மதரீதியாக கனடா!…. இளவாலை எஸ்.ஜெகதீசன்.


என்ன நடந்தது கனடாவில் என்ற ஏக்கப் பார்வை உலகெங்கும் வியாபிக்கின்றது.
கனடா வரலாற்றின் இருண்ட பகுதியாக முதற் குடி மக்கள் மீது தென்மத்தில் மேற் கொள்ளப்பட்ட வன்மம் நூற்றாண்டுகள் பல கடந்த பின்பும் வெறுப்பையும் வேதனையையும் தருகின்றது என்றார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ!
கனடாவின் வரலாற்றிலேயே முதற் தடவையாக ஆளுநர் நாயகம் என்ற உயர் பதவிக்கு முதற் குடி சமூகத்தவரான மேரி சைமன் நியமனம் பெறவுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காம்லூப்ஸ் நகரிலுள்ள வதிவுப் பாடசாலை வளவில் அண்மையில் கண்டடெடுக்கப்பட்ட 215 முதற் குடி மாணவர்களது எலும்பின் எச்சங்கள் 15ம் நூற்றாண்டு மதம் பிடித்தவர்கள் நாடு பிடித்ததால் மேற் கொண்ட படு கொலைகளுக்கு நிராகரிக்க முடியாத ஓர் அடையாளமாயிற்று!
கனடா மதசார்பற்ற ஒரு நாடு என்பதும் கனடியமக்களுக்கு மதம் என்றுமே ஓர் அடையாளம் அல்ல என்பதும் தெரிந்த எமக்கு – கனடாவில் இருந்து வந்த சமயம் பற்றியோ அல்லது – வந்த சமயம் இருப்பது பற்றியோ – எந்த அளவில் தெரியும்?
ஓ கனடா! நாம் நின்னை வணங்கி அணிவகுத்தோம்.
தேசியக்கொடிக்கும், தேசியகீதத்துக்கும் இங்கு வாழும் 320 இலட்சம் பல்லின மக்களும் ஆஸ்திக – நாஸ்திக பேதமின்றி அன்று முதல் இன்று வரை அகவணக்கம் செலுத்துவது நாட்டின் மகிமை.
கனடா நவீன கூட்டாட்சி நாடாக உருவாகி் 154 வருடங்கள் மலர்ந்துள்ளது.
1880 ம் ஆண்டு கனடிய தேசீய கீதம் பிரஞ்சு மொழியில் இயற்றப்பட்டது. 1908 ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.எனினும் 1980 ம் ஆண்டே தேசீய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
கனடாவிற்கு அக வணக்கம் செய்யும் மரபு வளர்ந்து வரும் இச் சமயத்தில் கனடாவில் உத்தியோகபூர்வ மதமாக எதுவும் இல்லை என்பதும் நினைவில் மெலிதாய் அசைந்தாடுகின்றது.
கனடாவுக்குள் மதங்கள் உண்டு. ஆனால் மதங்களுக்குள் கனடா இல்லை!

உலகத்திலுள்ள பிரதான சமயங்கள் அனைத்தினதும் ஆலயங்களும், உறுப்பினர்களும் கனடாவில் உண்டு.
ஒட்டு மொத்தமாக 189க்கும் அதிகமான சமய உட்பிரிவுகள் கனடாவில் உள்ளதாக கருதப்படுகின்றது.
இயற்கையில் இறையை போற்றி அணிவகுத்த செவ்விந்தியரின் இறை வழிபாடு கனடாவில் 15 000 வருட நீட்சியை கொண்டுள்ளது.
நன்றாக யோசிக்கத் தெரியாத ஆதிவாசிகள் கூட அநாதியில் நல்லதையே யோசிப்பதில் பக்தியுடன் இருந்துள்ளனர்.
அவர்கள் இறைவனை நேசித்தார்களா என்பதை விட இறைவன் அவர்களை நேசித்தார் என்பதே பொருத்தமானது.
இறைவனை அடையும் வரை முதியோரையும், நோயுற்றோரையும் விட்டு அகலாத தீவிரம் அவர்களிடம் இருந்தது.
செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் அல்லது எஸ்கிமோ அல்லது பழங் குடிகள் என்றழைப்பதை இன்று இழிவாக கருதி தம்மை முதற் குடிகள் என்றழைப்பவர்கள் அன்று அமைதியை தேடிய பொழுது கடவுள் புகுந்தது நம்பிக்கையின் அடிப்படையில்.
எதன் மூலம் வாழ்ந்தனரோ அதனை வணங்குவதை வழக்கமாக்குவது அவர்களிடம் கைவிடப்படாத அறமாயிருந்தது.
நிலமோடிகளான அவர்கள் ‘குறுக்கு வழியில் செல்வதே தூரம்’ என்பதனை தெய்வ வாக்காக கருதினர்.
அந்த ஊரோடிகள் கண்டதையும் வழிபட்டனர். கண்ட கண்ட இடமெல்லாம் சேவித்தனர்.
அவர்களிடமிருந்த சுமார் 800 இனக்குழுக்களும் (Tribes) விதம் விதமாகவே கும்பிட்டனர்.
சூழலுக்கு ஏற்பவே பிரார்த்தித்தனர்.
அவர்கள் நெருப்பையும் நீரையும் மண்ணையும் வணங்கினர்.
மரம் செடி கொடிகளை துதித்தனர்.
பருவத்துக்கேற்ப பயிரிட்டு் பக்தி செலுத்தினர்.
அந்த மக்கள் பாம்புகளை தொழுதிட
… அவை மேலும் நெளிந்தன.
அவர்களிடம் – வானில் தவழும் மேகங்கள், தரையில் வழிந்தோடிய நீர் என பொதுவாக – இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சக்தியை கண்ட மென்மையான தனி வழிபாடுமிருந்தது.
எருமை மாடுகளை கொண்று அதன் எந்தவொரு பாகத்தையும் வீசிவிடாமல் துடிக்கத்துடிக்க உண்டால் எவ்வித சங்கடங்களும் வராது என நம்பிய உக்கிரமான கூட்டு வழிபாடுமிருந்தது.
சமவெளிமக்கள் (Plains) இறொக்குவா மக்கள் (Iroquoian Nations ) வட வேடுவர் (Northern Hunters ) வட மேற்கு மக்கள் (Northwest Coasters) அல்கோன்கிய குடிகள் ( Algonkians) பீடபூமி மக்கள் (Plateau People) என வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு அவர்களுக்குள் ஆறு பிரதம பிரிவுகள் இருந்தன.
ஆனால் வணக்க முறையோ பல்வேறாக திகழ்ந்தன.
வெவ்வேறு கடவுள் வடிவங்களுக்கு ஒரே பெயர்!
ஒரே கடவுள் உருவத்துக்கு வித்தியாசமான பல பெயர்கள்!
உத்தியோகம் அருளும் கடவுள் Utakke காகக் கடவுள் Coyotte என பல பெயர்களில் பல கடவுள்கள்!
ஒவ்வொரு பிரிவுகளுக்கும் இவை சகஜமாயிருந்துன. அவர்களின் வேண்டுதல்களை அவை நிறைவேறின.
தீ (Thee )சாஸ்தா(Shstha)மயன்(Mayan )லோகா (Loga)மாலா(Mala)மேகலா(Mekala)போன்ற எமக்கும் பரிச்சயமான இறைபெயர்கள் உள்ளிட நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களுடன் தெய்வத்தை அவர்கள் போற்றினர்.
படைக்கும் கடவுள் கலாச்சார கடவுள் நீத்தார் கடவுள் இராட்சத கடவுள் இயல்பான கடவுள் அழிக்கும் கடவுள் என பல வடிவங்களில் கடவுளை ஆண் உருவத்திலும் பெண் உருவத்திலும் கண்டனர்.
அருவ வழிபாடும் அவர்களிடம் உண்டு.
34 தொன்மவியல்கள் (mythology) அல்லது புராணங்கள் அவர்கள் வழிபாட்டு முறைக்கு சான்று பகர்கின்றன.
அறுவடை செய்த சோளத்தை இறைவனுக்குப் படைப்பது அவர்களிடமிருந்த பண்டிகைகளில் ஒன்றாகும்.
ஒரு பிரிவினரான இன்காக்கள் நீத்தார் வழிபாட்டிற்கு முக்கியத்துவமளித்தனர்.
அவர்களது புத்தாண்டு நாளான மர்கா-அயு என்பது கல்லறைகளுக்குச் சென்று வழிபடும் நீத்தார் நாளாக இன்றும் பேணப்படுகின்றது
கனடாவில் தற்பொழுது ஒரு கோடி முதற்குடி மக்கள் வாழ்கின்றனர்.
ஆதியில் அவர்களிடம் 150 மொழிவழக்கும் வழிபடும் வழிகளும்இருந்தன!
அவற்றை வட்டார வழக்கில் கணக்கிலெடுத்தால் சுமார் 750 முதல் 850 வரை தேறும்.
அவர்களிடம் சமயத்தைத் தோற்றுவித்தவர்கள் என்று எவருமில்லை.
அல்லது வழிபடும் முறையை நெறிப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ எந்தவித அமைப்புகளுமிருக்கவில்லை.
ஐரோப்பியர்கள் அவர்களது மண்ணை அபகரித்தபோது – ஆக்கிரமித்தபோது அவர்களது மதமும் சிதைந்தது.
இங்கிருந்த அப்பாவிகளின் தொன்மம் அங்கிருந்து வந்த அப் – பாவிகளின் வன்மத்தில் சிதிலமுற்றது.
நாடு விட்டு நாடு வந்தவர்களால் நாட்டிலிருந்த தெய்வங்கள் விரட்டப்பட்டன!
மதம் பிடித்தவர்கள் – நாடு பிடித்தார்கள்.
15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கத்தோலிக்கம் முதன்முறையாக கனடாவில் மண்டியிட்டது.
அதுவரை நின்றும் இருந்தும் கிடந்தும் இஷ்டம் போல் வணங்கியவர்கள் முழங்காலிட வற்புறுத்தப்பட்டனர்.
அதற்காக அத்தனை சிலுவைப்பாடுகளையும் சுமக்க வலியுறுத்தப்பட்டனர்.
சொந்த மண்ணில் வாழ வழியற்றுப் போனவர்கள் மதம் மாற்றுவதற்காக கனடாவின் முதற்குடி மக்களை கோரமாக வெட்டி குரூரமான கொலைகளை பெருமளவில் செய்தனர்.
மலை போல் குவிந்த பிணங்கள் மத்தியில் கொலையாளிகள் கும்பல் ஆக்ரோஷமாக ஆடி ஆரவாரிப்பது அன்றாட வழமையாக நெடுங்காலம் நீடித்தது அன்றைய சரித்திரம்.
அண்ணளவாக இரண்டு லட்சம் பிள்ளைகளை கதறக்கதற பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரித்து மூன்று நான்கு வருடங்கள் தொலை தூர விடுதிகளில் அடைத்தது கத்தோலிக்க மத போதனை.
சாவுக்கு பயந்துசாகாதவரை காலாகாலத்துக்கும் நினைவு கூர்வதற்காக சாவுக்குப் பயந்தவர்கள் சாகடிக்கப்பட்டனர்.
மனிதகுல மீட்புக்காக இரத்தம் சிந்திய தேவகுமாரன் ஜேசுபிரானின் நாமத்தின்மீது கூறு கூறாக அறுக்கப்பட்ட செவ்விந்தியரின் இரத்தம் சிதறியது.
பரமபிதா பரமண்டலத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்க 1610 ம் ஆண்டு நியூபவுண்லாந்தில் கட்டப்பட்ட முதலாவது றோமன் கத்தோலிக்க தேவாலயம் மூலம் கனடாவுக்குள் கிறீஸ்தவம் நித்தியத்துவம் பெற்றது.
இன்று 22 மில்லியன் மக்கள் கத்தோலிக்க திருச்பையின் உறுப்பினராக வுள்ளனர்.
சூரியனை வழிபட்ட தமது மூதாதைக்கு பின்னர் சூரியன் தெரியாமல் போன நாட்களே நீண்டதாக முதற்குடிகள் வாழும் பகுதியொன்றுக்கு அண்மையில் சென்றபோது அனல் கக்கினார் ஒரு முதற்குடிமகன்.
பிற மதத்தினர் கனடாவிற்குள் பிரவேசிக்க முடியாது என்ற சட்டம் கத்தோலிக்கர்களால் தீவிரமாக அமுல்படுத்தப் பட்டிருந்த காலகட்டத்தில் 1759 ம் ஆண்டு கியுபெக்கில் குடியமர்ந்த பிரிட்டிஷ் ராணுவ உயர் அதிகாரியான ஜெனரல் சேர் பிரட்ரிக் ஹால்டிமன்ட் முதலாவது யூத மதத்தவராக கருதப்படுகின்றார்.
அவர் வகித்த பதவி காரணமாக கனடாவில் தங்குவதை தடை செய்ய முடியாமல் போயிற்று.
ஆனால் எஸ்தர் பிரான்டியு என்ற யுவதி வாலிபனாக மாறு வேடமிட்டு 1738 ம் ஆண்டு முழுவதும் கனடாவிற்குள் மத மாற்றப்பணியில் ரகஸியமாக இயங்கியுள்ளார் எனவும் அதனால் கனடாவிற்குள் வந்த முதலாவது யூத மதத்தவர் அவர்தான் என்றும் கூறுபவர்களுமுண்டு.
கிறிஸ்தவர்களுக்கு யேசுபிரான் எவ்வளவு முக்கியமானவரோ அதே போல் மோசஸ் முக்கியமான தீர்க்கதரிசி யூதர்களுக்கு.
பைபிள் கிறிஸ்தவரின் புனித நூல். தோரா யூதர்களின் புனித நூல்.
இன்று கனடாவில் 375 000 மக்களை யூத சமுதாயம் கொண்டுள்ளது.
அவர்களுக்கான முதலாவது திருச்சபை (Congregation Emmanu-El Synagogue) 1863 ம் ஆண்டு விக்டோரியா பிரிட்டிஷ் கொலம்பியாவில் உருவாக்கப்பட்டு இன்றும் செயல்படும் அதி பழமைமிக்கது.
1903 ம் ஆண்டளவில் இந்து சமயம் கனடாவில் தோன்றுவதற்கு இங்கு குடிபெயர்ந்த பஞ்சாபியரும் குஜராத்தியரும் காரணமாவர்.

கனடாவின் முதலாவது இந்து ஆலயமாக ஸ்ரீ ஹரி மந்தீர் 1903 ல் வன்கூவரில் அமைந்தது.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆலயம் மனிடோபாவில் 1904 ல் ஆரம்பிக்கப்பட்டது.
தற்பொழுது கனடாவில் தென் இந்திய வழிபாட்டு முறைகளை பின்பற்றும் 126 இந்து ஆலயங்கள் இருக்குமெனின் அவற்றுள் 86 ரொண்டோவில் உள்ளன.
வட இந்திய வழிபாட்டு தலங்கள் இவற்றைவிட வேறாக உள்ளன.
உதாரணமாக பஞ்சாபியரின் குருத்வாரா மட்டும் 175 உண்டு.வங்காளிகளின் பஞ்சரட்னா ஆலயங்கள் 160 இடங்களில் கிருஷ்ணனின் புகழ் பாடுகின்றன. 297 200 இந்துக்கள் கனடாவில் உள்ளனர்.
இந்து சமயம் இறைவன் ஒருவனே என சொல்லிக் கொண்டாலும் 320 மில்லியன் (320 000 000) கடவுள் உள்ள மதமாக உலகில் ஆராதிக்கப்படுகின்றது என்பது இந்துக்களுக்கே வியப்பளிக்கும் செய்தியாகும்.
19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூலியாட்களாக பெருந்தொகையான சீனர்களும் ஜப்பானியர்களும் வந்த பின்பே பௌத்த மதமும் கனடாவில் முதற்தடவையாக புத்தம் சரணம் கச்சாமி கோசமிடத்தொடங்கியது.
1905 ம் ஆண்டு ஜப்பானியரால் முதலாவது பௌத்த விகாரை வன்கூவரில் சாதுகளுக்கு சரணளிக்கும் சன்னிதானமாயிற்று.
எனினும் 20 நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே பௌத்த மதம் வியாபகம் அடையத் தொடங்கிற்று.
கனடிய அரசாங்கம் அகதி கொள்கைகளில் மாற்றம் செய்ததைத் தொடர்ந்து சீனா ஜப்பான் கம்போடியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலிருந்து பெருமளவில் மக்கள் புலம் பெயர்ந்ததே இதற்கு காரணம்.
இன்று கனடாவில் 300 375 பேர் பௌத்த மதத்தினராக உள்ளனர்.
அவர்களுக்காக சுமார் 500 அறச்சாலைகள் சேவை புரிகின்றன.
கனடாவின் முதலாவது மசூதி 1938 ம் ஆண்டு அல் ரஜீத் இறைஇல்லம் (Al-Rashid Mosque)என்னும் பெயருடன் எட்மண்டன்ட் அல்பேட்டாவில் அமைந்தது.
1871 ஆண்டின் கனடிய குடிசன மதிப்பீட்டின் படி கனடாவில் 13 ஆக இருந்த இஸ்லாமிய மக்கள் தொகை 2015 ஆண்டின கணிப்பின்படி 1 053 945 க்கும் அதிகமாக உயர்ந்தது.
தமிழர்கள் நிறையும் இந்து ஆலயங்கள்இகிறிஸ்தவ தேவாலயங்கள் இஸ்லாமிய மசூதிகள் இங்கு நிறைகின்றன.
கனடாவில் இன்று பல மத வழிபாடுகள் உள்ளன.
2011 ம் ஆண்டு வெளியான கனடா குடிசன மதிப்பு திணைக்கள கணிப்பின்படி அவற்றுள் கிறீஸ்துவம் 76% இஸ்லாம் 2% யூதரிஸம் 1.1% பௌத்தம் 1.0% இந்து 1.0% என்ற வீதாசாரத்தில் முன்ணணியில் திகழ்கின்றன.
உதிரி மதங்களும் மிகக் குறைந்த அளவில் ஏராளமாக உண்டு.
கதோலிக்க திருச்சபை புரட்ஸ்தாந்தம் இஸ்லாம் இந்து சமயம் யூதம் பௌத்தம் கன்பூஸியம் டாவோயிஸம் ஷிந்தோ சீக்கியம் சமணம் பஹாய்(பாபி) சோறாஸ்ரியனிசம் என முக்கிய சமயங்களின் பட்டியல் நீண்டாலும் அவை ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் ஏராளமாகவும் அவற்றைப் பின்பற்றுவோர் தாரளமாகவும் உள்ளதையும் காணலாம்.
உலகில் இன்று 4200 மதங்கள் மானிடரால் வழிபடப்படுகின்றன.
கனடாவின் பூர்வ குடிகள் ஆசியாவிலிருந்து புலம் பெயர்ந்ததாக அபிப்பிராயம் உண்டு.
வரும் பொழுது எந்தெந்த தெய்வங்களுக்கு ‘நேர்த்திக்கடன்’ வைத்தனரோ? – யாரறிவர்?
![]()