பயர்ந்த தமிழர்களாலும் இன்று உலக அளவில் பெரிய அளவில் விரிந்திருக்கிறோம்
என்பது உண்மை. எந்த அளவு விரிந்திருக்குமோ அந்த அளவுக்கு பிரிந்திருக்கிறோம் என்பதும் மறைக்க முடியாத உண்மை. இப்படி பிரிந்து கிடக்கிற தமிழ் சமூகம்தான் நமது விரோதிகளுக்கும் பகைவர்களுக்கும் ஆயுதமாகப் பயன்படுகிறது.
இந்த ஆயுதத்தை நமது பட்டறையில் நம்மை வைத்தே கூர்மையடையச்செய்து நம்மை நாமே மோதச்செய்து அதில் வழிகின்ற இரத்தத்தில் நடந்துதான் தமது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் நமது பகைவர்கள்
என்பதை மறந்து விடக்கூடாது.
ஸ்காட்லாந்து விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மெல்ஹிப்சனின் பிரேவ் ஹார்ட் என்றொரு படம் வந்துள்ளது. இப்படத்தில் கடைசி நேரத்தில்
போராட்டத் தலைவனிடம் மன்னிப்பு என்று ஒற்றை வார்த்தையை மட்டும் கேள் விட்டுவிடுகிறோம் என்று சொல்லப்படுகிறது. அந்த நேரத்திலும் அத்தலைவன் விடுதலை விடுதலை விடுதலை என்று முழக்கமிடுகிறான். முடிவில் சாய்க்கப்படுகிறான்.
மேதகு படத்தின் கதை கதைக்களம் எல்லாவற்றையும் பார்த்திருப்பீர்கள். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி சொல்லும்போது வெற்றி தோல்வி துரோகங்கள் என்று எல்லாவற்றையும் பதிவு செய்யும் விதமாக மேதகு படத்தின் துவக்கம் அமந்திருக்கிறது என்று மிகவும் திருப்திகரமாக நான் இந்த விமர்சனத்தை வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()