Friday, February 23, 2018

.
Breaking News

தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்!

இறுதிப்போரில் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மீள விசாரணைக்குட்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ள, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணைக்குழு, மற்றும் எல்.எல்.ஆர்.சி ஆகியவற்றின் பரிந்துரைகளில் காணப்படும் சான்றாதாரங்களை முன்வைத்து ஜனாதிபதியிடம் வெள்ளைக்கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பெயர் விபர பட்டியலொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று நடைபெற்றது. இதன் போது விசாரணைகளின் முடிவினையடுத்து ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளான நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தின் முடிவில் சரணடைந்திருந்தனர். இவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சனல் 4 ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் இதில் நாம் தவறிழைக்கவில்லை என கூறிவரும் இலங்கை அரசு சனல் நான்கின் காணொளியையும் நிராகரித்திருந்தது.
இது தொடர்பில் பரணகம மேலும் பதிலளிக்கையில், சனல் நான்கின் காணொளியை பொய் என்றும் கூறவில்லை. உண்மை என்றும் கூறவில்லை. நன்கு ஆராயப்படவேண்டும் என்றே கூறி வருகின்றோம். வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மக்களிடமிருந்து முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்று வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக் குழுவினாலும், எல்.எல்.ஆர்.சி.னாலும் இந்த வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தும் உள்ளோம்.
தவறிழைத்தவர்கள் இனங்காணப்பட்டு தனிநபர்கள் தண்டிக்கப்படுவர். என்றார் அவர். தமிழீழ விடுதலைப்புலிகள் மீதே அதிகளவிலான முறைப்பாடுகள் உள்ளதாக முன்னர் கூறியது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, நான் அதனை முழுமையாக சரி என்று கூறமுடியாது. என்னிலும் பிழை உள்ளது. நானும் மனிதன் தான் என்றார்.
இரண்டு தரப்பு மீதும் தவறு உள்ளது. அவை விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் நீதிமன்றம் போல் குற்றவியல் விசாரணையாக இதனை முன்னெடுக்க முடியாது. பரஸ்பரம் பேசித்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என பதிலளித்தார்.
அவ்வாறாயின் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களில் பலர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டனர் எஞ்சிய ஏனையோரும் ஏற்கனவே சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு விட்டனர். ஆகையால் எதிர்த்தரப்பினை தானே நீங்கள் அதிகளவு கூடிய கவனம் செலுத்த வேண்டும். இதை ஆணைக்குழு முன்னெடுக்குமா? என கேட்டபோது, இது அரசியல் பிரச்சனை நாங்கள் மனிதாபிமானம் பற்றியே பேச முடியும் என்றார் அவர்.
ஆரம்பத்தில் சனல் நான்கின் செய்தியில் காண்பிக்கப்படும் காணொளி உண்மை என கூறிய நீங்கள், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பினால் அவ்வாறு நான் கூறவில்லை என மறுத்தமைக்கான காரணம் என்ன? என கேட்ட போது, அதில் இருக்கும் உணமைத்தனமையை ஆராய வேண்டியுள்ளது என்றார்.
மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பில் உங்களால் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்று கேட்டபோது, நாம் தற்போது மக்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றோம். இதன் இன்னார் விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் அந்த அறிக்கையின் படி நடவடிக்கை தொடரும் என்றார்.
இலங்கை இராணுவம் மற்றும் ஒட்டுக்குழுக்களில் உள்ள தனிமனிதர்கள், வதை முகாம்கள் தொடர்பில் மக்கள் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என கேட்டபோது, தனிமனிதர்கள் சிலர் விரைவில் தண்டனைக்குட்படுத்தப்படுவர் என்ற தகவலை வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களில் தான் தவறிளைத்ததனையும் அவர் இதன் போது ஒத்துக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

About The Author

Related posts