Wednesday, November 22, 2017

.
Breaking News

“திருவள்ளுவரும் திருக்குறளும்”

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

இக்குறளுக்கு விளக்கம் கடவுளை முன்னிறுத்தியே கடவுள் வாழ்த்து என்ற கோணத்தில் பெரும்பாலோரால் வழங்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்கு மறுகருத்துக் கூறக்கூடியவரும் ஏராளம் உண்டு. பெரும்பாலானோர் ஆதி பகவன் என்ற சொற்களில் தான் வேறுபட்டு மாறி நிற்கிறார்கள். ஆதியைத் திருவள்ளுவருக்குத் தாய் என்றும் பகவனைத் தந்தை என்றும் கருத்து கூறுவர் ஒரு சாரர். தாய் தந்தை அல்ல என்பார் இதில் சாரார். சிலர் ஆதி என்ற சொல்லுக்கு முதல்

என்றும் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள் என்றும் பொருள் கண்டு ஆதி பகவன் என்றால் முதற்கடவுள் என பொருள் கண்டனர். அப்படியானால் அவர் யார்? மதங்கள் தோன்றுவதற்கு முன் வந்தவரா? அல்ல மதம் தோன்றியபின் வந்தவரா? என்ற கேள்வி சர்ச்சையை ஏற்படுத்துகிறது. மதம் தோன்றுவதற்கு முன் கடவுள் கிடையாது. மதம் தோன்றிய பின் என்றால் ஏகப்பட்ட கடவுள் இருக்கிறார்கள். அப்படியே ஏதாவதொரு கடவுளை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் அது முடியாது. ஏனென்றால் ஒன்று அது பாரபட்சத்தில் முடியும் அல்லது திருக்குறள் மதச்சார்பற்ற நூல் என்பது கேலிக்கூத்தாகிவிடும்.

இப்போதுதான் ஆய்வு தேவைப்படுகிறது. இதற்கு இலக்கணத்தை துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஒரு சொல்லில் ஒரு எழுத்து மறைந்து போவது வழக்கு. உதரணத்துக்கு “வையகம்” என்ற சொல்லில் “க” என்ற எழுத்து மறைந்து “வையம்” என்று மாறுகிறது. “சிறியவர்” என்பது “சிறுவர்” என்றும் “தென்னவன்” என்ற சொல் “தென்னன்” என்று மாறிவருவதும் எடுத்துக்காட்டு. இதேபோல் பகலவன் என்ற சொல்லில் “ல” எழுத்தை மறைத்து பகவன் என்று காட்டியிருக்கலாம். அத்தோடு அச்சொல்லுக்கு கடவுள் என்று பொருள் வருவதால் அதையே சாதகமாகப் பயன்படுத்தி முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாக மாற்றியிருக்கலாம்.

இதையே இன்னொரு கோணத்திலும் அலசலாம். நமது இலக்கியங்களெல்லாம் மிகவும் தொன்மையானது. அவைகள் எல்லாம் பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டிருந்தமையால் காலப்போக்கில் பனை ஓலை சிதிலமடைந்து எழுத்துக்கள் அழிந்துபோயிருக்கலாம். அதை சாதகமாக்கி குறளின் எழுத்தை மாற்றி வள்ளுவன் கருத்தை திசை திருப்பியிருக்கவும் வாய்ப்புண்டு.

இனி திருக்குறள் ஒரு மதச் சார்பற்ற நூல் என்ற நிலைகொண்டு கருத்தைக் காண்போம். மொழிகளுக்கு எல்லாம் முதல் எழுத்து “அ”கரம் என்றால் உலகத்தின் முதல் தோற்றம் பகலவன் (ஆதவன்) ஆகும். இன்னொரு வகையிலும் பொருள் காணலாம். “அ”கரத்தை முதலாய்க் கொண்ட மொழிகளெல்லாம் தோன்றுமுன்னே உலகில் ஆதவன் தோன்றினான் என்பது ஒரு பொருள்.

ஆதவன் தோன்றியதால் தான் கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்தது. மழை பெய்ததைத் தொடர்ந்து புல் பூண்டுகளும் பயிர்வகைகளும் வளர்ந்து செழித்தன. அதன் பின் தான் மனித இனம் தோன்றியது. மனிதன் தோன்றியபின் அவன்பேச மொழிகள் பிறந்தன. எனவே மொழி பிறக்குமுன்னே உலகில் ஆதவன்

தோன்றிவிட்டான் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

மனிதன் தோன்றியபின் தான் மொழி, மதம் எல்லாம் தோன்றியது. மதத்துடன் கடவுள் தோன்றினார். ஆதலால் மனிதன் பேசிய மொழி தோன்றுமுன்னே பகலவன் தோன்றிவிட்டான் என்பதும் உண்மை. இந்த பகலவன் இயற்கையின் ஓர் அங்கம். ஆதலால் முதலில் மதம் தோன்றும் முன் மனிதன் இயற்கையைத் தான் வணங்கினான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனவே திருவள்ளுவர் பகலவனைத்தான் முதல் குறளில் வாழ்த்தியிருக்கிறார் என்பதையும் உணரமுடிகிறது.

ஆதி என்ற சொல்லுக்கு ஆதவன் என்றொரு பொருளுடன் முதல் மற்றும் ஆரம்பம் என்றெல்லாம் பொருள் உண்டு. அதே சமயம் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருளுடன் ஆதவன் என்ற பொருளும் வருவதால் எப்படிப் பார்த்தாலும் ஆதி பகவன் என்றால் ஆதவனைத்தான் குறிக்கிறது என்பதில் எந்த அளவுக்கும் சந்தேகமில்லை. எனவே முதற்குறளில் ஆதவனை வாழ்த்துவதின் மூலம் இயற்கையை திருவள்ளுவர் வணங்கி வாழ்வியலைத் தொடங்கியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாய் புலனாகிறது.

-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts