Tuesday, February 20, 2018

.
Breaking News

கலைவளன் சிசு. நாகேந்திரன் – வயது 97….!

கலைவளன் சிசு. நாகேந்திரன் – வயது 97….!

நாம் கடக்கவிருக்கும் பாதையை கடந்துகொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவின் தங்கத்தமிழ்த்தாத்தா!

முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்

முருகபூபதி

” கொழும்புக்கே வந்துவிட்டேன். நீங்கள் எப்போது வந்தீர்கள்..?”

” நானும் இன்றைக்குத்தான் வந்தேன்”

” ஊருக்குப்போகவேணும்…? எப்படி போவது…?”

” யாழ்தேவி ஓடுது… போகலாம். ”

” டிக்கட் எடுக்கவேணும்”

” எடுக்கலாம்… முதலில் நீங்கள் ஓய்வு எடுங்கள்”

அவரிடமிருந்து பெருமூச்சு உதிர்ந்தது.

இந்த உரையாடல் மெல்பனில் Dandenong அரச மருத்துவமனையில் எனக்கும் அவருக்கும் இடையே ஒரு பகல்பொழுதில் நடந்தது.

நான் பேசிக்கொண்டிருந்தது எங்கள் அவுஸ்திரேலியாவின் தங்கத்தாத்தா கலைவளன் சிசு. நாகேந்திரனுடன்.

அன்று மதியம் கேசி தமிழ் மன்றத்தின் மூத்த பிரஜைகள் சங்கத்தைச்சேர்ந்த அன்பர் நவரத்தினம் அவர்களை நானும் எமது குடும்ப நண்பர் கணக்காளர் அன்பர் முருகையாவும் சந்திக்கச்சென்றிருந்தபோதுதான் எங்கள் நீண்ட கால நண்பர் கலைவளன் சிசு நாகேந்திரன் அய்யா அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை அறிந்தோம். கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் உடனடியாக பார்க்க வந்திருந்தோம்.

என்னைக்கண்டதும் அவரது முகத்தில் பிரகாசம். புன்னகையுடன் பேசினார். அவர் கட்டிலிலிருந்து அடிக்கடி

இறங்குவதனால் எழுந்திருக்க முடியாதவகையில் ஒரு மடக்கு ஆசனத்தில் கிடத்தியிருந்தார்கள். அவருக்கு எழுந்து நடக்கவே விருப்பம். ஆனால், தாதியர்தான் அவருக்கு பகல்பொழுதில் அத்தகைய ஆசனத்தையே படுக்கையாக்கியிருந்தமைக்கான காரணத்தை சொன்னார்கள்.

அவருக்கு உணவு அருந்துவதில் விருப்பம் குறைந்திருப்பதாகவும் அறியமுடிந்தது. மதிய உணவு வந்ததும் அவருக்கு ஊட்டிவிடுவதற்கு நானும் அன்பர் முருகையாவும் முயன்றோம். அவர் மறுத்தார்.

தான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டதாகச்சொன்னார்.

“இல்லை. அவர் சாப்பிடுகிறார் இல்லை” என்று அருகிலிருந்த தாதி சொன்னார்.

நாம் அங்கு நின்ற சுமார் அரைமணிநேரம் வரையில் அவரை சாப்பிடவைப்பதற்கு முயன்றும் முடியாமல் கவலையுடன் திரும்பநேர்ந்தது.

நாம் இனிவரும் காலத்தில் கடக்கவிருக்கும் கணங்களை அவர் கடந்துகொண்டிருக்கிறார். “அவர் எழுத்தாளர், சமூகப்பணியாளர், எங்கள் அவுஸ்திரேலியத்தமிழ் இலக்கியச்சங்கத்தின் காப்பாளர், நூல்களும் எழுதியிருக்கிறார். அகராதியும் வெளியிட்டுள்ளார். சிறந்த ஒளிப்படப்பிடிப்பாளர். எமதுதமிழ் சமூகத்தில் முக்கியமான ஒரு பெரியவர்” என்று அந்தத்தாதியிடம் கூறினோம்.

அந்தப்பெண்ணின் முகத்தில் வியப்பின் ரேகைகள் படிந்தன!

கலைவளன் சிசு அய்யாவுக்கு இந்த வருடம் ஓகஸ்ட் மாதம்9 ஆம் திகதி வந்தால் 97 வயது பிறக்கிறது. அவரை அடிக்கடி முன்னர் காணும்போது, ” அய்யா நீங்கள் செஞ்சரி அடிப்பீர்கள்!” என்பேன். முகம் மலர்ந்து சிரிப்பார்.

அவருடைய ” பழகும் தமிழ்ச்சொற்களின் மொழிமாற்று அகராதி தமிழ் – ஆங்கிலம்” நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கின்றேன். அதற்கு முன்னர் வெளிவந்த அவருடைய நூல்களின் வெளியீட்டு விழாக்களிலும் உரையாற்றியிருக்கின்றேன்.

கே.சி. தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் குறிப்பிட்ட அகராதி வெளியீடு நடந்தபோது, அவரை வாசலிலிருந்து கைத்தாங்கலாக அழைத்துவருகையில்,” அய்யா தேனீர், கோப்பி அருந்துகிறீர்களா..?” எனக்கேட்டேன். ” பால் தேநீர் தாரும்.” என்றார். ” எத்தனை கரண்டி சீனி..?” எனக்கேட்டேன்.

” அகப்பை இருந்தால், இரண்டு போடும்” என்றார். நான் திகைத்துவிட்டேன்! “தனக்கு நீரிழிவு இல்லை” என்றார்!

அவர் தமது முதிய வயதிலும் யோகாசனம் செய்தவர். அதுபற்றிய காணொளி இறுவட்டும் வெளியிட்டவர். முடிந்தவரையில் மருத்துவமனையை தவிர்த்தவர். ஆனால், அவருடைய வயதிற்கு அங்கு செல்வதும் வருவதும் அனுமதிக்கப்படுவதும் சாதாரணமானது.

அவருடைய நலனில் அக்கறை செலுத்தும் பல அன்பர்கள் மெல்பனிலும் சிட்னியிலும் இருக்கிறார்கள். குறிப்பாக நான் அறிந்தவரையில், மருத்துவக்கலாநிதி ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை, பல்மருத்துவர் மதியழகன், அண்ணாவியார் இளைய பத்தமநாதன், கேசி தமிழ் மன்றத்தைச்சேர்ந்த அன்பர்கள் சிவசுதன், ஆவூரான் சந்திரன் மற்றும் ரமேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக எனது நினைவுக்கு வருகிறார்கள்.

சிசுஅய்யா மெல்பனில் ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலானவற்றில் மகத்தான சேவைகள் செய்தவர்.

இன்றும் அவருடைய உதவியை எமது கல்வி நிதியம் ஊடாக வடபகுதி மாணவர் ஒருவர் பெற்று வருகிறார். அந்த மாணவரும் நீடித்த போரிலே தந்தையை இழந்தவர்.

——————————-

காலம் தரித்து நிற்பதில்லை. அதனால் வயதும் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். இறுதியில் முதுமை வரும்பொழுது உடன் வரும் நண்பர்கள் தனிமை, இயலாமை, நனவிடை தோயும் இயல்பு. எல்லாம் போதும் என்ற மனப்பான்மை.

ஆயினும் – முதுமையிலும் ஒருவர் அயராமல் இயங்கியதென்பது கொடுப்பினை. ஒருசமயம் மருத்துவனையில் தங்கியிருந்த வேளையிலும் தமிழ் அகராதியொன்றை தயாரிப்பதற்காக குறிப்புகளை பதிவு செய்து வெளியிட்டவர் சிசு நாகேந்திரன்.

அயராமல் இயங்கி கலை, இலக்கிய மற்றும் சமூக நிகழ்வுகளுக்கும் வருகைதந்தவர். தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தற்போதைய காப்பாளர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியவர்.

யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது தந்தையார் தொழில் நிமித்தம் இப்பிரதேசத்தில் வாழ்ந்த காலத்தில் பிறந்த சிசு. நாகேந்திரன் அவர்களின் வாழ்வில் அவரது ஒன்பதாவது வயதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

நாகேந்திரனின் தந்தையார் முற்றும் துறந்த துறவியாகி குடும்பத்தையும் உத்தியோகத்தையும் விட்டுவிட்டு, வட இந்தியா நோக்கி ஒரு சந்நியாசிகோலத்துடன் புறப்பட்டுவிட்டார். ஒன்பது வயது நாகேந்திரன், அருமைத்தாயாரினதும் அன்பு அண்ணனினதும் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.

தந்தையார் இந்தியா வடக்கு நோக்கிச்செல்லவும், தாயார் இலங்கை வடக்கு நோக்கி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அந்நாளைய அரிவரி தொடக்கம் லண்டன் மற்றிக்குலேஷன் வரையில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் ( இன்றைய பல்கலைக்கழகம்) படித்த நாகேந்திரன், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று, London Chamber of Commerce உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார்.

1944 இல் மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களிடம் தட்டச்சாளராக பணியாற்றும் அரச நியமனம் கிடைத்தது. பின்னர் கொழும்பில் அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும்போது

கணக்காய்வாளராக பதவி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, 1979 இல் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.

நான்கு பிள்ளைகளின் தந்தை. ஒரு சாதாரண எழுதுவினைஞருக்குரிய ஊதியம். எளிமையான வாழ்க்கை. இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு அவர்களை உயர்த்தி விட்டு, தமது தந்தையைப்போன்றே ஒரு துறவுக்கோலம் பூண்டு அமைதியாக தனது பணியைத்தொடருகிறார்.

தமது துறவு வாழ்க்கையை சமூகத்திற்கு பலவழிகளிலும் பயன்படும்விதமாக இவர் அமைத்துக்கொண்டிருப்பதுதான் அவரது சிறப்பு. அத்துடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியானதாகவும் திகழுகிறது.

இளமைக்காலத்தில் படிப்பில் படு சுட்டி எனப்பெயரெடுத்த இவர், மாணவர் தலைவராகவும் பல்துறை விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், டெனிஸ், டேபிள் டெனிஸ் முதலானவற்றிலும் வல்லவராகியிருக்கிறார். அயராது இயங்கிய இவரது சூட்சுமும் இந்தப்பின்னணிகள்தான் என்பது எமக்குப்புரிகிறது.

இவரது கலை உலக வாழ்க்கையும் ஆரோக்கியமானது. தேடல் நிரம்பியது. கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலத்தில், ‘ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்’ இவரை உள்வாங்கியிருந்தமையால் இம்மன்றம் மேடையேற்றிய பல நாடகங்களில் தோன்றினார். யாழ்ப்பாணம் திரும்பியதும் அச்சுவேலி ராஜரட்ணத்துடன் இணைந்து அந்நாட்களில் பிரபல்யமாகியிருந்த ‘சக்கடத்தார்’ என்னும் நாடகத்தில் ஒரு பாத்திரமானார்.

இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கும் என்பது நாகேந்திரனின் அபிப்பிராயம். யாழ்ப்பாணத்தில் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம், திருநாவுக்கரசு (மருத்துவர். நந்தியின் சகோதரர்) ஆகியோருடனும் இணைந்து

இயங்கியிருக்கிறார். ரகுநாதனின் நிர்மலா, வி. எஸ். துரைராஜா தயாரித்த குத்துவிளக்கு முதலான திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.

ஆச்சிக்குச்சொல்லாதை, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல, தொடாதே, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப… இது இப்ப… முதலான பல நகைச்சுவை நாடகங்களிலும் நடித்திருக்கும் நாகேந்திரன், யாழ். திருநெல்வேலி நாடக அரங்கக்கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட வையத்துள் தெய்வம், கந்தன் கருணை, அன்னத்துக்கு அரோஹரா, கூடி விளையாடு பாப்பா, இனி என்ன கலியாணம், கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலானவற்றிலும் நடித்திருப்பதுடன், பொறுத்தது போதும், கோடை ஆகியவற்றின் மேடையேற்றத்தின்போது அரங்க நிர்மாணப்பணியையும் திறம்பட மேற்கொண்டிருக்கிறார்.

அந்நாட்களில் தமிழ் வானொலி நேயர்களின் விருப்பத்துக்குரிய நாடகங்களாகத் திகழ்ந்த சிறாப்பர் குடும்பம், லண்டன் கந்தையா முதலானவற்றிலும் நடித்திருக்கிறார்.

இங்கிலாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கும் இவர், அங்கு ‘களரி’ நாடகப்பள்ளியின் சார்பாக மேடையேறிய புதியதொரு வீடு, அபசுரம், எந்தையும் தாயும் முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.

1994 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தருணத்தில் கலைஞர் தாசீசியஸ் உட்பட பலர் இவருக்கு அளித்த பிரிவுபசார வைபவத்தில் ‘கலைவளன்’ என்ற பட்டமளிக்கப்பட்டார்.

இவ்வாறு ஒரு நாடகக் கலைஞனாக தமது இருப்பை வெளிப்படுத்திக்கொண்டவர், அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தன்னை ஒரு எழுத்தாளனாகவும் நிலைநிறுத்திக்கொண்டார்.

தான் இந்த கங்காருநாட்டில் ஒரு எழுத்தாளனாக மாறியதும் விந்தையான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். தமது

பேத்திக்கு அந்தக்கால யாழ்ப்பாணம் எப்படி இருந்தது…? எனச்சொல்லிக்கொடுப்பதற்காக எழுதிய கட்டுரைகளே பின்னர் சிட்னியிலிருந்து வெளியாகும் கலப்பை இதழில் பிரசுரமானது என்றார். (கலப்பை இதழின் ஆசிரியர் – மருத்துவர் கேதீஸ்வரன்) குறிப்பிட்ட கட்டுரைகளே பின்னர் அதே பெயரில் தமிழகத்தில் நூலுருவாகி பலரதும் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றது.

இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பினால் உற்சாகமடைந்த சிசு. நாகேந்திரன், பிறந்த மண்ணும் புகலிடமும் என்னும் மற்றுமொரு கட்டுரைத் தொகுதியையும் வரவாக்கினார். இந்நூலை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வெளியிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர் விழாவிலும் பின்னர் மெல்பனில் நடந்த இலக்கிய ஒன்று கூடலிலும் விமர்சன அரங்கில் இந்நூல் இடம்பெற்றது.

நாடகக்கலைஞனாக அறிமுகமாகி எழுத்தாளனாக தன்னை வளர்த்துக் கொண்ட சிசு. நகேந்திரன், சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார். முன்னர் உலகம் சுற்றிய இந்த இளைஞர், தற்பொழுது முதுமை தரும் சில உபாதைகளை கடக்கிறார்.

கடந்த 2014 ஆண்டு அவரது மனைவி சிட்னியில் காலமாகிவிட்டார். ஆனால், அவரை அங்கு பயணிக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவரது உடல்நிலைதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

எனினும் இன்றைய நவீன உலகம் அவரை மனைவியின் இறுதிச்சடங்குகளை ஸ்கைப் வழியாக பார்ப்பதற்கு வசதி செய்துகொடுத்தது.

வாழ்க்கையில் நாம் கடக்கவேண்டிய காலத்தை கலைவளன் சிசு. நாகேந்திரன் கடந்து செல்கிறார். ஆனால், சோம்பிக்கிடக்காமல் இயங்கிக்கொண்டே அவர் கடந்ததுதான் எமக்கெல்லாம் முன்மாதிரியானது.

அவரைப்பார்க்கும்தோறும் மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வரும்.

” தேடிச்சோறு நிதந்தின்று – பல

சின்னஞ் சிறு கதைகள்பேசி – மனம்

வாடித்துன்பமிக உழன்று – பிறர்

வாடப் பல செயல்கள் செய்து – நரை

கூடிக் கிழப்பருவம் எய்தி -கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப்போலே – நான்

வீழ்வே னென்று நினைத்தாயோ ”

அவுஸ்திரேலியா ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் (2007 இல்) இவரது சேவைகளை பாராட்டி கௌரவித்து விருது வழங்கப்பட்டது. ஞானம் இதழ் இவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் சிட்னியில் அவுஸ்திரேலியா கம்பன் கழகம் இவரது சேவைகளைப்பாராட்டி மாருதி விருது வழங்கி கௌரவித்து தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது.

கலை, இலக்கியம் மற்றும் சமூகப்பணிகளில் சகலராலும் நேசிக்கப்படும் கலைவளன் சிசு. நாகேந்திரன் விதந்து போற்றுதலுக்குரிய பண்பாளர். முன்மாதிரியானவர். அவர் ஆரோக்கியமுடன் வீடு திரும்பவேண்டும்.

இறுதியாக மெல்பனில் நடந்த அண்ணாவியர் இளைய பத்மநாதன் அவர்களின் கூத்து அரங்காற்றுகைக்கும் வருகை தந்தார். அவருடைய கலாரசனைக்கு முதுமை இல்லை. எம்மத்தியில் ஆளுமையுள்ள செயற்பாட்டாளராக விளங்கிய சிசு. நாகேந்திரன் அய்யாவை அன்று Dandenong அரச மருத்துவமனையில் பார்த்துவிட்டு திரும்புகையில், அவரை யார் யார் வந்து பார்த்தார்கள்? என்பதை அவரிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொள்ள முடியாத சூழலில், அவருடைய நலன்களில் அக்கறை கொண்டிருக்கும் பல் மருத்துவர் மதியழகனுக்கும், திருமதி உஷா சந்திரன் அவர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்.

அவர் தற்பொழுது Rehabilitation centre க்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

விபரம்: Casey Aged care, 300, Golf Links Road, Narre Warren, Room #

88

–0—

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *