Saturday, February 24, 2018

.
Breaking News

அன்னமிடல்!…. ( சிறுகதை ) சங்கர சுப்பிரமணியன்.

அன்னமிடல்!….  ( சிறுகதை )  சங்கர சுப்பிரமணியன்.
மதுரை பாஸஞ்சர் ரயில் செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு வேண்டாத கணவனுடன்
விரும்பாத மனைவி செல்வதுபோல் விதியே என்று போய்க்கொண்டிருந்தது. தென்காசி
ரயில் நிலையம் வந்ததும் நிற்க சிவலிங்கம் அதில் ஏறினார். அவரைப்பார்த்தாலே உடல்
உழைப்பு இல்லாமல் அடுத்தவர் இரத்தத்தை உறிஞ்சி வாழும் அட்டை வகையைச்
சார்ந்தவர் என்பது புரிந்தது. தும்பைப் பூவைப்போல் வெள்ளைவெளேர் என்ற வேட்டியும்
மடிப்பு கலையாத சட்டையுமாக இருந்தவர் முகத்தில் பணக்கார அம்சம் என்பதா அல்லது
திமிர் என்பதா ஏதோ ஒன்று அங்கே குடிகொண்டிருந்தது.
ஆடி ஆடி போகவேண்டுமே என்பதுபோல் போய்க்கொண்டிருந்த ரயில் பாவூர்சத்திரம்
ரயில்நிலையத்தில் வந்து நிற்கவும் பிச்சமுத்து ரயிலில் ஏறினான். வந்தவன் சிவலிங்கம்
எதிரில் வந்து அமர்ந்தான். அவன் வேட்டி துவைத்து துவைத்து நைந்துபோய் இருந்ததுடன்
பழுப்பேறியும் காணப்பட்டது. சட்டையும் என்ன நிறம் என்று சொல்லமுடியாதபடி ஒரு
நிறத்தில் இருந்தது. அவன் தோற்றத்தைபார்க்க பரிதாபமாக இருக்க அவனை ஏற இறங்க
பார்த்த சிவலிங்கம் இலேசாக கனைத்தபடி,
“என்னையா, எங்க போற?” என்றார்.
“மதுர போறனுங்க, அங்க தங்கச்சிய கட்டி கொடுத்துருக்கன். அதான் பார்க்கப்போறேன்”
“அப்படியா” என்றவர்
இவனோடுதான் மதுரை வரைபோகனுமா என்று எண்ணினாரோ என்னவோ அதற்குமேல்
பேசாமல் அமைதியானார். அடுத்த வந்த ரயில்நிலையங்களிலும் அந்த பெட்டிக்குள் யாரும்
ஏறவில்லை. இன்னும் மதுரைவரை போகவேண்டும் எவ்வளவு நேரம்தான் வாயை
மூடிக்கொண்டு போவது. இவனுடன் ஏதாவது பேச்சுகொடுத்து நேரத்தை ஓட்டலாம் என்று
நினத்துக் கொண்டிருக்கையிலேயே பிச்சமுத்து பேச ஆரம்பித்தான்.
“நீங்க எங்கங்க போறீங்க?” பிச்சமுத்து கேட்டான்.
“நானும் மதுரைக்குத்தான்யா போறேன்”
“அப்படிங்களா! நீங்களும் மதுரதான் போறீங்களா? சொந்தக்காரங்க யாரயும் பாக்கபோறீங்களா?”
“இல்லைய்யா. நான் போறது அன்னதானம் போடுறதுக்கு”
“ஏதாவது அனாதை இல்லத்துல இருக்கிறவங்களுக்கு சோறு போடப் போறீங்களா?”
“அதுல்லாமில்லய்யா. இது கோயில்ல. ஒரு ஐநூரு பேருக்கு அன்னதானம் பண்றன். கோயில்ல
அன்னதானம் கொடுத்தா பெரியபுண்ணியம்யா.” என்று பெருமையாகக் கூறினார்.
“அப்படிங்களா? புண்ணியம் கிடைக்குதோ இல்லையோ பசிக்கிற வயித்துக்கு சோறுபோட்டால்
அது நல்லதுதானே”
“நீயும் மதுரைக்குத்தானய்ய வற. நாளை மதியம் மீனாட்சி அம்மன் கோயில்லதான் அன்னதானம்.
ஓந்தங்கச்சி வீட்டிலயும் எல்லாத்தயும் கூட்டிட்டுவந்து அன்னதானம் சாப்பிட்டுட்டு போங்க”
“கூப்பிட்டதுக்கு சந்தோசங்க. ஆனா நாளைக்கு ஒருமுக்கியமான வேல இருக்குதுங்க”
“அப்பிடி என்னய்யா வேலை. கோயில்ல அன்னதானத்துக்கு வான்னு கூப்புட்டா அதவிட
முக்கியமான வேலன்ற”
இதுவரை சொல்லவேண்டாமே என்று நினைத்தவன் வேறுவழியின்றி சொன்னான். போனவருடம்
மதுரை வந்திருந்தபோது அவனது தங்கை பேச்சியம்மா ஒரு அனாதை இல்லத்தைப்பற்றி
அவனிடம் சொன்னாள். அவள் சொன்னது அவன் மனதை பாதிக்கவே அந்த அனாதை இல்லம்
கூட்டிச் செல்லும்படி கேட்க அவளும் கூட்டிச் சென்றாள். அன்கேசென்றதும் அவன் கண்டகாட்சி
அவனை மிகவும் உலுக்கியது. தொட்டில் குழந்தைகளில் இருந்து ஐந்தாறு வயதுள்ள குழந்தைகள்
முதல் கண்பார்வையற்றவர்கள் காதுகேளாதவர்கள் வாய்பேசமுடியதவர்கள் மற்றும் உடல்
ஊனமுற்றவர்கள் வயோதிகர்களென சுமார் இருநூறுபேர் இருந்தார்கள். அந்த அனாதை
இல்லத்தை நடத்துபவர்களும் அவ்வளவாக செல்வாக்கோ செல்வச் செழிப்புள்ளவர்களோ
இல்லை. அதை நடத்துவதற்கே மிகச் சிரமப்படுகிறார்கள். இருந்தாலும் அரும்பாடுபட்டு அந்த
அனாதை இல்லத்தை நடத்துகிறார்கள். நான் அங்கு சென்றபோது என்னால் இயன்ற உதவியைச்
செய்யச்சொன்னார்கள். எப்பவாவது அவர்களுக்கு ஒருவேளை உணவிடுமாறு கேட்டார்கள்.
நானோ அன்றாடங்காய்ச்சி என்பதும் வீடுகட்டும் சிற்றாள் பணியான கூலிவேலை செய்பவன்
என்பதும் அவர்களுக்கு தெரியாது என்றான்.
அவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவர், “அப்படியா அப்புறம் என்ன
ஆச்சு?” என்றார்.
அதற்கு அவன் தனக்கு சரியானவேலை எதுவும் தொடர்ந்து கிடையாது என்றான். அப்படியே
வேலை கிடைத்தாலும் அது வயிற்றுக்கே பற்றமாட்டேங்குது என்றான். அவன் அப்படிச்
சொன்னதும் அதுசரி உன்பிழைப்பே பெரியபிழைப்பாய் இருக்கையில் உன்னால் என்ன செய்ய
முடியுமென்று சொல்லி அவனை கையாலாகாதவனைப்போல் பார்த்தார். அவர் பார்த்த பார்வை
அவனை தன் நிலையை எண்ணி கூனிக்குறுக வைத்தது.
“ஆமாங்க. ஆனால் நான் அவர்களுக்கு ஒருநாள் காலையில் சிற்றுண்டியும் மத்தியானம்
மதியஉணவும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தேன். ஆனால் எப்போதென்று சொல்லமுடியாது
சிறுகசிறுக பணம் சேர்த்து மொத்தபணம் சேர்ந்ததும் தகவல்சொல்கிறேன் என்று சொன்னேன்.
இப்போது தகவலும் சொல்லி அனுப்பிவிட்டேன். நாளைதான் அவர்களுக்கு அன்னமிடுகிறேன்.
அதனால்தான் நாளை நீங்கள் கொடுக்கும் அன்னதானத்துக்கு என்னால் வரமுடியாதுங்க”
என்றான்.
என்னய்யா சொல்ற, கலைச்சிற்றுண்டியும் மதியஉணவும் கொடுக்கப் போகிறாயா என்று
வியப்புடன் கேட்டார். அப்போது தன்நிலையை எண்ணி வெட்கமடைந்தார். நான் எவ்வளவு
பெரிய செல்வந்தனாயிருந்தும் ஒருவேளை அன்னதானம் தான் கொடுக்கிறேன். அதுவும்
அப்படி கொடுப்பதால் புண்ணியம் என்று எண்ணியே கொடுக்கிறேன். இந்த அன்னதானத்தில்
எல்லோருமே சாப்பிடுகிறார்கள். நடுத்தரமக்களும் வசதிபடைத்தவர்களும் கூட இந்த
அன்னதானத்தில் கலந்து கொள்கிறார்கள். அன்னதானத்துக்கு வருபவர்கள் எல்லோருமே
ஏழை எளிய மக்கள் அல்ல. ஆனால் இவனோ உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கே
அன்னமிடுகிறான் அதுவும் புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணி அன்னமிடவில்லை என்று
பலவாறு எண்ணி அமைதியில் ஆழ்ந்திருந்தவரின் அமைதியை பிச்சமுத்துவின் குரல்
கலைத்தது.
“என்னங்க கேள்விகேட்டீங்க. அப்புறம் அமைதியாயிட்டீங்க. காலைச்சிற்றுண்டியும் மதிய
உணவும்தான் கொடுக்கப்போறேன். நீங்க சொன்னமாதிரி புண்ணியம் கிடைக்கோ இல்லையோ
அனாதையாய்த் தவிப்பவர்களுக்கு உணவளித்தோம் என்ற ஒரு மனஆறுதல் கிடைக்கும்
என்பதை இப்போதே உணர்கிறேன்” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதைக்கேட்டதும் அவமானத்தில் குன்றிப்போன அவர் அவன் சொன்னது
சரிதான் என்பதுபோல் தலையாட்டி விட்டு அப்படியே கண்களை மூடினார். அதன்பின் ஒன்றன்பின்
ஒன்றாக ரயில்நிலையத்தில் ரயில் நிற்கவும் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.
ஆனால் அவர் மதுரை வரும்வரை தூங்குவதுபோல் கண்களை மூடிக்கொண்டுதான் இருப்பார்
என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். பிச்சமுத்துக்கு தெரியவாய்ப்பில்லை.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *