Thursday, January 18, 2018

.
Breaking News

சமூக அக்கறை கொண்டவர்களுக்கு அரசினதும் மக்களினதும் பலம் தேவை!

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உரிமைகளைத் தரவில்லை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதேநேரம் நாங்கள் எங்களுக்காக, எங்கள் இனத்திற்காகச் செய்ய வேண்டியதைச் செய்கின்றோமா என்ற கேள்வி எழுவது இங்கு முக்கியமானது.

உன்னையே நீ அறிவாய் என்பது போல எங்களை நாங்கள் அறிவதென்பது மிகவும் அவசியமானதாகும். இலங்கை அரசாங்கத்துடன் போராடி எங்களுக்கான உரிமையைப் பெற்றெடுத்தல் என்பதற்கு முன்னதாக, தமிழினம் தனது பண்பாட்டு விழுமியங்களையும் இனத்துவ அடையாளங்களையும் பேணிப் பாதுகாப்பதுடன், போரினால் துன்பப்பட்டுப்போன எங்கள் மக்களுக்கு சேவை செய்வது மகத்தான தியாகம் என்ற நினைப்பையும் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் தமிழினம் வாழவும் தனது உரிமைக்காகப் போராடவும் முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ் இனத்தின் அரசியல் தலைமை என்பது போருக்குப் பின்பு பல வீனமானதாக, அற்பசொற்ப சலுகைகளை எட்டிப் பார்க்கின்ற கீழ்த்தனம் மிக்கதாக மாறிவிட்டது.
பதவி ஆசை, பதவிக்காக எதனையும் செய்யலாம் என்ற தர்மம் இல்லாத செயற்பாடு காரணமாக தமிழினம் இன்று எதுவும் செய்ய முடியாத இனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

எங்களிடம் ஒற்றுமையில்லை. எங்களிடம் நேர்மையில்லை. எங்களிடம் மனத்தெளிவு இல்லை. இத்தகையதோர் நிலையில் எங்களால் எங்ஙனம் சிங்கள அரசுகளுடன் பேரம் பேசமுடியும்?
ஆக, நல்ல தலைவர்கள் நமக்கு தேவையாக இருக்கிறது. அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் எழுந்துள்ள இவ்வேளையில், நேர்மையான; தமிழ் மீது பற்றுக் கொண்ட; விசுவாசமானவர்களை தலைவர்களாக்குவதற்கான முயற்சிகளை மக்கள் செய்தாக வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை இந்த உலகில் ஏற்பட்ட அத்தனை ஆக்கமாயினும் அழிவாயினும் அதன் மூலகாரணமாக தனி மனித சக்தியே இருந்துள்ளது. இதை எவரும் மறுத்துவிட முடியாது.
சோக்கிரட்டீஸ், மகா அலெக்சாண்டர், மகாத்மா காந்தி, நெப்போலியன், சுவாமி விவேகானந்தர், ஆபிரகாம் லிங்கன், அன்னை திரேசா, நெல்சன் மண்டேலா, வே.பிரபாகரன் போன்றவர்கள் தனி மனிதராக இருந்து மக்கள் பலத்தை தமதாக்கிக் கொண்டவர்கள்.

ஆக, தனி மனித சக்தி என்பது சாதாரணமான தன்று. அந்தச் சக்தியை இனம் கண்டு அதற்கு மக்களும் ஆதரவு வழங்குவார்களாக இருந்தால், இந்த உலகம் வியக்கத்தக்க அளவில் சாதனைகள் நடந்தாகும்.
இந்த வகையில் எங்கள் தமிழர் தாயகத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள் தாண்டவம் ஆடுகின்றன. அதிகாரிகளின் பழிவாங்கல்கள், அரசியல்வாதிகளின் செல்வாக்குகள், ஊழல் மோசடிகள் என்பனவற்றின் தாண்டவத்தில் பதவி ஆசை என்ற பேயும் ஏறிக்கொண்டதால் எல்லாமுமே துன்பம் தருவனவாகவே உள்ளன.

இருந்தும் இருள் சூழ்ந்த நேரத்திலும் ஆங்காங்கே ஒளிக்கீற்றுகள் தெரிகின்றன. வடக்கு மாகாண சபையின் முதன்மையில்; நீதித்துறையில்; சுற்றாடல் அமைச்சின் மரநடுகை முயற்சியில் தெரிகின்ற ஒளிக்கீற்று பலமான நம்பிக்கையைத் தருகின்றது.

இதற்கு மேலும் வலுச்சேர்ப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தியின் நிர்வாகப்பணி கண்டு மக்கள் வாயாராப் போற்றுகின்றனர். நல்லது எங்கு நடந்தாலும் அதை எம் மக்கள் நிச்சயம் போற்றுவர், பாராட்டுவர். எனினும் சமூக அக்கறை கொண்டவர்கள் மீது களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் காத்திருக்கவே செய்யும் என்பதால், சமூக அக்கறை கொண்டவர்களுக்கு அரசும் மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும். அப்போதுதான் எம் இனத்தின் துன்ப இருள் நீங்கும்.
வலம்புரி.

About The Author

Related posts