Tuesday, February 20, 2018

.
Breaking News

அவளும்நானும் அந்தமுட்டையும்!… ( சிறுகதை ) விமல் குழந்தைவேலு.

அவளும்நானும் அந்தமுட்டையும்!…  ( சிறுகதை )  விமல் குழந்தைவேலு.

எனக்கும் ஒரு காதலி இருந்தாள். அவள் பெயர் மலர். …

என்ன சிரிப்பு? இருந்திருக்க கூடாதா?
இருந்தது . நம்பித்தான் ஆகணும் .

அப்பெல்லாம் வாட்சப் பேஸ்புக் , இன்ரநெற் ருவிட்டர் எல்லாமே எங்களின் நோட்புக்தான்.
இன் புக்குக்குள்ளால் பரிமாறப்படும் லெற்றர்தான் நாங்கள் பரிமாறிக் கொள்ளும் மெசேஜ்.

நான் ஒன்றும் ஜெமினி சாவித்திரி காலத்து ஆளில்லை. ஜெய்சங்கர் ஜெயசித்ரா காலத்தில் இருந்து மைக் மோகன்அமலா காலத்தில் நடந்ததென்பதால் இந்த கதையும் கறுப்பு வெள்ளையும் கலருமாகவே சொல்லப்படும். கதையொன்றும் காதல் காவியமாகவெல்லாம் இல்ல. சாதா கதைதான்.

மலருக்கும் எனக்கும் அது என்பதை எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த விசையமென்றுதான் நாங்கள் நினைத்திருந்தோம். பாவி மலர் போட்ட முட்டையால்தான் எல்லாமே பாழானது.

அப்பெல்லாம் இப்போதுபோல சினிமா, பார்க், பீச் ,கோப்பிபார் , என்றெல்லாம் சுத்த, சந்திக்க முடியாது. ஆக கூடியது நோட்புக் கொடுத்துவாங்கும் சாட்டில் கேற்றடியில் சந்திப்பு மட்டுமே சாத்தியம் .

வெளிப்பயண சந்திப்பெற்றால் அது பாடசாலையால் செல்லும் சுற்றுலா நாட்களில் மட்டுமே சாத்தியம்.
பாடசாலையால் அம்பாறை கரும்பு பார்ம் போனபோது அடர்ந்த கரும்பு ஒற்றையடிப் பாதைகளில் அவளும் நானும் ஒட்டியபடி நடந்ததும், பொலன்நறுவ பராக்கிரமபாகுவை பார்த்து விட்டு கைகோர்த்தபடி படிகளில் இறங்கி வந்ததும் , வாழைச்சேன காகிதஆலை இயந்திரங்களின் இரைச்சலுடன் எங்கள் காதல் வார்த்தைகளை கலக்க செய்ததும், உகந்தைக்கு போன போது பெருமழை வெள்ளத்தில் வாகனம் நின்றுவிட பகல் இரவாகிய அந்த மழைக்காலிருட்டில் ஒரு குடைக்குள் இணைந்து போனதும், தூரத்து மேகத்தையும் , மரங்களையும் யானைக்கூட்டமென நினைத்து இருவர் இடுப்பும் இருவர் கைகளுக்குள்ளாக்கி நடந்நது………….. ……..
எல்லாமே நேற்று போலவே மனதில் நின்றாடுகிறது.

சிக்கின்65, பீட்சா, பர்கர் இல்லாத காலம் . சுற்றுலா பயணங்களுக்கு வீட்டிலிருந்துதான் சாப்பாடு கொண்டுபோக வேண்டும்.
எப்போதும் எல்லாரும் ஒன்றாக இருந்தே சாப்பிடுவோம் ஒருவருடையதை மற்றவர் பங்கிட்டு .சாப்பாடுகளில் ஒரு முட்டை கட்டாயம் இருக்கும். மலரின் பார்சலில் மட்டும் இரண்டு முட்டை .யாரும் கவனியாதநேரம் பார்த்து ஒரு முட்டையை எனக்கு கடத்தி விடுவதே மலரின் பழக்கம் .
ஒலுவில் தும்பு தொழில்சாலைக்கு போயிருந்த நாளில் மதியஉணவு வேளையில் எனக்கு மலர் முட்டை போட்டதை கண்டுவிட்டார்கள்.

அடுத்த நாள் பாடசாலை கக்கூஸ் சுவரில் நானும் மலரும் நடுவில் முட்டையும். கக்கூஸ் நாறியதோ இல்லையோ நாங்கள் இருவரும் நன்றாகவே நாறினோம்.
இதன் பின்னர் நாங்கள் இருவரும் பேசாமல் போனதும், இணையாமல் விட்டதற்குமான காரணங்களின் கதை பெரிய கதை அவைகளை பிறகு பேசலாம்.

=======================================

நான்கு வருடங்கள் முன்பு எனது மூத்த தமைக்கையின் மரண செய்தி அறிந்து திடீரென ஊர் போயிருந்தேன்.
சா வீட்டில் இரவிரவாக சொந்தங்கள் நட்புகள் என நித்திரையில்லாமலே பொழுது விடியும்.
அன்றும் அப்படித்தான் காலையில் பத்து மணி வரை நான் எழும்பவில்லை.சகோதரன் தர்மன்தான் வந்து அவசரமாக எழுப்பினான்(சின்னம்மா மகன். சினேகிதர்கள் போலவே பழகுவோம்)

” பிரதர் பிரதர் எழும்புங்க பிரதர்” அவசரமாக எழுப்பியவன் “உங்கட பழைய ஆள் வந்திருக்கு வந்து பாருங்களேன் என்றான்.
சா வீட்டுக்கு துக்க சாப்பாடு கொண்டுவந்தால் கொண்டுவந்தவர்களும் சாப்பிட்டே போகவேண்டு மென்பது எங்கள் சம்ரதாயங்களில் ஒன்று. இல்லையென்றால் கொண்டு வந்ததை அவர்களிடமே திரும்பி கொடுத்தனுப்பி விடுவார்கள்.

நான் எழும்பி முகத்தை கழுவிக்கொண்டு வருகிறேன்.
மண்டபத்துக்குள் பெண்கள் வரிசையில் இருந்து சொதி சம்பலுடன் இடியப்பம் சாப்பிடுகிறார்கள்.
ஒரு பெண்குழந்தை அருகே மலர்.பக்கத்தில் அவளின் அக்காவும்.
என்னை கண்டதும் “வாங்க வெளிநாட்டு மாப்பிளை எப்பிடி எங்களையெல்லாம் நினைவிருக்கோ ?”மலரின் அக்கா என்னை கலாய்க்கதொடங்க மலர் ஒரு புன்னகையுடன் பக்கத்து குழந்தைக்கு இடியப்பத்தை தீத்திக் கொண்டிருந்தாள்.
முன்னால் போயிருந்த எனக்கும் மருமகள் சாப்பாட்டு தட்டை கொண்டுதர வாங்கிக் கொண்ட நான் பலரிடம் கேட்டேன்.
“என்ன மலர் தலையில ஒரு வெள்ளையும் காணயில்ல நல்ல மை போல ?”
“ம்….எங்களுக்காவது இருக்கு அடிக்கிறம். அங்க அடிக்கிறதுக்கே எதுவுமில்லாமல் அம்மி கல்ல போல இருக்கே என்ன நடந்த?”
“எல்லாம் உன்ர யோசினையாலதான்.”
” க்கும்…. நல்லா யோசிச்சார் இவர்”
பக்கத்து குழந்தை ஊட்ட போன சாப்பாட்டை
போதுமென்று மறுக்கிறது.
“இது ஆரு குழந்தை உன்னோடதோ ?”
“ஏன் இருக்கக்கூடாதோ?”
“அதெப்படி நான் உனக்காக காத்துக்கொண்டிருக்க நீ கல்யாணம் கட்டுவ?”
மற்ற எல்லாபெண்களும் சிரிக்க
” எண்ட அழகே…. இவர் மட்டும் சீதனத்துக்கு ஆசைப்பட்டு யாழ்ப்பாணத்தாள முடிப்பாராம் நாங்க இவர் வருவாரெண்டு காத்திருக்க வேணுமாம். சட்டத்த பார் ”
இன்னும் பல பேசினோம்.
” எண்ட பேத்திடா மகள்ற மகள் ” என்றுகொண்டு குசினிக்குள் போக எழும்பியவள்
” இந்தா கொக்கை அள்ளி வச்சிருக்கா ஆரு தின்னுறதெண்டு வைச்சாவோ தெரியா?”
மலர் தூக்கி போட்ட முட்டை வந்து விழுந்தது என்தட்டில்.
முதல்ல இருந்தா… ?
இத்தன வயதாகியும் மலர் முட்டை போட்றத்த நிறுத்தவேயில்ல.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *