Thursday, January 18, 2018

.
Breaking News

எம் இனத்தின் சமூகத் தலைமைகள் பொறுப்புணர்ந்து எழுகை பெறுக!

உலக வரலாற்றில் யூதர்கள் பட்ட அவலங்கள் ஏராளம். இருந்தும் அவர்கள் யூத இனம் என்பதை எந்தக் காலத்திலும் இழந்திலர். கஷ்டங்கள், துன்பங்கள், புலம்பெயர்வுகள் என எவை வந்த போதிலும் அவற்றின் மத்தியில் அவர்கள் யூதர்களாகவே வாழ்ந்தனர்.
தமது தேசத்தை விட்டு வெளிநாடுகளில் குடியேறிய போதிலும் யூதர்கள் என்ற அடையாளம் அவர்களிடம் ஒருபோதும் விடுபட்டதில்லை.

இதனால்தான் யூத இனம் இன்று வரை தனது இருப்பை உலகில் நிலைநிறுத்தி வருகிறது.
ஆக, உலகில் எத்தனையோ போராட்டங்கள், இழப்புகள் நடந்து முடிந்த போதிலும் அவற்றில் இருந்து மீண்டெழுந்த மக்கள் சமூகம் தொடர்பில் நாமும் கவனம் செலுத்துவது கட்டாயமானதாகும்.
அந்த வகையில் ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் என்பது தனித்து அரசியல் தலைமைகளால் மட்டும் நிர்ணயம் செய்து முடிக்கப்படக் கூடியவை அன்று. அரசியல் தலைமைகளே, நமது பிரச்சினைக்கும் வாழ்வாதாரத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் என்றிருந்து விட்டால் எல்லாமுமே அம்போ என்றாகிவிடும்.

எனவே தமிழினம் தனது இருப்பை நிலைநிறுத்த வேண்டுமாயின் தனது பண்பாடு, கலாசாரம் என்ற அடையாளங்களைக் கட்டிக் காப்பது மிகமிக அவசியமானதாகும்.
இந்த விடயத்தில் சமூகத் தலைமைகளினதும் புத்திஜீவிகளினதும் வகிபாகம் கட்டாயமானதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான போரின் போதும் போருக்குப் பின்பும் எவ்வாறான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை மகிந்த ராஜபக்­சவுக்கு முன்மொழிந்தவர்கள் சிங்கள புத்திஜீவிகள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

அதேசமயம் மகிந்தவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தவர்களும் சிங்கள புத்திஜீவிகள் என்பது நிதர்சனமான உண்மை.
ஆக, எங்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய போதைப் பொருள் பாவனை மற்றும் கலாசாரப் பிறழ்வுகளைத் தடுத்து நிறுத்தி எங்கள் இளம் சமூகத்தை நல்வழிப்படுத்த சமூகத் தலைமைகள் வீறுகொண்டெழுவது கட்டாயமானதாகும்.

ஒவ்வொரு ஊர்தோறும் சமூகத் தலைமைகள் தோற்றம் பெறுமாயின் வறுமைக்கும் தொழிலின்மைக்கும் வலுவிழப்புக்கும் ஆதரவின்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
எங்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுத்து மீளவும் எம் இனத்தின் கல்விச் சாதனையை நாம் படைப்போமாக இருந்தால் எங்களால் எழுந்து நிற்க முடியும் என்பது சர்வநிச்சயம்.

இதை விடுத்து எங்கள் மத்தியில் எழுக்கின்ற அத்தனை சமூகப் பிரச்சினைக்கும் பொலிஸாரே தலையிட வேண்டும். நீதிமன்றமே தீர்த்து வைக்க வேண்டும் என்று நாம் வாழாவிருந்தால், பிரச்சினைகள் அதிகரித்து நிலைமைகள் கட்டுமீறிச் செல்வது தவிர்க்க முடியாததாகி விடும்.

ஆகையால், எங்கள் அனைத்துப் பிரச்சினைகளையும் அரசியல் தலைமைகளும் நீதிபரிபாலனமும் கவனிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கைவிட்டு, புத்திஜீவிகளும் சமூகத் தலைமைகளும் ஒன்றிணைந்து சமூகப் பொறுப்புடன்; எங்கள் மக்களின் வாழ்வு என்ற உயர்ந்த நினைப்புடன் செயற் பட்டால், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழினம் மீண்டும் எங்ஙனம் எழுந்து நின்றது என்பதை இந்த உலகம் தனக்குப் பாடமாக்கிக் கொள்ளும்.

அதேநேரம் எம்மோடு பகைத்து அல்லது அவர் களின் செயலால் நாம் வெறுத்து நிற்கின்ற நாடுகள் நமக்கு நட்புறவாகிக்கொள்ளும். இத்தகைய மாற்றங்கள் நடக்கும் போது தமிழினத்தின் இருப்பும் அடையாளமும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

‘வலம்புரி’

About The Author

Related posts