கட்டுரைகள்

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழரும் தமிழ்தேசியத்தின் அவசியமும்!…..தொடர்…2…. சங்கர சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டை ஆள்பவர்கள் தமிழராக இல்லாவிட்டாலும் தமிழ் நாட்டை ஆள்கிறோம்அதனால் தமிழினத்தின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் ஈழப்போரில் நிலைப்பாடு வேறாய் இருந்திருக்கும். இதை எதனால் கூறுகிறேன் என்றால் வங்கதேசப் போரில் ஒரு கோடி வங்கதேச மக்கள் அகதிகளாக மேற்கு வங்காளம், அஸ்ஸாம், திரிபுரா, மற்றும் சிக்கிம் போன்ற பகுதிகளில் தஞ்சமடைந்தனர். வங்கதேசத்தில் வங்காள மொழி மற்றும் இந்துக்களின் பண்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

வங்கமொழி மற்றும் வங்காளிகளின்
பண்பாட்டு அடையாளங்களுக்கு பேராபத்து ஏற்படுவதை தடுத்து நிறுத்த முக்திவாகினி என்ற வங்காளதேச விடுதலப் படைகள் என்ற அமைப்பு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்த போராளிகளை விடுதலைப் புலிகளுடன் சிறிதும் ஒப்பிடமுடியாது. ஏனென்றால் விடுதலப் புலிகளின் அமைப்பு ஓரு நாட்டின் இராணுவம் போல முப்படைகளுடன் கட்டமைக்கப்பட்டு இருந்தது. அதன் போர்த்திறன் உலகளவில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் முக்திவாகினியின் நிலை வேறு.

இந்தியாவை விட்டு பாகிஸ்தான் பிரிந்த நாளில் இருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. இது இந்தியாவுக்கு அந்நாட்டின் பாதுகாப்புக்கு எப்போதும் ஓரு கேள்விக்குறியாகவே இருந்தது. வடக்கே சீனாவினால் இந்தியாவுக்கு எப்போதும் பதட்டமிருந்ததால் அது தெற்கே இலங்கையுடன் எப்போதும் சுமுகமாகவே இருக்க விரும்பியது. இத்தோடு இலங்கையின் பூகோள அமைப்பையும் உலக அரசியலையும் உற்று நோக்க வேண்டும்.

இந்தியாவுக்கு இலங்கையுடன் வர்த்தக உறவு தேவைப்பட்டது. இலங்கையிலுள்ள
துறைமுகங்களின் மேல் வல்லரசுகளுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்ததாலும் வேறுநாடுகளின் ஆதிக்கம் அங்கு ஏற்படும் பட்சத்தில் அது இந்தியாவுக்கு தென் பகுதியிலும் அமைதியற்ற சூழலை ஏற்படுத்திவிடும். இதை உணர்ந்திருந்த இந்தியா இலங்கையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவியும் வந்தது. இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைக்கும் தெரியும். அதனாலும் இந்தியாவை பகைத்துக் கொள்ள இயலவில்லை.

இது சதுரங்க விளையாட்டில் காய் நகர்த்துவது போலத்தான். இந்தியாவுக்கு ஏற்கனவே வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கும்போது தென்பகுதியிலும் அச்சூழலை ஏற்படுத்த விரும்பவில்லை. இந்த இடத்தில் உலக அரசியலையும் இந்தியாவின் நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்தியாவுக்கு ஈழ விடுதலையை விட இந்தியாவின் பாதுகாப்புத்தான் முக்கியம். ஆதலால் எக்காலத்திலும் ஈழத்துக்கு இந்தியா விடுதலை வாங்கிக் கொடுக்கும் என்று உறதியாகச் சொல்லமுடியாது.

தமிழ் தேசிய இனம் ஒன்றை யதார்த்தமாகப் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவில் திராவிடநாடு தனிநாடு கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்தது. பஞ்சாபில் காலிஸ்தான் தனி நாடு பிரச்சினை இருந்தது அத்தோடு காஷமீர் பிரச்சினையும் இருந்தது. உள் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இன்னொரு நாட்டில் தனி நாடு பிரச்சினையை எந்த அளவுக்கு ஆதரிக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியானால் கிழக்கு பாகிஸ்தானில் மட்டும் பாகிஸ்தானின் உள் நாட்டுப் பிரச்சினையில் ஏன் தலையிட்டது என வினவலாம்.

இதற்கும் அரசியல் ஆய்வு என்ற கண்ணோட்டத்துடனேயே பார்க்க வேண்டும். எந்த ஒரு நாடும் பாதுகாப்போடு இருப்பதையே விரும்பும். அதனால்
தென்பகுதியில் பாதுகாப்புக்காக காயை நகர்த்தி வந்தது. மற்ற மூன்று திசையிலும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இதில் கிழக்கு திசையில் உள் நாட்டுப் போர் நடக்கிறது. மேற்கில் மேற்கு பாகிஸ்தானும் வடக்கில் சீனாவும் பகைநாடாக இருப்பதால் கிழக்கு பாகிஸ்தானின் உள்நாட்டு யுத்தத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது.

இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். கிழக்கு பாகிஸ்தானுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்துவிட்டால் பாகிஸ்தானின்
அச்சுறுத்தல் கிழக்குப் பகுதியில் முடிவுக்குவரும். அடுத்ததாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையைவிட கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை பன்மடங்காகும். அகதிகளின் எண்ணிக்கயையும் மட்டுப்படுத்தலாம். அதைவிட இந்தியாவின் தேசிய இனமான வங்காளிகளின் மொழி மற்றும் பண்பாட்டு அச்சுறுத்தலில் இருந்து நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரலாம். இந்த அடிப்படையில் மட்டுமே வங்கதேச விடுதலைக்கு இந்தியா உதவியது.

இந்த இடத்தில் நாம் இன்னொன்றையும் கவனிக்கலாம். இந்தியாவிலுள்ள இன்னொரு தேசிய இனமான தமிழினமும் அண்டை நாட்டில் விடுதலைக்குப் போராடியது. அதற்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவியதுபோல உதவியிருக்கலாம். நாம் நினப்பது போல் அரசியல்வாதிகள் நினைக்கவேண்டும். அப்படி நினைக்காததற்கும் காரணங்கள்உள்ளன. இலங்கையில் போராடிய இனம் இந்திய தேசிய இனம் என்றாலும் அவ்வினம் இந்தோ ஆரிய இனமல்ல. அடுத்ததாக இந்திய வெளியுறவுக் கொள்கையை முடிவெடுக்கும்
இடத்திலும் தமிழர் யாருமில்லை.

இலங்கயின் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும்பாலும் வாழும் மக்கள் இந்துக்கள்தான். இந்தியாவிலும் பெரும்பாலும் வாழும் மக்களும் இந்துக்களே. அப்படி இருக்க இந்துக்களின் பண்பாட்டுக்கு பங்கம் வரும்
என்று அறிந்தும் ஏன் இந்துக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அரசியலில் மதம் எல்லாம்அப்புறம்தான். இதற்கு உதாரணமாக இன்றைய பாலஸ்தீன மக்கள் நிலையையே எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டை ஆண்டுவந்த திமுக ஒருவேளை ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசுக்கு வழங்கிய ஆதரவை நீக்கியிருந்தாலும் ஆட்சியைக்
கலைத்திருப்பார்கள். ஆட்சியைக் கலைத்த கையோடு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவந்திருப்பார்கள். மக்கள் புரட்சி ஏற்பட்டால் இராணுவத்தை வரவழைத்திருப்பார்கள். திமுக அல்லாத வேறொரு கட்சி, தமிழரே ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியே ஆண்டிருந்தாலும் அத்தமிழர்கள் ஈழத்துக்கு ஆதரவளித்திருப்பார்கள் என்பதை எந்த அளவுக்கு உறுதியாக ஏற்கமுடியும்?

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின் தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக உலகம் முழுதும் தடை செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்பும் உலகநாடுகளில் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படிப்பட்ட சூழல் இலங்கைக்கு ஆதரவாக இருந்தமையால்
உலகநாடுகள் இணைந்து தமிழீழ விடுதலப் புலிகளுடன் போரிட்டனர். ராஜீவ் காந்தி படுகொலை, இரட்டைக்கோபர தகர்ப்பு போன்றவை ஏற்படாமல் இருந்து இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலைப்பாட்டை எடுத்திருக்குமானால் நிலைமை வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

அப்படிப்பட்ட நிலையில் இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தை கவனத்தில் கொண்டு முக்திவாகினிக்கு உதவியதுபோல் விடுதலைப்புலிகளுக்கும் உதவி தமிழீழம் உருவாக உதவியிருக்கும். அப்போதும்கூட தமிழர் நலன்மீது அக்கறை கொண்டு விடுதலை வாங்கிக் கொடுத்ததாக எண்ணிவிட முடியாது. அப்போதும் உலக அரசியல் எவ்வாறு நகர்கிறது தாம் எடுக்கும் முயற்சிக்கு எந்த அளவு ஆதரவு கிடைக்கும் என்பதையும் உணர்ந்து தமக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாமலும் உலகப் போர் வரக்கூடிய சூழல் இல்லாதிருந்தால் மட்டுமே அந்த நிலைப்பாட்டினை எடுத்திருக்கும்.

தமிழ்தேசிய இனம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். எந்த ஒருநாடும் தமிழீழத்தை பெற்றுத்தராது. அதனால் அந்த நாடுகளுக்கு என்ன லாபம்? ஆனால் அந்த நாடுகளுக்கு ஏதாவதொரு வகையில் ஆதாயம் கிடைக்கும் பட்சத்தில் எந்த நாடென்றாலும் அதன் உட்புகுந்து உதவிசெய்யும். விடுதலை அடையும் சூழல் இல்லாவிட்டாலும் அதற்குண்டான சூழலை உருவாக்கும். உலக நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும். பின் உலகநாடுகளின் ஆதரவுடன் விடுதலைக்குப் போராடுபவர்களுக்காக அரசியல் பேச்சுவார்த்தை மூலமாகவோ ஆயதபலத்தோடோ விடுதலையை
வாங்கிக் கொடுக்கும்.

விடுதலைப் புலிகள் முக்திவாகினியைப் போலில்லாது கடற்படை, தரைப்படை, மற்றும் வான்படையென முப்படையினைக் கொண்டிருந்ததோடு தன்னிறைவைப் பெற்றிருந்தனர். அதனால் எந்த நாட்டின் ஆயுத உதவியையோ இராணுவ உதவியையோ வேண்டும் நிலையில் இருந்ததில்லை. மற்ற நாடுகளில் இருந்து தார்மீக ஆதரவு ஒன்றை மட்டும் எதிர்பார்த்தது. குறிப்பாக இந்தியாவிடம் இதை பெரிதாக எதிர்பார்த்தது. அந்ந நிலையில் இந்தியா இலேசாக கண்ணசைத்திருந்தால் விடுதலைப்புலிகளே விடுதலையை வென்றிருப்பார்கள்.

இதை இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலக நாடுகள் நன்றே அறியும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது. இதற்கு முக்கியமான காரணம் இலங்கை இந்தியாவின் நட்பு நாடாகவே இருந்தது. அதனால் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து எந்தவிதமான பாதுகாப்புக்கு குந்தகம் நேராது. கிழக்குப் பகுதியில்இருந்த பாதுகாப்பற்ற தன்மையும் வங்கதேச விடுதலைக்குப்பின்  இல்லாமல் போயிருந்தது.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *