Saturday, February 24, 2018

.
Breaking News

சாதியத்தை தகர்த்தெறியுமா காதல் கல்யாணங்கள்?… ஏலையா க.முருகதாசன்.

சாதியத்தை தகர்த்தெறியுமா காதல் கல்யாணங்கள்?… ஏலையா க.முருகதாசன்.
இலங்கைத் தமிழர் மத்தியில் சாதியத்தை தகர்த்தெறியுமா காதல் கல்யாணங்கள் என்ற கேள்வி எழுமானால்.அது மெதுவாகத்தான் நடக்கும் என்ற பதில்தான்; வரும்.சில சகாப்தங்கள்கூடச் செல்லலாம்.
இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகநாடுகள் பலவற்றில் அவர்கள் வாழ்வதற்கு அவரவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு காரணத்தைக் கொண்டிருந்தாலும், பொதுவாக புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வாயிலிருந்து வருவது இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்குமுறையே.
மொழி சார்ந்து தமிழர் என்ற இனம் சார்ந்து சிங்கள மக்களுக்கு  உள்ளது போல சம உரிமையற்ற நிலைமையினால் எழுந்த விடுதலை உணர்வினால் அரசியல் ரீதியாகவும் ஆயுத வடிவிலும் போராடியமையும், அப்போராட்டத்தை அழித்தொழிக்க இலங்கை அரசு எடுத்த அராஜக நடவடிக்கையினால் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள் என்ற நியாயம் உலக மத்தியில் வைக்கப்படுகின்றது.
மொழி பாராது, மதம் பாராது, இனம் பாராது சிங்கள மக்களுக்கு உள்ளது போல சகமனிதர்களாக இலங்கைத் தமிழர்களையும் நடத்தி அவர்களுக்கான உரிமைகளைக் கொடுத்திருக்க வேண்டுமல்லவா தமிழர்களை அடிமைகளாக இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தியமை எந்தவிதத்தில் நியாயம் என உரத்த குரலில் அரசியல் மேடைகளிலும், பொது மேடைகளிலும் இன்னும் சந்திப்புக்களிலும்,கலந்துரையாடல்களிலும் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.
இலங்கைத் தமிழர்களின் சமூகப் படிமானங்களை உற்று நோக்காது கண்களை மூடிக் கொண்டு காதுகள் வழியாகக் கேட்டால் இந்த அரசியல் உரைகள்,போதாதற்கு ஒளவையார், திருவள்ளுவர் பொன்றோரின் வாழ்வியல் தத்துவகங்களை மேற்கோள் காட்டி பேசுவதை கேட்கும் போது,இலங்கைத் தமிழர்களுக்கு நடப்பது அநீதி தர்மமற்றது, உலக மனிதர்கள் அனைவரும் சமமே என உரத்த குரலில் பேசலாம்….
ஆனால் இவர்கள் தம்மை உணர்ந்தார்களா?. தாம் விடும் தவறுகளை உணர்ந்தார்களா என்றால், இல்லவே இல்லை என்ற பதிலே வரும்.
நீ என்னைவிட சாதியில் குறைந்தவன்,நீ எனது வேலைக்காரன், நீ எனக்கு அடிமை, நாங்கள் காலால் இட்டதை கையால் செய்பவன் நீ;, என் வீட்டுப்படியில்தான் உட்காரத் தகுதியுடையவன் நீ, என் வீட்டில் சிரட்டையில்தான் தண்ணீர் தருவேன், தேநீர்க்கடையில் வெளிப்பேணி போத்தல்களால் உனக்கு, கோவில்களில் நுழைய உனக்குத் தடை, நீ தீண்டத் தகாதவன் என சகமனிதனை அடிமைப்படுத்தியவர்கள் யார்?. தமிழர்கள்தானே.உன் இனத்தையே நீ அடிமைப்படுத்திவிட்டு, என்னை அடிமையாக நடத்துகிறார்கள் என நீ ஓலமிடுகிறாய்,ஒப்பாரி வைக்கிறாய் வெட்கமாகவில்லையா?
இலங்கையில் தமிழர்கள் சாதிரீதியான அவர்களின் மனக்கிடக்கைகளுடன் புலம்பெயர்ந்த தமிழர்களில் 70 வீதமான தமிழர்கள் அந்த மனக்கிடக்கைகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவாறு நடந்து கொண்டாலும் அவற்றை குளிர்சாதப் பெட்டியில் வைப்பது போல வைத்திருந்து அவ்வப்போது இங்க பயன்படுத்தி வருகிறார்கள்.
புலம்பெயர்ந்து வந்து பொழுது சிறுவர்களாகவும், சிறுமிகளாகவும் வந்தவர்கள் இப்பொழுது இளைஞர்களாகவும் யுவதிகளாகவும் வளர்ந்துவிட்டார்கள்.ஒரு கால எல்லையாக 1985ஆம் ஆண்டை வைத்துக் கணித்தால் இங்கு பிறந்தவர்களும் வளர்ந்துவிட்டார்கள்.
சிறுவர்களாக வந்தவர்களும் இங்கு பிறந்தவர்களும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களிலும்,வேறு இடங்களிலும் ஆண் பெண் என சக நண்பர்களாக நட்புக் கொள்ளும் புலம்பெயர் தமிழர்களின் வாரிசுகள் மத்தியில் நட்பு காதலாக மாறி திருமணத்தில் நிறைவடைவதுண்டு.
ஆனால் சிலரின் காதல் புரிந்துணர்வு அற்ற நிலையில் விடஇடுக் கொடுப்ப அற்ற நிலையில் காதல் முறிவுகளும் ஏற்படுவது உண்டு.
காதலித்து மனச்சமன் அற்ற நிலையில் காதல் முறிவுகள் ஏற்படும் பட்சத்தில் காதலிக்கும் ஆண் பெண் மற்றும் பெற்றோரால் ஒத்துப் போகவில்லை என்ற காரணம் முன் வைக்கப்படுகின்றது.
ஆனால் முன் வைக்கப்படும் காரணங்கள் யாவும் உண்மையாணவையல்ல.காதல் மனமுறிவுக்கும் திருமணம் வரைவந்து நடக்காமல் போவதற்கு’சாதி பார்த்தலும் ‘ காரணமாக அமைந்துவிடுகின்றன.
அதே வேளை காதலர்களின் பிடிவாதத்தால் கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் சாதி பார்க்காமல் பிள்ளைகள் ஆசைப்பட்டால் செய்து வைக்க வேண்டியதுதானே, சாதியாவது மண்ணாங்கட்டியாவது எல்லாரும் மனுசர்தானே என மனிதநேயத்துடன் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களும் இருக்கவே செய்கிறார்கள்.முற்போக்கான பெற்றோர்களின் வழியாகவும் சாதியத்தை வெறுக்கும் இளந்தலைமுறையினரின் காதல் திருமணங்களால் சாதியம் புலம்பெயர் நாடுகளில் மெல்ல மெல்ல கருகும்.
பாடசாலைகள் பல்கலைகழகங்களில் தமது பிள்ளைகளுடன் நட்பாக பழகும்(தமிழ்ப்பிள்ளைகள்) பிள்ளைகள் யார் அவர்களின் பெற்றோர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.அறிந்து கொண்ட ஊரின் மூலை முடுக்குகளில் வாழ்ந்தவர்கள் யார் என்பதை மெனக்கெட்டு ஏதோ ஒரு வகையில் அறிந்து கொள்ளும் பெற்றோர், தமது பிள்ளைகளிடம் தமது பாரம்பரிய பரம்பரைப் பிரதாபங்களை மிகையாகவும் வகையாகவும் சொல்லி சக மாணவனோ சக மாணவியோ ‘இன்ன சாதி’ அவர்களுக்கும் எங்களுக்கும் சரிபட்டுவராது என பிள்ளைகளை மூளைச்சலவைக்கு உட்படுத்துகிறார்கள், அவர்கள் மூளையில் சாதி என்ற நஞ்சை பதிந்துவிடுகிறார்கள்.
பெரும்பான்மையான இளந்தலைமுறையினர் சாதியை வெறுக்கிறார்கள். இன்னும் சிலர் பழகிய நண்பர்களை வேறுவிதமாக பார்க்கத் தொடங்குகிறார்கள்.
தொழில் என்பது பொதுவானது. அதனை ஏற்றதாழ்வுகளின் குறியீடாக என்றுமே அடையாளப்படத்தியது கிடையாது. அதைச் சாதியாக்கிய கொடுமை தமிழ்ச் சமூகத்தையே சாரும்.
தமிழர்களைச் சிங்களவர்கள் அடிமைப்படுத்தகிறார்கள் என வீராவேசக்குரல் எழுப்பும் தமிழர்களில் பலர் தாங்கள் சகமனிதனை சாதிப்பார்வையில் பார்க்கிறோமே என்பதை அறியாதவர்களா?.
இலங்கையில் கக்கூஸைக் கழுவிச் சுத்தம் செய்பவர்களை சாதி அடிப்படையில் ஒதுக்கி வைத்த உங்களிலும்  உழைப்பதற்காக தொழிற்சாலைகளிலும் பணியகங்களிலும் கக்கூஸையும் கழுவிச் சுத்தம் செய்கிறார்களே! அப்பணியைச் செய்பவர்கள் எந்தச் சாதி, உணருங்கள்.
ஏலையா க.முருகதாசன்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *