Thursday, January 18, 2018

.
Breaking News

அடிமனதில் நீந்தும் ஆசை …..! ( சிறுகதை )

அடிமனதில் நீந்தும் ஆசை …..! ( சிறுகதை )

சாருலதா… சாருலதா… சாருலதா…

தூக்கத்தில் தன்னை மறந்து பிதற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்த
கணவன் அரவிந்தனை திரும்பிப் பார்த்தாள் மதுபாலா. பாவம் எவ்வளவு இளகிய
மனம் இவருக்கு. ஒரு தொலைகாட்சி தொடரில் வரும் பாத்திரமான சாருலதா மலை
உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதை கூட தாங்கிக் கொள்ள
முடியாதவராக இருக்கிறாரே என்று ஆதங்கப்பட்டாள். அவரை எழுப்பலாமா என்று
ஒரு கணம் நினைத்தவள் ஏதோ நினைத்தவளாய் தூங்கும் கணவனை வாஞ்சையுடன்
பார்த்தபடியே கண்ணயர்ந்தாள்.

காலையுடன் எழுந்தவுடன் காபி குடித்த கையுடன் தெருவோரத்தில் இருந்த புத்தகக்
கடைக்குப் போய் தினசரியை வாங்கிவந்தவன் அதில் மூழ்கினான்.

“என்ன இழவு செய்தி இதெல்லாம்? எப்ப பார்த்தாலும் கொலை, தற்கொலை செய்திதானா?
வேறு செய்தியெல்லாம் இவங்களுக்கு கிடைக்காதா?” என்று அங்கலாய்த்தான் செய்தித்தாளை
புரட்டிக் கொண்டிருந்த அரவிந்தன்.

“நாட்டில் நடப்பதைத்தானே செய்தித்தாளில் போட்டிருக்கிறார்கள். உங்களைப்போல அதை
எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் இரவு முழுக்க சாருலதா… சாருலதா…என்று
என்று தூக்கத்தில் கூட புலம்புகிறார்கள்” என்றாள் மதுபாலா.

அவள் அப்படிச் சொன்னதுதான் தாமதம் அவனுக்கு குப்பென்று வியர்த்தது. மிகவும்
இரகசியமான அந்த விவகாரம் இவளுக்கு எப்படித் தெரிந்தது? என்று உள்ளுக்குள்
பயந்தவாறே,

“என்ன….. சொல்கிறாய், நீ? நான்…… சாருலதா…சாருலதா என்று புலம்பினேனா?” என்று தயங்கித்
தயங்கி கேட்டான்.

“ஆமாம். உங்களைபோல் இவ்வளவு இளகிய மனதுள்ள ஆட்களும் இருப்பார்களா என்று
நினைக்கவே வியப்பாகவுள்ளது. தொலைக் காட்சித்தொடரில் வந்த சாருலதா என்ற பாத்திரம்
தொடரில் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து இரவில் இப்படியா சாருலதா… சாருலதா…
என்று புலம்புவது?” என்று விளக்கினாள்.

அவள் சொன்ன விளக்கத்தைக் கேட்டபின்தான் அரவிந்தன் பயம் தெளிந்து யதார்த்த
நிலைக்கு வந்தான். அவன் மனது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்று சாருலதாவின்
நினைவை அடிமனத்திலிருந்து வெளிக்கொண்டு வந்தது.

பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த சாருலதா கோடை விடுமுறையில் அரவிந்தன் வீட்டுக்கு
சென்னை வந்திருந்தாள். தூரத்து உறவு என்றாலும் அடிக்கடி அரவிந்தனும்ம் அவன் அம்மாவும்
நாகர்கோவிலில் இருக்கும் சாருலதா வீட்டிற்கு செல்வதும் அவர்கள் வீட்டிலிருந்து சென்னை
வருவதும் வாடிக்கைதான். அப்படித்தான் அப்போது சாருலதாவும் வந்திருந்தாள். அரவிந்தன்
அப்போது கல்லூரியில் மூன்றாமண்டு பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தான்.

சாருலதாவை அரவிந்தன் சென்னையில்ல் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம்
கூட்டிச் சென்றான். ஆரம்பத்தில் இயல்பாய் இருந்தவர்களுக்கு இடையே நாளடைவில் காதல்
அரும்பத் தொடங்கியது. ஒருநாள் திரைப்படம் பார்பதற்கு மூன்று டிக்கட் ரிசர்வ் செய்திருந்தான்.
ஆனால் படத்திற்கு போகும் சமயத்தில் அரவிந்தனின் தாய்க்கு தலைவலி வந்துவிடவே
சாருலதாவையும் அரவிந்தனையும் அவனின் தாய் திரைப்படத்துக்கு அனுப்பி வைத்தாள்.

அதன் பின் அவர்களுக்கிடையே மிகவும் நெருக்கம் ஏற்பட்டது. சந்தர்ப்பம் கிடைத்து தனித்திருந்த
நேரமெல்லாம் அவர்களது உறவு வலுவடைந்தது. இருந்தாலும் படித்தவர்களாய்
இருந்ததினால் பெரியதவறு ஏதும் நிகழ்ந்து விடாமல் கவனமாகவே பார்த்துக் கொண்டார்கள்.
கோடைவிடுமுறை முடிந்து சாருலதா செல்லும்போது அவர்கள் இருவரது மனநிலையும்
ஒருவரின்றி ஒருவர் இருக்கமுடியாது என்ற நிலைக்கு வந்திருந்தார்கள்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம். பேருந்து சீக்கிரமே நிறுத்தத்தில் வந்து நின்றது. இருக்கை
எண்ணை சரிபார்க்கும் சாக்கில் இருவரும் பேருந்தில் ஏறினர். பேருந்தில் யாரும் இல்லாததால் அந்த
கடைசி நேரத்திலும் அவர்கள் நெருக்கத்தை இழக்க விரும்பவில்லை. அத்துடன் அதுவே மனம்விட்டு
பேச வசதியாய் இருந்தது.

“இனிமேல் நாம் இதுபோல் இருக்கமுடியுமா?” என்றான்.

“அதுதான் நீங்க எங்க வீட்டுக்கு வருவீங்க இல்லையா?”

அவள் சொன்ன பதிலில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன. அதற்குள் பயணிகள் வரத்தொடங்கினர்.
ஓட்டுனரும் வாகனத்தில் ஏறிஅமர அவளை விட்டுப்பிரிய மனமில்லாமல் பேரிலிருந்து இறங்கினான்.
பேருந்து புறப்பட்டு மெதுவாக நகர்ந்தது. கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றாள். கண்ணிலிருந்து பேருந்து
மறையும்வரை கையசைத்தபடியே சென்றாள். பேருந்து மறைந்ததும் அவன் கண்ணிலிருந்தும் கண்ணீர்
வடிந்தோடின.

ஒருவருடம் உருண்டோடியது. அரவிந்தனின் பெரியப்பவின் மகனுக்கு சாருலதாவின் பெரியம்மாவின்
மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடாகி ஏதோ காரணத்தால் தடை பட்டுப்போக இரு குடும்பத்துக்கும்
இடையே பேச்சு வார்த்தை நின்றுபோனது. அதன் விளைவு அரவிந்தனையும் சாருலதாவையும் பாதிக்கத்
தொடங்கியது. சில வருடங்களில் சாருலதாவின் திருமணம் நடந்ததை சொந்தக்காரர்கள் மூலம் அறிந்தனர்.
இதைக் கேள்விப்பட்ட அன்று இரவு முழுதும் படுக்கையில் அழுதுகொண்டே படுத்திருந்தான். காலம் தான்
ஆறாத வடுக்களை எல்லாம் மாற்றும் என்பதற்கிணங்க சிலவருடங்களில் அரவிந்தனின் திருமணமும்
நடந்தது.

பலவருடங்கள் பறந்தோட நெல்லையில் நடந்த உறவிணர் வீட்டுப் புதுமனை புகுவிழாவில் கிட்டத்தட்ட
பத்து ஆண்டுகளுக்குப்பின் சாருலதவைச் சந்தித்தான். அவனைப் பார்த்வுடன் அவள் முகத்தில் ஏற்பட்ட
பொலிவையும் மகிழ்ச்சியையும் சொல்ல இயலாது. அதேநிலைதான் அவனுக்கும். இருவரும் வெகுநேரம்
அக்கம் பக்கத்தில் இருப்பவர்க்ளையும் கூட கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசி
கொண்டிருந்தாலும் அவர்களது கண்கள் மட்டும் உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒருவர் உடலில்
மற்றவரென ஊர்ந்து கொண்டிருந்தன.

விழா முடிந்து சாருலதா வீட்டுக்கு செல்லும்போது தனது தொலைபேசி எண்ணை அரவிந்தனிடம் கொடுத்து
மறந்து விடாமல் அழைக்கும்படி கேட்டுக்கொண்டாள். அப்படிச் சொல்லி விட்டு அவள் சென்றதும் அவன் மனம்
ஆனந்தத்தில் கூத்தாடியது. இனம் புரியாத ஒரு இன்பம் அவனுக்குள் ஏற்பட அவனும் சிறுது நேரத்தில்
உறவினரிடம் சொல்லி விட்டு ஊர் திரும்பினான்.

மிகவும் ஆவ்லுடன் அவளிடம் உடனே பேச நினைத்தாலும் உடனே தொலைபேசியில் அழைக்க வேண்டாம்
என்று காத்திருந்தவன் இரண்டு வரங்கள் கழித்து தொலைபேசியில் சாருலதாவை அழைத்தான். மறுமுனையில்
அவள்தான் பேசினாள்.

“ஹலோ, யார் வேணும்?” தேன்போல் ஒலித்தது சாருலதாவின் குரல்.

“சாரு, நான்தான் அரவிந்தன்”

“அரவிந்தனா? எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?

“நானும் நல்லா இருக்கேன்”

வெகுநேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவன் அவளிடம்,

“என்னை நினைத்துப் பார்ப்பாயா?” என்று கேட்டான்

“மறக்க முடியுமா? உங்களைப்பற்றி அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். நீங்கள்
மற்றவர்களைவிட என்னிடம் மிகவும் அன்பாக இருப்பீர்கள் என்று சொல்வேன்”

“நானும் நீ சொன்னதை நினைத்துக் கொண்டே இருக்கிறேன்”

“நான் என்ன சொன்னேன்”

“கடைசியாக பேருந்தில் இனிமேல் நாம் இப்படி இருக்கமுடியுமா என்று கேட்டதற்கு நீ என்னிடம்
அதுதான் நீங்க எங்க வீட்டுக்கு வருவீங்க இல்லையா என்று சொன்னாய் அல்லவா? ஆனால்
அதன்பின் நாமிருவரும் தனித்திருக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அதைத்தான் நினைத்துக்
கொண்டிருக்கிறேன்.”

“………………………………”

“உன்னை என்னால் மறக்க முடியவில்லை. எப்போதும் உன் நினைவாகவே இருக்கிறது. இனிமேல்
நாம் அடிக்கடி பேசிக்கொள்வோமா?”

“சரி. பேசுவோம்”

“எனக்கு திருமணம் ஆகிவிட்டாலும் எப்போதும் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

“…………………………….”

“அன்று உறவினர் வீட்டுப் புதுமனை புகுவிழாவில் உன்னைச் சந்தித்தபோது நீ என் கண்கள் வழியே
புகுந்து என் மனத்தினுள் மீண்டும் குடியேறி விட்டாய்” என்று அவன் சொல்லி முடிக்கவும் தொலைபேசி
துண்டிக்கப்பட்டது.

என்ன இது நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள். தொலைபேசியின் இணைப்பில் பழுது ஏற்பட்டு
துண்டிக்கப்பட்டதா? அல்லது அவள் துண்டித்து விட்டாளா? என்று குழம்பினான். திரும்ப அழைக்கிறாளா
என்று சிறிது நேரம் காத்திருந்தும் அவளிடம் அழைப்பு வராததால் குழப்பமடைந்தான். ஒருவாரம்
சென்றவுடன் ஒன்றுமே நடவாதது போல் திரும்பவும் தொலைபேசியில் அழைத்தான். சாருலதா போனை
எடுக்க அவளிடம் கடந்த வாரம் தொலைபேசியில் பேசிக்கொடிருக்கும்போதே தொலைபேசி துண்டிக்கப்
பட்டதை நினைவூட்டினான். ஆனால் அதற்கு அவள் பதில்சொல்லாமல் இரண்டு தினங்களுக்கு முன்
தொலைபேசியில் அழைத்திருந்தீர்களா என்று அவனையே திரும்பக் கேட்டாள். அதற்கு அவன் இல்லை
என்றதும் யதார்த்தமாகப் பேச ஆரம்பித்தாள். வெகுநேரம் பேச்சு தொடர்ந்தது. ஆனால் அவனைப்பேச
விடாமல் அவளே பொதுவாக அவர்கள் குடும்பம் அண்ணன் தம்பி என்று பேசிக்கொண்டிருந்தாள்.
கடைசியாக அவ்னே முன் வந்து பேச்சை முடித்துக்கொண்டு இன்னொரு நாள் பேசலாம் என்றதும்
சற்று தடுமாறிய அவள் சரி என்றதும் தொலைபேசியை துண்டித்தான்.

அவள் தன்னுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்ததையும் தான் பேச்சை முடித்துக் கொள்ளலாம் என்றதும்
அவள் சற்று தடுமாறியதையும் எண்ணி ஒன்றும் முடிவுக்கு வர முடியாமல் குழம்பினான். ஒருவாரம் கழித்து
திரும்பவும் சாருலதாவை அழைத்தான் அரவிந்தன். அவளும் தொலைபேசியை எடுத்து நன்றாகவே
பேசினாள். ஆனால் அவனைப் பேசவிடாமல் பார்த்துக் கொண்டாள். பொருமை இழந்த நிலையில் அவன்
அவளிடம்,

“உன்னை என்னால் மறக்க முடியவில்லை” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் உடனே அவள் சற்றும் தாமதிதிக்காது, “அப்போது நான் சிறுபெண் அல்லவா?
பள்ளி இறுதி வகுப்புத்தானே படித்துக் கொண்டிருந்தேன்” என்றாள்.

அவளிடம் இப்பதிலை சற்றும் எதிர்பாராத அரவிந்தன் ஒருகணம் அப்படியே அதிர்ந்து போனான். அதற்கு
மேல் அவனுக்கு என்ன பேசுவது என்று ஒன்றும் புரியவில்லை. பலவிதமான எண்ணங்கள் அவனுள்
அலைமோதியது. மேற்கொண்டு என்ன பேசுவது என்று ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் ஏதேதோ
பேசிவிட்டு அவளிடமிருந்து விடை பெற்றான்.

அவனுள் பலவிதமான எண்ண ஓட்டங்கள் ஓட ஆரம்பித்தன. திருமணத்துக்கு முன் நடந்த எல்லாவற்றுமே மறந்து
விட்டாளா? அவன் அவளை இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் அவள் அவனை நினைக்கவில்லையா?
அல்லது தகாத உறவை வளர்த்துக்கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாமென இப்படிச் சொன்னாளா?
தனக்கு திருமணம் ஆகியிருந்தும் மனைவிக்கு துரோகம் செய்கிறோமே என்ற எண்ணம் தனக்கு ஏன்
ஏற்படவில்லை? தனது மனைவிக்கு துரோகம் செய்யும் அளவுக்கு தன்னுடன் நெருக்கமாக இருந்தாள் என்ற
ஒரே காரணத்துக்காக மாற்றானின் மனைவி ஆன பின்னும் அவளை விரும்புவது தவறு என்று தனக்கு ஏன்
தெரியாமல் போயிற்று? ஒருவேளை என்னைப்போல் அவளும் நாங்கள் நெருக்கமாயிருந்த எல்லாவற்றையும்
நினைத்துக் கொண்டிருந்தாலும் கணவனுக்கு துரோகம் செய்ய மனமில்லாமல் அவற்றை அடிமனதில் புதைத்து
வைத்திருக்கிறாளா என்று பலவிதமாக எண்ணினாலும் அவளை மட்டும் இன்னும் அவனால் மறக்க முடியவில்லை.

சாருலதா… சாருலதா… சாருலதா…

ஆழ்ந்த உறக்கத்திலும் அவளை மறக்க முடையாமால் அடிமனத்தில் குடிகொண்டிருந்த அவளைப்பற்றிய நினைவலைகள்
வெளியேற வாய் அவனையும் அறியாமல் அவள் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தது.

அருகில் படுத்திருந்த மதுபாலா அவன் பிதற்றியதால் கண்விழித்து, “பாவம் இந்த மனிதர். தொலைக்காட்சித் தொடரில்
வந்த சாருலதாவின் தற்கொலை இந்த அளவுக்கு இவரைப் பாதித்து விட்டதே. இன்னும் எத்தனை நாளைக்கு இதுபோல்
images (8)
புலம்பப் போகின்றாரோ என்ற பரிதாபத்துடன் தூங்கும் கணவனை அன்புடன் தடவிக்கொடுத்து இதமாக அவனைக்
கட்டி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தத்தையும் கொடுத்து தூங்கினாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts