Saturday, February 24, 2018

.
Breaking News

ஒரு கொத்து ஆயுத பூஜை!…. ( சிறுகதை ) .. அண்டனூர் சுரா.

ஒரு கொத்து ஆயுத பூஜை!…. ( சிறுகதை ) ..  அண்டனூர் சுரா.

அவரை நாங்கள் அழைப்பது சீனியர் என்றுதான்! அவர் எங்களை விடவும் வயதில் மூத்தவரல்ல என்றாலும் அவருடைய நடவடிக்கையும், பேச்சும், செயல்பாடுகளும் தனித்துவமாக இருப்பதால் அப்படியாக நாங்கள் அழைத்திருந்தோம். அவர், எங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணியேற்று ஓரிரு வருடங்களே ஆகியிருந்தன. அவர் பணியேற்ற நாட்கொண்டே எதையும் வித்தியாசமாகப் பார்க்க, கருத்துச்சொல்ல துணிந்திருந்ததால் அவரை நாங்கள் சீனியர் என அழைக்கத் தொடங்கியிருந்தோம். இன்றைய தினம் கொண்டாடயிருக்கிற ஆயுத பூஜைக்கு சிறப்பு விருந்தினர் சீனியர்தான்.!

வருடம் தவறாமல் ஆண்டுதோறும் பெரிய பகட்டுடன் கொண்டாடும் இந்த ஆயுத பூஜை அவருக்கு பிடிக்குமோ என்னவோ! எதையும் வேறொரு கோணத்தில் பார்க்கப் பழக்கப்பட்ட அவருக்கு தாம் தூம் தனமான இக்கொண்டாட்டத்தை அவர் வெறுக்கவே செய்வார். எதையும் எளிமையாகவும் ரகசியமாகவும் செய்ய வேணும் என்கிற வகை பேர்வழி அவர். அதே நேரம் வித்தியாசமாகவும் செய்ய வேணும் என்பது அவருடைய தாரக மந்திரம். அவர் விரும்பவில்லை என்பதற்காக வருடந்தோறும் கொண்டாடப்படும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை நிறுத்திவிட முடியுமா என்ன…! ஒரு வருடம் நிறுத்தினால் மூன்று வருடங்கள் நிற்கும் இல்லையா! அவர் விரும்பினாலும் மாட்டாலும் ஆயுத பூஜை வழக்கமானக் கொண்டாட்டத்துடன் கொண்டாடியாக வேணும். அதே நேரம் அவர்தான் சிறப்பு விருந்தினர் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

பத்து கிலோ கொண்டைக்கடலை வாங்கியிருந்தோம். வழக்கமாக வாங்கும் அளவுதான் அது. நேற்றைய தினமே அதை வாங்கி தண்ணீரில் ஊற வைத்திருந்தோம். காலை எப்பொழுதுமான நேரத்திற்கு முன்பாக அலுவலகம் வந்து ஒட்டடை அடித்து, கூட்டிப்பெறுக்கி, சுற்றிலும் வண்ணக்காகிதங்கள் ஒட்டி அலுவலகத்தை அழகுப்படுத்தத் தொடங்கினோம்.

அலுவலக வாயிலிடத்தில் தென்னங்கீற்றினலான தோரணம். குட்டிக் குட்டியாக வாழைக்கட்டைகள். சந்தனம், குங்குமம் குழைத்தப் பொட்டுகள், பன்னீர் தெளிப்புகள். ஆயுத பூஜைக்கு வருகைத்தரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்… வரவேற்பு பலகையுடன் அலுவலக முகப்பு ஒரே அமர்க்களமாக இருந்தது.

வாசலில் பெரியக் கோலமிட்டிருந்தார் புதிதாக அலுவலகத்தில் சேர்ந்த ஒரு பெண் ஊழியர். ரங்கோலி கோலமாக அது இருந்தது. ஆயிரம் இதழ்கள் கொண்ட மலரது. கடைகளில் விற்றிருந்த அத்தனை வண்ண மாவுகளையும் வாங்கி அதை ஒன்றுடன் ஒன்று கலந்து புதிய புதிய நிறங்களை உருவாக்கி அக்கோலத்திற்கு வண்ணம் சேர்த்திருந்தோம். அதைச் சுற்றிலும் மூன்று புள்ளி ஆயிரம் வரிசை கொண்ட சிக்குக்கோலம். இதில் யாரும் மறந்தும் காலை வைத்துவிடக்கூடாது என்பதற்காக காவலுக்கு ஒருத்தரை நிறுத்தியிருந்தோம்.

சுவற்றில் ஆணி அடித்து நிமிர்த்தி வைத்திருந்தப் படங்களை எடுத்து துடைத்து சந்தனம் குங்குமமிட்டு அதே இடத்தில் ஆணியில் மாட்டி வைத்தோம். அலுவலகத்தின் பீரோ, மின்விசிறி, முக்கியக் கோப்புகளில் சந்தனம் குங்குமம் கீற்றுகளாக தெறித்திருந்தன.

சீனியரின் வருகைதான் தாமதம். அவர் வந்ததும் மலர் தூவி சூடம், பத்தி ஏற்றி மற்றவர்கள் கொண்டாடுவதற்கு முன்பாக ஆயுத பூஜையைக் கொண்டாடி முடித்திடலாம் என்கிற ஆசையோடு கைகளைப் பிசைந்துகொண்டு சாலையைப் பார்ப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதுமாக இருந்தோம். வீட்டில் வேறு ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது. வீட்டின் கூரை, மின்விசிறிகளுக்கு ஒட்டடை அடிக்க வேணும். மின் விளக்குகளை கலட்டி துடைத்து மாட்ட வேண்டும்…

கோலத்தை யாரும் மிதித்துவிடக்கூடாது என ஒருவரை நிறுத்தி வைத்திருந்தோம் இல்லையா! அவரையே சீனியர் வருகிறாரா…என்று பார்க்கவும் சொல்லிருந்தோம். அவர் ரொம்பவே அலுத்துக்கொண்டார். ‘ஆமாமாம்…! எல்லா வேலையையும் என் தலையிலேயே கட்டுங்கள்…’ என்கிற சலிப்போடு அவர் சாலையைப் பார்ப்பதும், கோலத்தைக் கண்காணிப்பதுமாக இருந்தார்.

சீனியரிடம் நேற்றையத்தினமே ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவை அழுத்தி சொல்லியிருந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்கு நீங்கள் வந்தாக வேண்டும் என்று. சீனியர் தலைநகருக்கு அவசரப்பயணம் மேற்கொள்வதாகச் சொல்லியிருந்தார். அதன்பொருட்டு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதாக நேர அட்டவணை ஒப்பித்தார். ‘என்ன வேலையாக இருந்தாலும் நீங்கள் அலுவலகத்திற்கு வந்துதானாக வேண்டும்…’ என அவரை பணித்தோம். ‘ என்ன விசேஷம்…’ என்றார். ‘ நாளைக்கு ஆயுத பூஜை இல்லைங்களா…நீங்கள்தான் சிறப்பு விருந்தினர்.’ என்றோம். ‘ அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடித்தான் ஆகணுமா….’ எனக் கேட்டார். ‘ எப்பொழுதும் கொண்டாடுவது வழக்கம்’ என்றோம். ‘ நான் அவசியம் கலந்துகொள்கிறேன்….எவ்வளவு எளிமையாகக் கொண்டாட முடியுமோ…அவ்வளவு எளிமையாகக் கொண்டாடுவோம்…..’ என்றார்.

நாங்கள் எளிமைக்கு சம்மதம் தெரிவித்தோம். அவரும் கொண்டாட்டத்தில் அவசியம் கலந்துகொள்வதாக சம்மதம் தெரிவித்தார். ‘ எத்தனை மணிக்கு…’ என்றார். ‘ பத்து மணிக்கெல்லாம் வந்திடுங்க….’என்றோம்.

‘ எப்பொழுது என்னை திருப்பி அனுப்பி வைப்பீர்கள்…?’ என்றார்.

‘ ஒரு வேலையுமில்ல சீனியர், நீங்க வந்ததும் தேங்காய், உடைத்து, சூடம், சாம்பிராணி காட்டி பொறி, கொண்டைக்கடலை கொடுக்குறதுதான்….’ என்றோம்.

‘ கொண்டாட்டத்தை நீட்டிடாதீங்க….’ என்றவாறு எங்களை அனுப்பி வைத்தார். அவர் வரக்கூடிய நேரம்தான் இது. எப்படியும் ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிடுவார். நாங்கள் பூஜை பொருட்கள் அத்தனையையும் எடுத்து தயாராக வைத்திருந்தோம்.

அலுவலகம் கிராணைட் தரையினலானதாக இருந்தது. அதன் மீது ஆங்கில செய்தித்தாளை விரித்திருந்தோம். ஐந்து தெய்வங்கள் கொண்ட படத்தை சுவற்றில் சாய்த்து வைத்தோம். சுவற்றைச் சுற்றிலும் இந்தியத் தலைவர்கள் புகைப்படங்களாக இருந்தார்கள். சாமி புகைப்படத்திற்கு நேராக சுவற்றில் காந்தியடிகள் இருந்தார். அவரது நெற்றிக்கு ஒரு பொட்டையும் தலைக்கு ஒரு பூவையும் சொறுகினோம். இதைப்போல அத்தனைப் போட்டோகளுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து ஒரு போட்டோ குறையில்லாமல் பூவைச் சூட்டினோம்.

அகல விரிக்கப்பட்டிருந்த செய்தித்தாளில் அலுவலகக் கோப்புகளை அடுக்கி வைத்திருந்தோம். இரண்டாம் தர பதிவேடுகள் ஒரு பக்கமாகவும், இருப்பு பதிவேடுகளை இன்னொரு பக்கமாகவும் அடுக்கியிருந்தோம். சந்தனம், குங்குமக் கிண்ணிகள், வாழைப்பழச் சீப்புகள், ஊதுவர்த்தி, சூடம், சாம்பிராணி,.. என தினசரி முழுவதும் பரப்பி வைத்திருந்தோம்.

பத்து கிலோ கொண்டைக்கடலை பெரிய பாத்திரத்தில் இருந்தது. அதில் தாழிக்கப்பட்ட எண்ணெய், கடுகு, தேங்காய்ப்பூக்கள் விரவியிருந்தன. வாசணை மூக்கைத் துளைத்தன. பெரிய பையில் பொறி, பொட்டுக்கடலை, சர்க்கரை வகையறாக்கள் இருந்தன.

வாசலிலிருந்து அழைப்பு வந்தது. ‘ ஆம்…சீனியரோட கார் வருது…’என வெளியில் அவரது வருகையைப் பார்த்து தெரிவிக்க வேண்டியவர் சொன்னதும், நாங்கள் அத்தனைப்பேரும் முகப்பிறகு ஓடி வந்தோம். சீனியரின் கார் கோலத்தை அழித்துகொண்டு சாலையைப் பெரிதாக உராய்த்துகொண்டு நின்றது. காரின் கண்ணாடி கீழே இறங்கியது. சீனியர் , முதலில் கையெடுத்து கும்பிட்டார். அடுத்து சிரித்து வைத்தார். காரின் கதவை எங்களின் ஒருவர் திறந்து விட இன்னொருவர் பொக்கையை அவர் முன் நீட்டினோம். சீனியர் காரிலிருந்து இறங்கினார். கோலத்தில் கால் வைத்ததும் நெருப்பில் கால் வைத்ததைப்போல கால்களை உதறினார். அப்படியும், இப்படியுமாக கால்களை எடுத்து வைத்ததில் கோலம் நன்கு அழிந்துவிட்டிருந்தது.

சக அலுவலரின் அலைபேசியில் விநாயகர் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தது. சீனியர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அதன் இரைச்சலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார். சீனியர் கும்பிட்டபடியே அறைக்குள் நுழைந்தார். சுற்றும்முற்றும் பார்த்தார். அறையின் பாதியை பூஜைப்பொருட்கள் ஆக்கிரமித்திருந்தன. அவற்றைப்பார்த்து நெற்றி சுழித்தார். ‘ இதெல்லாம் என்ன…நான்தான் சொன்னேன்ல….எவ்வளவு எளிமையா கொண்டாட முடியுமோ அவ்வளவு எளிமையாக கொண்டாடணுமென….எந்தக்காலத்தில நீங்க இருக்கீங்க….’ என்றவாறு பூஜைப் பொருட்களை வெறுப்பாகப் பார்த்தார்.

‘ இது என்னது….?’

‘ சூடம், பத்தி, சாம்பிராணி…’

‘ இதெல்லாம் ஏன் இங்கே…இதென்ன வீடா….அலுவலகமா…முதலில் இதையெல்லாம் எடுங்கள்….’ என்றார். நாங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு அப்புறப்படுத்தினோம். கோப்புகள், இரண்டாம் தர பதிவேடுகள், ஆவணங்கள் அத்தனையும் அவருக்கு பிடிக்காதவையாக இருந்தன. அவற்றை எடுத்து சற்று விலக்கி வைத்தோம்.

தூவற்கால், ஊதுபத்தி ஸ்டாண்ட், தாம்பூலம்,…இவற்றையெல்லாம் எடுத்து கண் காணாத இடத்தில் வைத்தோம். அவரது பார்வை வாழைப்பழம் பக்கமாகச் சென்றது. அடுத்து குட்டிக்குட்டியான வாழைக்கட்டைகள், கதம்ப மாலை, சந்தனக்கிண்ணம், குங்குமச்சிமிழ், விபூதிப் பாக்கெட் ,…என ஒன்றையும் விடாமல் வரிசையாகப் பார்த்தார். அவர் பார்த்த அத்தனையும் அந்த இடத்தை விட்டு உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டியவையாக இருந்தன. அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தவர்கள் அவற்றையெல்லாம் குனிந்து எடுத்து ஒரு மூலையில் விலக்கி வைத்தோம்.

‘ இது என்னது….?’

‘ பொறி, பொட்டுக்கடலை சர்க்கரை….’

‘ அது ஏன் இங்கே…?’

‘ சாமிக்கும்பிட….’

‘ இவ்வளவு ஏன்…?’

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துகொண்டோம். சீனியருக்கு பிடித்தமான அளவு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதில் எங்களுக்குள் கருத்தொற்றுமை இல்லாமல் இருந்தோம். முதலில் இதையெல்லாம் இங்கேயிருந்து எடுங்கள்…எனச்சொல்வதைப்போல அவருடையப் பார்வை இருந்தது. இரண்டு பேர் சேரந்து அதைத் தூக்கினோம். அடுத்து அவருடையப் பார்வை கொண்டைக்கடலை பக்கமாகச் சென்றது.

‘இதையும் எடுக்கட்டுமா சீனியர்…?’ எனக்கேட்டவனை அவர் வெறிக்கப்பார்த்தார். நீங்களெல்லாம் எப்பதான் திருந்தப்போறீங்களோ….’எனச் சொல்வதைப்போல அவருடைய பார்வை இருந்தது.

‘ இவ்வளவையும் சாமி கேட்கிறாரா….?’

‘ எதைச் சொல்றீங்க சீனியர்…?’

‘ கொண்டக்கடலையைச் சொல்றேன்….’

‘ நிறையப் பேர் இருக்கோம்ல….’

‘ நமக்குத் தானே இவ்வளவும்…’

‘ ஆமாம் சீனியர்….’

‘ பின்னே ஏன் இவ்வளவையும் இங்கேயே வச்சிக்கிட்டு. எடுக்கலாம்ல….’

அதையும் அங்கேயிருந்து கிளப்பினோம். பூஜை இடம் பார்க்க ஒன்றுமில்லாமல் இருந்தது. விரிக்கப்பட்டிருந்த தினசரியின் மீது ஐந்து தெய்வங்கள் கொண்ட சாமிகள் மட்டும் இருந்தன. சாமிக்கு பின்னால் கைக்கு எட்டும் உயரத்தில் காந்தியடிகள் சிரித்த முகமாய் இருந்தார். அவ்வளவேதான்! அத்தனைப் பொருட்களையும் எடுத்ததன் பிறகு இன்னும் வாங்கியிருக்க வேண்டிய பொருட்களான வெற்றிலைச் சீவல், எலுமிச்சை, வாழை இலை…வாங்காமல் விட்டிருந்தது அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது.

அவர் விரிக்கப்பட்டிருந்த தினசரியை வெறிக்கப் பார்த்தவராக இருந்தார். இதையும் எடுத்துதானாக வேண்டுமென்று ஒருவர் அதை எடுத்திருந்தார். எடுத்தவர் காலையிலிருந்து கூட்டி, பெருக்கி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்தவராக இருந்தார். இத்தனையையும் எடுத்ததற்குப்பிறகு ஆயுத பூஜையைக் கொண்டாடிதானாக வேண்டுமா….என்று எங்களுக்குள் சலசலப்பு உண்டானது.

அவர் தினசரியைக் குனிந்து எடுத்து அதை பந்து போல சுருட்டத் தொடங்கினார். சுருட்டியக் காகிதம் சலசலப்பைக் கொடுப்பதாக இருந்தது. காகிதத்தைச் சுருட்டியவரை சீனியர் முறைக்கப்பார்த்தார். சுருட்டியக் கைகள் அதை வயிற்றோடு சேர்த்து நீவி விரித்து அதை மடித்து சட்டைப்பைக்குள் வைத்துகொண்டார்.

சாமி படத்திற்கு முன்பு எதுவுமில்லாமல் இருந்தது. அதைப்பார்க்கையில் எங்களுக்கு சிரிக்க வேண்டும் போலிருந்தது. யாரேனும் ஒருவர் சிரித்தால் அவரைத் தொடர்ந்து எல்லோரும் சிரிக்கலாமென இருந்தது. யார் முதலில் சிரிப்பதாம்….யாரெனும் சிரிக்கமாட்டார்களா….ஏக்கத்துடன் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு உதட்டைப் பிதுக்கிக்கொள்பவர்களாக இருந்தோம்.

‘ இலை இருக்கா…?’

‘ அடடே…மறந்து விட்டோமே….’ என்றவாறு கைகளைப் பிசைந்துகொண்டு அதற்கும் இதற்குமாக நடந்துகொண்டிருந்தோம்.

‘ பக்கத்தில கடை இருக்குல….’

‘ ஆம்…இருக்கு சீனியர்…’

காலையிலிருந்து கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்தவர் இலை வாங்க ஓடினார். நான் குரல் கொடுத்தேன். ‘ அப்படியே ஒரு எலுமிச்சையும் ரெண்டு ரூபாய்க்கு வெற்றிலை பாக்கும் வாங்கிக்கொண்டு ஓடி வா….’

சீனியர் குறுக்கிட்டார். ‘ அதெல்லாம் வேணாம்…இங்கே ஒன்னும் பில்லி , சூனியம் விலக்கல….எலுமிச்ச பழம் வாங்க…’

‘ வெற்றில பாக்காவது வாங்கிட்டு வரச்சொல்லலாமே சீனியர்…’

‘ எதுக்கு…! வெற்றிலையை மென்று அலுவலகத்தை நாறடிக்கவா…’ என்றவாறு சீனியர் எங்களை வெறிக்கப்பார்த்தார். நான் என்னச் சொல்கிறேனோ அதை மட்டும் செய் என்பதைச் சொல்லும் பார்வையாக அவருடையப் பார்வை இருந்தது. இலை வாங்க ஓடியவர் போன வேகத்தில் திரும்பி வந்திருந்தார். இலையை சீனியரிடம் நீட்டியதும் அவர் இலை வாங்கி வந்தவரிடமே அதை விரிக்கச் சொன்னார்.

அவர் கடைநிலை ஊழியர். அவர் சற்றுத் தயங்கினார். சுற்றும்முற்றும் பார்த்தார். ‘ என்னத் தயக்கம்..?’ சீனியர் குரல் கொடுத்ததும் அவர் விரிக்கத் தொடங்கினார். இலையில் தண்ணீர் தெளித்தார். தடவிக்கொடுத்தார்.

‘ ஒரு கரண்டி கொண்டக்கடலை மட்டும் கொண்டுவாங்க…..’ சீனியர் சொன்னதும் இலையை விரித்தவர் கேட்டார். ‘ சின்னக் கரண்டியா..பெரியக் கரண்டியா…?’

‘ சி்ன்னக்கரண்டியில ஒரு கரண்டி…’

அவர் சின்னக்கரண்டியில் ஒரு கரண்டி அள்ளிக்கொண்டு ஓடி வந்தார். சீனியர் அவரை தடுத்து நிறுத்தினார். ‘ உங்க ஊர்ல இதுதான் சின்னக்கரண்டியா….?’

கொண்டைக்கடலை அள்ளிக்கொண்டு ஓடி வந்தவர் திகைத்து நின்றார். ‘ சரி…அதில பாதி வையுங்க…’ என்றதும் அவர் கரண்டியை இலையில் மெல்ல சாய்த்தார். ‘ ஒன்றிரண்டு கடலை இலையில் விழுந்ததும் ஆம்…போதும்…போதும்….’ என்றார். எங்களுக்கு சிரிப்பு வந்தது. எண்ணினால் ஏழு, எட்டு அளவிற்குத்தான் அதில் கொண்டைக்கடலைகள் இருந்தன.

‘ கரண்டியை வைத்துவிட்டு பொறி பொட்டுக்கடலை, சர்க்கரை நுனி விரல்கள்ல அள்ளிக்கிட்டு வாங்க…’ என்றதும் அவர் ஓடினார். சீனியர் சொன்னதைப்போல மருந்துக்கு வைப்பதைப்போல பொரி, பொட்டுக்கடலையை இலையில் வைத்தார். அவ்வளவு பெரிய இலையில் இவ்வளவு குறைவாக இருந்த பூஜை பொருட்கள் பார்க்க எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

‘வாழைப்பழம்…?’

‘ ஆம்…ஒன்னே ஒன்னு….’

ஒருவர் ஓடிச்சென்று வாழைப்பழச் சீப்பில் ஒன்று பிய்த்து இலையில் வைத்தார்.

‘ சூடம், பத்தி, சாம்பிராணி இல்லாமல் எப்படி சாமிக்கும்பிடுவதாம்…?’ ஒருவர் சொல்ல, சீனியர் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னார். ‘ கதம்பம் பூ இருக்குல….?’

‘ ஆம் இருக்கு….’

‘ கொஞ்சம் பிய்ச்சிக்கிட்டு வாங்க….’

ஒருவர் பிய்த்துகொண்டு ஓடி வந்தார்.

‘ சந்தனம் குங்குமம்…’

அவை என்னிடமிருந்தன. அதை நான் சீனியரிடம் நீட்டினேன். கையை ஒரு உதறு உதறிவிட்டு ஆட்காட்டி விரலை சந்தனக் கிண்ணத்திற்குள் நுழைத்து ஒரு சொட்டு எடுத்து ஐந்து சாமிகளுக்கும் பொதுவாக புகைப்படச் சட்டத்தின் மேல் மையத்தில் வைத்தார். இன்னொரு சொட்டு எடுத்து காந்தி புகைப்பட நெற்றியில் வைத்தார்.

‘ அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடுகிறோம்….அலுவலகப் பொருட்கள்ல ஒன்று கூட வைக்காம இருக்கிறோமே…?’ சீனியரிடம் நான் கேட்டிருந்தேன். சீனியர் என்னை ஒரு முறைப்பு முறைத்தவராக அவருடைய பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தார். கையை வெளியே எடுக்கையில் கையோடு துப்பாக்கி வந்திருந்தது. அதை இலையின் மையத்தில் வைத்து தூரத்தில் நின்றவாறு அதன் அழகை ரசித்தார். இலையை அத்துப்பாக்கி முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. சீனியர் எங்கள் பக்கமாகத் திரும்பி அனைவரையும் பார்த்து சிரித்தார். எங்களின் அத்தனை பேரின் முகமும் உடைந்து போயிருந்தது.

சீனியர் எங்களையும் இலையையும் மாறி மாறி பார்த்தவர் ‘நல்லா இல்லை…!’ என நாங்கள் சொல்ல நினைத்ததை அவரே சொன்னார். அவர் அப்படிச் சொன்னதும் அத்தனைப்பேரும் ஒத்தக் குரலில் சொன்னோம். ‘ ஆமாம் சீனியர். நல்லா இல்லை….’ .

நாங்கள் அப்படிச் சொன்னதும் ‘ வெரி சாரி….’ என்றவாறு இலையிலிருந்து அத்துப்பாக்கியை எடுத்திருந்த அவர் , அதை பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டார். பிறகு அவர் இன்னொரு பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தார். கையில் கிட்டியதைக் கொத்தாக அள்ளி இலையின் மையத்தில் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்தார்.

நாங்கள் என்ன, ஏதுவென்று தலையை நீட்டி எட்டிப் பார்த்தோம். இலையில் ஒரு கொத்தளவிற்கு தோட்டாக்கள் இருந்தன.

– அண்டனூர் சுரா

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *