Friday, February 23, 2018

.
Breaking News

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 1

அன்புமிகு கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்கள் உகரம் இணை யத்தளத்தில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மிகப்பெரும் அதிர்ச்சி. நீங்கள் இவ்வாறு எழுதியதற்கான காரணம் என்ன? என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவன் என்ற வகையில் இவ்வி டத்தில் உண்மையைக் கூறுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.
உண்மையைத் துணிந்து கூறுங்கள் என்ற உங்களின் உரைகள் தான் எனக்கு அப்படியயாரு மன உறுதி யையும் தந்தது.

வடக்கின் முதல்வர் நீதியரசர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தொடர்பில் யார் எந்தக் குறையைக் கூறியிருந்தாலும் அது பற்றி நான் கவலை கொண்டிருக்கமாட்டேன். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு மிகப்பெரும் பெருமை என்று நான் நம்புகின்ற கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் குறை காணும் போது நான் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பாவமாகும்.

அன்புக்குரிய கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே! அண்மையில் நீராவியடி பிள்ளையார் கோயில் அறங்காவலர் திருமதி சாந்தா ரகுநாத முதலியார் அம்மையார் அவர்களைச் சந்தித்தேன்.
சமய சமூக அக்கறை கொண்ட நல்ல பொறுப்புள்ள ஒருவர் அவர். கூடவே பெரியார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் சகோதரி. தமிழகத் தில் உள்ள சிதம்பரத்தில் ஈழத்தமிழர்கள் அமைத்த மடாலயங்கள் தொடர்பில் ஆராய்வதே அந்தச் சந்திப்பின் நோக்கம்.

அந்தச் சந்திப்பில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் நினைத்தால்- அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்து உரையாற்றினால் எங்கள் இளைஞர்கள் நிச்சயம் நல்வழிப்படுவர் என்று கதைத்துக் கொண்டோம். இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்களை நான் சந்தித்து கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்காதது மிகப் பெரும் குறை.
கம்பவாரிதிக்கு கலாநிதிப் பட்டம் வழங்குவதன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் என்றேன்.

நிச்சயமாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் கம்பவாரிதிக்கு கலாநிதிப் பட்டங்களை வழங்கும். அதற்கு முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தேன்.
தமிழகத்தில் நீங்கள் கலைஞர் கருணாநிதியின் நூலை ஆய்வு செய்தபோது, உங்கள் உரையின் உச்சம் கண்டு நடிகர் ரஜனிகாந் கண்ணீர் விட்ட செய்தி எல்லாம் அறிந்து நாம் பூரிப்படைந்தவர்கள்.
இந்திய தேசத்தில் இலங்கை ஜெயராஜ் பட்டிமன்ற நடுவர் எனும் போது, உங் களின் மிகப் பிரவாகமான அறிவும் பேச்சாற்றலும் எங்களுக்கு மிடுக்கைத் தரும்.

அதேவேளை வடக்கின் முதலமைச்சர் ஒரு அற்புதமான உத்தமர். நேர்மையானவர். அவர் மீது நீங்கள் வழுக் காண்பது என்பது வள்ளலாருக்கு எதிராக ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வழக்குத் தொடுத்த விடயமாகி விடுமோ என்பது என் ஏக்கம்.

என்னைப் பொறுத்த வரை கம்பவாரிதி ஜெயராஜூம் நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழினத்தின் மிகப்பெரும் சொத்துக்கள். எனவே நீங்கள் இருவரும் முரண்பட்டுக்கொண்டால் அது உங்களுக்கல்ல தமிழ் மக்களுக்கே நட்டம் என்று நினைப்பவன் நான்.

எனவே உகரம் இணையத்தளத்தில் நீங்கள் எழு தியவை தொடர்பில் உண்மையைக் கூறுவது என் கடமை என்றுணர்ந்தேன். அதனால்தான் இவ்வன்பு மடலை தங்களுக்குப் பகிரங்கமாக எழுதிக்கொள்கிறேன். இந்தப் பகிரங்கமடல் பலருக் கும் தெளிவைத் தரும் என்ற நம்பிக்கையும் உண்டு.
போருக்குப் பின்பான எங்கள் நிலைமைகள் மிகவும் மோசமாகி வருவதை தமிழ்மீது விசுவாசமுள்ள எவரும் உணர்ந்து கொண்டிருப்பர்.

தமிழ் அரசியல் தலைமைகளின் இராஜதந்திரமற்ற போக்கும் தாம் தாம் பதவியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எதிர்காலத் தில் அரசியல் பதவிகளைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்ட தன்மைகளும் தமிழினத்தின் மீது மிக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு புறமாக இருக்க மறுபுறத்தில் எங்கள் இளம் சமூகத்தை சீரழிக்க- தமிழ் மக்களின் உன்னதமான பண்பாட்டுக் கோலங்களை வேரறுக்க ஒரு பெரும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இரண்டிற்கும் மத்தியில் போரினால் பாதிக் கப்பட்ட மக்கள் கவனிப் பாரற்றவர்களாக; ஏழ்மையின் உச்சத்தில் ஒரு நேர உணவுக்கும் ஏங்கும் பரிதாபத்தில் இருக்கும் அவலம் தொடர்ந்து கொண்டது.
இருந்தும் அரச தரப்பைச் சந்திக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவ லத்தை நிவர்த்திக்கும் வரை அந்த மக்களுக்கு உலர் உணவு நிவாரணங்களையாவது அரசு வழங்க வேண்டும் என்று ஒருபோதும் கேட்டிலர்.

போர்ப்பாதிப்புக்குள்ளான மக்களின் வறுமையை உணர்ந்து கொள்ள முடியாத எங்கள் அரசியல் தரப்புக ளால் ஏற்பட்ட பாழாய்ப் போன தலைவிதி இது.

சட்டவிரோத குடியேற்றங் கள், பெளத்த விகாரைகளின் புதிய தோன்றல்கள், தமிழர் தாயகத்தில் இருக் கக்கூடிய வளங்களை சூறையாடுதல் என்ற மிக மோச மாக அழிவு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இத்தகைய மிக மோசமான சம்பவங்கள் பலரையும் பாதித்தது. மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொது மக்கள் பலரும் இதுபற்றிக் கதைத்துக் கொண்டனர். தங்களுக்குள் தீராத மனக் கவலையை விதைத்துக் கொண்டனர்.

என்ன செய்வது தேர்தல் காலத்தில் வந்து போன நம் சீமான்கள் இப்போது வருவதில்லை. மக்களை வந்து சந்திப்பதில்லை. அப்படியானால் தமிழ்மக்களின் அவலங்கள் எங்ஙனம் தீர்க்கப்பட முடியும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ள முடியும்.

இத்தகையதோர் கட் டத்தில் தான் தமிழ்மக்களின் நலன்களைப் பேணுகின்ற பொது அமைப்பு ஒன்றை உருவாக்கினால் அது பயனுடையதாக இருக்கும் என்று கருதப்பட்டது. அந்த வகையில் ஐந்து பேர் கொண்ட ஏற்பாட்டுக் குழுவொன்று உருவாகியது.

அந்த ஏற்பாட்டுக்குழு அரசியல் கட்சித் தலை வர்களையும் மதத்தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியது. இச் சந்திப்பின் போது மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் ஒரு பொதுவான – பலமான அமைப்புத் தேவை என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரை ஏற்பாட்டுக்குழு சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சந்திப் புக்கான அனுமதியை மின்னஞ்சல் மூலம் பெறு வதன்று முடிவாகி அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 2

கம்பவாரிதிக்கு அன்பு வணக்கம்!
பாவத்தைப் பார்த்திருப்பதும் பாவம் என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் மெய்யுரையின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகள், ஏமாற்றங்கள் தொடர்பில் தமிழ்மக்கள் பலரும் வெறுப்புக்கொண்டிருந்தனர்.

போர் தந்த இழப்புக்கள் எழுந்து நின்று துணிந்து பேசுகின்ற எங்கள் வீரத்தை வீழ்த்தியிருந்தது. இத்தகைய தோர் சூழ்நிலையில் பக்கத்திருப்பவர் துன்பந்தனை பார்க்கப்பொறாத வன் புண்ணியமூர்த்தி… என்ற பாரதியின் வரிகள் எங்கள் இதயத்தைத் தொட்டுத் துளைத்தன.

அரசியல் என்ற எல்லைக்குள் நின்றால் மட்டுமே மக்களுக்கு உதவ முடியும் என்ற நினைப்புகளைக் கடந்து ஒரு நல்ல நோக்கில் தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் வலியுறுத்தவும் கூடியதான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நினைப்போடு சிலர் செயற்பட்டோம். அதற்காகப் பலருடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தினோம். அந்தச் சந்திப்பின் விளைவு தான் தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகக் காரணமாயிற்று.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! உண்மைகள் எந்தக் காலத்திலும் உறங்கிவிடக்கூடாது என்பதை தாங்கள் பல இடங் களில் வலியுறுத்தியுள்ளீர்கள். எனவே ஓர் உண்மைக்குப் பங்கம் வந்தபோது நாம் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பழியும் பாவமும் என்று அஞ்சுகின்றோம். அதனால் தான் இந்தப் பகிரங்கமடலைத் தங்களுக்கு எழுத வேண்டியதாயிற்று. அதற்காக மன்னித்தருள்க.

பீஷ்மர் மீது அம்பு எய்துவது அருச்சுனனுக்கு நீதியன்று. எனினும் தர்மமே வெல்லவேண்டும் என்று மனத்தால் நினைக்கின்ற பீஷ்மர் தன்மீது எய்தப்படும் அம்பையும் சிரித்த முகத்தோடு ஏற்பார். தன் ஆத்மார்த் தமான ஆசியையும் அள்ளிக் கொடுப்பார் என்ற உண்மை நீங்கள் அறியாததன்று.

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை விடுத்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மதத்தலைவர்களும் இணைந்து தயாரிக்கின்ற தீர்வுத் திட்டத்தால் எந்தப் பயனும் கிடையாது என்று உணர்ந்தமையால் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரசன்னம் தமிழ் மக்கள் பேரவையில் கட்டாயம் என்றுணர்ந்தோம்.

எங்கள் நினைப்பை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். எல்லாச் சந்திப்புகளும் நிறைவேறிய பின்னர் வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்மக்கள் பேரவையில் இணைப்பது தொடர்பில் சந்திக்க முனைந்தோம்.

மின்னஞ்சல் மூலமாக சந்திப்புக்கான அனுமதியை அவரிடம் கேட்டிருந்தோம். கூடவே தமிழ்மக்களின் நலன் தொடர்பில் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவை பற்றிய சிறு குறிப்பையும் சந்திப்புக்கான அனுமதிகோரும் மின்னஞ்சல் செய்தியில் இணைத்திருந்தோம்.

சந்திப்புக்கான அனுமதியை முதலமைச்சர் தந்திருந்தார். சந்திப்பு நடந்தது. முதலில் எங்களை அறிமுகம் செய்தோம். அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்கள் கவனிக்கப் படவேண்டும் என்று கூறி னோம். அரசியல் கட்சி, மாற்றுத் தலைமை பற்றியதாக இருந்தால் என்னிடம் யாரும் பேசாதீர்கள்.
அதேநேரம் தமிழ்மக்களின் பொதுநலன் என்ற விடயத்தை நாம் ஓரங்கட்டி விடமுடியாது என்றும் முத லமைச்சர் கூறினார்.

இந்த உண்மை நீங்கள் நம்பும் கம்பன் மீதும் நான் வணங்கும் நல்லூர்க்கந்தன் மீதும் சத்தியம்.
அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! தமிழ்மக்கள் பேரவை அமையப் பெற்ற பின்னர் அந்த அமைப்புத் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் எதிர்பார்ப்புக்க ளைக் கடந்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் தமிழ் மக்கள் பேரவை என்பதே பேச்சாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் உகரம் என்ற இணை யத்தளத்தில் தங்களால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. நெஞ்சு அடைத்துவிட்டது.

தமிழ்மக்கள் பேரவை பற்றி யார் யாரெல்லாம் ஏற்றுவார்கள் போற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந் தோமோ அந்த எதிர்பார்ப் பிற்கு மாறாக உங்களின் கருத்து இருந்தமை மிகப்பெ ரும் வலியைத் தந்தது.
14 ஆண்டுகள் இராமர் காடேக வேண்டும் என்று கைகேயி தசரதனிடம் வரம் கேட்ட போது தசரதன் பட்ட வேதனை எத்துணை என்பதை இப்போது எங்களால் உணரமுடிகின்றது.

ஏற்பாட்டுக்குழுவே
கோரிக்கை விடுத்தது
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் தலைமையில் ஆசைவந்துவிட்டது என்று நீங்கள் குறிப்பிட் டிருந்தீர்கள். இதற்கு தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமையை அவர் ஏற்றுக் கொண்டதை காரணமாக்கினீர்கள்.

உண்மையில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைமையில் இணையுமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவே முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
வடக்கின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண் டார். நடந்தது இதுவே.

வடக்கின் முதலமைச்சர் வலிந்துபோய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பதவி கேட்டவர் அல்ல. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரே வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு விக்னேஸ்வரன் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியது; கூட்டமைப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் விரும்பினால் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்பதாகும்.
எனவே இதிலிருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பதவி ஆசை இல்லை என்பது தெரிகிறதல்லவா?

தமிழ்மக்கள் பேரவையின் இணைத் தலைமையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டதால் அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்பட்டுள்ளார் என்ற தங்களின் கருத்து நிலை சரிபார்க்கப் பட வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.

வடக்கின் முதல்வர் பதவிக்குத் தக்கவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனை அழைத்து வந்தபோது, அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராள மன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு வழங்கி இருக்க வேண்டும். இந்த ஆதரவு கூட்டமைப்பை பாதுகாப்பதாக இருந்திருக்கும்.

ஆனால் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலர் விக்னேஸ்வரன் அவர்களை எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு எந்த வகையில் நியாயமாகும்.

வடக்கின் முதல்வராக விக்னேஸ்வரனை நிறுத்துவதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருந்தால், கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தரையே எதிர்த்திருக்க வேண்டும். அப்படியான எதிர்ப்பு நியாயமாக இருந்திருக்கும்.

இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின், தேர்தலில் போட்டியிட வந்த நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை தேர்தல் கால த்தில் எதிர்ப்பதாக இருந்தால் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முற்படுபவர்கள் யார் என்பதை அறம் உரைக்கும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்காது.

கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 3

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச் சரானார். எனினும் சம்பந்தருக்குப் பின்பு விக்னேஸ்வரன் தலைவராகி விடுவாரோ என்ற ஏக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக் கிய எம்.பி ஒருவருக்கு ஏற்பட்டுவிட அவர் விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை முடக்குவதில் விடாப்பிடியாக நின்றார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது கூட்டமைப்புக்கு எதிராக முதல்வர் விக்னேஸ்வரன் பிரசாரம் செய்ததாக நீங்கள் கூறியிருந்தீர்கள். வடக்கின் முதலமை ச்சர் என்ற வகையிலும் அவர் ஒரு நீதியரசர் என்ற நிலையிலும் நேர்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு தமிழ்மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று நினைக்கின்ற வர்களுக்கு வாக்களியுங்கள் என்றே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
இதில் என்ன பிழை இருக்கிறது. கூட்டமைப்பிற்குள் நேர்மையானவர்கள் இல்லாதபோது,

தமிழ்மக்களுக்குப் பணி செய்கின்றவர்களுக்குப் பஞ்சம் இருக்கின்றபோது தான் முதலமைச்சரின் பிரசாரத்தில் கோபம் கொள்ள வேண்டும். நேர்மையானவர்கள் கூட்டமைப்பிற்குள்ளும் இருந்தால் தமிழ்மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பர். எனினும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களிலும் நேர்மை தழைத்தோங்கி இருக்கவேண்டும். அப்போதுதான் உண்மை எங்கும் பிரவாகிக்க முடியும்.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! இந்த நாட் டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கின் முதல்வரைச் சந்திக்க மாட்டேன், அவருடன் பேசமாட்டேன் என்று கூறிய போது கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சில பாரா ளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் யாழ்ப்பாணம் வந்தபோது சந்தித்து அளவளாவியது நியாயம் என்று கருதுகிறீர்களா?

தமிழ்மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய விக்னேஸ்வரன் அவர்களை மதிக்காத இடத்தில் யாழ்ப்பாணம் வந்த பிரதமருடன் கூட்ட மைப்பின் எம்.பிக்கள் எப்படி நடந்திருக்க வேண்டும் என்ற அறம் உங்களுக்குத் தெரியாததன்று.

இதுமட்டுமல்ல வடக்கு மாகாண சபையில் ஒரு சிறந்த நிர்வாகம் நடக்கவில்லை என்றும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய ஒருவரை கட்சியில் இருந்து விலக்கு, முதல்வர் பதவியில் இருந்து நீக்கு என்று சம்பந்தருக்கு நெருக்கமான கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் கூறியது நியாயமா? அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம் அவரிடம் இருக்கக்கூடிய மதவாதம் என்று ஊடகங்கள் பிரசாரம் செய்தால் நிலைமை என்னவாகியி ருக்கும்.

வடக்கின் முதலமைச்சரை நீக்க வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறும் அளவில் முதலமைச்சர் பதவி சிறுமைப்பட்டு விட்டதா? அல்லது கூட்டமைப்பு என்ற ஒரு பெரிய அமைப்பு அந்த எம்.பியின் அதிகாரத்திற்குள் அடங்கிவிட்டதா?

அன்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே! வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் உன்னிப்பாக அவதானித்தால் உண்மை தெரியும். முதலமைச்சரை அவஸ்தைப்படுத்துவதற்காக கேள்வி எழுதிக்கொடுத்து முதல்வரிடம் கேட்க வைக்கின்ற மிகமோசமான செயல் நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு மாகாண சபை உறுப் பினர் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவியை மனதில் நினைத்துக் கொண்டு முதலமைச்சரை எதிர்க்கிறார். மற்றொரு உறுப்பினர் பாராளு மன்றப் பதவிக்காக எழுந்து நின்று முதலமைச்சரைப் பார்த்து சீறுகிறார். நிலைமை எப்படி என்று ஒருமுறை பாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் தாராளமாக முதல்வரைக் கண்டிக்கின்றார். நல்லது ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்லுவேன்.

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலமைச்சராக இருப்பதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துரைகளைப் பஞ்சமின்றி முன்வைக்க முடிகிறது என்ற உண்மையையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

முதல்வரின் இடத்தில் இன்னொருவர் இருப்பாராக இருந்தால் எதிர்க்கட் சித் தலைவர் எழுந்து பேசும் போது எழும் கோசம் வேறு விதமாக இருக்கும்.
ஆக வடக்கின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை மக்கள் தெரிந்து விட அவரின் நிர்வாகம் ஒழுங்காக நகர்வதற்குத் தடை செய்து விட்டு முதலமைச்சர் தனது நிர்வாகத்தை செம்மையாகச் செய்யவில்லை என்றொரு காட்டாப்பைக் காட்டுவதே நோக்கம்.

இந்த உண்மைகளை நீங்கள் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவே நிதர்சனம்.
எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற ஓர் அமைப்பு என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்மக்கள் பேரவையின் நன்நோக்கத்திற்கு உங்களின் பேராதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
இன்றைய சூழ்நிலையில் புதியதொரு அரசி யல் கட்சி அவசியமற்றது என்ற உண்மையையும் நாம் உணராதவர் கள் அல்லர்.

எனினும் தமிழ்மக்களின் உரிமைகள் நலன்கள் என்ற விடயத்தை கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய ஒரு சிலர் மட்டுமே தீர்மானிப்பது என்பதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். நடந்து முடிந்த ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தமிழ் அரசியல் தலைமை நடந்து கொண்டமை தமிழ்மக்க ளிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.
இத்தகைய அவநம் பிக்கைகளை கூட்டமைப்பு தவிர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்மக்களுக்கான தீர்வுத் திட் டம் என்பதில் இது வரை எங்களிடம் ஒரு தெளிவான சிந்தனையும் இல்லை.

தீர்வுத் திட்ட வரைவும் இல்லை. இது மிகப் பெரும் குறைபாடாகும். இத்தகைய குறைபாடுகளை நீக்கி ஒரு சுமு கமான முறையில் அரசியல் என்ற எல்லை கட ந்து தமிழ்மக்களின் நலன்களைப் பேணுவதை நோக்காகக் கொண்டே தமிழ்மக்கள் பேரவை இயங்கும். இது சத்தியம். தங்களின் மேலான ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவோம்.

(முற்றும்)

‘வலம்புரி’

About The Author

Related posts