கட்டுரைகள்
“மேதகு” படம் சரியா?….. தவறா?…. சங்கர சுப்பிரமணியன்.

பேமிலிமேன் 2, ஜகமே தந்திரம் போன்ற பாலைவனங்களுக்கு மத்தியில் மேதகு என்ற பசுஞ்சோலையாய் தண்ணீர் தெரிகிறதே குடித்து இளைப்பாறலாம் என்றால் அது தண்ணீர் அல்ல கானல் நீர் என்று சிலர் சொன்னதால் கொம்புத்தேன் கிடைக்காத முடவனானேன்.
வேறு எவராவது சொன்னால் பரவாயில்லை என் இனமக்களே அதுவும் சம்பந்தப்பட்ட மக்களே சொல்லும்போது பரிசுச் சீட்டில் பத்து மில்லியன் விழுந்ததெல்லாம் பகல் கனவுதானா என்று பகீரென்றிருந்தது. 

எனக்கு பத்து மில்லியன் மற்றவர்களுக்கு அது பத்து சென்ட் என்பதால் குறை என்னிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்தேன். இருந்தாலும் நான் கண்ட கனவு தகர்ந்ததற்கு காரணத்தை மட்டும் உங்களிடம் புலம்புகிறேன். என் புலம்பல் சரியென்றால் உங்களுக்கு ஒரு கும்பிடு. தவறென்றால் நக்கீரனாக்கி விடுங்கள்.
எந்த ஒரு கருத்துக்குமே இரு வேறு
பார்வைகளை் உண்டு ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. விருப்பு வெறுப்பு என்பது போல் சித்தாந்தங்களின் அடிப்படையிலும் பார்வைகளின்
தன்மைகள் மாறுபடலாம். போர்க்களத்தில் எதிரிகளை அழிப்பது ஒரு நாட்டின் ராணுவ வீரனுக்கு கடமையாக இருக்கும்போது
இரக்ககுணம் கொண்ட ஒருவருக்கு அது
உயிரை அழிக்கும் தீச்செயலாகத் தென்படும். ஒரு தேசிய இனவாதியின் பார்வையும் ஒரு பொதுவுடமைவாதி
தன் இனம் அடையும் துன்பத்தை பார்க்கும்போது ஏற்படும் பார்வையும்
வேறுபட்டு நிற்கின்றன.
சித்தாந்தங்கள் வேறுபட்டு நிற்கும்போது சிந்தனைகள் வேறபட்டு நிற்பதில் வியப்பில்லை. அறுவை சிகிச்சை செய்யும்போது அங்கு சிகிச்சைக்கு உட்படுபவர் நெருங்கிய உறவாக இருக்கும்போது இருக்கும் மனநிலையும்
மற்றவராகவும் இருக்கும் பட்சத்தில் ஏற்படும் மனநிலையும் வேறுபடுவதில் வியப்பில்லை. அறுவை சிகிச்சை செய்பவரின் மனநிலையில் சிறிதேனும் உணர்வுகளின் கொந்தளிப்பு ஏற்படும். அதைச்செய்வது ஒரு இயந்திரமனிதாக இருந்தால் மட்டுமே கட்டளைகளில் மட்டுமே கவனமிருக்கும் மற்றபடி உணர்வுகளின் பதட்டத்துக்கு அங்கு இடமில்லை.
ஒரு நிகழ்வை காட்சிப் படுத்தும்போது அதற்கு நேரடியாக பார்த்து உணர்ந்தவர்களுக்கும் கேட்டு அறிந்தவர்களுக்கும் வித்தியாசம் அவர்களின் காட்சிப்படுத்தலில் வெளிப்படவே செய்யும். மூலம்போல் பிரதி
இருக்கலாம். ஆனால் பிரதியே மூலமாக
இருக்காது. மூலம் மாதிரி ஓரளவாவது இருக்கிறதா என்ற மனநிறைவு இருக்கவேண்டும். அந்த மனநிறைவு கிடைக்காதபோது மூலத்தையே நாடவேண்டும். பிரதியை மூலமாக எண்ணி முரண்படுவது முறையற்றது.
மேதகு திரைப்படத்தையும் முழுக்க முழுக்க கதைவசனம் இயக்கம் மற்றும் நடிகர்களென அந்த மண்சார்ந்த மக்களால் எடுக்கப்பட்ட படமாகவே இருந்திருந்தாலும் நூற்றுக்கு நூறு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்று உறுதியாகச்
சொல்லமுடியாது. அப்படத்தை எந்த சித்தாந்தத்தை உடையவர்கள்
எடுக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் வேறுபடும். அதில் தேசிய இன சித்தாந்தத்தின் அடிப்படையில் எடுப்பவர்களின் படைப்புக்கும் பொதுவுடமைச் சித்தாந்தத்தை கொண்டவர்களின்
படைப்புக்கும் வேறுபாடு நிச்சயம் இருக்கும். ஆனால் நிகழ்வென்ற கருப்பொருள் மட்டுமே சிதையாது இருக்கும்.
காந்தி என்ற பெயரில் மகாத்மா காந்தியின் திரைப்படம் 1982ல் ஆங்கில மொழியில் ஒரு கூட்டுத்தயாரிப்பாக இருந்தாலும் ரிச்சர்ட் அட்டன்பரோ என்ற ஆங்கிலேயரா் தயாரித்து இயக்கி வெளிவந்தது. திரைக்கதையை எழுதியவர் ஜான் பிரைலி என்ற அமெரிக்கர். காந்தியாக நடித்தவர் பென் கிங்ஸ்லி. இவரின் தாய் ஆங்கிலேயர் தந்தை இந்தியவம்சாவழியில் வந்தவர். இப்படத்தின் இசையமைப்பாளர் மட்டுமே
உலகப் பகழ்பெற்ற ரவிசங்கர் என்ற இந்தியராக இருந்தாலும் அவருடன் ஜார்ஜ் ப்பென்டன் என்ற ஆங்கிலேயரும் இணைந்து பணியாற்றினார்.
முடிவு என்ன? குஜராத்தியர், இந்தியர் உட்பட உலகமே அப்படத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால் இப்படத்தை முழுக்க முழுக்க குஜராத்தியரே அதுவும் அம்மண்ணில் வாழ்ந்த குஜராத்தியரே எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பதிலை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். தமிழில் ஆவணப்படுத்த வேண்டிய வரலாற்றினை அம்மண் சார்ந்த தமிழர் தவிர்த்து வெளிநாட்டினர் திரைப்படமாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?
அப்படியும் உறுதியாகச் சொல்லமுடியாது. காந்தி படத்தை பெருவாரியாக ஏற்றுக் கொண்டபோதிலும் முரண்பாடான கருத்துக்களும் நிலவிவந்தன. மார்டின் ஷீன் நடித்த வின்ஸ் வாக்கர் என்ற நிருபர் கதாபாத்திரம் மற்றும் காந்தி முதன்முதல் சந்திப்பு தென்னாப்பிரிக்காவிலும் அடுத்து உப்பு சத்தியாக்கிரகத்திலும் என்பது கட்டுக்கதை என்று பேசப்பட்டது. ஆனால் உண்மையில் வெப் மில்லர் என்ற அமெரிக்க நிருபர் தென்னாப்பிரிக்காவில்
காந்தியை சந்திக்கவே இல்லை என்பதே உண்மை.
ஆனால் உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி அவர் எழுதியிருந்தது உலகமக்களிடையே இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி குறித்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. மிகவும் கடினமாக வைக்கப்பட்ட விமர்சனம் என்பதே முகம்மது அலி ஜின்னா
பற்றியும் தெற்காசியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து அவரது கருத்துக்களை குறிப்பிட்டிருக்கும் விதம் பற்றியும் என்பதாகும். இன்றுவரை அந்த விமர்சனம் இருக்கவே செய்கிறது. இப்படம் வெளிவந்தபோதும் தொடர்ந்த பல
ஆண்டுகளிலும் பாகிஸ்தானில்
தடைசெய்யப்பட்டிருந்ததையும் உலகறியும்.

காந்தி படத்தை பொருத்தமட்டில் இருபது ஆண்டு கால உழைப்பு அதன் பின்னிருந்தது. இப்படம் வெளிவந்தபோது அட்டன்பரோ தி நியூயாரக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எழுபது ஆண்டு வரலாற்றை மூன்று மணி நேரத்தில்
எடுக்கும்போது சில தவறுகளும் விருப்பு வெறுப்புக்களும் இடம்பெற வாய்ப்புள்ளதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதே நிலைதான் ஈழ விடுதலைப் போராட்டத்தை எவர் எடுத்தாலும் ஏற்படும்.
மனிதர்கள் மனநிலை என்னவென்றால் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் தமக்கென்று ஒரு குழந்தை இல்லையே என்ற துக்கம் இருக்கும். பின் சில சிகிச்சையின் பலனாக ஒரு குழந்தை கிடைத்தபின் அதன் நிறம் சரியில்லை மூக்கு சரியில்லை விழி சரியில்லை என்று ஆதங்கப்படுபவர்களாகஅவர்களாகவே
மாறவும் வாய்ப்புண்டு.
இதற்கெல்லாம் என்னதான் விடிவு? ஒரு மண்ணைச்சார்ந்த வரலாற்றினை ஆவணப்படுத்தும் போது என்னதான் இனம் என்றாலும் அந்த மண் சார்ந்தவர்கள் எடுப்பதே நல்லது. இதுபோன்ற மண்சாரா மக்கள் இனமென்றாலும் அவர்களை எடுக்க விட்டிருக்க கூடாது. இதை நான் காரணத்தோடுதான் சொல்கிறேன். பொதுவாகவே தமிழ்நாட்டினர் ஈழப்பிரச்சனையில் சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைக்கின்றனர் என்ற கருத்து பரவலாக இருந்து வருவதை யாராலும் மறுக்க இயலாது.

மேலும் அரசியலுக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவும் இலங்கைத் தமிழரை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. என்னதான் நெல்லிக்காய் மூட்டையை கயிற்றால் கட்ட முயன்றாலும் கயிற்றை அவிழ்த்துவிட்டு சிதறுவதிலேயே குறிக்கோளாக சிலர் அல்லது பலர் உள்ளனர். இதுவெல்லாம் தமிழ்நாட்டுத் தமிழருக்கு தெரிகிறதா இல்லையா? அப்படி பொத்தம் பொதுவில் சொல்லிவிடவும் முடியாது.
ஏனென்கிறீர்களா? நாம் தமிழர் கட்சிக்கு பெரிய அளவில் வரவேற்பும் ஆதரவும் தரும் இடத்தில் யார் முதன்மையில் இருக்கிறார்கள்? இதற்கு பதில் தெரிந்தால் நான் முன்னதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அங்கேயே இருக்கிறது.
எனவே வரலாற்றை ஆவணப்படுத்தும்போது யார் ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மண்சார்ந்தா அல்லது இனம் சார்ந்தா
என்பதை வரையறுக்க வேண்டும். அதன்பின் எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் படமெடுக்க வேண்டும் என்பதையும் வரையறுத்தல் வேண்டும்.
தேசிய இனச்சிந்தாத்தில் படமெடுக்க வேண்டுமானால் அங்கு அவ்வினத்தின் அவலங்கள் சிறிதாக இருப்பினும் முக்கியத்துவம் கொடுத்து மிகைப் படுத்தப்படும். ஏனெனில் அங்கு உணர்வின் அடிப்படையில் வரலாறு கூறப்படுகிறது. பொதுவுடமைச் சித்தாத்தத்தில் படமாக்கப் படவேண்டுமானால் அங்கு அவலங்கள் தாங்கமுடியாத அளவுக்கு அரங்கேறினாலும் கிளர்ர்ச்சியால் ஏற்படும் இழப்பு என்று உணர்ச்சியை புறந்தள்ளி பொதுவாக பார்கப்படுகிறது.
இப்படிப்பட்ட விவாதங்களுக்குட்படாமல் இனிவரும் காலங்களில் யார் பந்தயத்தில் ஓடவேண்டும் என்பவரைத் தேர்ந்தெடுத்து எப்படி படம் வரவேண்டும் என்பதையும் திட்டமிட்டு அத்திட்டத்துக்குள்ளேயே வட்டமிட்டு ஒட்டுமொத்த தமிழினமும் ஏற்றுக்கொள்ளாவிடினும் பரவாயில்லை ஒரு மண்சார்ந்த வரலாற்றை காட்டும்போது அந்தமண் சாரந்த மக்களாவது ஏற்றுக் கொள்ளும் வகையில் படமெடுத்து வரலாறு படைப்போம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()