Friday, February 23, 2018

.
Breaking News

கற்றலும் பயனும்:

திருக்குறள் முதல் அத்தியாயத்தில் முதல் குறளான “அகர முதல” என்று தொடங்கும் குறளில் இயற்கையின் தோன்றலான ஆதவனை வாழ்த்திவிட்டு அடுத்த ஒன்பது குறளிலும் திருவள்ளுவர் வாழ்வியல் தத்துவத்தைத்தான் விளக்கியிருக்கிறார். இரண்டாவது குறளான,

“கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்”

என்ற குறளில் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை சற்று எண்ணிப் பார்ப்போம். முதல் குறளைக் கடவுள் வாழ்த்தாகக் கொண்டு அடுத்த எல்லா குறளிலும் கடவுளைத்தான் வாழ்த்தி இருக்கிறார் என்று எண்ணுவதை அப்படியே எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? முதல் குறளில் வாழ்வுக்கு ஆதாரமான ஆதவனை வாழ்த்திவிட்டு அடுத்த குறளிலெல்லாம் மனித வாழ்வுக்கு தேவையான வாழ்வியலை விளக்கியுள்ளார் என்ற கண்கொண்டு பார்த்தால் நம் கண் நம்மை நிச்சயம் ஏமாற்றாது. “வாலறிவன்” என்ற சொல்லை கடவுளாக எடுத்துக் கொண்டு கற்றவர்களுக்கு கற்றதனாலாய பயனென்றால் கடவுளை வணங்குவதுதான் என்று பொருள் கொள்ளக்கூடாது.

அப்படிப் பொருள் கொண்டால் கல்லாதவர்களைப் பற்றி திருவள்ளுவர் கண்டு கொள்ளவில்லை என்ற அவப் பெயரை நம்மையறியாமலே நாம் அவருக்கு ஏற்படுத்தி விடுகிறோம். ஆதலால் இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டுமென்றால் முதலில் நாம் வாலறிவனைப் பற்றிய சந்தேகத்தையும்

போக்க வேண்டும். வாலறிவன் என்றால் நன்கு கற்றுத்தெளிந்த ஆன்றோர் என்று சொல்லும்படியான பெரிய சான்றோர் எனப்படுவர். அடுத்தபடியாக “நற்றாள் தொழாஅர்” என்பதற்கு சிறந்த பாதங்களை பணியாதவர் என்று பொருள் சொல்வர். காலில் விழுவது தமிழரின் பண்பாடு என்பதுபோல் முத்திரை குத்தி விட்டார்கள். தன்மானத் தமிழனின் நாகரிகத்தை காலில் விழும் நாகரிகமாக மாற்றியது மன்னராட்சி காலம்தான். இதற்கு வித்திட்டவர்கள் யார் என்பதையும் ஆராய்ந்தால் புரியும். மன்னராட்சி

மறைந்தாலும் பாழாய்ப்போன காலில் விழும் பழக்கத்தை மட்டும் இன்னும் தமிழன் மறக்கவில்லை.

சரி, மன்னராட்சிக்கும் காலில் விழுவதற்கும் என்ன சம்பதம்? சம்பந்தம் இருக்கிறது. அக்காலத்தில் மன்னர் தங்கள் நாட்டை விரிவுபடுத்திக் கொள்வதில் மிகுந்த நாட்டமுடுடையவர்களாய் இருந்திக்கிறார்கள். இப்படி

செய்வது சிற்றரசர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. இதைச் செய்ததெல்லாம் பேரரசர்தான்.

மன்னராட்சி காலத்தில் தோல்வியடைந்த மன்னர்கள் தங்கள் மகுடத்தை கழற்றி வெற்றி அடைந்த பேரரசனின் காலடியில் வைப்பார்களாம். அப்படி வைக்கும் போது அவர்களின் தலை வெற்றியடைந்தவரின் காலடியில் தாழ்ந்து இருக்கும். இப்படி இங்கிருந்து ஆரம்பித்ததுதான் காலில் விழும் பழக்கம். இதை விடுத்து மனிதன் தலை சாய்வதென்றால் முதலில் தாய் வயிற்றிலிருந்து வெளிவரும்பொழுது இயற்கையான மண்ணை நோக்கி தலை சாய்க்கிறான். கடைசியாக மண்ணில் சரிந்து மடியும்போதும்தான் தலை சாய்க்கிறான். இடையில் தலை சாய்வதெல்லாம் ஒன்று படுக்கையில் மற்றது இடறி விழும்போதும்தான். மற்றதற்கெல்லாம் காலிலும் விழுவதென்பது சுய நலத்துக்காக யாரோ எப்பவோ ஏற்படுத்திவிட்ட பழக்கம்தான் இன்று வரை தொடர்கிறது. வேறு நாடுகளிலெல்லாம் இப்பழக்கம் இருக்கவா செய்கிறது?

இனி குறளுக்கு வருவோம். “நற்றாள் தொழாஅர்” என்றால் காலில் விழுந்து வணங்காவிட்டால் என்று நேரடியாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொழு என்றால் அதிகமாக நேசிப்பதாம். நற்றாளை எப்படி

நேசிப்பது? அந்த அடிகளைப் பின்பற்றுவது அதாவது அவர் வழிச்செல்வது. ஊர் சிரிக்கிற்தென்றால் ஊரா சிரிக்கிறது? ஊரிலுள்ள மக்கள் தானே சிரிக்கிறார்கள். இதுபோல் தான் நாற்றாள் தொழாஅர் எனின் என்றால்

நல்வழியைப் பின்பற்றாவிட்டால் என்றே அர்த்தம். இப்போது குறளின் முழுப்பொருளையும் காண்போம். நன்றாகக் கற்றுத் தெளிந்த சான்றோரைப் பின்பற்றி அவரது நல்வழிச் செல்லாவிட்டால் கற்றதனால் என்ன பலன் என்று பொருள் சொல்கிறார் வள்ளுவர்.

மேலும் கற்றவர்கள் கல்லாத மூடர்களின் பின் செல்லக்கூடாது என்பதையும் மூடனுக்கு புத்தி சொன்னால் கேடுவரும் என்பதையும் மறைமுகமாகவும் சொல்கிறார். இதன்மூலம் கல்லாதவரையும் கற்கத் தூண்டுகிறார். இதில் கடவுள் எங்கு வருகிறார்? கடவுளுக்கென்று ஏகப்பட்ட மத நூல்கள் இருக்கையில் அவரைத் திருக்குறளுக்கு உள்ளும் கொண்டுவந்து மதச் சார்பற்ற நூலை மாற்றும் முயற்சி தவிர்க்கப்படல் வேண்டும்.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts