கட்டுரைகள்

மனதினில் மண்டேலா!… இளவாலை எஸ்.ஜெகதீசன்…. ( கனடா )

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் ஜூலை 18.

இளவாலை எஸ்.ஜெகதீசன்.

எந்தக் காரியத்திலும் அர்ப்பணிப்பும் வேட்கையும் இருப்பின் யாரும் உயரலாம் என்பதற்கு சான்று அவர்.

போராளிகள் எந்தவிதமான ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரிகளே தீர்மானிக் கின்றார்கள் என்பதே – அவரிடமிருந்த வார்த்தையும் அவரிடமிருந்த வாழ்க்கையும்.

இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார்.

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.

உலக வரை படத்தை வரைந்தவர்களுக்குக் கூட முன்னொரு காலத்தில் தென்னாபிரிக்காவின் குனு என்ற கிராமத்தை குறி்க்க வேண்டும் என்ற ஆர்வமோ அக்கறையோ அல்லது நிர்ப்பந்தமோ இருந்திருக்கும் என்று எண்ணி விட முடியாது.

அதே காலப்பகுதியைச் சேர்ந்த சரித்திர எழுத்தாளர்களும் அடக்கு முறையை புலப்படுத்தும் மனப்பாங்கில் அக்கிராமத்தின் சோசா பழங்குடியினர் மீது ‘எழுத்துகளால் பலாத்காரம் ’ புரிந்திருக்க தவறியிருக்க மாட்டார்கள் என்பதையும் எண்ணாதிருக்க முடியாது.

ஆனால் அதே குக்கிராமத்தில் அதே சோசா பழங்குடியினனாகப் பிறந்து சந்தர்ப்ப வசமாக மாளிகையில் வசதியாக வாழ நேர்ந்து படிப்பறிவு பெற்று ஆபிரிக்க மக்களின் சுதந்திரத் துக்காக போராடி வெற்றியீட்டிய ஒருவரால் அந்நிலை மாறியது.

அவரால் வரலாறும் உருவானது. வரலாறும் அவரை உருவாக்கியது.

அதனால் அக் குக் கிராமம் தலைநகருக்குரிய தகுதியை பூகோள பட வரைஞர்களிடம் பெற்றுக் கொண்டது.

அந்தப் பழங்குடி – நவ நாகரீகவாதிகளிடம் கூட மகிமை கண்டது.

சுற்றுலா பயணிகளுக்கும் நாடோடிகளுக்கும் அப்பிரதேசம் சொர்கபுரியாயிற்று.

அன்று அவர்கள் பேசிய ஹேஸா (Xhosa) மொழியில் ஒரு ‘கெட்ட’ வார்த்தை தெரிந்தாலே – காதில் தேன் பாய்ந்திட்ட பிரமை உருவானது.

அவரது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நெருங்கிய உறவுகள் அவரை பப்பா என்றழைத்தனர்.

தந்தை என்ற மரியாதை கொடுத்த ஏனையோருக்கு அவர் வாழ்ந்த பிரதேசத்தில் அவர் தாதா என்றானார்.

தலிபுங்கா என்றால் யார் தெரியுமா?

அதுவும் அவர்தான். 16 வயதில் ஞானஸ்தானம் பெற்ற பொழுது வார்த்தைகளின் வல்லோன் என்ற அர்தமுடன் பெற்ற பெயர் இது.

குஹூலு என அவர் பெயர் பெற்றதன் காரணம் எதிலும் அதி சிறந்தவர் என்பதால்தான்.

மடிபா என அவருக்கு இருந்த பரம்பரைப் பெயர் அவரது இனத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதுடன் இறுதிப்பெயருக்கும் நிகரான மதிப்புப் பெற்றிருந்தது.

ரோலிஹ்ஹலா என்பது பெற்றோர் இட்ட இயற்பெயர்.

மரக்கிளையை ஒடிப்பவன் என்றும் குழப்பங்காசி என்றும் பாமரத்தனமாக அதன் அர்த்தம் ஆகும்.

நெல்சன் என்ற பெயர் உலகை அறிய வைத்தது.

ரோலிஹ்ஹலா என்ற பெயரை உச்சரிக்கத் திணறிய வெள்ளைக்கார வாத்தி வைத்த பெயர் இது.

மண்டேலா என்று அவரது இறுதிப்பெயர் உலகில் அவரை மக்கள் தலைவராக்கி கௌரவம் பெற்றது.

அவர் ஜான் என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு சம்பவமும் அவரது வரலாற்றில் உண்டு.

ஒரு முறை ஜன நெரிசல் மிகுந்த பகுதி ஒன்றில் வெள்ளை இன மாது ஒருத்தியின் வாகனம் இயங்க மறுத்ததில் தவித்துக் கொண்டிருந்தார்.

எவருமே உதவி செய்ய முன்வராத நிலை.

அதனைக் கண்ணுற்ற நெல்சன் மண்டேலா ஓடோடிச்சென்று பின்னாலிருந்து தள்ளிக் கொடுத்து இயங்க வைத்தார்.

நன்றி ஜான் என்றாள் அந்தப்பெண்.

கறுப்பினத்தவரின் பெயர் தெரிந்திருந்தாலும் ‘நாகரீக அவமானம்’ விரும்பி பொதுவாக ஜான் என்றழைக்கும் வெள்ளையரின் குரூரம் மண்டேலாவின் மனதில் விடுதலை உணர்வை ஆழமாக்கியது.

கைதி வாழ்வு அவருக்கிட்ட பெயர் 46664.

இதில் இறுதி இரு எண்களும் சிறை பிடிக்கப்பட்ட ஆண்டு.

முதல் மூன்றும் கைதியின் எண்ணிக்கை.

மண்டேலா 64ம் ஆண்டு 466 ஆவது கைதியாக ரொபின் தீவு சிறை கூடத்தில் நுழைந்து 1990 வரை அங்கிருந்தார்.

விருத்தெரிந்த நாளிலிருந்து அவருக்குப் பிடித்தமான ஒரு வார்த்தை அமெண்டா என்பதாகும்.

அமெண்டா என்ற வார்தையை தனது வலக்கையை உயர்த்தியபடி நெல்சன் மண்டேலா அடிக்கடி பிரயோகிப்பார்.

அமெண்டா என்றால் உறுதி என்று அர்த்தம்.

அந்த உறுதியில் வெற்றி தெரியும். விடுதலை தெரியும். விடியல் தெரியும்.

அதனால்தான் நெல்சன் மண்டேலாவை சந்திக்கும் பிரமுகர்களும் வலக்கையை உயர்த்தியபடி அமெண்டா என்பார்கள்.

நெல்சன் மண்டேலாவை சந்திக்கும் கூட்டத்தினரும் தமது வலக்கையை உயர்த்தியபடி அமெண்டா என்பார்கள்.

அறிவுபூர்வமாக சிந்திக்கத் தெரிந்ததிலிருந்து அவருக்கு பிடிக்காத ஒரே ஒர வார்த்தை மன்னிப்பு.

பாடசாலை முதல் சிறைச்சாலை வரை, காதல் முதல் போராட்டம் வரை, கைதி முதல் ஜனாதிபதி வரை பல்வேறு வடிவங்களில் தனது வாழ்வில் குறுக்கிட்டுத் தனக்கு தொல்லை தந்த சொல் அது என்பார்.

மன்னிப்பு கோர வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களைத் தான் நிராகரிக்காது இருந்திருப்பின் சலுகைகளுக்கு விலை போயிருப்பேன் என்பரும் அவரே.

தனது வாழ்வின் பாதையை மாற்றிவர்களில் ஆசிரியர்கள் மூவரை குறிப்பிட்டுக் கூற முடியும் என நினைவு கொள்வார் மண்டேலா.

ரோலிஹ்ஹலா என்ற பெற்றோர் இட்ட இயற்பெயரை அல்லது ரோலிலாலா ரோபிசாலா என ஊரும் உறவும் அழைத்த அதே பெயரை சொல்லத் தெரியாது நெல்சன் எனும் புதுப் பெயர் சூட்டி ஊரும் உலகும்

சொல்ல வைத்த தனது ஆரம்ப பாடசாலையில் ஆரம்ப வகுப்பின் ஆசிரியை செல்வி மெடிங்கனே அவர்களில் ஒருவர்.

வெள்ளை இனத்தை பார்த்ததும் அடங்கி ஒடுங்கி போய்விட வேண்டும் என இயல்பிலிருந்த தாழ்வு மனப்பான்மையை விரட்டிட ஆதர்சமாக அமைந்த ஆசான் மாஹ்லாசேலா அவர்களில் முக்கியமானவர்.

அவரது கம்பீரம்.நிமிர்ந்த நடை. வெள்ளையின தலைமை ஆசிரியருக்கு தலை வணங்காத கர்வம். அனைத்தும் மண்டேலாவிடம் படிந்திட காரணகர்த்தா.

மூன்றாமவர் வால்டர் ஸிஸிலு.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் முக்கியமானவர். தீவிரமான அரசியலில் மண்டேலாவின் குரு.

How far we slaves have come(1991), Long walk to freedom(1994), Mandela(1996), Building new South Africa(1998) Long walk to freedom (2000) ஆகிய ஐந்து புத்தகங்களும் அவர் எழுதிய 32 நூல்களிலும் பிரபலமானவை.

இவற்றுள் பல அவரது உரைகளின் தொகுப்பு.

அவரது வாழ்வு பற்றிச் சில.

நீதிக்கான போராட்டம் தீர்கதரிசனம் சமூக ஒற்றிணைவு என்பனவற்றுடன் வேறு சில.

பெருந்தன்மை மன்னிக்கும் மனோபாவம் அடிபணியாத உறுதி போன்ற குணாதிசயங்களுடன் சில.

வாழ்க்கையாலும் வார்த்தையாலும் அவரிடமிருந்து உலகம் படிக்க வேண்டிய பாடங்கள் பத்து எனவும் பொதுப்படையாக கூறப்படும்.

சமநிலை தேடு, கசப்பை மற, கடந்ததை கடந்திடு, எதிரிகளைப் படி, வரவிருப்பதை விரும்பு, எதையும் சாத்தியமாக்கு, அன்பு கூர், அதிகாரம் கொடு, உறுதியில் உறுதியாயிரு, அடையாளமிடு என்ற பத்து அத்தியாயங்களுக்கும் அவரது வாழ்வுப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

எந்தக் காரியத்திலும் அர்ப்பணிப்பும் வேட்கையும் இருப்பின் யாரும் உயரலாம் என்பதற்கு சான்று அவர்.

நிறவெறி வெள்ளை அரசே ஆயுதப் போரின் பக்கம் ஒவ்வொரு ஆபிரிக்கனையும் இழுத்துப் போராளியாக நிர்ப்பந்திப்பதனால் போராளிகள் எந்தவிதமான ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரிகளே எப்பொழுதும் தீர்மானிக் கின்றார்கள் என்ற வாசகம் அவரது சகல நூல்களிலும் முத்திரை பொறித்திருக்கும்.

1918 யூலை மாதம் 18ம் திகதி ட்ரான்ஸ்கியின் மேவேசோ (Mvezo) எனும் கிராமத்தில் அவர் பிறந்தார்.

ஒன்பது அயலவர்கள் மட்டுமே பிரசன்னமாயிருந்தார்கள்.

தந்தையின் பெயர் காட்லா ஹென்றி மப்ஹாஹனிஷ்வா.

நான்கு மனைவிமார்.பதின்மூன்று பிள்ளைகள்.

மூன்றாவது மனைவி நோசேக்கினி பானிக்கு மூன்று பிள்ளைகள்.

அவர்களுள் நெல்சன் மண்டேலா மட்டுமே ஆண்.

முதற்தரமான இந்த மனிதரின் வாழ்வில் மூன்று தாரங்கள் காதலுடன் கலந்தன.

1944 அக்டோபர் 5 ம் திகதி ஈவ்லின் மாஸே (Evelin Mase) என்னும் மருத்துவ தாதி மனைவியானார். 1958 ல் மணம் முறிந்தது.

மடிபா தெம்பாகிலியும் (Madiba Thembekile) மக்கேத்தோ மண்டேலாவும் (Makgatho Mandela) மகன்மார். மகஸிவி மண்டேலாவும் (Makaziwe Mandela) மகவிஸி மண்டேலாவும் (Makawezi Mandela மகள்மார்.

வின்னி (Winnie) எனச் செல்லமாக அழைக்கப்பட்ட சுகாதார சமுக நல ஊழியரும் அரசியலில் ஆர்வம் மிக்கவருமான நோம்ஸமோ வின்வேட்டா மடிகிசெல (Nomzamo Winfreda Madikizela ) 1958 யூன் 14 ம் திகதி மனைவியானார். 1996 ல் விவாகரத்தானது.

ஸினானி (Zenani) ஷிந்திஷ்வா (Zindzishwa) எனும் இரு மகள்மார் பிறந்தனர்.

கிரேஷியா மிஷல் ஸிம்பினி (Graça Machel Simbine) என்ற கன்னிப் பெயர் கொண்டவரை தனது 80 வது பிறந்த நாளான 1998 யூலை 18ல் மணம்முடித் தார்.

கிரேஷியா மிஷல் ஆசிரியை யாகவும் கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்தவர்.

அத்துடன் மொஸாம்பிக் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த சமோராவின் முன்னைய மனைவியுமாவர்.

1925 ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு சட்டப் பட்டதாரியாகும் வரை புத்தக உறவு புத்துயிர் ஊட்டியது என அவ்வப் பொழுது சொல்லிக் கொள்வார் மண்டேலா.

கோசோ இனத்தில் முதலாவது படித்தவர் இவர்தான்.

கோசோ இனத்தை முதலாவதாக படித்தவரும் இவர்தான்.

1925 ல் வெஸ்லியன் மிஷன் பாடசாலை. 1934 ல் கிளாக் பெரி கல்லூரி.1934 ல் ஹீல்ட்டவுன் பல்கலை கழகம்.1939 ல் போட் ஹரே பல்கலை கழகம்.1942.ல் தென்னாபிரிக்க பல்கலைகழக பீ.ஏ. பட்டதாரி. 1943 ல் ஜோகானஸ்பேர்க் பல்கலை கழகத்தில் சட்டம் பயில ஆரம்பித்தார். பல இடையூறுகள் இடைநிறுத்தங்களின் பின்னர் 1989 அதே பல்கலை கழகத்தில் (L.L.B) சட்ட பட்டதாரியானார்.

போராட்டமின்றி அவர் வாழ்வு இல்லை.

தான் வாழ்வதற்காக அவர் போராடவில்லை.

நாட்டு மக்கள் வாழ்வதற்கே போராடினார்.

1942 ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இணைந்தார்.1943 ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவரானார்.

1944 ல் தென்னாபிரிக்கவில் இனங்களை பிரித்து வைக்கும் (Apartheid) இனஒடுக்குமுறை அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்தார் என சிறையில் அடைக்கப்பட்டார்.

1948 ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் செயலாளர்.1951 ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்.

அதே ஆண்டில் அரச சட்ட மீறல்களுக்காக 18 பேருடன் ஒரு வருட சிறை.

1956 ல் வன்முறையற்ற தேச துரோக குற்றச்சாட்டும் கைதும்.

1960 ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தடை.தலைமறைவு வாழ்வு.கரந்தடி போர் வியூகம் தீவிரம்.வெள்ளை அரசின் அடக்கு முறை உச்சம்.

போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் 69 பேர் படுகொலை என கணக்கு காட்டல்.

1961 வன் செயல்களை வன் செயல்களாலேயே முறியடிக்கும் நோக்கில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுத படை உருவாக்கம்.

புரட்சிகர அமைப்பான உம்கொன்ரோ வெய் ஸிசுவே (Umkhonto weSizwe (MK)) உதயம்.

அறவழி போராட்டம் பலனற்றதில் ஆயுத வழிமுறை தீவிரம்.

இராணுவ கேந்திர நிலைகள் கரந்தடி யுத்த முறையில் தகர்ப்பு.

1961 டிசம்பர் 16 ல் இனவெறிக்கு எதிரான தாக்குதல்.

தீவிரவாதி எனவும் அரசை கவிழ்க சதி செய்ததாகவும் குற்றம் சுமத்தி அரசாங்கம் கெடுபிடி.

1962 ஜனவரியில் நாட்டை விட்டு நீங்கி வெளி நாடுகளில் இராணுவ பயிற்சியுடன் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டல்.

1962 ஏப்ரல் மாதம் தென் ஆபிரிக்காவின் அராஜகத்தை கண்டித்து முதன் முதலாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.

1962 யூலை ரகஸியமாக நாடு திரும்பல்.

1962 ஆகஸட் 5 ல் எதிர்பாராத ஒரு கணத்தில் அவர் பயணித்த வாகனம் ஆயுதம் ஏந்திய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு கைதானார்.

நாட்டைவிட்டு உரிய ஆவணங்க ளின்றி நீங்கிய குற்றத்திற்காக ஐந்து ஆண்டு தண்டனையுடன் 1963 மே மாதம் 27 ம் திகதி நீண்ட நெடிய சிறைவாசம் தன் மீது கவியப் போவதை அறியாமல் ரொப்பென் தீவுகளின் சிறைச்சாலைக்குள் நுழைந்தார்.

1964 யூன் மாதம் 11 ம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பு நாளில் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியா நீதி மன்றில் திரண்டிருந்த சகல முகங்களையும் இருள் மேலும் அப்பியிருந்தது.

குற்றவாளிக் கூண்டிலிருந்து மண்டேலா ஆற்றிய உரை நான்கு மணி நேரம் நீடித்தது.

உலக நாடுகள் அனைத்தையும் சிலிர்க்க வைத்த அந்த நீண்ட நெடிய உரையை வரலாறும் தன் அழிக்க முடியாத பக்கத்தில் ஆழமாகப் பதிந்து கொண்டது.

நான் வெள்ளையரின் அடக்குமுறை அதிகாரத்தை எதிர்க்கின்றேன்.அதே போல கறுப்பர்களின் அடங்கிப் போகும் மனப்பாங்கினையும் வெறுக்கின்றேன்.

தென் ஆபிரிக்கா ஒரு சுதந்திர பூமி். இங்கு அனைத்து மக்களும் சமமான உரிமைகளுடன் சகோதரத்துவ உணர்வுடன் வாழ வேண்டும்.

இது ஒவ்வொரு ஆபிரிக்கனதும் கனவாகும்.

இது முழுமையாக நிறைவேறும்.அது வரை போராட்டம் ஓயாது.

ஆபிரிக்கா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் வெள்ளையன் அடி பணிவான். ஆபிரிக்கா முழுவதும் அடிமையாயிருக்கும் கறுப்பன் வீறுகொண்டெழுந்து சுதந்திரமாகச் சுற்றித்திரிவான்.

இதுவே குற்றவாளிக் கூண்டிலிருந்து மண்டேலா ஆற்றிய உரையின் சாரம்.

ஆரோக்கியம் குன்றிட 1982 மார்ச் மாதம் 31 ல் போல்ஸ்மூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

1985 பெப்ரவரியில் மன்னிப்பு கேட்டால் விடுதலை என்ற தென்னாபிரிக்க ஜனாதிபதி பி.டபிள்யு. போத்தா விடுத்த கோரிக்கையை தனது மகள் மூலம் நிராகரித்தார்.

1988 ஆகஸ்ட் மாதம் காசநோயால் அவதிப்பட்டு மருத்துவமனை யடைந்தார்.

1988 டிசம்பர் மாதம் விக்டர் வெஸ்டர் சிறைச்சாலைக்கு வீட்டுக்காவல் நிலையில் மாற்றப்பட்டார்.

1990 பெப்ரவரி 2 ல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தடை நீக்கப்பட்டது.

1990 பெப்ரவரி 11 ல் விடுதலை பெற்றார்.

1991 மார்ச் மாதம் ஆபிரிக்க காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1993 டிசம்பர் மாதம் 10 ம் திகதி சமாதானத்துக்கான நோபல் பரிசு இவருக்கும் தென்னாபிரிக்கா ஜனாதிபதி எப்.டபிள்யு. டீ கிளார்க்க்கும் கிடைத்தது.

தனது வாழ் நாளில் முதற் தடவையாக அவர் தேர்தலில் வாக்களித்த தினம் 1994 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆகும்.

தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தெரிவான முதலாவது ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா 1994 ம் ஆண்டு மே மாதம் 10 திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அப்பொழுது மா கவிஞன் புதுவை இரத்தினதுரை அனுப்பியிருந்த வரலாற்றில் வாழும் வாழ்த்துக் கவிதையை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாயிருக்கும்.

இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே!

வாழ்த்துக்கள்.

இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே!

மேகங்களிடம் ‘முத்தங்களும்’

காற்றிடம் ‘மலர்ச்செண்டும்’ அனுப்பியுள்ளோம்.

பெற்றுக்கொள்.

‘இதரைவாழைக்கன்றுகள்’ இரண்டை

இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம்.

கொடிமரத்துக்கருகில் பாத்தி கட்டி நாட்டிவிடு.

அடிபெருகி எங்கள் அன்புக்குக் குலை தள்ளட்டும்.

 

நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே

உன்னை அழைத்தோம்.

இன்று ‘என் ஆபிரிக்கா’ என்றே

இங்கே ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொள்கின்றோம்.

‘வாஸ்கொடாமா’வுக்கு மட்டும்தான்

நீ ‘நம்பிக்கைமுனை’யாக இருக்கவில்லை

போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய்

 

நெல்சன் மண்டேலா!

கறுப்புச் சிங்கமே! கையை நீட்டு.

குலுக்கிக் கொள்ளுவோம்.

உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம்.

 

என்ன செய்வது நீ எட்ட இருக்கின்றாய்.

அன்று நீ ‘சிம்மாசனம்’ ஏறியபோது

எமக்கேன் அழைப்பனுப்பவில்லை?

 

சிறீலங்காவுக்கு நீ எந்தவழி உறவு?

விஜேதுங்காவை விருந்துக்கழைத்தபோது

தமிழீழம் உன் கண்களுக்கு ஏன் தட்டுப்படவில்லை?

 

இது விருந்து கிட்டவில்லையென்ற விசனமல்ல…

போராடும் பூமியொன்றை

புறமொதுக்கிவிட்டாய் என்ற ஆதங்கம் மட்டுமே.

 

போகட்டும் இதனால் கோபமேதுமில்லை.

இனிமேலாவது நண்பர்களை இனம் கண்டுகொள்.

நன்மை உனக்குத்தான்.

 

ஆபிரிக்காவின் ‘காப்பிரி’ மக்களே!

 

சூரியனை வழிமறித்து

தொட்டுப் பேசும் வல்லமையின் வடிவே!

காற்றுக்கொதுங்கிய வெள்ளையன்

நேற்றுவரை உன் முதுகில்தான் இருந்தான்.

 

கறுப்பனென்று உன்னை அழைத்தபோது

வெள்ளை உதடுகள் வேதனைப்படவில்லை.

மலத்தைக்கூட

தன்வீட்டில் அறைகட்டிக் குடியிருத்தியவன்

உன்னை வீதியில் உலாவவிடவில்லை.

 

படுக்கை அறைக்குள்ளும் நாயை அழைத்தவன்

அடுப்படிக்குள்ளே கோழியை அனுமதித்தவன்

கறுப்பனைத்தொடும் காற்றைக்கூட

வெறுத்து விரட்டினான்.

 

அழகான உன் கரிய மேனியும்

உரமேறிய தசைநார்களும்

அவனுக்கு அச்சத்தைத் தரவில்லை.

அருவருப்பாகவே இருந்தது.

 

நீ பேசாமல் இருக்கவில்லை

போராடினாய்.

 

வெற்றிக்கம்பத்தைத்தான்

உன்னால் தொட்டுவிடமுடியவில்லை.

 

உங்கு வேர்கொண்ட மரங்களெதுவும்

நீர்குடித்து வளரவில்லை.

கறுப்பனின் குருதி குடித்தே தளிர்த்தன.

 

உலகெங்கும் தார்பூசியே வீதி கறுப்பானது.

உன் நாட்டில் மட்டும்தான்

கறுப்பனின் வியர்வை பட்டு வீதி கறுப்பானது.

 

வெள்ளைச் சீமாட்டிகளின் விருந்துக்குப் பிறகு

வீசியெறியும் எச்சில் இலைக்காக

உன்பரம்பரை தாழ்வாரத்தில் தவமிருந்தது.

 

வந்தவன் ஆள நீ வயலில் மாடானாய்.

வெள்ளைக்காரன்

மாட்டுத்தொழுவத்தில் கறுப்பியின் முலைதொடுவான்.

கறுப்பனுக்கு மட்டும் காயடிப்பான்.

 

நீ புயலாகிப் போராடியவன்தான்.

என்ன செய்வது?

அம்பும் வில்லும்தான் உனக்கு அகப்பட்டது.

அவனிடம் துப்பாக்கியல்லவா இருந்தது!

 

காலங்கள் கழிந்தனவே தவிர

உன் துன்பங்கள் கழிய வழிவந்து சேரவில்லை.

நீண்ட காலத்தின் பின்

‘நெல்சன் மண்டேலா’ வந்து பிறந்தபோதுதான்

நெஞ்சு நிமிர்த்தினாய்.

 

எப்படியோ

சுற்றிய இரும்புவேலிச் சுவர்கள் இடிந்தன.

இன்று ஆபிரிக்காவுக்கு சிறகுமுளைத்துவிட்டது.

புதிதாகப் பிறந்த கறுப்புதேசமே!

விடுதலைக்கு நீ கொடுத்த விலையிலும்

அதிகவிலை நாங்கள் கொடுக்கின்றோம்.

 

நீங்கள் போராடும் விதமே வித்தியாசமானது.

உனக்குப் பக்கத்து நாடுகள் பால்வார்த்தன.

எமக்கு அண்டை நாடொன்று நஞ்சையே தந்தது.

 

நின்றும் நடந்தும் குனிந்தும் நிமிர்ந்தும்

நீ வசதிக்குத் தக்கபடி வழிமாறியுள்ளாய்.

நாங்கள் பாதை மாற்றும் பரம்பரை இல்லையே!

 

விடுதலையைப் பேசிப்பெறும் எண்ணம் எமக்கில்லை.

போராடிப்பெறுவதென்றே முடிவு.

பிரபாகரனைப் பார்க்காவிட்டாலும் கேட்டிருப்பாய். தொட்டுத் தோழமையை வளர்த்துக் கொள்.

கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும்

நாங்கள் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்.

நிறத்தால் வேறுபட்டாலும்

நீங்கள் விடுதலை பெறவேண்டுமென்று

அதிகம் விரும்பியது நாங்கள்தான்.

 

ஏன் தெரியுமா?

வெள்ளைக்காரன் உன்னை மட்டுமா அடக்கினான்?

இல்லை.

எம்மை அடக்கவும் எதிரிக்குத் துணைபோனான்.

 

இங்கே கண்ணிவெடியில் சிதறும்

‘பவள்’ கவச வண்டியை எதிரிக்கு அனுப்பியதே

வெள்ளைத்தோல் வெறியன்தான்.

 

இனி இது நடக்காது.

நாங்கள் நம்புகின்றோம்.

 

போராடிப் பெற்ற சுதந்திரத்தின்

பெறுமதி புரிந்தவர்கள் நீங்கள்.

 

விடுதலையின் முகவரி தெரிந்தவர்களே!

எங்கள் சுதந்திரத்துக்கு முத்திரை ஒட்டுங்கள்நம்பிக்கைமுனை நாடே!எங்களின் நம்பிக்கையை நாசமாக்கி விடாதே

 

கறுப்புச் சிங்கமே நெல்சன் மண்டேலா.

ஒரு கேள்வி பதில் வேண்டும்.

சில இடங்களில் சேற்றிலேன் காலைப்புதைத்தாய்?

 

சமாதானத்துக்கான நோபல் பரிசை

வேடனும் புறாவும் எப்படிப் பங்கிட முடியும்?

 

குருதிபடிந்த வெள்ளைக் கொலைக்கரமும்

சிறையில் வாடிய உன் கரிய திருக்கரமும்

குலுக்கிக்கொண்டபோது அந்த விருதை எப்படி விளங்கிக்கொண்டாய்?

 

பரிசு வாங்கியபோது உன் பரம்பரை சிந்திய குருதியை எப்படி மறந்து கைகளை நீட்டினாய்?

 

என்றாலும் உன்மீது கோபம் வரவில்லை.

கறுப்புச் சிங்கமே! கைகளை நீட்டு.

குலுக்கிக் கொள்ளுவோம்.

– கவிஞர் புதுவை இரத்தினதுரை

பாரத ரத்னா என்ற உயர் விருதை இந்தியர் அல்லாத ஒருவருக்கு இந்தியா வழங்கிக் கௌரவித்ததும் அவருக்குத்தான்.

உலக அமைதிக்கான நோபல் பரிசு நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது இந்திய அரசின் நேரு சமாதான விருது உட்பட உலக நாடுகளின் உயரிய விருதுகளை எக்கச்சக்கமாகப் பெற்றவரும் அவர்தான்.

2009 ம் ஆண்டு ஆவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்த வேளை அவரணிந்திருந்த பளபளப்பான வர்ண மேற் சட்டை பலரைக் கவர்ந்ததில் பின்னர் அதே போன்ற மேற்சட்டைகள் மடிபா மேற்சட்டை எனும் பெயரில் தயாரிக்கப்பட்டு விற்பனையின் உச்சம் தொட்டன.

1999 ம்ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும் இரண்டாவது தடவையாகவும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.

2008 ம் ஆண்டு பொது வாழ்விலிருந்தும் தான் ஓய்வு பெறப்போதாக அறிவித்தார்.

2013 டிசம்பர் 5 ல் அவர் மறைந்தார்.

90 நாடுகளின் தலைவர்கள் அந்தப் பிரிவில் கலந்தார்கள். வியந்தார்கள்.

வயதான காலத்தில் அவருக்கு வாழ்வும் இயல்பாக வந்தது. வயதான காலத்தில் அவருக்கு மரணமும் இயற்கையாக வந்தது.

1998 ம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க பாடசாலைகளில் தமிழும் கற்பிக்கப்படுவது மக்கள் தலைவர் நெல்சன் மண்டேலா தமிழுக்குச் செய்த தொண்டு.

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.

2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது…..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *