Tuesday, November 21, 2017

.
Breaking News

ஒரு காதல் கதையின் வாயிலாக…. ( சங்கர சுப்பிரமணியன்.)வாசகர் கடிதம்‏!

ஒரு காதல் கதையின் வாயிலாக…. ( சங்கர சுப்பிரமணியன்.)வாசகர் கடிதம்‏!

ஒரு காதல் கதையின் வாயிலாக கதாசிரியர் திரு. ஏலையா க. முருகதாசன் அவர்கள்
பல எண்ணங்களின் வெளிப்பாடுகளை நமக்கு உணர்த்தியுள்ளார். மகாஓயா ஆற்றில்
ஆண்களும் பெண்களுமாக தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு ஏதுமின்றி சிரித்து பேசிக்
கொண்டே குளிப்பார்கள் என்று அவர் எழுதியிருப்பதை வைத்து இரு இனங்களும் இன
வேறுபாடின்றி வாழ்ந்த காலத்தை நினைவு கூறுகிறார் என்றே எண்ணுகிறேன். அதே
சூழ்நிலை இன்றும் உள்ளதா? அப்படி இல்லாவிடில் அவர் அதை எண்ணி இப்போது
ஆதங்கப் படுகிறார் என்பதும் இங்கு தெரிய வருகிறது.

“என்னைக் கைவிடமாட்டீர்களே” என்று கேட்ட ரஞ்சனாவிடம் “என்னை நம்பு” என்று
ராகவன் அவள் கையைப் பிடித்து சத்தியம் செய்ததை நிரூபிக்க வேண்டுமே என்ற
காரணத்தால் கதையில் திருப்பத்தைக் கொண்டுவராமல் காதலர்களுக்கு ஏற்படும்
பிரச்சினைகளை சமாளித்து நேர்கோட்டிலேயே கதையை முடித்திருக்கிகிறார் என
எண்ணுகிறேன்.

கதாசிரியர் எப்படியாவது தன் கதையில் மண்ணின் வாசணையைக் கொண்டுவந்து
விடுகிறார். பித்தளை சருவச்சட்டிக்கு சாம்பலும் புளியும்போட்டு தென்னம்பொச்சால்
அழுத்தி தேய்த்தபடி காகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் ராகவனின் தாய்
பொன்னம்மா என்பதைப் படித்ததும் நான் சிறுவனாக இருந்தபோது கிராமத்தில்
என் அம்மா சருவச்சட்டியை புளியும் சாம்பலும் சேர்த்து தென்னங்கூந்தலால் தேய்த்த
அக்காட்சி ஒருகணம் கண் முன்னே தோன்றி மறைந்தது.

மகாஓயா ஆற்றங்காரையில் குளித்துச் சிரித்து மகிழ்ந்த ஒருத்தி இனி யாழ்ப்பாணத்தில்
உள்ள தெல்லிப்பழைக் கிராமத்தின் கிணற்றில் குளித்து காதலின் வெற்றியைக்
கொண்டாடுவாள் என்று ஆசிரியர் சொல்லி இருப்பதால் நல்ல காதலருக்கு அழகு
காதலுக்காக ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது என்பதை மிகவும் அழகாகவே
சொல்லியிருக்கிறார். இனி ரஞ்சனாவின் சிங்களத் தோழிகளான மாலினியும் நந்தாவும்
வருவார்கள். இந்த ஊரோடு ஊறவாடுவார்கள் என்று சொல்லியிருப்பதால் நட்பை
இதைவிடப் புனிதப் படுத்தியிருக்கமுடியாது என்றே கூறலாம். ஆனால் அதேசமயம்
இவ்வளவு நடந்த பின்னும் சிங்களவர்களுடன் எவ்வாறு உறவாடமுடியும் என்று
எண்ணுபவர்களின் நியாயமான உணர்வுகளுக்கு விடைகாண முயன்றால் அங்கே
விடையே வினாவாகி நிற்கிறது. மொத்தத்தில் இக்கதையை இரு இனங்களுக்குள்ளும்
உறவுப்பாலம் சாத்தியமா என்பதைக் காண உதவும் “லிட்மஸ்” டெஸ்ட்டாக எடுத்துக்
கொள்ளலாம்.
sankara20140704

அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts