Friday, February 23, 2018

.
Breaking News

அருண். விஜயராணி கடந்து வந்த பாதையில் சந்தித்த ஆளுமைகள் ” கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள் ” முருகபூபதி – அவுஸ்திரேலியா!

எம்மையெல்லாம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கச்செய்துவிட்டு விடைபெற்றுள்ள எங்கள் இலக்கிய சகோதரி திருமதி அருண். விஜயராணி ஒரு கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தனது இல்லத்தையும் கலை நேர்த்தியுடன் பேணியவாறு, தமது தந்தையார் மூத்த ஓவியர் கே.ரி. செல்வத்துரை அய்யாவின் ஓவியங்களையும் காட்சிப்படுத்தியிருந்தவர். கடந்த 13 ஆம் திகதி அவர் எம்மைவிட்டு விடைபெற்றபின்னர் அந்த இல்லத்தில் ஒளிப்படமாக காட்சியளித்தார். விஜயராணியின் மாறாத புன்னகை தவழும் அந்தப்படத்தை பார்த்து கண்களை குளமாக்கிக்கொண்டிருந்த அவருடைய அன்பு நெஞ்சங்கள் யாவும் அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தப்படத்தின் இருமருங்கும் இரண்டு பாவை விளக்குகள். அந்த வீட்டின் முன்னால் ஒரு அழகிய பெண் சிலை கையிலே குடம் ஏந்தி நீர்வார்த்துக்கொண்டிருக்கிறது. உள்ளே இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் – விஜயராணி புன்னகை பூத்தவண்ணம் எல்லோரையும் அந்த கண்ணாடிச் சட்டத்திற்குள்ளிருந்து கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

EPSON MFP image
EPSON MFP image

அவருடைய மருமகன் ஊடகவியலாளர், எனது நண்பர் தெய்வீகன், அருகே வந்து மாமியிடம் இருந்த போட்டோ அல்பங்களை பாருங்கள் என்று எனது கையில் தந்தார். அதிலிருந்த

பல படங்களில் விஜயராணி தமது நீடித்த பயணத்தில் கலை, இலக்கிய, வானொலி ஊடக வாழ்வில் சந்தித்தவர்கள்தான் இருந்தார்கள். அதில் இருக்கும் சிலரை தெய்வீகனுக்குத் தெரியவில்லை.

காரணம் அந்தப்படங்களை விஜயராணியின் அன்புக்கணவர் எடுத்த காலத்தில் தெய்வீகன் குழந்தையாக — மாணவராக இருந்திருக்கிறார். அதிலிருந்த பலர் பின்னாளில் அவருடைய நண்பர்களானார்கள். 20 – 25 வருடகாலத்திற்கு முற்பட்ட அவர்களின் தோற்றம் தெய்வீகனை வியப்படையச்செய்தது.

EPSON MFP image
EPSON MFP image

விஜயராணியின் கலை, இலக்கிய வாழ்வு — பாடசாலை இலக்கியம், இதழியல் இலக்கியம், வானொலி நாடகம், இசையும் கதையும், ஒலிச்சித்திரம் என்று தொடங்கி நவீன சிறுகதை இலக்கியத்தினுள் வந்தாலும், அவரும் ஒரு திரைப்பட ரசிகர்தான். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அங்கு படப்பிடிப்புகளுக்காக வருகை தரும் தென்னிந்திய நடிகர் நடிகைகளையும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களையும் தேடிச்சென்று சந்தித்து நேர்காணல்களும் எழுதுவார்.
Vijayarani & Sumathy

அவ்வாறு அவர் சந்தித்தவர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் நடிகைகள் மாதவி, ராதிகா, தயாரிப்பாளர் பாலாஜி, நடிகை மாதவி மேக்கப்புடன் ஒரு பெரிய வண்ணக்குடையினுள் அமர்ந்திருக்க அந்த சுடுவெய்யிலில் குளித்தவாறு விஜயராணி பேட்டி காண்கிறார்.

பெரிய கற்குவியலில் அமர்ந்து ரஜனிகாந்தை பேட்டிகாண்கிறார்.

ராதிகாவுக்கு அருகில் நெருக்கமாக நின்று ஏதோ உரையாடுகிறார்.

பாலாஜியும் நடிகர் விஜயகுமாரும் விஜயாவின் கணவரின் தோளில் கைபோட்டு அணைத்தவாறு போஸ் கொடுக்கிறார்கள்.

விஜயராணிக்கு இந்த ஆர்வம் எல்லாம் படிப்படியாக குறைந்துவிடுகிறது.

அன்று இயக்குநர் கே. பாலச்சந்தர் மத்தியதரக் குடும்பத்தை திருப்திப்படுத்தும் பல வெற்றிப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு மகாகவி பாரதி மட்டுமன்றி தமிழகத்தின் சில இலக்கிய ஆளுமைகளும் ஆதர்சம்.

கமல்ஹாசனை வைத்து மகாகவி பாரதி என்ற படத்தை எடுக்க முயன்று மேக்கப்டெஸ்டுடன் அந்த விஷப்பரீட்சையை கைவிட்டிருந்தார். ஜெயகாந்தனின் சில கதைகளின் காட்சிகளை அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை முதலான படங்களில் காண்பித்தார். சில ஆங்கிலப்படங்களின் கதைகளைத்தழுவி சில படங்களும் எடுத்தார்.

அவ்வாறு பாலச்சந்தர் எடுத்த படம்தான் அபூர்வராகங்கள். பாலச்சந்தர் ரசிகரான விஜயராணி, இந்தப்படத்தை பார்த்துவிட்டு அதன் முடிவு குறித்து தமது தந்தையாருடன் விவாதங்களிலும் ஈடுபட்டவர். அதே பாலச்சந்தரை பின்னாளில் இங்கிலாந்தில் எதிர்பாராமல் சந்தித்து, அவருடனும் அவர் படங்களின் முடிவுகள் குறித்து விவாதித்திருக்கிறார்.

இவ்வாறு வானொலி, திரைப்படம் முதலான துறைகளில் ஆர்வம்கொண்டிருந்த விஜயராணியின் பார்வை நவீன தமிழ் இலக்கியத்தின்பால் திரும்பியதற்கு ஈழத்து எழுத்தாளர்கள்தான் காரணம்.

செ.கணேசலிங்கன் மொழிபெயர்த்த அபலையின் கடிதம் என்ற சிறிய நாவல் அவரை பெரிதும் கவர்ந்திருக்கிறது. கணேசலிங்கனும் விஜயராணியின் பூர்வீகம் உரும்பராயைச் சேர்ந்தவர்.
Vijayarani.01png

உரும்பராயில் பிறந்திருந்தாலும் இவருடைய மேற்படிப்பு கொழும்பில் தொடங்கிவிட்டமையால் வடபகுதி சமூக அமைப்பு குறித்த இலக்கியங்களை செ. கணேசலிங்கனின் படைப்புகளிலிருந்தே அதிகம் தெரிந்துகொண்டிருக்கிறார்.

பின்னர், திருமணம், மத்திய கிழக்கு பயணம், இங்கிலாந்து வாழ்க்கை குழந்தைகளின் தாய் என்று அவர் வாழ்வின் திசை மாறியிருக்கிறது. எப்பொழுதும் சிறுமைகண்டு பொங்கியெழும் விஜயராணி , லண்டனில் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையை கண்டித்து அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் நடத்திய அறப்போராட்டத்திலும் கலந்துகொண்டார். அந்தப்போராட்டம் சற்று வித்தியாசமானது. ஒரு மைதானத்தில் அமர்ந்தவாறு, கையிலே மெழுகுவர்த்திகள் சுடர்விடத்தக்கதான கவன ஈர்ப்புபோராட்டம்.

தனது குழந்தையை மடியில் கிடத்தியவாறு அந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டபொழுது, மெழுவர்த்தி உருகி தனது சேலையையும் நனைத்து குழந்தையையும் சுட்டுவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.

அவருக்கு கலை, இலக்கியம், சமூகம் தொடர்பாக ஆதர்சமாக இருந்தவர்கள் அவருடைய தந்தையார் ஓவியர் செல்லத்துரை அய்யாவும் மூத்த சகோதரன் சட்டத்தரணி ரவீந்திரன் அண்ணனும்.

மரணிப்பதற்கு முன்னர் அண்ணாவைக் கூப்பிடுங்கள் என்று மென்மையாக குரல் எழுப்பியிருக்கிறார். அண்ணனிடம் வைத்த வேண்டுகோள் , ” அண்ணா எல்லோரையும் பார்த்துக்கொள். ” இவ்வாறு சொன்னவர், தற்பொழுது அந்த கண்ணாடிச்சட்டத்திற்குள்ளிருந்து எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய திடீர் மறைவு பலரையும் உலுக்கிப்போட்டிருக்கிறது. இலங்கை , தமிழக, வெளிநாட்டு ஊடகங்கள், இணையத்தளங்கள், வலைப்பூக்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளின் முகநூல்களில் எல்லாம் விஜயராணியின் படங்களும் அவர் வாழ்வும் பணிகளும் பற்றிய பதிவுகளும் வந்தவண்ணமிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் அனைத்து தமிழ் வானொலிகளும் அவருடைய நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துகொண்டன. சென்னையை மழை மூழ்கடித்தது. விஜயராணி எங்களையெல்லாம் கண்ணீரில் மூழ்கடித்தார்.

மழைக்கும் விஜயாவுக்கும் எங்கள் மீது அப்படி என்ன கோபம்….?

இதுவரைகாலமும் இலக்கிய ஊடகங்களிடம் செல்லாமல் மறைந்திருந்த அவருடைய தொத்துவியாதிகள் என்ற சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பானது ஊடக வெளிச்சத்திற்கு (Nadesan Blog) வருவதற்கு அவருடைய மரணம்வரையில் காத்திருந்ததா…?Vijayarani.04png

கொழும்பில் விஜயராணி வாழ்ந்த காலத்தில் அயல் வீட்டுத்தோழிதான் செல்வி சியாமளா. அவர் இப்பொழுது திருமதி சியாமளா Vijayarani

இலங்கையில் 2011 இல் நாம் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் வெளியிட்ட அவுஸ்திரேலியா தமிழ்ச்சிறுகதைகளின் (Being Alive) ஆங்கில மொழிபெயர்ப்பைச் செய்தவரும் சியாமளாதான். அக்காலப்பகுதியில் மொழிபெயர்க்கப்பட்ட கன்னிகாதானங்கள் இன்னமும் கணினியில் சேமிப்பாகத்தான் இருக்கிறது.

1989 இல் அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்த பின்னர் எனது சமாந்தரங்கள் நூல் வெளியீட்டைப்பார்த்ததன் எதிரொலியாக மீண்டும் தீவிர கலை, இலக்கியப்பிரவேசம் செய்தார்.

1989 இற்குப்பின்னர் அவர் இங்கு சந்தித்த இலக்கிய ஆளுமைகளும் முக்கிய காரணம். எஸ்.பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, மாத்தளை சோமு, காவலூர் ராசதுரை, பாலம் லக்ஷ்மணன், காசிநாதர், என்று இந்த வரிசையில் சிலர் வருவார்கள்.

தமிழ் ஆர்வலர் டொக்டர் பொன். சத்தியநாதன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் ஆகியோரும் இந்த வரிசையில் இணைகிறார்கள்.

நண்பர் ராஜரட்ணம் சிவநாதன் தொடக்கியிருந்த தமிழ்க்கலை மன்றம் 1989 விஜயதசமி காலத்தில் நடத்திய கலைமகள் விழாவும் அவருடைய சிந்தனைக்கு உந்து சக்தியைக்கொடுத்தது.Vijayrani - Ravi Annan & Sumathy

அவர் இலங்கை வானொலியில் அடிக்கடி சந்திக்கும் ஊடகவியலாளர் கலைஞர் சண்முகநாதன் வாசுதேவன் – சாரதா தம்பதியரும் அந்த விழாவிற்கு குவின்ஸ்லாந்திலிருந்து வருகை தந்தனர்.

எமது மெல்பன் வீட்டில் அவர்களுடனான சந்திப்பை நடத்தியபொழுது நண்பர் மாவை நித்தியானந்தனும் கலந்துகொண்டார்.

தமிழ்க்கலை மன்றம் இங்குள்ள குழந்தைகளுக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்தபொழுது, தமது உறவினர், குடும்ப நண்பர்களின் குழந்தைகளையெல்லாம் மெல்பன் பல்கலைக்கழக உயர்தரக்கல்லூரி மேடையில் விஜயராணி ஏற்றிவிட்டார்.

அந்தக்குழந்தைகள் தற்பொழுது தமது குழந்தைகளின் பெற்றவர்களாக வந்து, விஜயராணிக்கு அஞ்சலி செலுத்தும் காட்சியை குளமாக நிரம்பிய கண்களின் வழியே பார்த்துக்கொண்டு நின்றேன்.

1991 இல் கன்னிகாதானங்களின் வெளியீடு நடக்கும் முன்னமே எம்முடன் இணைந்து 1990 இல் அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் என்ற கலை, இலக்கிய மனித, உரிமை அமைப்பை உருவாக்க பக்கபலமாக இருந்தார்.

இலங்கை, தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உட்பட கனடா, அய்ரோப்பிய நாடுகளிலிருந்தெல்லாம் எந்தவொரு கலை, இலக்கியவாதியும் மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தால், அல்லது அவர்கள் வந்து நிற்கும் இடத்துக்கு நான் சென்றால், முதலில் அறிவிப்பது அருணுக்கும் விஜயராணிக்கும்தான். தம்பதியர் அவர்களை சந்திக்கத் தவறமாட்டாரகள். சிலசமயங்களில் விஜயராணி தமது அண்ணன் ரவீந்திரன் தம்பதியரையும் அழைத்துவருவார்.

அவ்வாறு அவர் சந்தித்தவர்கள்தான் இந்திரா பார்த்தசாரதி, காந்தி கண்ணதாசன், வைத்தீஸ்வரன், மாலன், ஜெயமோகன், சார்வாகன், மலேசியா பீர்முகம்மது, தமிழச்சி தங்கபாண்டியன், லண்டன் நூலகர் நடராஜா செல்வராஜா, இளவாலை அமுதுப்புலவர், கனடா சியாமளா, ஜெர்மனி தேவா, இலங்கை ஞானசேகரன் தம்பதியர், தேவகௌரி, தெளிவத்தை ஜோசப், தில்லை நடராஜா, கே. எஸ். சிவகுமாரன், கோகிலா மகேந்திரன்…. இப்படிப்பலர்.

எத்தனை தமிழ்ப்படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவல் என்ற துல்லியமான தகவல்களை வைத்துக்கொண்டு மாலனிடம் உரையாடிவிட்டு, அதனை எழுதித்தரவும் விரும்பினார். அப்பொழுது மாலன் குமுதம் ஆசிரியர். அதுபோன்று கண்ணதாசன் பற்றி அவுஸ்திரேலியா வானொலிகளில் நிகழ்த்திய உரைகளை தொகுத்து வைத்துக்கொண்டு கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட ஆவன செய்யவேண்டும் என்றார். காந்தி கண்ணதாசனும் அதற்குத்தயாராகவே இருந்தார். ஆனால், விஜயராணி ஏனோ தாமதித்தார்.

இந்நிலையில் தமிழக பதிப்பகத்துறையில் எழுத்தாளர்களை விழுங்கி ஏப்பம் விடும் ஒருவரும் கன்னிகாதானத்தின் இரண்டாம் பதிப்பினை வெளியிடுவதற்காக இவர் வீடு தேடிச்சென்றார். ஆனால், அந்த வலையில் சிக்கிய சுறாக்கள் பற்றி நன்கு தெரிந்திருந்த இந்தச்சின்னத்தங்கமீன் அதில் சிக்கவில்லை.

தமது இரண்டாவது சிறுகதைத்தொகுதிக்கு மூத்த கவிஞர் அம்பி அவர்களிடமிருந்து ஆசிச்செய்தியும் பெற்றுக்கொடுத்தேன். அதனை அவர் பெற்ற காலம் 2012 ஆம் ஆண்டு. ஆனால், அந்த நூலும் வெளியாகவில்லை. எனினும் அதனை இங்கு விஜயராணியின் நினைவாக பதிவுசெய்யலாம்.

கவிஞர் அம்பியின் ஆசிச்செய்தி

இலக்கிய தொடர் பயணத்தில் ஒரு குடும்பத்தலைவி
Vijayarani.05png

EPSON MFP image
EPSON MFP image

தாய்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் இலக்கியத்துறையில் ஆர்வமுடன் ஈடுபட்ட ஒருவர் – சந்தர்ப்பவசத்தால் பிறிதொரு அந்நிய நாட்டுக்கு புலம்பெயர்ந்த பின்பும் தொடர்ந்து தான் நேசித்த இலக்கியத்துறையில் ஆர்வம் காண்பித்து அதற்காக உழைத்துவருவது எமது தமிழ்ச்சூழலில் நம்பிக்கை தரும் தகவல்.

அவுஸ்திரேலியாவில் மெல்பன் நகரில் வதியும் எழுத்தாளர் திருமதி அருண்.விஜயராணி அவர்கள் தமது நூலுக்கு ஆசியுரை கேட்டு என்னுடன் தொடர்புகொண்ட போது மிக்க மகிழ்ச்சியுடன் எழுதுவதற்கு சம்மதித்தேன்.

தற்போது அமர்ந்து பேனை பிடித்து எழுத முடியாமல் சுகவீனமுற்றிருக்கும் வேளையிலும் நான் சொல்லச்சொல்ல எழுதப்படும் முதலாவது ஆசிச்செய்தி இதுவாகும்.

சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அருண்.விஜயராணி தனது இரண்டாவது நூலை வெளியிட முன்வந்துள்ளார். ஏற்கனவே அவர் எழுதியிருந்த சில சிறுகதைகளைத் தொகுத்து ‘கன்னிகா தானங்கள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அதன்பின்பு இந்நூல் அவரது வரவாகின்றது. இடைக்காலத்தில் அவர் பல படைப்புகளை எழுதியிருக்கிறார். அவற்றுள் சிறுகதைகள் – கட்டுரைகள் – வானொலி உரைச்சித்திரங்கள் ஆகியன அடங்கும்.

ஒருவர் தாய் நாட்டை விட்டு அந்நியம் புலம்பெயர்ந்து வந்த பின்பும் தொடர்ந்து தான் நேசிக்கும் துறையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்ற தொனியில் இந்த ஆசியின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

அருண்.விஜயராணி முழுநேர எழுத்தாளர் அல்ல. தனக்கு கிடைக்கும் நேரத்தில் எழுதுபவர். வாசிப்பவர். அதனால் அவரிடமிருந்து நாம் அதிகமான படைப்புகளை எதிர்பார்க்க இயலாது. அத்துடன் அவர்

ஒரு குடும்பத்தலைவி. எமது தமிழ்ச்சூழலில் ஒரு குடும்பத்தலைவியின் பொறுப்புகள் பண்பாடுகள் சார்ந்திருப்பவை.

அந்தப்பண்பாட்டுக் கோலங்களையும் சித்திரிக்கின்ற படைப்புகளை கதைகளாக கட்டுரைகளாக வானொலி உரைச்சித்திரங்களாக எழுதிவருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் எனது பவளவிழா மெல்பன் நகரில் எனது மாணவர்களினாலும் என்னை நேசிக்கும் அன்பர்களினாலும் கொண்டாடப்பட்டபோது என்னைப்பற்றி எழுதப்பட்ட ஒரு நூலை அருண். விஜயராணி வெளியிட்டுவைத்து உரையாற்றியது பசுமையாக நினைவிலிருக்கிறது. அவரது குடும்பத்தினர் எனது நேசத்துக்குரியவர்கள். அவர்களின் அன்பான விருந்தோம்பலில் திளைத்திருக்கின்றேன். அத்துடன் அருண்.விஜயராணியின் அருமைத்தந்தையார் ஊர் அறிந்த பிரபல ஓவியர் செல்லத்துரை. அவரது பேத்திகள் சிலர் பரதக்கலை பயின்று அரங்கேற்றம் கண்டவர்கள். சுருக்கமாகச் சொன்னால் அருண்.விஜயராணி ஒரு கலைக்குடும்பத்திலிருந்து வந்தவர்.

அதனால் அவரிடம் குடியிருக்கும் கலைத்தாகத்தை நாம் உணர முடியும்.

புகலிடத்தில் எதிர்காலத்தில் தமிழ் வாழுமா…? வளருமா…? என்ற பதட்டத்துடனேயே நாம் எமது வாழ்நாளை கழிக்கின்றோம். அந்தப்பதட்டம் நீங்குவதற்கு அருண்.விஜயராணி மட்டுமல்ல மற்றவர்களும் தொடர்ச்சியாக உழைக்கவேண்டும். இயங்க வேண்டும். அதற்கு புதிய புதிய களங்கள் உருவாக்கப்படல் வேண்டும். அதில் ஒன்றுதான் நூல் வெளியீடு. நினைத்தமாத்திரத்தில் ஒரு நூலை வெளியிடக்கூடிய கணினி யுகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
அவ்வாறு நூலுருப்பெறுவன வாசகர்களினால் படிக்கப்படுகின்றனவா…? என்ற மதிப்பீடும் தேவைப்படுகிறது. எனவே எழுத்தாளர்கள் எழுதுவதுடன் வாசிக்கவும் நேரம் தேட வேண்டியிருக்கிறது.

அருண்.விஜயராணி தொடர்ந்தும் கலை இலக்கிய எழுத்துப்பணியில் ஈடுபட்டு மேலும் பல படைப்புகளை நூலுருவாக்க வேண்டும் என்று வாழ்த்துக்கூறுவதுடன் அவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து பயன்மிக்க தொண்டுகளை தொடரவேண்டும் என்றும் ஆசி கூறுகின்றேன்.

அன்புடன் அம்பி ஹேர்ஸ்வில் – சிட்னி – அவுஸ்திரேலியா –

(11-06-2012 )

இந்த புதிய நூலை தன்னை வீரகேசரியில் அறிமுகப்படுத்திய (அமரர்) பொன். ராஜகோபாலுக்கு சமர்ப்பிக்க விரும்பியிருந்தார். தமது தந்தையார் ஓவியர் அய்யா பற்றியும் ஒரு நூலை எழுதுவதற்கு எண்ணியிருந்தார். இவ்வாறு பல கனவுகளுடன் வாழ்ந்த அருண். விஜயராணி, எம்மிடம் விட்டுச்சென்றிருப்பது அவருடைய நினைவுகளையும் கனவுகளையும்தான்.

அவர் நினைவாக வானமுதம் வானொலியில் ஜேசுதாஸ் பாடிய பாடலை ஒலிபரப்பினார்கள். கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்….

பொதுவாகவே கலை, இலக்கியவாதிகள் சமூகப்பணியாளர்களிடம் கனவு காணும் இயல்பு சற்று அதிகம்தான். அதனைச்சொல்வார்கள். ஆனால். நனவாக்குவதில் எப்படியோ தாமதம் தோன்றும். விஜயராணிக்கு உள்ளத்தில் இருந்தளவு மனோ வலிமை உடலில் இல்லாதிருந்தமையினால் கடந்த ஒரு வருடகாலமாக மேடையேறிப் பேசுவதையும் தவிர்த்தார்.

மறைவதற்கு முன்னர் மெல்பன் விற்றில் சி தமிழ் மன்றமும் வானமுதம் வானொலியும் இணைந்து 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை இவருக்கு விருது வழங்கி கௌரவித்தன. ஆனால் அந்த கௌரவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இவருடைய உடல் நிலை தடுத்தது. அந்த நிகழ்வு நடந்து சரியாக எட்டு நாட்களில் (13-12-2015) அவர் மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் பலரும் மின்னஞ்சல் ஊடாகவும் தொலைபேசி வாயிலாகவும் என்ன நடந்தது…? ஏன் இந்தத் திடீர் மறைவு…? என்ற கேள்வியுடன்தான் தொடர்புகொண்டனர்.

இலங்கை கிழக்கு மாகாணத்தில் விஜயராணி உதவிய மாணவர் பயிலும் பாடசாலை அதிபர் ஒரு நள்ளிரவில் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமது பாடசாலையே சோகத்தில் ஆழ்ந்திருப்பதாகச் சொன்னார்.

அங்கு விஜயராணியின் ஒளிப்படத்துடன் நினைவஞ்சலி பதாகையை (Banner) கட்டியிருப்பதாகவும் சொன்னார்.

இந்தநினைவுப்பதிவை எழுதிக்கொண்டிருந்தபொழுது யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திலிருந்தும் (CFCD) வவுனியா – திருகோணமலை நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பிலிருந்தும் ( VOVCOD ) அவருக்கு அஞ்சலி தெரிவித்து பிரசுரங்கள் வந்தன.

இந்த அமைப்புகள் விஜயராணி நீண்ட காலம் தமது மறைவுவரையில் இணைந்திருந்த எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் பராமரிக்கப்படும் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்காணிக்கும் தொண்டு நிறுவனங்களாகும்.

விஜயராணி எம்முடன் இணைந்து தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், கல்வி நிதியம் ஆகியனவற்றில் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு குறித்து பல அத்தியாயங்கள் எழுதமுடியும்.

அதனூடக அவுஸ்திரேலியாவில் கடந்த கால் நூற்றாண்டு கால (1989 – 2015) கலை, இலக்கிய, ஊடக , சமூகப்பணிகள் சார்ந்த விரிவான பதிவையே எழுதிவிடலாம்.

அவ்வாறு கல்விக்கும் கலை, இலக்கியத்திற்கும் வானொலிக்கும் சமூகத்திற்கும் பங்களிப்புச்செய்த எங்கள் சகோதரிக்கு விடைகொடுக்கின்றோம்.

இறுதியாக அவர் காலனுடன் போராடுவதைக்கண்டு விம்மிக்கொண்டு வந்த எனது மனைவி மாலதி , விஜயராணி தமது பெற்றவர்களிடம் சென்றுவிட்டார் என்பதை அறிந்ததும் எழுதிய கவிதையை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

பெண்மையின் இருப்பிடம்

பண்பிலே தனியிடம்

குரலிலே மெல்லிடம்

பேச்சிலே நேரிடம் – என்

மனதிலே நல்லிடம்

போசித்தது தாவரத்தை

நேசித்தது தமிழை

போதித்தது நல்லுறவை

யாசித்தது இறையை – என்றும்

யோசித்தது களங்கமில்லா நட்பை

வள்ளுவனுக்கு வாய்த்த வாசுகி போல்

சூரிய மலைக்கு உற்ற துணையாய்

தம்மிரு கண்களுக்கும் இமையாளாய்

உடன் பிறந்தார்க்கு உவப்பான சகோதரியாய் – ஏனையோர்க்கு

“யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்பதன் அர்த்தமாய் வாழ்ந்தவர்

எங்கள் அருண் விஜயராணி

( தம்மிரு கண்கள் : மகன்மார் ஆதித்தன் – அஜந்தன்.)

—-0—————————————————————————————————————–

சகோதரி திருமதி அருண்.விஜயராணிக்கு எதிர்வரும் 18-12-2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 (P.M) மணிக்கு Greensborough Road Le Pine மண்டபத்தில் (513, Greensborough Road , Greensborough, Victoria, Australia ) மலர் அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.

20-12-2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்கு Fawkner Memorial Park இல் ( 1187, Sydney Road, Fawkner, Victoria, Australia ) இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

———————–0000000—————————–

About The Author

Related posts