மக்கள் ஆட்சியும் குடும்ப ஆட்சியும்!….. அவதானி.

பல வருடங்களுக்கு முன்னர் வியட்நாம் பிரதமராக இருந்த ஒருவர் இலங்கை வந்தார். அவரை பேராதனை பூங்காவுக்கு அழைத்துச்சென்றார்கள்.
அவர் அங்கே ஒரு மரத்தையும் நட்டார். அப்போது அவரது மனதை குளிர்விப்பதற்காக இலங்கை அமைச்சர் ஒருவர், “ இம்முறை நீங்கள் வந்து மரம் நடுகிறீர்கள். எதிர்காலத்தில் உங்கள் மகன் பிரதமரானதும் அவரும் இங்கே வந்து மரம் நடுவார். “ என்றார்.
உடனே வியட்நாம் பிரதமர், அந்தக்கூற்றை மறுதலித்து, “ இல்லை… இல்லை… எமது நாட்டு மக்கள் யாரை பிரதமராக தெரிவு செய்கிறார்களோ…. அவர்தான் உங்கள் அழைப்பில் இங்கே வருவார். “ என்றார்.![]()
ஒரு தேசத்தில் ஜனநாயக ஆட்சி தழைக்கவேண்டுமானால் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யவிரும்பும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்தக்கூற்றை தங்களது பால பாடமாகக் கற்றுக்கொள்ளவேண்டும்.
வாரிசு அரசியல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் , இலங்கை முதலான நாடுகளில்தான் முதலில் அறிமுகமாகியிருக்கிறது.
நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய்காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேனகா காந்தி என்று இந்திய அரசியல் அதிகாரத்தில் சிலரையும், பாகிஸ்தானில் சுல்பிகார் அலி பூட்டோ, பெனாஸிர் பூட்டோ முதலானோரையும் இலங்கையில் எஸ். டபிள்யூ . ஆர். டீ. பண்டாரநாயக்கா, அவரது மனைவி ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, இவர்களின் புதல்வன் அநுரா பண்டாரநாயக்கா, புதல்வி சந்திரிக்கா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரையும் பார்த்தோம்.
சிங்கப்பூரில் லீ குவான் யூ, அவரது மகன் லீ சியான் லுங் ஆகியோர்.
தமிழ்நாடு மாநிலத்தைப்பொறுத்தவரையில் கலைஞர் கருணாநிதியைத் தொடர்ந்து அவரது மகன் ஸ்ராலின், இவரது மகன் உதயநிதி ஸ்ராலின், அத்துடன் கலைஞரின் மற்றும் ஒரு மகள் கனிமொழியும் வாரிசு அரசியலை அலங்கரித்தார்கள்.
இலங்கையில் இந்த வாரிசு அரசியல் ஒரு குடும்பத்தின் முழுமையான ஆளுகைக்குள் வந்திருப்பதை சமகாலத்தில் அவதானிக்கமுடிகிறது.
ராஜபக்ஷ குடும்பத்தினர் இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று 2019 ஆம் ஆண்டு இறுதியிலேயே வெளிநாட்டு செய்திச்சேவையான ரொய்டர் ஆரூடம் கூறியிருந்தது.
அது தற்போது நிரூபணமாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் புதல்வன் நாமல் ராஜபக்ஷ, தற்போது நிதியமைச்சராக மகிந்தரின் மற்றும் ஒரு தம்பி பஸில் ராஜபக்ஷ பதவி ஏற்றுள்ளார். ஏற்கனவே சமல் ராஜபக்ஷவும் அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இக்குடும்பத்தில் வாரிசு அரசியல் டொன் ஆல்வின் ராஜபக்ஷவிலிருந்து ஆரம்பிக்கிறது. இவர் முன்னர் பிரதமராக பதவியில் இருந்த தகநாயக்காவின் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர்.
டொன் ஆல்வின் ராஜபக்க்ஷவுக்கு ஒன்பது பிள்ளைகள். இவர்களில் முதலாவதாகப் பிறந்தவர் சமல் ராஜபக்க்ஷ. மூன்றாவதாக மகிந்த ராஜபக்க்ஷவும், ஐந்தாவதாக கோத்தபாய ராஜபக்க்ஷவும், ஆறாவதாக பசில் ராஜபக்க்ஷவும் பிறந்தனர். தந்தையைப் போன்று நால்வரும் அரசியல் களத்துக்குள் நுழைந்தனர்.
இவர்களில் மகிந்தர், தனது புதல்வன் நாமலை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி, அமைச்சருமாக்கிவிட்டார்.
அடுத்த பிரதமராக இந்த நாமல் வருவார் என்று ஆரூடங்கள் கூறப்படுகின்றன. காரணம் இன்றி காரியம் இல்லை அல்லவா..?
ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்த தலைவர் டொன் ஆல்வின் இறந்த பின்னர், சட்டம் படித்துக்கொண்டிருந்த மகிந்தர் 1970 ஆம் ஆண்டு நேரடியாக அரசியலுக்கு வந்து தனது 24 வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார். சந்திரிகா விஜய குமாரணதுங்கவின் அமைச்சரவையில், தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற இவர் 2004 இல் இலங்கையின் 13 ஆவது பிரதமரானார்.
அதனையடுத்து 2005 இல் இலங்கையின் ஜனாதிபதியானார்.
தண்ணீரை விட இரத்தம் கெட்டியானது அல்லவா…? அதிகாரத்தில் அமர்ந்தால், நம்பிக்கைக்குரியவர்களையும் அருகில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்ற பாலபாடத்தை இவர் தனது தந்தையாரிடம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும்.
அமெரிக்காவிலிருந்த தம்பி கோத்தபாயவை அழைத்து தனது பாதுகாப்பு அமைச்சிற்கு செயலாளராக்கினார்.
அதன்பிறகு முன்னர் இராணுவ சேவையிலிருந்த கோத்தபாயவின் ஆட்டம் புலிகளுக்கு எதிராக தீவிரமாக இறங்கியது. இருபது ஆண்டுகால இராணுவ அனுபவம் பெற்றவருக்கு, புலிகளை முறியடிக்கும் தந்திரோபாயமும் தெரிந்திருந்தது.
எனினும், நீடித்த உள்நாட்டுப்போர் 2009 மே மாதம் முடிவுக்கு வந்ததும், யார் தென்னை மரத்தில் ஏறியது..? யார் இளநீர் குடிப்பது… ? என்ற போட்டி உருவாகியது.
அந்த வெற்றியின் மமதையை கேக்வெட்டியும் பாற்சோறு உண்டும் களித்த இராணுவத்தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்காவுக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் இடையில் மூண்டிருந்த நீறுபூத்த நெருப்பு, எரிமலையாக வெடித்தது.
2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினரால் சரத்பொன்சேக்கா பொதுவேட்பாளராக்கப்பட்டு, தோல்வியை தழுவினார்.
குற்றங்கள் சுமத்தப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.
அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் தான் இழந்த ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தையும் கொடுப்பனவுகளையும் பெற்ற சரத்பொன்சேக்கா, ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்.
மைத்திரி – ரணில் நல்லாட்சி ( ? ) காலத்தில் மீண்டும் அமெரிக்கா சென்ற அங்கு குடியுரிமை பெற்றிருந்த கோத்தபாய முதலில் நாடு திரும்பி ஜனாதிபதியானார்.
இப்போது அவரது மற்றும் ஒரு சகோதரர் பசில், நிதியமைச்சராகியிருக்கிறார்.![]()
மொத்தத்தில் இலங்கை அரசியலில் மாட்சிமை பொருந்திய நிறைவேற்று அதிகாரங்கள் நிரம்பப்பெற்ற பதவிகளை தம்மகத்தே வைத்துள்ளனர் இந்த ராஜபக்ஷ குடும்பத்தினர்.
இவர்களை பதவியில் அமர்த்த ஆசைப்பட்ட தீவிர சிங்கள இனவாதிகளும் பௌத்த மத பிக்குகளும் கடும்போக்காளர்களும் ஆப்பிழுத்த பிராணியைப்போன்று தலையில் கைவைத்துக்கொண்டிருக்கின்றனர்.
சமகால கோவிட் தொற்றினை சமாளிக்க முடியாமல் தற்போதைய அரசு திணறிக்கொண்டிருக்கும் வேளையில் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார்.
தலைநகரம் உட்பட நாடெங்கும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சமூக இடைவெளிபேணியவாறு நடந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை விடுவதிலும் ஊடக சந்திப்புகளை நடத்துவதிலும் தீவிர கவனம் செலுத்திவரும் வேளையில், ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆழ்கடலுக்கூடாக தீப்பந்தம் ஏந்திச்சென்றுகொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் எதிர்காலம் இனி யாரது கையில்…?
—0—
![]()