கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ் தேசியத்தின் அவசியமும்….. தொடர்… 6….. சங்கர சுப்பிரமணியன். 

இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் அம்மாநிலத்தவரே ஆண்டபோதும் அம்மாநிலங்கள் முன்னேறியதாகவோ அல்ல அங்கெல்லாம் லஞ்சம் இல்லை என்றோ சொல்லமுடியாது. அங்கெல்லாம் லஞ்சம் இருக்கவே செய்கிறது. அதற்காக லஞ்சம் வாங்குவதை நான் ஆதரிக்கவில்ல. அங்குள்ள நிலையைத்தான் சொல்கிறேன்.
இதற்கிடையிலும் தமிழ்நாடு பல மாநிலங்களைவிட முன்னேறியுள்ளது.
அது எப்படி சாத்தியம்? ஒரு திராவிடக் கட்சி தோற்று மற்றொரு திராவிடக் கட்சி ஆட்சிக்குவரும்போது ஆட்சிக்கு வந்தவர்கள் தம்மை நல்லவர்களாக காட்ட சில ஆண்டுகள் நல்ல திட்டங்களில் கவனம் செலுத்தியதால் மட்டுமே அது சாத்தியமானது. இதனை ஊடகங்கள் மூலம் மக்கள் நன்கே அறிவர்.
திராவிடக்கட்சிகளே மாற்றி மாற்றி ஆண்டதால் நன்மைகளும் உண்டு
தீமைகளும் உண்டு. திராவிடக் கட்சிகளே ஆண்டதால் இதைவிட முன்னேறாமல் போனதற்கும் காரணம் என்றும் சொல்லலாம். ஒரு திராவிட கட்சி நல்ல திட்டத்தை கொண்டு வந்தால் அடுத்த முறை வேறு திராவிட கட்சி ஆட்சிக்கு வரும்போது அத்திட்டத்தை தொடரமாட்டார்கள்.
காரணம் அதைத் தொடர்ந்தால் அதனால் வரும் நற்பெயர் தமக்கு வராது என்பதே காரணம். அப்படிப் பட்ட எத்தனையோ திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன என்பதை அனைவரும் அறிவர். இதையறிந்த மக்கள் அடுத்த தேர்தலில் மற்ற கட்சியை தேர்ந்தெடுப்பர். இப்படியே செல்லச்செல்ல ஒருமுறை தோற்றால் மறமுறை வந்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
தவிர இக்கட்சிகள் பெயருக்குத்தான் எதிர்க்கட்சிகளோ? இவர்களுக்குள் மறைமுகமாக ஒப்பந்தம் இருக்குமோ என்று எண்ணுமளவுக்கு மக்களும் அறிவுக்கூர்மை அடையத் தொடங்கினர்.
இன்னொரு காரணம் இந்த இரு கட்சிகளை விட்டால் வேறு மாற்றுக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வலுவாக இல்லை என்ற மனப்போக்கும் காரணமாகும்.
ஆதலால் முடிந்தவரை ஒரு கட்சியின் மீது பெரிய அளவுக்கு வெறுப்பு வரும்வரை நாட்டை ஆண்டனர். மாநில உரிமைகளுக்காக போராடவும் இல்லை. அதற்காக மக்களும் அரசியல்வாதிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்கு செலுத்தாமலும் இல்லை. அரசியல் கட்சிகளை மட்டுமே குறை சொல்லவும் முடியாது. மக்களும் ஒரு காரணம். நாட்டின் மீது நல்லெண்ணம் கொண்டவர்கள் அரசியலைத் தவிர்ப்பதும் ஒரு காரணம்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மறைமலை அடிகள் காலத்திலிருந்தே தமிழ் தேசியம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்போது தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்ற எண்ணம் ஏன் யாருக்குமே ஏற்படவில்லை. திராவிடர் கழகத்ததைப் போலவே தமிழ் தேசியமும் இருந்தது. திராவிடர் கழகம் சமூக நீதி, பெண்ணுரிமை என்று பேசிக்கொண்டு இருந்தது. இதைப்போலவே தமிழ் தேசியம் பேசியவர்களும் தனித்தமிழ், தமிழர் புத்தாண்டு போன்றவற்றில் கவனம் செலுத்தினர். தமிழர் முன்னேற்றம், தமிழராட்சி என்றெல்லாம் அப்போது ஏன் பேசவில்லை.
அதற்காக ஒரு இனம் பூண்டோடு அழியும் நிலைக்கு சென்றபின்தான் இன உணர்ச்சி பொங்குமா? கண்கெட்டபின் சூரியநமஷ்காரம் என்று சொல்வது இதைவைத்துதானா?
இந்த தமிழ் தேசியவாதிகளுக்கு திராவிடக் கட்சிகளுக்கே முன்பே வந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வரவில்லை?அடுத்தவர்களிடம் நிலத்தை குத்தகைக்கு விட்டபின் சரியான மகசூல் இல்லை என்று கூறுவது எந்த வகை நியாயம். நமக்கு நல்ல விளைச்சல் வேண்டுமானால் நாம்தான் தொழிலில் இறங்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
தேனும் வேண்டும் தேன்கூட்டையும் தொடமாட்டேன் என்றால் எப்படி? தேன் கூடு இருக்கும் மரம் நம் வீட்டில் இருந்தாலும் இன்னொருவனைத் தேன் எடுக்க விட்டபின் அவன் புறங்கையை நக்கிவிட்டான் என்று சொன்னால் அது யாரது குற்றம்? நாட்டை நாம் ஆளாமல்
இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு இன்று மோசம் போய்விட்டோம் என்று கதறினால்
அது நம் குற்றமா? அல்லது நாட்டை ஆண்டவர் குற்றமா? என்று பராசக்தி வசனத்தை பேசிக்கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியதுதான்.
திராவிடர் கழகம் தீவிரமாக தேர்தல் அரசியலில் நாட்டம் கொள்ளவில்லை. தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்தால்தான் சமூகநீதி, தீண்டாமை போன்றவற்றில் எல்லாம் செயலாற்ற முடியும். அதனால் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்ற அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார். அப்போதே தமிழ் தேசியம் பேசியவர்களும் தேர்தல் அரசியல் குதித்து ஆட்சியைக் கைப்பற்றி தமிழர் நலனை பாதுகாத்திருக்கலாமே? ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் தமிழர் கண்மூடி இருந்து விட்டு இப்போது குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் தேசியம் என்பது எப்போதுமே இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் மொழிவாரி மாநிலமாக பிரிந்த சமயத்திலாவது தமிழ் தேசியம் வலுப்பெற்றிருக்க வேண்டும். மொழிவாரி மாநிலமாக பிரிந்தபின் மற்ற மாநிலங்கள் எல்லாம் அவர்கள் இனத்தின் மீது வைத்திருந்த அளவுக்கு பற்று நமக்கு நம்மினத்தின்மேல் இல்லை.

நம் பற்று எல்லாம் நம் தமிழ்மொழி மீது மட்டுமே இருந்தது. இந்த பலவீனத்தை புரிந்து கொண்டவர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் தூக்கிப் பிடித்தனர். நாமும் பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்ப்பதுபோல ஆகா சோழன் கடாரம் வரை சென்றிருக்கிறான். சேரன் வட இந்திய மன்னன் தலையில் கல்லை வைத்து சுமக்கவைத்தான் என்ற பெருமிதமடைந்தோம். ஆனால் சேரன் மலையாளியாக வந்து மோதுகிறான். சோழன் நாடுகடந்து வென்றான் என்றால் சோழநட்டையே தரிசாகப்போவதை உணராமல் சாமிகளுக்கும் ஆசாமிகளுக்கும் பாலை ஊற்றி மாலையிட்டு மகிழ்கிறான் தமிழன்.
மொழி வளர்ந்து கொண்டிருக்கும்போது இனம் வலுவிழந்து கொண்டிருந்தது.
இதற்கிடையில் மதுக்கடைகளை திறந்துவிடப்பட்டு மூளை மழுங்கடிக்கப்பட்டது. திரைப்படத்தில் வேறு கவனம் திரும்பியது. மற்ற இனங்களிலும் திரைப்படம் மற்றும் மதுவின் தாக்கம் இருந்தாலும் அவர்கள் மொழிமீதும் இனத்தின் மீதும் கவனமாய் இருந்தனர். மற்றவர்கள் மொழிமீது அவ்வளவாக அக்கறை காட்டாதபோது தமிழர் தம் தாய்மொழியை காப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

அதற்கு காரணம் இத்தியாவிலுள்ள மொழிகள் யாவும் இந்தோ ஆரியமொழிகளாகவும் திராவிட மொழிகளாகவும் இருந்தன. இந்த மொழிகளில் வட இந்தியமொழிகளில் சமஸ்கிருதம் கலந்து இந்தோ ஆரியமொழிகளாகவும் தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து திராவிட மொழிகளும் தோன்றின. தென்னிந்தியாவில் மற்ற பகுதிகளில் தமிழுடன் சமஸ்கிருதம் கலந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் தோன்றினாலும் சோழநாட்டுப்பகுதியிலும் பாண்டிய நாட்டுப் பகுதியிலும் தமிழொடு சமஸ்கிருதம் கலந்து தமிழை உருமாற்ற முடியவில்லை.

கடைசியாக தமிழ் தன் அடையாளத்தை இழந்து உருமாறியது சேரநாட்டில்தான். சேரர்களின் தமிழ் மலையாளமாக உருவெடுத்தது. அதற்கு முன் அங்கு தமிழ் இருந்தது என்பதை சேர இளவரசரான இளங்கோவடிகளார் எழுதிய சிலப்பதிகாரமே சான்று. சேரநாடு மேற்கு தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டிருந்ததாலும் சோழ பாண்டிய நாடுகளில் இருந்த தமிழர் நிலப்பகுதியின் எல்லை தொலைதூரத்தில் இருந்ததாலும் அங்கெல்லாம் சிறிது சிறிதாக தமிழுடன் சமஸ்கிருதம் கலப்பதை தடுக்க முடியாமல் போனது.

விளைவு கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் உருவாகின. இது தவிர்க்க முடியாத காலத்தின் விளையாட்டுகளில் ஒன்று. இப்போது எப்படி கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லையில் வாழும் தமிழரின் தமிழ் மாறுபட்டு இருக்கிறதோ அப்படித்தான் ஏனைய திராவிட மொழிகள் மாற்றம் கண்டன.

கடைசியாகத் தமிழையும் துடைத்தெறிய மேற்கொண்டவழிதான் “மணிப்பிரவாளம்” முறை. மணியும் பவளமும் சேர்த்து கோர்த்து மாலைபோல்

தமிழையும் சமஸ்கிருதத்தையும் சேர்த்து எழுதினால் அழகாக இருக்கும் என்று சொல்லி தமிழை மொத்தமாக அழித்துவிடலாம் என்ற பெருமுயற்சி தமிழரிடையே வழக்கில் இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் இம்முயற்சி தொடங்கியது.

 
-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *