கட்டுரைகள்

வாழ்வினில் மாற்றம் வாழ்வினை மாற்றும்!…. 2 ….. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

 பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ ” – என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசபதவி வகித்த போதும் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.

   கவித்துவம் மிக்க சேக்கிழார் – தனது சிந்தனையை சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்ல விட்டார்.அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப் பிரசாதம்தான் ” பெரியபுராணம் ” ஆக அமைகிறது.தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே என்பதற்கு ஒப்ப – சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் – சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம், நாமும் மாற்றத்துக்கு ஆளாகிவிடுவோம்!

 சேக்கிழார் முதலமைச்சராக இருந்த வேளை – அவரின் அரசன் எந்தநேரமும் ஒரு நூலைக் கையில் வைத்து வாசித்தபடியே இருந்தான். அப்படியே என்னதான் அந்த நூலில் இருக்கிறது என்று ஆராய முற்பட்டார் அமைச்சரான சேக்கிழார். சிற்றின்பத்தைப் பெரிதும் புலப்படுத்தும் சீவகசிந்தாமணியினையே அரசன் அல்லும் பகலும் சுவைத்துச் சுவைத்து வாசிக்கிறான் என்பதை அவர் அறிந்து கொண்டார்.நாட்டை ஆண்டு மக்களை நல்வழிப் படுத்த வேண்டிய மன்னவன் நல்ல சிந்தனைகளை மனத்தில் இருத்தாது சிற்றினப்பத்தில் மனத்தை ஈடுத்தினால் – நாட்டுக்கும் நல்லதல்ல ! அரசியல் அறத்துக்கும் அழகல்ல என்பதை அமைச்சரானவர் தெளிந்து கொண்டார். அமைச்சர் என்பவர் அரசனுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குபவராய் தறி நெறி கெட்டுப் ஒக நிற்கும் அரசனைத் தடுத்து நிறுத்துபவராய் இரித்தல் வேண்டும். அதுதான் நல்ல அமைச்சருக்கான தகுதிப்பாடாகும். இதனை நன்குணர்ந்த நல் அமைச்சரான சேக்கிழார் அரசனின் மனப்போக்கினை மாற்றிவிட எண்ணங் கொண்டார்.

 இறைபணியாற்ரி உய்வடைந்த அடியார்கள் பற்ரி எடுத்துரைத்தார். நாளும் பொழுதும் சேக்கிழார் நல்ல உரைகள் – சிற்றின்ப வழி நின்ற அரசனைத் திருப்பிட வைத்தத்து எனலாம். அரசனும் சேக்கிழார் அறிவுரையால் மன மாற்றம் உற்றான். நீங்கள் கூறிய இறை அடியார்கள் பற்றி யாவரும் தெரிந்திட ஒரு நூலினை நீங்களே ஆக்கலாமே என்று கூறும் அளவுக்கு அரசனில் மாற்றம் வந்தது. நல்ல அமைச்சரான சேக்கிழாரினால் அரசனே மாற்றம் அடைந்தான். இறையடியார்கள் வரலாறு ” பெரிய புராணமாய் ” தமிழுக்குப் பொக்கிஷமாய் வந்தது. அந்தப் பொக்கிஷத்தையே சேக்கிழார் பெருமான் பாடுவதற்கு தேர்ந்தெடுத்த இடமே கோவில்தான்.” உலகெலாம் உணர்ந்து ஓதுதற் கரியவன் ” என்னும் அடியினை இறைவனே கோவிலில் சேக்கிழாருக்கு எடுத்துக் கொடுக்க ” பெரிய புராணம் ” எழுகிறது என்பது வரலாறாகும்.

  அந்தப் பெரியபுராணத்தில் வரும் அடியார்களின் இணைப்பும்அவர்களின் வாழ்வில் நிகழும் மாற்றங்களும்அவர்களை இன்றளவும் போற்றிடவும் வைத்திட்ட –  யாவும் நிகழ்வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களும்தான் என்பதை மனமிருத்துபது சாலவும் பொருந்தும் என எண்ணுகிறேன்.

  நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில்.நாவுக்கரசரை மாற்றி யதும் கோவில்.சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரரை மனம்மாற்றி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவிதான்.முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்த்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத் ததும் கோவில்தான்.

   அறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு – சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரணமெனலாம்.இதனால்த் தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணியிலும், கோவிலுடனும் இணை த்துக் கொண்டார்கள்.இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில் கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.

   சம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ் சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான்எமது சைவத் திருமுறைகள்.கோவில் தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச் சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும்- இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.

  இவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.பலரை மாற்றமுறச் செய்தது.இதனால் நன்னெறி வளர்ந்தது.கோவில் வழிபாடும் சிறப் படைந்தது.நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் – இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் – அறவழியில் செல்லவும் – உதவியதை மறக்கமுடியாது.இவை நல்ல மாற்றங்கள்தானே !

  திருமுறைகளைப் பாடிய இறை அடியார்கள் பற்றியும்இறைபணியினைப் பலவகைகளில் தம்மை அறியாமலேயே ஆற்றிய அடியார்கள் பற்றியும் சேக் கிழார் தந்த பொக்கிஷம்தான் பெரியபுரானம் எனப் பார்த்தோம். இந்தப் பெரிய புராணம் நாட்டின் அரசனையே மாற்றியது என்பதையும் பார்த்தோம். அரசனின் மனத்தினை மாற்றிய சேக்கிழார் சமுதாயத்திலும் புதிய மாற்றத்துக்கு வித்திடு கிறார் என்பதையும் கருத்திருத்த வேண்டும்.

 பெரியபுராணத்தில் வருகின்ற அடியார்கள் பலரும் பல்வேறு சமூகத்திலிருந்து அதாவது பல சாதிகளில் இருந்து வந்தவர்கள்.தீண்டத்தகாதவர்கள் என்று ஒது க்கப்பட்ட சமுகத்தில் இருந்தும் வந்தவர்கள்.ஆனால் அவர்கள் அனை வரையும் ஆண்டவனது அடியார் என்னும் பெயரினால் சேக்கிழார் கொண்டு வந்து காட்டி யதால் – அவர்கள் அனைவரும் போற்றத் தக்கவர்களாகவும் கோவில்களில் வைத்து சிலையாக பூசிக்கத் தக்கவர்களாவும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சேக்கிழார். இந்த மாற்றம் பெரிய புராணத்தால் நிகழ்கிறது என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும்.

  யாரெல்லாம் ஒதுக்கப்படவர்கள் என்று கருதப்பட்டார்களோ அவர்களை எல்லாம் அறுபத்து மூன்று நாயன்மார் என்னும் மகுடத்துக்குள் புகுத்தி அவர்களுக்கு சிலை செய்து – அவர்களுக்கென்று குருபூஜை நாட்களை நிர்ணயமும் செய்து – கோவில்களில். மடங்களில். கல்விச் சாலைகளில் ஏற்றிப் போற்றும் அளவுக்கான மாற்றத்துக்கு வித்திட்டது பெரியபுராணமும் சேக்கிழார் என்னும் நல்லமைச்சருந்தான் என்பதை மறத்துரைத்துவிடல் இயலாது எனலாம். 

  ” திருப்புகழ்” எங்கள் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும்.  கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகழும் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும்.  தமிழ் மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புத மாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.

 அந்தத் திருப்புகழைத் தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும் பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவானமுறையில்வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது.யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது ? அதுதான் இறைவனின் திருவருள்!அருணகிரியாரின் மாற்றம்  அவருக்கு மட்டும் பயன்பட்டதா ? இல்லவே இல்லை ! யாவருக்கும் பயன்பட் டது.அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு – கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன.நாளும்பொழுதும் கோவில்கள் தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின்றன.பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

நாவலர் தனது வாழ்க்கைப் போக்கை யேமாற்றினார்.  மாற்றம் பெற்றதன் விளைவால்த்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தளைத்து நிற்கவும் முடிகிறது எனலாம்.தான் மாறியது மட்டுமன்றி – மற்றவர் மனங்களிலும் நல்ல சமய மாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார். நல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.

   நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்

    சொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே

    எல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே ” – என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன் வழி சென்றிருப்பாரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரியதே

புராணங்களையும் , இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படி பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார்.பெரிய புராணத்தை யாவ ரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார்.கந்தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார்.சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார்.நாவர் தனது சமயப்பணியை மேற்கொள்ளத் தேர்ந் தெடுத்த இடம் கோவில்கள்தான்.

  சம்பந்தரும் அப்பரும் கோவில்கள் தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல – நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனதில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.

   நாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் – கந்தபுராண கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.

  நாவலர் நன்கு கல்வி கற்றவர். ஆங்கிலத்தை நன்கு கற்றவர். வடமொழியை தமிழை நன்கு கற்றவர். நாவலரின் குடும்பத்தார் நாவலரை அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்துவிடும் ஆவலுடனே செயற்பட்டார்கள். யாழ் மத்திய கல்லூரியில் ஆங்கிலமொழிக் கல்வியையே நாவலர் மேற்கொண்டார். ஆறுமுகம் என்னும் பெயர் கொண்டவரின் மனதில் தோன்றிய மாற்றந்தான் எமக்கு ” நல்லநகர் நாவலர் ” தோன்றிடக் காரணமாய் அமைந்தது எனலாம். நல்ல அரச பதவிகளில் அமரும் வாய்ப்பு அமைந்த போதும் – அவர்மனம் அதனை நாடவில்லை. சைவமும்தமிழும்தான் அவருக்குப் பெரிதாகத் தென்பட்டது. இல்லறத்தில் இணைந்திருந்தால் இன்று நாவலரைப் பற்றி யாராவது பேசிக் கொண்டிருப்போமா ? அவரும் எங்களைப்போல் குழந்தைகளைப் பெற்று அக்குழந்தைகளுடன் வாழ்ந்து சாதரண வாழ்க்கையினைக் கண்டிருப்பார். ஆனால் பிரமச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் மாற்றம் அவரையே மாற்றியது ! அந்த மாற்றம் சமயத்தில் தமிழில் தக்கதொரு பெருமையான மாறத்துக்கு வழிசமைத்தது என்பதை மறுத்துரைத்தல் முடியுமா ?

                                                                                                                                            ( இன்னும் வரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *