Tuesday, February 20, 2018

.
Breaking News

“பன்முகம்” நூல் வெளியீட்டு விழா!

“பன்முகம்”  நூல் வெளியீட்டு விழா!

ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி. அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.

இதுவரை பதினொரு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.

இவரது பன்னிரண்டாவது நூலான ‘பன்முகம்’ கட்டுரை நூல், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ‘சிவா – விஷ்ணு’ ஆலய ‘மயில் மண்டபத்தில்’ ஸ்ரீமதி பாலம் லஷ்மண ஐயர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் இனிதே நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டின், வெளியீட்டுரையை ஸ்ரீமதி மங்களம் ஸ்ரீநிவாசன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

‘பன்முகம்’ நூலிற்கு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன், முனைவர் இரா.மோகன், பேராசிரியர் இலக்கிய கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர், ஆகம வாரிதி முனைவர் சபாரத்தினம் சிவாசாரியார், முனைவர் மு.இளங்கோவன் எனப் பலர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.

சமயம், சமூகம், தமிழ் இலக்கியம் ஆகிய மூன்று முகங்களில் பல கட்டுரைகள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. சில

கட்டுரைகள் ஆவேசமாகவும், சில காரசாரமாகவும் அமைந்திருப்பதையும் காணலாம்.

பண்டைய அரசர்களுக்கும் புலவர்களுக்குமிடையிலான தொடர்புகளை ஆராய்ந்து, எங்களை வழிநடத்தும் சங்கப்புலவர்களையும் அவர்தம் அரிய படைப்புகளான சங்கத் தமிழ் நூல்களையும் நினைத்துப் பார்க்க வைக்கின்றார். பிசிராந்தையர் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்குச் சொன்ன அறிவுரை இக்கால அரசியலுக்கும் பொருத்தப்பாடாக உள்ளது.

கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னதுதான் வள்ளுவம். சில நூல்களை நாம் எழுதிய காலத்திற்குச் சென்று கற்க வேண்டும். திருக்குறள் அப்படியல்ல, எக்காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது என்கின்றார் ஆசிரியர்.

‘நாலுபேர் பேச்சைக் கேளுங்கள்’ என்ற தொடரின் உண்மைப்பொருள் ‘சைவ சமய குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு பேருடைய பேச்சை வாக்கை கேட்கவேண்டும் என்பதே என்கின்றார் ஆசிரியர். ’மார்கழிமாதம் பீடை பிடித்த மாதம்’ என்னும் தவறான கருத்தை தகர்க்கும் கட்டுரையாக ‘திருவெம்பாவையும் மார்கழியும்’ அமைகின்றது.

இப்படியாக – தைப்பூசம், ஐயப்ப வழிபாட்டின் முக்கியத்துவம், யோகாசனம் பற்றிக் குறிப்பிடும் ‘யோகம் தரும் யோகா’ மற்றும் மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கனார், எழுத்தாளர் எஸ்.பொ, கவிஞர் கண்ணதாசன் எனப் பல கட்டுரைகள் இப்புத்தகத்தில் உண்டு.

புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழ், சமயம் கற்பித்தலில் கையாளப்படும்/ கையாளப்படவேண்டிய அணுகுமுறைகள் தொடர்பான இரண்டு கட்டுரைகள் உள்ளன.

நூலின் ஆசிரியர் ஜெயராமசர்மா அவர்கள், பல அனைத்துல சைவசித்தாந்த மாநாடுகளிலும், சைவத் தமிழ் மாநாடுகளிலும், திருக்குறள் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். அத்துடன் தமிழ் கற்பித்தல் தொடர்பான மாநாடுகளிலும் கலந்து கொள்பவர். அந்த மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் சிலவற்றையும் இப்புத்தகத்தில் காணலாம்.

இயந்திர உலகில், எல்லாப் புத்தகங்களையும் தேடிப்பிடித்து, படித்து முடிப்பதற்கு நமக்கு காலம் போதாது. பாலில் இருந்து நீரைப் பிரிக்கும் அன்னப்பறவையாகி, நல்லனவற்றைச் சாரமாக்கி நம்மிடம் பன்முகமாகத் தந்துள்ளார் ஜெயராமசர்மா அவர்கள். ’மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என வாழ்ந்துகொண்டு, தம்மைபோல அனைவரையும் வாழ வழிகாட்டும் கட்டுரைகள் இவை. வாசிக்க வாசிக்க தெவிட்டாத சுவை கொண்டவை. பத்துத் தோடம்பழங்கள் ஒரு நெல்லிக்கனிக்கு சமம் என்பார்கள். சமீபத்தில் நான் வசித்த புத்தகங்களில் ‘பன்முகம்’ ஒரு நெல்லிக்கனி.

கே.எஸ்.சுதாகர்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *