உளமார…. இதயக் குரல்!…. ( கட்டுரை ) ….. அண்டனூர் சுரா.


கிளியோபாட்ரா எகிப்திய பேரரசி. ஆக்டேவியஸ் சீசர் ரோம் பேரரசன். சீசர் சிறுவன் என்பதால், மூவர் குழு ரோமை ஆட்சி செய்கிறார்கள். மூவரில், ஆண்டனி மன்னனின் நம்பிக்கைக்குரியவன், வீராதிவீரன், பேரழகன். எகிப்து பேரரசைப் போரால் வென்று, ரோம் பேரரசின் கீழ் கொண்டுவர ஆண்டனி தலைமையில் பெரும்படையை அனுப்புகிறான் சீசர்.
ஆண்டனி, கிளியோபாட்ரா மீது போர்த்தொடுத்து, கிளியோபாட்ராவை நேருக்கு நேர் சந்திக்கிறான். அவளது பேரழகு அவனை மயக்குகிறது. அவளிடம் சரணாகதி அடைந்து, தன்னிலை மறக்கிறான். ஒரு நாள் காதல் மயக்கத்தில், கிளியோபாட்ராவிடம் கேட்டான், “ உன் அமைச்சரவையில் ஏன் பெண்களே இல்லை?”. கிளியோபாட்ரா சொன்னாள், “ ஏனென்றால், பெண்களுக்கு ரகசியம் காக்கக் தெரியாது”.
முடியாட்சியாக இருந்தாலும், மக்களாட்சியாக இருந்தாலும் ரகசியம் அத்தனை முக்கியமானது. நாடு என்பதை பூட்டாக வைத்துக்கொண்டால், அதைத் திறக்கும் சாவியே ரகசியம். இன்றைக்கு அதை பாஸ்வேர்டு என்று சொல்லலாம். ரகசியம் என்பது அத்தனை சுமையானது. அதைக் கீழே இறக்கி வைத்தால் மட்டுமே, சிலருக்குத் தூக்கம் வரும்.
பிரிட்டன் – பிரான்ஸ் இவ்விரு நாடுகளும் ஒன்றுக்கொன்று சமமான எதிரிகள்! 1744 ஆம் ஆண்டு, பிரெஞ்சு, ஆஸ்திரியா நாட்டைப் பிரிட்டனிடமிருந்து கைப்பற்றியது. அதற்காக பிரிட்டன் எந்நேரத்திலும், போர்த்தொடுத்து வரலாமென காத்திருக்க, பிரிட்டன் அதன் மீது போர்த்தொடுக்கவில்லை.
பிரெஞ்சு, பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு, இந்தியாவில் ஆழமாக காலூன்றியிருந்த காலம். பிரெஞ்சுக்கு எதிரான போரை இந்தியாவில் நடத்தத் திட்டம் தீட்டியது. அதற்காக, பிரிட்டன், பார்னெட் என்கிறவன் தலைவனின் கீழ், கப்பற்படையை இந்தியாவுக்கு அனுப்பியது. அத்தனை ரகசியமாக வந்தடைந்த அப்படை, பாண்டிச்சேரியை ஒரே நாளில் சுற்றி வளைத்தது. அப்போது பாண்டிச்சேரியின் கவர்னராக இருந்தவர், டூப்ளே. பிரிட்டன் படையை எதிர்கொள்ள முடியாத பிரெஞ்சுப்படை, தான் கைப்பற்றிய ஆஸ்திரியா நாட்டை பிரிட்டனிடம் விட்டுக்கொடுத்தது.
ரகசியம் என்பது எதிரிகளுக்குத் தெரியாமல் காப்பது அல்ல; தன் அருகில் இருப்பவரிடமிருந்தும் காப்பது. இதை நான் காப்பேன், என்று உறுதியேற்பதே, ரகசியக் காப்பு உறுதிமொழி! இதற்குப் பெயர்போனவர்களாக, பிரிட்டிஷார்கள் இருந்தார்கள்! ஆகையால்தான், இந்த உலகின் பெரும்பகுதியை அவர்களால் ஆட்சி செய்ய முடிந்தது. பதவியேற்பு, ரகசியம் காப்பு இவ்விரு உறுதிமொழிகளையும் இந்தியாவிற்கு அறிமுகம் செய்தவர்கள் அவர்களே! தொடக்கக் காலத்தில், பதவியேற்பு உறுதிமொழி மாகாண ஆளுநர்களும்; ரகசிய காப்பு உறுதிமொழி கவர்னர் ஜெனரல், போர்ப்படை தளபதிகள் உறுதி ஏற்பதாக இருந்தார்கள். இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள்,..எனப் பலரும் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்கள்.
தேச ரகசியத்தை அந்நியர் ஒருவரிடம் சொல்லக்கூடாது, என்பதற்கு ஒரு சம்பவம் உண்டு. இலங்கையில், உள்நாட்டுப் போர் உச்சத்திலிருந்த காலம்! சிங்களவர் – தமிழர் இரு தரப்பினரில் இந்திய அரசு யார்ப் பக்கம், என்கிற நிலைப்பாட்டை அறிந்துகொள்ள, அமெரிக்கா அதீத ஆர்வம் காட்டியது. அதைத் தெரிந்துகொள்ள, அந்நாடு ஒரு தந்திரச் சூழ்ச்சியில் இறங்கியது.
இளவயது உளவாளி பெண்ணை, தக்க பயிற்சிக்கொடுத்து, விமானப் பணிப்பெண்ணாக அனுப்பியது. இந்திய பாதுகாப்புடன் நெருங்கிய தொடர்புகொண்ட ஒருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அவர் பயணம் செய்யும் விமானங்களில், உளவுப்பெண்ணை அமெரிக்கா அனுப்பி வைத்தது. அப்பெண்ணிடம் அவர் நெருங்கிப் பழகலானார். அப்பெண், இந்திய அதிகாரியிடமிருந்து, ரகசியங்களைக் கரந்து, அமெரிக்க உளவுத் தலைமையிடத்திற்கு பகிரத் தொடங்கினாள். இந்திய ரகசியம், அமெரிக்காவுக்கு எப்படித் தெரியப் போனது, எனச் சுதாரித்துக்கொண்ட இந்திய உளவுத்துறை, அவரைக் கண்காணித்து, திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஒரு நாட்டின், மாநிலத்தின் இறையாண்மையும் ரகசியக் காப்பும் இந்த உறுதிமொழிக்குள்தான் அடங்கியிருக்கிறது. பதவியேற்பு உறுதிமொழி – நோய்க்காலம், பஞ்சம், பட்டினி, இயற்கைச் சீற்றம் காலத்தில் ஆட்சியாளர்கள் இனம், மதம், பாலின வேறுபாடின்றி தம் மக்களைப் பேணுவேன் என்றும்; ரகசியக்காப்பு உறுதிமொழி – போர்க்காலத்திலும், பேரிடர் காலத்திலும் தன் உயிரைக் கொடுத்தேனும், ரகசியம் காத்து, தேசத்தையும் மக்களையும் காப்பேன், என்கிற பெயரால் இவ்விரு உறுதிமொழிகளும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பிரிட்டிஷார்கள் இந்த உறுதிமொழிகளை, கடவுளின் பெயரால் எடுத்துக்கொண்டார்கள். உயர் பதவியேற்கும் ஒருவர், தன் முன்பு வைக்கப்பட்டிருக்கும் பைபிள் மீது கை வைத்து, “ பைபிள் சாட்சியாக உண்மையாகத்
தொண்டு செய்கின்றேன்” என உறுதியேற்றார்கள். பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ‘ சார்லஸ் பிராட்லா’ இத்தகைய உறுதிமொழி எதிராகக் குரல் எழுப்பினார். இவரொரு மதச்சார்பற்றவர். சமூகச் சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டியவர். பிரிட்டிஷ் நாட்டில் அனைத்து பெண்களுக்குமான வாக்குரிமை இவரது முயற்சியின் பேரில் கிடைத்தது. குடும்பக் கட்டுப்பாடு, தொழிலாளர் உரிமை முதலிய சீர்திருத்தங்களுக்காக உழைத்தவர். இந்தியாவில், தன்னாட்சி இயக்கம் தொடங்கிய அன்னிபெசண்ட் அம்மையார், இவரது வழித்தோன்றல். பிராட்லாவின் கொள்கைகளை ஏற்பவராகவும், அவரது சீர்த்திருத்தங்களை ஆதரிப்பவராகவும் இருந்தவர். ஆனால் அவர் சோஷலிச கொள்கையின் மீது நம்பிக்கையின்றி, அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தார். இதில் முரண்பட்ட அன்னிபெசண்ட், அவரிடமிருந்து விலகத் தொடங்கினார்.
சார்லஸ் பிராட்லா, 1880 ஆம் ஆண்டு, லிபரல் கட்சியின் சார்பில், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மதச்சார்பின்மை மற்றும் இறை மறுப்புக் கொள்கை கொண்டவர் என்பதால், பைபிள் சாட்சியாக உறுதிமொழியேற்க மறுத்தார். பாராளுமன்றத்தில் கடவுள் குறித்து விளக்கமும், வரையறையும் கேட்டார். வரையறுக்க முடியாத நிலையில், கடவுள் என்பதை ஏற்க மறுத்தார். அத்துடன் மத ரீதியான பதவியேற்புக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் இறங்க, சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்தது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, பிரிட்டன் தன் நிலைப்பாட்டிலிருந்து சற்றே கீழே இறங்கி வந்தது. பாராளுமன்றம், அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கும் பொருட்டு, ஒரு தேர்வுக்குழு அமைத்தது. அக்குழு இறை நம்பிக்கையற்றவர்கள், மனச்சாட்சியின் படி பதவியேற்க, தக்க திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை பிரிட்டன் நாட்டிலும், அதன் கீழ் காலனிய நாடுகளிலும் நடைமுறைக்கு வந்தது. அன்றைய காலனிய இந்தியாவில் இந்தத் திருத்தத்திற்குப் பெரிய ஆதரவு இருந்தது.
பிராட்லா குறித்து, மகாத்மா காந்தி, தன் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். கடவுள் உண்டா, இல்லையா? எனக் கடிதம் வழியே அவரது ஆதரவாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘ யங் இந்தியா’ இதழில் பதிலளித்த காந்தி, உலகத்திலுள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதமாகக் கடவுளை வழிபட்டு வந்தாலும் சாதி, சமய, மத, வருணப் பேதமின்றி மனிதனின் உள்ளத்தினுள் உறையும் கடவுள் ஒருவரேதான், என்றார். “ இந்த உலகில் நிச்சயமானவற்றை எதிர்பார்ப்பது தவறாகும். சத்தியமாகிய கடவுளைத் தவிர மற்றவை யாவும் நிச்சயமற்றவை என்றே நான் எண்ணுகிறேன்” என்றார். “கடவுளிடம் நம்பிக்கை வைக்கவே நான் விரும்புகிறேன். ஆனால் எனது நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லை” இதுகுறித்து விளக்குமாறு எழுதப்பட்ட ஒரு கடிதத்திற்கு, “ கடவுளின் மற்றொரு பெயர்தான் சத்தியம்” எனப் பதில் அளித்தார். காந்தி, கடவுள் மீது அதீதமான நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும், சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவர்களை அவர் பெரிதும் அரவணைக்க செய்தார்.
கடவுள் குறித்து மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த காந்தி, “நான் கடவுளை நம்புவதால்தான் மனிதனை நம்புகிறேன். நான் நம்பிக்கை வைப்பதற்குக் கடவுள் இல்லையாயின், டைமன் போல மனித வர்க்கத்தை வெறுப்பவனாக இருப்பேன்” எனப் பதில் எழுதினார்.
டைமன், ஏதென்ஸ் நாட்டில் வாழ்ந்த ஒரு பிரபலமான பிரபு. இவரை ஷேக்ஸ்பியர், தன் நாடகத்தில் ஒரு பாத்திரமாகப் படைத்துள்ளார். டைமன் செல்வந்தர் என்பதால், தன் செல்வத்தை எல்லோருக்கும் வாரி வழங்குகிறார். அப்படியாக வழங்கியதில், பரம ஏழையாகிவிடுகிறார். அவரது வயிற்றுப் பசியைப் போக்க, இதற்கு முன்பு அவர் வாரி வழங்கிய மக்களிடம் சென்று கையேந்துகிறார். யாரும் அவர் மீது இரக்கம்
காட்டுவதாக இல்லை. அவர் மானிட வர்க்கத்தை மிருகவர்க்கமாக எண்ணி, மனிதர்களை அறவே வெறுத்து, காட்டிற்குச் சென்று வாழ்ந்து மறைகிறார். காந்தி பார்வையில், டைமனை மறத்தல் என்பது, மனசாட்சியை மீறுதல். இங்கு மனசாட்சியே கடவுள், என நிறுவுகிறார்.
தமிழ்நாட்டில் முதல் இருபது ஆண்டுகள், கடவுளின் பெயரால்தான் அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.



1967 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பேரறிஞர் சி. என். அண்ணாத்துரை அவர்களின் தலைமையிலான அமைச்சரவை முதன்முதலில் ‘ உளமார ’ என்கிற பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் இருவரும் ‘உளமார’ என்றே பதவியேற்றார்கள். 1991 ஆம் ஆண்டு முதலமைச்சரான
புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடவுளின் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இவரையடுத்து, சமீபத்தில் முதலமைச்சராகப் பதவியேற்ற,
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையும், சட்டமன்ற உறுப்பினர்களும் ‘ உளமார உறுதியேற்கிறேன்’ என்றே பதவியேற்றுக் கொண்டார்கள். எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கடவுளின் சாட்சியாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.
உறுதியேற்கையில், பலர் உளமார என்றும் சிலர் உளம் மாற என்றும் இன்னும் சிலர் உளம் ஆற என்றும் உறுதியேற்றதைக் கேட்க முடிந்தது. மறுநாள் சில பத்திரிக்கைகள் அப்படியாகவே எழுதவும் செய்தன. இம்மூன்றும் ஒரே மாதிரியான சொற்றொடர் என்றாலும் மூன்றுக்கும் பொருள் வேறுபாடுகள் உண்டு.
உளமார என்கிற இச்சொல் மனச்சாட்சியுடன் தொடர்புகொண்டது. உள்ளம் ஆர்தல். ஆர்தல் என்பதற்கு நிறைதல், பூர்த்தியடைதல், நிறைத்தல் எனப் பொருள் கொள்ளலாம். அதாவது மனத்தின் குரல். உளவியல் சார்ந்த நம்பிக்கை சொல் இது. செயன்முறை விளக்கம் வழியே மட்டுமே இதை நிரூபிக்க முடியும். அதாவது, சட்டத்திட்டத்தின் மீது உண்மையாகவும், நேர்மையாவும் இருத்தல் ஒன்றே இதன் நிரூபணம்.
உளம் மாற, என்பதை உள்ளம் மாற எனப் பொருள் கொள்ள வேண்டும். ஒருவர் மீது கொண்டுகொள்ள நீண்ட கால விருப்பு வெறுப்புகளை மாற்றிக் கொள்வது. அதாவது எண்ணம் மற்றும் சிந்தனை மாற்றம். உளம் ஆற, என்பது அமைதிக்கான முயற்சி. அதாவது ஓய்வு, ஆதரவு, தனிமை, சுற்றுலா, ஆன்மீக தரிசிப்பு, கோவில் நேர்த்தி, விரதங்கள், மருத்துவ உதவி, தொண்டு,… இவற்றின் மூலமாக அமைதியை நிலைநாட்டுவது.
இம்மூன்று சொற்களில் உளமார மற்றும் உளம் மாற இரண்டும் ஆட்சி, ஆட்சிமை, அரசு, மக்கள் இவற்றோடு தொடர்புபடுத்தி, பொருத்திப் பார்க்கலாம். ஆட்சியாளர்கள், ‘உளமார’ செய்யும் ஆட்சியை மக்கள், ‘உளமாற’ ஏற்க வேண்டும். எப்படி? மக்கள் – நோய், நோயியம், கவலை குடி, கடன், செய்வினை, சூனியம், வன்சொல் தாக்கங்கள், ஏமாற்றம், துயரம், துக்கம், செய்நன்றி மறந்தல்..எனப் பல இன்னல்களில் சிக்கி, நிர்க்கதியாகி நிற்கிறார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குள் கொண்டுவருவதே, உளமாறல். அதாவது, உள்ளத்தால் அவர்களை மாற்றுவது. ஆட்சியாளர்கள் ‘உளமார்ந்த’ (மனநிறைவு) நிலை ஆட்சிச் செய்கையில், மக்கள் உளமாறல் நிலையை எய்துகிறார்கள். அத்தகைய ஆட்சிக்கான உறுதிமொழியாகவும் இதை நாம் பார்ப்போமாக,..
– அண்டனூர் சுரா
புதுக்கோட்டை மாவட்டம்
![]()