Saturday, February 24, 2018

.
Breaking News

அரசியலில் இதெல்லாம் சகஜமய்யா!

அரசியலில் இதெல்லாம் சகஜமய்யா!
சிலவேளைகளில் சில இதுபோன்று நடப்பதுண்டு. நாம் சொல்ல வருவதொன்று
ஆனால் அது மக்களுக்கு சென்றடைவது வேறொன்று. இது சில சமயங்களில்
சொல்லவருபவரின்  விளக்கமற்ற சொல்லால் இருக்கலாம். அல்லது நம்மைப்
பற்றி மக்களுக்கு மிகவும் நன்றே புரியும் ஆதலால் விளக்கத்தேவையில்லை
இலேசாக கோடிட்டு காட்டினால் போதும் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற
மக்கள்மீது வைத்திருக்கும் அதிகமான நம்பிக்கையாயும் இருக்கலாம். இதை
மக்கள் சிலசமயங்களில் புரிந்துகொள்ளலாம். அல்லது அதுமக்களுக்கு புரியாமலும்
போகலாம். அப்படிப் புரியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் மக்களிடையே
பிரபலமான இன்னொருவர் அதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அல்லது தனது
புரிதலை மக்கள்மீது திணிக்க முற்பட்டால் அது விபரீதமாகிவிடும். அதுவும் சீமான்
போன்றோர் கமலஹாசன் போன்றோரின் சொல்லை எடுத்தியம்பும்போது நம்
சகோதரர்கள் சொல்வதுபோல வலுகவனமாக இருக்கவேண்டும். அப்படியில்லையெனில்
அது இருதலைக்கொள்ளி எறும்பின் கதையாக தன்பெயரையும் கெடுத்து அடுத்தவர்
பெயரையும் கெடுக்க வித்திடுவதாக அமைந்துவிடும்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றவர்கள் நினைப்பதுபோல் அப்படியொன்றும் ஒரேயடியாய்
மூடர்கள் அல்ல. திரைப்படமோகம், தனிப்பட்டவர் துதிபாடல், மதுவில் மூழ்கிக்கிடப்பது,
போன்றவற்றை சுட்டிக்காட்டினால் அது அறிவீனம். இப்படிப்பட்டவர்களின் விழுக்காடுகளை
அறிதல் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் தமிழ்கூறும் நல்லுலகில் எல்லா இடத்திலும்
இருக்கிறார்கள்.
இப்போது தலைவிரித்தாடும் பிரச்சினை கவிப்பேரரசுக்கு வாய்திறக்காத கமலஹாசன்
விஜயேந்திரருக்கு பரிந்து பேசுவதா என்பதுதான். இதை சீமான் சொல்லும்போதுதான்
வியப்பாயுள்ளது. கமலைப்பற்றி சீமானுக்கும் தெரியும் உலகுக்கும் தெரியும். கண்ட
இடத்திலெல்லாம் தமிழ்த்தாய் வாழ்துப்பாட வேண்டாம் என்று கமல் கூறியதுதான்
சீமானின் சீற்றத்துக்கு காரணம். கண்ட இடம் என்று கமல்கூறியதின் உட்பொருளை
சீமான் கவனிக்கத் தவறிவிட்டார். எச். ராஜா நடத்திய புத்தகவிழாவில் தமிழ்த்தாய்
வாழ்த்து பாடப்படுகிறது. அங்கே விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மதிப்பளிகத்
தவறிவிட்டார். அதனால்தான் கண்ட இடத்திலெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட
வேண்டாம் என்கிறார் கமல். கவிப்பேரரசை அவமானப்படுத்திய எச். ரஜா நடத்திய
புத்தகவிழாவில் தமிழ்த்தாய்கு எப்படி மரியாதை கிடைக்கும் என்ற கண்ணோட்டத்தில்
தான் கமல் அப்படிகூறினார் என்பதே அவர் கூற்றின் உட்பொருள்.
மதியாதார் முற்றம் மிதியாமை கோடிபெறும் என்பவரைப்பார்த்து எத்தனை முற்றத்தை
கமல் மிதித்திருக்கிறார் என்பது வேடிக்கையாய் உள்ளது. ஆண்டாளுக்காக குரல்
கொடுத்த எச். ராஜா அந்த ஆண்டாளின் வாய்மொழியான தமிழுக்கு இழுக்கு நேரும்
பொழுது அமைதியாக இருந்ததையும் தமிழறிஞர் சலமன் பாப்பையா திரையியிலேயே
அங்கவை சங்கவையைக் கொச்சைப்படுத்தி உடன் சென்றதுபோல் இங்கேயும்
தமிழ்த்தாய்க்கு இழுக்கு ஏற்படும்போது அமைதியாகத்தானே இருந்தாரென்ற ஆதங்கத்தில்
அந்த இடம் என்று குறிப்பிட்டுக் காட்டாமல் கண்ட இடத்திலெல்லாம் தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாடவேண்டாம் என்று கூறினார். இதுபோன்று தமிழ்த்தாய்க்கு மரியாதை
கிடைக்காத கண்ட இடத்திலெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டாம் என்று
கூறியிருந்தால் சீமான் போன்றோருக்கு புரிந்திருக்கும்.
எல்லாமே அரசியலாய் போய்விட்டது. சீமானின் தமிழ்த்தேசிய அரசியலில் தமிழருக்கே
இடம். இப்போது திரைத்துறையிலிருந்து இருபெரிய நட்சத்திரங்கள் அரசியலில் குதித்து
விட்டனர். அதில் ஒருவர் வேற்றுமொழியென்றால் இன்னோருவர் வேற்றினம் என்று
கூறமுடியாமல் கழுத்தைச்சுற்றி மூக்கைத்தொடுகிறாரா? தமிழ்த்தாத்தா கண்டெடுத்த
தமிழ்ச்சொத்துக்கள் எல்லாம் வேண்டாம் என்று தூர ஏறிந்துவிடுவாரா? யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனார் கூற்றை எப்படி எடுக்கப்போகிறார்? எம்மூர்
தமிழகம் எம்மவரே தமிழர் என்று மாற்றி அமைக்கப்போகிறாரா? ஏனெனில் நடிகர்
கமலஹாசனைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தும் விஜயேந்திரருக்கு பரிந்து பேசுகிறார்
என்று சீமான் சொல்வதை “அரசியலில் இதெல்லாம் சகஜமய்யா” என்று யாரோ
எங்கோ சொன்னதை எண்ணவே தோன்றுகிறது.
-சங்கர சுப்பிரமணியன்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *