Saturday, February 24, 2018

.
Breaking News

யார் சொன்னது – – – – – கண் இல்லையென்று?

யார் சொன்னது – – – – –        கண் இல்லையென்று?

மூடுபனி உருகி ஓடும்
கதிரவனின் ஒளி வீச்சால்
மூடி நிற்கும் உன் நாணமதை
எதைக் கொண்டு அகற்றவென
முனைந்து நின்றேன் மும்முரமாய்

கண்ணோடு கண் கவ்வி நானும் நிற்க
கலைந்தது உன் நாணம் சிறிதென்றாலும்
அருகிருந்த அம்மாவை நீ பார்க்கையிலே
புகார் நீயும் கொடுப்பதாய் நான் பயந்து

ஓட்டுக்குள் தலை இழுக்கும் ஆமைபோல
கூட்டத்தில் தலையை நானும் மறைக்க
அதுகண்டு நீ சிரிக்க நான் உணர்ந்தேன்
உன் நாணம் நீங்கியது அப்பனிபோலென

உன்னை நானும் விரும்புவது போல்
என்னை நீயும் விரும்புதல் அறிந்ததாலே
தள்ளிச்சென்று நான் மறைந்து நின்றேன்
நீ தவிப்பது கண்டு என்னை மறந்தேன்

உன் தாவும் கண்கள் என் பார்வையிலே
மலர் தேடி அங்குமிங்கும் தாவியோடும்
கருவண்டு போல சுழன்றாடக் கண்டேன்

வண்டுக் கண்கள் வலியால் துடிக்காதிருக்க
தேடிக் களைத்திட்ட கன்னி உன் கண்களுக்கு
மலராய் மறைந்திருந்த நான் வெளிப்படவும்
ஆதவனைக் கண்ட தாமரையைப் போல்
உன்முகம் மலர அகம் மலர்ந்தேன் நான்!

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts