எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…? …. அவதானி.

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, வலிமையான இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சி சமகாலத்தில் இலங்கைத் தமிழர் தரப்பு அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.
இம்முறை பூனைக்கு மணிகட்டுவதற்கு டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தயாராகியிருக்கிறார்.
“ இலங்கைத் தமிழினத்தை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் “ எனச்சொன்ன தந்தை செல்வநாயகமும் ஆண்டவனிடம் போய்ச்சேர்ந்து 44 வருடங்களாகிவிட்டன.
அதனையும் நினைவுகூர்ந்து, அண்மையில் செல்வம் அடைக்கலநாதன், “ ஆண்டவன் மீது எந்தப்பழியையும் போடமுடியாது, தமிழினத்திற்காக எந்த விலையும் கொடுக்கத்தயார் “ என்று சூளுரைத்துள்ளார்.
இத்தகைய சூளுரைப்புகளை இலங்கைத் தமிழினம் குறிப்பாக வடக்கு – கிழக்கு வாழ் தமிழினம் கடந்த ஆறுதசாப்த காலத்திற்கும் மேலாக கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது.
அகிம்சையில் தொடங்கி, அது சரிவராது, “ அடித்தால் திருப்பி அடி “ என்று மேதகுவின் வார்த்தைகளை நம்பி, அதன்வழியும் சென்று ஆயுதப்போராட்டத்தில் ஆரம்பித்து, 2009 மே மாதத்தில் அந்த ஆயுதமும் பல்லாயிரம் தமிழ் இன்னுயிர்களை காவுகொடுத்துவிட்டு மௌனித்துக்கொண்டபோது, “ ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் “ என்று சொன்ன தந்தையின் வழித்தோன்றலான சம்பந்தன் அய்யா, லண்டன் பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில், ஈழப்போராட்டம் விவேகமற்றவர்களின் ஆயுதப்புரட்சியினால் தோல்வி கண்டது “ என்று திரு
வாய் மலர்ந்தருளினார்.![]()
தனது மதம்சார்ந்த பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதியாபரணம் சுமந்திரன் அவர்களை தமது தலைமைத்துவத்தில் இயங்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளராகவும் சட்ட ஆலோசகராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கி அழகு பார்த்ததும், இந்தப்பேச்சாளர், அகிம்சை போராட்டமும் தோல்வி – ஆயுதப்போராட்டமும் தோல்வி, இனி நாம் இராஜதந்திரப் போராட்டத்தில்தான் ஈடுபடவேண்டும் என்று பேசத்தொடங்கியும் பல ஆண்டுகளாகிவிட்டன.
எனினும் ஜெனீவா தொடர்பான தீர்மானத்திலும் அவருக்கும் அவருக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை விடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் ஒரு உடன்பாட்டுக்கு இன்னமும் வரமுடியவில்லை.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல், இதுவரையில் எத்தனை அரசியல் கட்சிகள் சட்டப்படி பதிவாகியிருக்கின்றன என்ற புள்ளிவிபரம் தேர்தல் ஆணையகத்தில் இருக்கும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகுவால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்த சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க்காங்கிரஸ், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளட், சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ. பி. ஆர். எல். எஃப், ஆகியன அவரது மறைவுக்குப்பின்னர் என்ன ஆனது என்பது வெளிச்சம்.
அந்தத் தேசியக்கூட்டமைப்பில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி. பி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி , ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக்கட்சி என்பன இல்லை என்பதும் – அதற்கான காரணம் என்ன என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். இவை தவிர கிழக்கிலிருந்து உதயமான கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி , வியாழேந்திரனின் முற்போக்குத் தமிழர் கட்சி என்பனவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் வேண்டப்படாத கட்சிகள்தான். அன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி – ரணில் நல்லாட்சி ( ?) அரசுக்கு முண்டுகொடுத்தது போன்று, இன்றைய ராஜபக்ஷ சகோதரர்களின் ஆட்சிக்கு முண்டுகொடுக்கும் கட்சிகள்தான் இவை.
அதனாலும் த.தே. கூட்டமைப்புக்கு வேண்டப்படாத கட்சிகள்தான்.
டெலோவிலிருந்து பிரிந்துசென்ற சிவாஜிலிங்கமும், ஶ்ரீகாந்தாவும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தங்கத்தட்டில் வைத்து அழைத்த நீதியரசர் விக்னேஸ்வரனும் வடமாகாண சபையை ஆண்டுவிட்டு, புதிய கட்சி தொடக்கிக்கொண்டு நாடாளுமன்றம் சென்றுவிட்டார். அத்துடன் அனந்தி சசிதரனும் ஒரு கட்சி தொடங்கியிருக்கிறார்.
தந்தை செல்வாவின் வழித்தோன்றல்களை ஆண்டவன் காப்பாற்றுவரோ இல்லையோ, இவர்களின் பதவி சுகம் இவர்களை நிச்சயம் காப்பாற்றும். ஏனென்றால், மக்களுக்காக அல்ல, தத்தம் பதவி சுகத்திற்காகவே இவர்கள் புதுப்புதுக்கட்சிகளை ஆரம்பித்து தேர்தல்களில் போட்டியிட்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வடபகுதியில் மாத்திரம் முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆளுக்கொரு கட்சி வைத்துக்கொண்டு போட்டியிட்டனர்.
தற்போது, மீண்டும் ஒற்றுமை பல்லவியை பாடத் தொடங்கியிருக்கிறார் டெலோ செல்வம்.
அத்துடன் எந்த விலையையும் கொடுக்கத்தயார் என்கிறார்!
இதுவரையில் மக்கள் கொடுத்த விலை போதாது எனச்சொல்ல வருகிறாரா..?
மக்கள் எதற்கும் தயாராகத்தான் இருந்தார்கள். அதனால்தான் தமது காணாமல்போன உறவுகளுக்காக ஆயிரம் நாட்களையும் கடந்து அறப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
முன்னைய நல்லாட்சி அரசுக்கு முண்டுகொடுத்த சம்பந்தன் அய்யாவின் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதனை சாதித்துக்கொடுத்தது…? நீதியரசர் விக்னேஸ்வரனின் முதல்வர் பொறுப்பிலிருந்த வடமாகாண சபை, வடபகுதி தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வரப்பிரசாதங்கள் என்ன..? என்பது குறித்தெல்லாம் பேசி இவர்களுக்கு கடுப்பேத்துவதற்கு தமிழ் மக்கள் தற்போது தயாரில்லை.
ஆனால், “ விலைகொடுக்கத்தயார் “ என்று மக்களை உசுப்பேத்துவதற்கு மாத்திரம் இவர்கள் எப்பொழுதும் தயார் ! இந்த “ உசுப்பேத்தல் “ அகிம்சை முதல் ஆயுதம் வரையில் மாத்திரமல்ல, சமகால உளுத்துப்போன இராஜதந்திரம் வரையில் தொடருகிறது.
மக்கள் சமகால கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ வைரஸுடனும், தான் நீடித்திருப்பது போதாது என்று அழைத்து வந்திருக்கும் டெல்டாவுடனும் எவ்வாறு போராடுவது என்று தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கின்றனர்.
எதிர்காலத்தில் இந்த எதிரிகளுடன்தான் தொடர்ந்தும் வாழப்போகிறோமோ..? என்ற பதட்டத்துடன் தமது அன்றாடப்பொழுதை கழித்துவருகின்றனர்.
ஒரு புறம் விலைவாசியேற்றத்தின் பயமுறுத்தல், மறுபுறத்தில் வாழ்வாதாரத்திற்கான போராட்டம், இடையில் அவர்களின் பிள்ளைகளின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் நேர்ந்துள்ள தேக்கம். இத்தகைய துயர்மிகு நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கப்போகிறார்கள்.
ஏன் இந்த சுடலை ஞானம் கடந்த தேர்தலுக்கு முன்னர் உதயமாகவில்லை. தொகுதிகளின் ஆசனப்பங்கீடுகளில் இவர்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு இருந்திருந்தால், எத்தனை ஆசனங்களுடன் நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பார்கள்.
ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களுடன் பேரம் பேசுவதற்கு தகுதியற்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டதற்கு யார் காரணம். மக்களா….? அல்லது இவர்களின் தன்முனைப்பு ஆணவமா..?
தம்பி எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்ற கனவில் மிதந்தவர்கள் அல்லவா இந்த தமிழ்த்தலைவர்கள்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்..? வடமாகாண சபையின் அடுத்த முதல்வர் யார்..? என்பதே இவர்களின் மனதில் மறைந்திருக்கும் உறைபொருள்.
இன்று ஒற்றுமைபற்றி பேசத்தொடங்கியிருக்கும் செல்வம் உட்பட இதர தலைவர்கள் அடுத்துவரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலிலாவது ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் தொகுதிகளில் ஆசனங்களை பெறுவார்களா..? குறைந்த பட்சம் அதற்காக ஒரு வேலைத்திட்டத்தையாவது தயாரித்து நடைமுறைப்படுத்துவார்களா..?
அவ்வாறு செய்தால் நீங்கள் ஆண்டவரிடத்தில் பழிபோடவும் தேவை வராது ! என்ன விலை கொடுக்கவும் அவசியம் நேராது. !
—0—
![]()