Saturday, February 24, 2018

.
Breaking News

எது எதைவிட சிறந்தது?… சங்கர சுப்பிரமணியன்.

எது எதைவிட சிறந்தது?… சங்கர சுப்பிரமணியன்.
ஒவ்வொருவர்க்கு ஒன்று சிறந்தது. அதைத்தான் அவர்கள் உடல் பொருள் ஆவி அனைத்தும்
சுற்றி சுழன்று வரும். மற்றதன் மேல் அக்கறை காட்டுவதெல்லாம் வெளிவேசம் ஊரை
ஏமாற்றும் உன்னதமான தொழில் அவ்வளவே. மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான் போல்
பேச்சிருக்கும் ஆனால் பித்தலாட்டம் அதில் நிறைந்திருக்கும்.
https://www.youtube.com/watch?v=d1oZOPmTEMA
ஒருவர் தமிழ், தமிழர் என முழங்கிடுவார் என வைத்துக்கொள்வோம். அவர் உண்மையில்
தமிழ்மீதும் தமிழர் மீதும் அக்கறையுடையவரா என்பது அவர் நடவடிக்கையை வைத்தே
கண்டு கொள்ளலாம். அவர் சார்ந்த சாதியின் மீது இன்னொரு சாதிக்காரான் ஏதாவது
அவதூறு சொல்லிவிட்டால் பொங்கி எழுந்து போருக்கு ஆயத்தமாவார். அதிலும் சாதிவெறியை
தூண்டி மற்றவர்களையும் துணைக்கிழுத்து உண்டு இல்லையென்று ஆக்கிடுவார். எதிரே
இருப்பவன் தமிழன் என்பதையெல்லாம் சற்றும் கண்டு கொள்ள மாட்டார்.
சாதிக்கும் அடுத்தபடி மதம்பிடிக்கவைப்பது மதம். மதத்தை தப்பாக யாரேனும் சொல்லி
விட்டால் போதும் அது உண்மையாக இருந்தாலும் உக்கிர தாண்டவமாடி விடுவார். சொன்னவன்
உண்மையைச் சொன்னானா அல்லது பொய்யாய்ச் சொன்னானா என்று பகுத்துணரும் பண்பற்று
மதம் பிடித்து ஆடிடுவார். சொன்னவன் தமிழன் என்றாலும் பரவாயில்லை அவனுக்கு தமிழை
விட மதம்தான் சிறந்தது.
இப்படி சாதி வெறிக்காகவும் மதவெறிக்காகவும் தமிழனை தமிழன் அசிங்கப்படுத்துவதும்
அச்சுறுத்துவதும் எந்த வகையில் நியாயம்? எவன் ஒருவன் சாதிக்காகவும் மதத்திற்காகவும்
தன் இனமான இன்னொரு தமிழனை அசிங்கப்படுத்தவோ அச்சுறுத்தவோ செய்வானின் அவன்
ஒன்று உண்மையில் தமிழனாக இருக்கமாட்டான் அல்லது அரசியல் ஆதாயத்துக்காக சாதியையும்
மதத்தையும் கையில் எடுத்திருப்பவனாக இருப்பான்.
மதத்துக்காக போராடுபவன் உண்மையில் மதத்துக்காகவாவது போராடுகிறானா என்றால் அதுவும்
இல்லை. சாதிப்பிரச்சினை என்றால் அங்கே மதத்தை விட்டுவிடுவான். சாதியைத்தான் தூக்கிப்
பிடிப்பான். அங்கே நம் மதத்தவந்தானே என்ற உணர்வெல்லாம் எவனுக்கும் வருவதில்லை.
பெரும்பாலானோருக்கு முதலில் சாதி அதன்பின் மதம் அதன்பின்தான் மொழி. ஆதாலால் எவனுக்கு
உண்மையில் மொழிமேல் உணர்விருக்கிறது என்பதை இங்கே கண்டறிவதே கடினம்.
ஆனால் ஒவ்வொன்றிற்கும் ஒருவழி இருக்கிறது. அதுபோல் உண்மையில் தமிழ்மீதும் தமிழர்
மீதும் அக்கறை கொண்டிருப்பவர்களை அறியவும் வழி இருக்கிறது. எங்காவது தமிழ் மொழிக்கோ
அல்லது தமிழருக்கோ தீங்கு ஏற்படுகிறது என்றால் இந்த பச்சோந்திகள் கண்டுகொள்ளவே
மாட்டார்கள். புறம்பாக எவன் வீட்டிலோ யாருக்கோ தீங்கு ஏற்படுகிறது என்பதுபோல் கண்டும்
காணாமல் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு மதத்திற்கு அல்ல சாதிக்கோ ஒரு தீங்கு ஏற்பட்டு
விட்டால்போதும் தமிழுக்கும் தமிழருக்கும் பெரிய தீங்கு வந்ததுபோல் துடிதுடித்து போவார்கள்.
இதெல்லாம் சிறுபொரியாக இருக்கும் நெருப்பை ஊதி ஊதி பெரிதாக்குவதற்கு கூட்டம் சேர்க்கவே
என்பதை கற்றறிந்தவர்களும் பாமரமக்களும் அறிந்து விழித்துக்கொள்ள வேண்டும். தமிழ்
மொழிக்கோ தமிழருக்கோ ஒரு தீங்கு ஏற்படும்போது சிறுநெருப்பாக இருக்கும்போதே அதை
ஊதி ஊதி பெரிதாக்காமல் இவர்களெல்லாம் வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருந்தார்களா?
உண்மையை உணர்பவர்களுக்கே வெளிச்சம்.
சாதிக்கு என்றாலும் மதத்துக்கு என்றாலும் வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்கள் தமிழுக்கும்
தமிழருக்கும் என்றால் ஏன் அப்படி வரமாட்டேன் என்கிறார்கள்? மனிதர்களே சூழ்நிலைக்கு ஏற்ப
மாறும் விந்தையானவர்கள்தான் போல் இருக்கிறது. நான் சில சமயம் நினைத்துப் பார்ப்பதுண்டு.
வெளிநாட்டு உடை வேண்டாம் என்று தீயிலிட்டு கொளுத்தியவர்களின் வழிவந்த மக்கள் வெளிநாட்டு
துணிகளை வாங்குவது மட்டுமின்றி அதைக் கிழித்தும் போட்டுக் கொள்ளும் நிலைக்கு வந்து
விட்டார்கள்.
வெள்ளையனே வெளியேறு என்று வெள்ளையனை வெளியேற்றி விட்டோம். சிலர் தமிழில்
ஆங்கிலம் கலந்து பேசுவதை ஏதோ தமிழையே அழித்து விடுவதைப்போல் பேசுகிறார்கள். தமிழை
எந்தக் கொம்பனாலும் அழித்து விடமுடியாது. ஒருசில ஆங்கில வார்த்தைகளிக் கலந்து பேசுவதால்
தமிழ் அழிந்திடாது. இந்த வழக்கம் தமிழரிடம் மட்டும் அல்ல மற்ற மொழி பேசும் வேற்று
மாநிலத்தவரிடமும் வேற்று நாட்டினரிடமும் இருக்கவே செய்கிறது. இதற்கெல்லாம் காரணம்
உலக அரங்கில் ஆங்கிலம் வியாபார மொழியாக கோலோச்சுவதேயாகும். தமிழில் ஆங்கிலம்
கலந்துபேசுவது தவறென்றால் வெள்ளையனே வெளியேறு என்று அன்று வாய்கிழியப் பேசிவிட்டு
இன்று வெள்ளையன் ஊரிலேயே வந்து குடியேறுவதும் கோவில் கட்டுவதும் எந்தவகை நியாயம்.
வெள்ளையர்களை வெளியேறச் சொன்னதற்கு காரணம் நம்நாட்டை கொள்ளையடிக்கிறார்கள்
என்பதே. இப்போது நம்மவர்களே நம்மைக் கொள்ளையடிக்கிறார்களே. இவர்களை என்ன செய்வது
எங்கே நாடு கடத்துவது.
ஆதலால் சந்தர்ப்பவாதிகளின் மதத்துக்காகவும் சாதிக்காகவும் வடிக்கும் முதலைக் கண்ணீரை
நம்பி தமிழர்களே பிளவுபட்டு அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக தமிழுக்கும் தமிழருக்கும்
தீங்கிழைக்கும் எம்முயற்சியிலும் இறங்காதீர்கள். தமிழர் பெருந்துயரில் மூழ்கி தமிழினமே அழிந்து
கொண்டிருக்கையில் குரலற்று போனவர்கள் இன்று கொக்கரிப்பதன் பொருளென்ன? பொங்கு
தமிழருக்கு இன்னல் நிகழ்ந்தால் சம்காரம் நிக்ழும் என்று சங்குபோல் முழக்கமிட்டு சந்தர்ப்பவாதிகளின்
குரலை உங்கள் குரலால் ஒடுக்கிடுவீர்!

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *