Tuesday, February 20, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்…11…..நாவல்…. சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்…11…..நாவல்….  சங்கர சுப்பிரமணியன்.
அந்த அமைதி சிறிது நேரம் தொடர்ந்தது. அந்த அமைதியிலும் யாரோ பேசுவதுபோல் கேட்டது. அது
யாரென்று தெரியாவிட்டாலும் அவர்கள் பேசிக்கொண்டிருந்த வரவேற்பறைக்கு அறைக்கு பக்கத்து அறையில்
இருந்துதான் அச்சத்தம்கேட்டதால் உலகநாயகம் சம்பந்தியிடம் பக்கத்து அறையிலிருந்து பேசும் குரல்
கேட்கிறதே இந்த நடுநிசியில் தூங்காமல் யார் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒருவர் குரல் மட்டுமே
கேட்கிறது மற்றவர் யாரும் பதில்பேசுவதாகவும் தெரியவில்லை. ஒருவேளை தூக்கத்தில் கனவுகண்டு
கனவிலேயே பேசுகிறார்களா? கனவில் பேசினாலும் கொஞ்சநேரம்தான் பேசமுடியும். ஆனால் இக்குரல்
ரெம்ப நேரமாகவே கேட்டுக்கொண்டிருக்கிறதே? என்ன சம்பந்தி இது என்று உலகநாயகம் கேட்டார்.
உலகநாயகம் கேட்டுமுடித்ததும் அதுவரை அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்த குணசேகரனின் தந்தை
அடக்கிவைத்திருந்த துக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்டார். அவர் ஒருசிறு குழந்தைபோல்
கேவிக்கேவி அழுதது உலகநாயகத்தையும் உலகநாதனையும் விட்டு வைக்காததால் அவர்களும் கூடச்
சேர்ந்துஅழ கொஞ்சநேரத்தில் அந்தவீடே துக்கம் நடந்த வீடுபோல் மாறியது. அப்படி அவர்கள் அழுது
கொண்டிருக்கையில் அவர்கள் வந்ததுதெரியாமல் வேறு அறையில் தூங்கிகொண்டிருந்த குணசேகரனின்
அம்மா அழுகையொலி கேட்டு என்னவோ ஏதோ தெரியலையே ஒருவேளை மகனுகுத்தான் விபரீதமாக
ஏதாவது நடந்துவிட்டதோ என்னவோ என்று என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று கேட்டபடியே தூக்கத்திலிருந்து
எழுந்து பதறியடித்துக்கொண்டே வந்தாள். அந்தவள் சம்பந்தியையும் உலகநாதனையும் பார்த்து,
“வாங்க சம்பந்தி, வாங்க தம்பி, நீங்க எப்பவந்தீங்க. ஏன் எல்லாருமா சேர்ந்து அழுறீங்க. என்பிள்ளைக்கு
ஏதாவது ஆயிடுச்சா. இடிமேல் இடியாக இன்னும் என்னத்தயெல்லாம்தான் தாங்குறது. சொல்லிட்டு
அழுங்க” என்று வேதனையுடன் கூறினாள்.
“ஓன்னுமில்ல சம்பந்தியம்மா. மாப்பிள்ளயப்பத்தி பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கையிலேயே
யாரோ பேசுவதுபோல இருந்தது. அப்புறம்பார்த்தா அந்தசத்தம்  பக்கத்து அறயிலே இருந்துதான் வருதுன்னு
தெரிஞ்சுது. அது என்ன என்று சம்பந்தியிடம் கேட்டேன். கேட்டவுடனேயே பதில் ஏதும் சொல்லாமல்
சம்பந்தி அழ ஆரம்பிச்சுட்டாரு. அவர் அழுவதைப்பார்த்த எங்களுக்கும் மனசுல அடக்கி வச்சிருந்த துக்கம்
எல்லாம் தொண்டைக்குவர எங்களாலும் கட்டுப்படுத்த முடியாம அழுதுட்டோம்” என்றார் உலகநாயகம்.
இப்படி உலகநாதன் சொல்லவும் உடனே சம்பந்தியம்மாளும் சேர்ந்து ஒப்பாரி வைக்க அக்கம்பக்கத்தில்
இருப்பவர்களெல்லாம் குணாவுக்கு ஏதும் ஆகிவிட்டதோவென என்னவெல்லாமோ எண்ணிக்கொண்டு
ஓடிவந்தார்கள். வந்தவர்கள் பதறியபடியே என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லோரும் சேந்து அழுறீங்க என்று
கேட்கவும் சம்பந்தியம்மா அழுகையை நிறுத்திவிட்டு நடந்ததைச் சொன்னாள். அதைக்கேட்ட வந்திருந்த
அக்கம்பக்கத்தினர் இப்படி அழாதீங்கம்மா. என்னவோ ஏதோன்னு பயந்துட்டோம். நடுராத்திரிக்குமேல்
இப்படி எல்லோரும் கூடி அழுதா என்னன்னவோ நினைக்கத்தோனுது. குணாதம்பிக்கு ஒன்னும் ஆகாது.
பெரிய விபத்துக்கு ஆளானபிள்ள இந்தமட்டுக்கும் பொழச்சு உசுரோட இருக்கே அதநெனெனச்சு மனச
சமாதானப்படுத்திக்குங்க என்று ஆறுதல் சொல்லி விட்டுப்போனார்கள்.
அவர்கள் சென்றவுடன் பக்கத்து அறையிலிருந்தும் பேச்சுச்சத்தம் வருவது நின்றுபோயிருந்தது. அப்போதான்
சம்பந்தி பக்கத்து அறையில் இருப்பது குணசேகரன் என்றும் இது எப்போதும் நடப்பதுதான் என்றார்.
இப்படித்தான் தனக்குத்தானே எதையாவது பேசிக்கொண்டிருப்பான். ஆனால் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு
மாதிரி பேசுவான். சிலசமயங்களில் மிகவும் மெதுவாக முனுமுனுப்பதுபோல் பேசுவான். சிலசமயங்களில்
அதிகச்சத்தத்துடன் விவாதம் பண்ணுவதுபோல் கோபமாகப்பேசுவான். சமயங்களில் சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டும் பேசுவான். இன்று அவன் யாரோடோ விவாதம் பண்ணுவதுபோல் அதிகச்சத்தத்துடன்
பேசியிருக்கிறான். அதனால்தான் அவன் பேசியது உங்களுக்கு கேட்டிருக்கிறது. இப்படிப்பேசும்போது பேச்சு
நின்று போனால் ஒன்று அவனாக பேச்சை நிறுத்தி இருப்பான் அல்லது தூங்கோ இருப்பான். இப்போது
என்ன செய்கிறான் என்று பார்த்து வருகிறேன் என்று பர்த்துவரச்சென்றாள்.
அங்கிருந்து பக்கத்து அறைக்கு சென்று மெதுவாகக் கதவைத்திறந்து பார்த்தாள். அங்கே குணா ஒன்றும்
தெரியாத பச்சிளங்குழந்தை போல் கால்களை மடக்கி படுத்து தூங்கிகொண்டிருந்தான். பின் மெதுவாகா
கதவைச் சாத்திமூடிவிட்டு வந்தவள் குணா தூங்கிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள்.
இரவு நெடுநேரம் ஆகியிருந்தது. இருப்பினும் ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்று சம்பந்தியம்மா கேட்க
அதற்கு வந்தவர்களும் வரும்வழியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்ததாக சொன்னார்கள்.
அதைத்தொடர்ந்து அவர்கள் படுப்பதற்கு ஒருஅறையை ஏற்பாடுசெய்து கொடுத்தனர்.
“சரி, படுங்கள். இரவு நெடுநேரம் ஆகிவிட்டது. காலையில் எழுந்ததும் பேசுவோம்” என்று அவர்களுக்கு
ஏற்படுசெய்த அறையில் அவர்களை தங்கவைத்துவிட்டு வரவேற்பறையின் விளக்கை அணைத்தபடியே
தங்கள் அறைக்கு படுக்கச்சென்றனர் குணசேகரனின் பெற்றோர்.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *