Sunday, January 21, 2018

.

ஜெ. அப்பல்லோ மருத்துவமனைக்குப் போவதற்கு முன்பு போயஸ் கார்டனில் கீழே தள்ளப்பட்டதால் சுயநினைவை இழந்தாரா?

ஜெ. அப்பல்லோ மருத்துவமனைக்குப் போவதற்கு முன்பு போயஸ் கார்டனில் கீழே தள்ளப்பட்டதால் சுயநினைவை இழந்தாரா?
போயஸ் கார்டனில் ஜெ.வுக்கு நம்பிக்கைக்குரியவராகவும் செல்வாக்குமிக்கவராகவும் இருந்தவர் பெருமாள்சாமி. கார்டனில் அவருக்கு தெரியாத ரகசியங்களே இல்லை என்கிறார்கள் ஜெ.-சசி தரப்புக்கு நெருக்கமானவர்கள்.
ஜெ.வின் பயணத்தில் உள்ள மர்மங்களைப் பற்றி விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனில் ஆஜராக வரும் ஜெ.வின் பாதுகாவலரான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமிபற்றி பேசும்போது, இப்பொழுதும் கார்டன் தரப்பினர் பயபக்தியுடன்தான் பேசுகிறார்கள்.
ஜெ.வும் ராஜீவ்காந்தியும் ராசியாக இருந்த காலகட்டத்தில் ஜெ.வின் பாதுகாப்புக்கென ஒரு “கருப்புப் பூனை படை’ இருந்தால் நல்லது என ராஜீவ் காந்தி நினைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு ஜெ.வுக்கான “இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அடிப்படையில் ஜெ.வின் பாதுகாப்பு படையை அமைக்க, ராஜீவ்காந்தியின் கமாண்டோ பிரிவில் பணியாற்றிய மனோகரன் என்கிற அதிகாரியை மத்திய அரசு, தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அவர் ஜெ.வுக்காக ஒரு கமாண்டோ பிரிவை உருவாக்கியதோடு ஒரு காவல் பிரிவையும் உருவாக்கினார்.

தற்பொழுது சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையாளராக இருக்கும் அந்த மனோகரன் உருவாக்கிய காவல் பிரிவில் இடம்பெற்ற ஆய்வாளர்தான் பெருமாள்சாமி. இவருடன் பங்கேற்ற மற்றொரு ஆய்வாளர் திருமலைச்சாமி. போலீசின் வழக்கமான முரட்டுத்தனம் இல்லாமல் உயர் சமூகத்தைச் சேர்ந்த இவர் வழவழப்பாக இருந்தது ஜெ.வுக்கு பிடித்துப் போனது. அத்துடன் இவருடன் சேர்ந்து பயணிப்பது ஜெ.வின் ராசிக்கு பொருத்தமானது என ஜோதிடர்கள் கூறியதால் வெள்ளையாக இருக்கும் பெருமாள்சாமியும் கறுப்பாக இருக்கும் திருமலைச்சாமியும் ஜெ.வின் பாதுகாப்புக்கு வரும் ராசியான சாமிகளானார்கள்.
1991-96 காலகட்டத்தில் ஜெ.வுடன் இணைந்த இருவருக்கும் ஜெ. மரணம் அடைந்த 2016 டிசம்பர்வரை அவரது ஒவ்வொரு அசைவும் தெரியும்.
ஜெ. மிகவும் ஆக்டிவ் ஆக வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில் நடந்தது முதல், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் தடுமாறி விழப் போனது வரையும் பெருமாள்சாமி ஜெ.வுடன் இருந்திருக்கிறார்.
ஜெ. கலந்து கொள்ளும் விழாக்களை முன்கூட்டியே சென்று மேடை அமைப்புகளை மேற்பார்வையிடுவது, அவர் எங்கே நிற்பார் எப்படி உட்காருவார், அவரது முழங்கால் வலிக்கேற்றவாறு இருக்கைகளை ஸ்பெஷலாக எடுத்துச் சென்று போடுவது, அவரது கடைசி தேர்தல் பிரச்சாரமான 2016 தேர்தலில் அதிக உயரழுத்த மேடைகளில் ஏறுவதற்கு ஏற்றவாறு ரகசியமாக ஒரு சிறிய “லிஃப்ட்’ ஒன்றை மேடைக்கு பின்புறம் அமைப்பது, விழா முடிந்ததும் பத்திரிகையாளர்கள் கண்களில் படாமல் மறைப்பது என ஜெ.வின் அசைவுகள் அனைத்திலும் இருந்தது பெருமாள்சாமி என்கிறார்கள் -காவல்துறை உயர் அதிகாரிகள்.
ஆரம்பத்தில் இருந்து இவருடன் இருந்த திருமலைச்சாமிக்கு திடீரென முக்கியத்துவம் குறைந்தது. ஜெ.வின் இறுதி நாட்களில் பெருமாள்சாமி எப்போதும் இல்லாத முக்கியத்துவத்தைப் பெற்றார். அதற்கு காரணம் ஒன்று இருக்கிறது. பெருமாள்சாமி எந்த விஷயமாக இருந்தாலும் ஜெ.வின் நேரடி கவனத்திற்கு கொண்டு சேர்த்துதான் காரியம் சாதிப்பார். திருமலைச்சாமியோ சசிகலாவின் கவனத்திற்கு கொண்டுசெல்வார். பெருமாள்சாமிக்கு அப்பொழுது உளவுத்துறை தலைவராக இருந்த டி.ராஜேந்திரன், வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையின் தலைவராக இருந்த தேவாரம், வீரப்பன் கதையை முடித்த விஜயகுமார் ஆகியோர் பழக்கம். அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி பெருமாள்சாமி தன்னை முதன்முதலாக ஜெ.வின் காவல்படைக்கு கொண்டு வந்த மனோகரனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். 2001-ம் ஆண்டு ஜெ. மறுபடியும் முதல்வராக வந்தபோது உளவுத்துறை அதிகாரியான ராஜேந்திரன் மூலம் மனோகரனை ஜெ.வின் பாதுகாப்பு படைக்கு வர விரும்பவில்லை என சொல்ல வைத்தார் பெருமாள்சாமி. மனோகரன் வந்தால் பெருமாள்சாமியின் திருவிளையாடல்கள் கார்டனில் நடக்காது. அதனால் மனோகரனுக்கு தெரியாமலே சதிவலை பின்னினார் பெருமாள்சாமி. மனோகரன் மீது நல்ல மதிப்பு வைத்திருந்த ஜெ., அவரது மறுப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு காஞ்சிபுரம், விழுப்புரம் என முக்கியமான மாவட்டங்களில் எஸ்.பி. பதவி கொடுத்தார். அதேபோல் தனது சகாவான திருமலைச்சாமி சசிகலாவோடு இணைந்து நடராஜனை முதல்வராக்கும் சதிக்கு துணை போனார் என உளவுத்துறை அதிகாரிகள் மூலம் ஜெ.வின் கவனத்துக்கு கொண்டு சென்றார் பெருமாள்சாமி. கடைசி ஆண்டுகளில் பூங்குன்றனுக்கு அடுத்தபடியாக ஜெ.வுக்கு நம்பிக்கை மிகுந்தவராக இருந்தார் பெருமாள்சாமி என்கிறார்கள் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள்.
தற்பொழுது துணை சூப்பிரண்டெண்ட் அந்தஸ்தில் முதல்வர் எடப்பாடியின் பாதுகாப்பு பிரிவில் பெருமாள்சாமி இருக்கிறார். ஜெ.வுக்கு எப்படியெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டதோ அதேபோல் எடப்பாடிக்கும் பாதுகாப்பு வழங்கிவரும் பெருமாள்சாமிக்கு ஜெ. பற்றிய எல்லா ரகசியங்களும் தெரியும். கடைசி காலகட்டங்களில் ஜெ.வின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் பத்து நிமிடம் கலந்து கொள்ளும் விழாவிற்கு அவரை மூன்று மணி நேரம் தயார் செய்து, மருத்துவ உதவிகளை மேற்கொள்வது எல்லாவற்றையும் பெருமாள்சாமி அறிவார். அந்த வேலைகளை செய்த இரண்டு வேலைக்காரப் பெண்கள் இன்றுவரை காணவில்லை. அவர்கள் பெருமாள்சாமியின் பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
ஜெ.வுக்கு உண்மையாகவே மகள் இருக்கிறாரா? ஜெ. அப்பல்லோ மருத்துவமனைக்குப் போவதற்கு முன்பு போயஸ் கார்டனில் கீழே தள்ளப்பட்டதால் சுயநினைவை இழந்தாரா? அந்த இரவு என்ன நடந்தது?
மருத்துவமனையில் ஜெ. எப்படி இருந்தார்? ஜெ.வின் நோய்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கித்தரும் பொறுப்பிலிருந்த பெருமாள்சாமிக்கு இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியும்.
“விசாரணைக் கமிஷனில் உண்மையை சொல்’ என எடப்பாடி உத்தரவிட்டால் அனைத்தையும் பெருமாள்சாமி கொட்டி விடுவார். ஜெ.வின் மரண உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். எடப்பாடி உத்தரவிடுவாரா? பெருமாள்சாமி சொல்வாரா? மர்மம் வெளிவருமா? என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *