Saturday, February 24, 2018

.
Breaking News

கல்…புல்…காகம்…10…..நாவல்!… சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்…காகம்…10…..நாவல்!… சங்கர சுப்பிரமணியன்.
எல்லாம் நினைத்தபடியா நடக்கிறது? அதுபோல்தான் உலகநாதன் நினைத்ததற்கு மாறாகவே எல்லாம் நடந்தது.
ஒருவாரத்துக்கள் எல்லா வேலைகளும் முடிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நடக்காமல் நெல் அறுவடையும்
தோப்பில் தேங்காய் பறித்தலும் இரண்டு வாரத்துக்கு இழுத்துச் சென்றது. இது புரியாமல் மனோன்மணி
ஏதேதோ பேச ஆரம்பித்தாள்.
“என்ன அண்ணா, நான் சொன்னா மட்டும் உங்களுக்கு கோபம் வருது, ஆனா நடக்கிறத பார்த்தா நான் சொல்றது
தானே இங்கே நடந்துகிட்டு இருக்கு”
“அப்படி என்ன இங்க நடக்குது?”
“ஒரு வாரம் கழித்து மதுரைக்கு போகிறேன்னு சொன்னீங்க. இப்ப வாரம் ரெண்டு ஆகியும் இன்னும் மதுரைக்கு
போறமாதிரி தெரியலயே”
“ஓ! அத சொல்றியா? என்னம்மா நீ, நீ இங்க பொறந்து வளந்தவதானே. அறுவடையும் தேங்காய் பறித்தலும்
ஒரு வாரத்துக்குள் முடிந்த்துவிடும் என்று எதிர்பார்த்தேன். முன்போல் இல்லை இப்போது. தென்னைமரம் ஏறும்
ஆட்கள் கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாகி விட்டது இப்போதெல்லாம். அதற்கு ஆளைத்தேடிப் பிடிக்க
கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. அதுதான் சொன்னபடி ஒருவாரத்துக்குள் வேலை எல்லாம் முடியல.
இதக்கூட புரிஞ்சுக்காத பொண்ணா அம்மா நீ” என்று வேதனைப்பட்டார் உலகநாதன்.
“யார் மீதும் எனக்கு வருத்தமில்ல அண்ணன். என் நிலமையை சொன்னேன் அவ்வளவுதான்”
“உன் நிலைமையை அண்ணன் மறக்கவில்லை. அண்ணனுக்கு எல்லா வேலைகளும் முடிஞ்சுபோச்சு நாளைக்கு
அப்பாவும் நானும் போகப்போறோம்” என்று சொல்லிவிட்டு தங்கையின் தலையை பாசத்துடன் தடவினார்.
தூங்கா நகரம் என்று மதுரைக்கு இன்னொரு பயனும் உண்டு. இரவிலும் ஆட்கள் நடமாட்டத்திற்கு எவ்வித
குறைவும் இருக்காது. திருநெல்வேலியிலிருந்து மாலை ஆறு மணிக்கு புறப்பட்டவர்கள் மதுரைக்கு பன்னிரெண்டு
மணிக்குவந்து சேர்ந்தார்கள். வரும் வழியெல்லாம் கார் டிரைவரை மாட்டு வண்டிபோல ஓட்டுவதாக திட்டிக்கொண்டே
வந்தார் உலகநாதன். எப்படியும் பத்து பத்தரைக்குள் போய்விடலாம் என்று எண்ணியவருக்கு நள்ளிரவில் போய்
நிற்பது என்னவோபோல் இருந்தது. மதுரையை அடைந்து பழங்காநத்தத்திலிருந்த சம்பந்தியின் வீட்டை
அடையும்போது நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
இந்தநேரத்தில் யார்வந்து கதவைத் தட்டுவது யாரென்று புரியாது வந்துட்டேன்…வந்துட்டேன் என்று குரல்
கொடுத்தபடியே வந்து கதவைத் திறந்தார் குணசேகரனின் தந்தை. சம்பந்தியைக் கண்டதும் அந்த நள்ளிரவிலும்
முகமலர்ந்தபடியே வாங்க சம்பந்தி வாங்க என்று வரவேற்றார்.
“என்ன சம்பந்தி இப்படி திடுதிப்பென்று. வருவதாக தகவல் ஒன்றும் சொல்லலையே.” என்றவர் உலகநாதன்
பக்கம் திரும்பி “என்ன தம்பி ஊருல எல்லாம் சௌக்கியம்தானே? என் மருமகள் பேரன் எல்லோரும் எப்படி
இருக்கிறார்கள்?” என்று விசாரித்தார்.
“ஊருல எல்லம் சௌகரியம்தான் மாமா. உங்கள் மருமகள்தான் கோபமாக இருக்கிறாள். மதிரையிலிருந்து
எந்த தகவலும் இல்லை. நாங்களும் எவ்வித முயற்சியும் எடுக்காமல் சும்மா இருப்பாதாக வேதனைப் படுகிறாள்.
அவளுக்கு என்ன தெரியும் நாம் தொடர்பில் இருந்துகொண்டுதான் இருக்கிறோமென்று. பாடாய்ப்படுத்துகிறாள்.
அவள் கவலை அவளுக்கு. இதற்குமேலும் சமாளிக்கமுடியாது என்றுதான் நாங்கள் புறப்பட்டு வந்துட்டோம்.
இரண்டு வாரத்துக்கு முன்பாகவே வந்துருப்போம் சம்பா அறுவடை தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பது
போன்று அடுக்கடுக்காய் வேலை இருந்துகொண்டே இருந்ததால்தான் வரமுடியவில்லை. உங்கள் பேரன்
நன்றாகவே இருக்கிறான். விளையாட்டு பிள்ளைதானே அவன். ஆனால் சிலசமயம் அப்பாவைப் பார்க்கணும்
தாத்தாவைத் தேடுது மதுரைக்கு போகலாம் என்பான். நாங்களும் போகலாமென்று சொல்லி சமாதானப்
படுத்துவோம்.” என்று விவரமாக சொல்லிமுடித்தார்.
உலகநாதன் பேசிமுடித்ததும் “சம்பந்தி மாப்பிள்ளை எப்படி இருக்கார். ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?”
என்று கேட்டார் உலகநாயகம்.
இது எதிர்பார்த்த கேள்விதான் என்றாலும் கண்கலங்கிய சம்பந்தி, “என்னத்த சொல்றது. ஏதவது முன்னேற்றம்
ஏற்படாதா. இன்றைக்கு குணமாகிவிடுவானா நாளைக்கு குணமாகிவிடமாட்டானா என்று என்னியபடியே
நாளையும் பொழுதையும் கழித்துவிடுகிறோம்” என்று சொல்லி கண்ணீர் வடித்தார் சம்பந்தி.
அவர் அப்படிச்சொன்னதும் உலகநாதனும் அவரது அப்பாவும் கண்கலங்க அங்கே ஒருவிதமான இறுக்கமான
சூழ்நிலை ஏற்பட்டு எல்லோரும் அமைதியாய் இருக்க சிறிதுநேரத்துக்கு ஒரு அமைதியான நிலையேற்பட்டது.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *