Sunday, January 21, 2018

.

போகி பண்டிகையா… புகை பண்டிகையா? – புகை மூட்டத்தால் திணறிய சென்னை!

போகி பண்டிகையா… புகை பண்டிகையா? – புகை மூட்டத்தால் திணறிய சென்னை!
மார்கழி மாதத்தின் இறுதிநாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து  மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை ஆங்காங்கே குவித்து எரித்தனர். இதனால், கடும் புகை எழுந்து காற்றை மாசுபடுத்தி வருகிறது.
சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில்  இந்த ஆண்டு நகரையே திணற வைக்கும் அளவுக்கு, கடும் புகை மண்டலம் சூழ்ந்தது. மார்கழி கடைசி நாள் என்பதால் கடும் பனி மூட்டம் இருந்தது. இந்த அடர் பனியுடன் போகி புகையும் சேர்ந்ததால் சென்னை முழுவதும் சாலையே தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.
விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்க முடியாத அளவுக்கு புகை சூழ்ந்திருந்தது. ஓடுபாதையும் தெரியவில்லை. இதனால் இன்று அதிகாலை முதல் சென்னையில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்பவில்லை.
லண்டனில் இருந்து இன்று அதிகாலையில் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மொத்தம் 12 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சுமார் 30 விமானங்கள் தாமதமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகி புகை காரணமாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த புகை மண்டலத்தைப் பார்க்கும்போது, இது போகிப் பண்டிகையா அல்லது புகைப் பண்டிகையா என்று எண்ணத் தோன்றுகிறது.
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவையற்ற பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். அதன்பிற்கு வீட்டு வாசலைக் கழுவி, கோலமிடுவது வழக்கம்.
‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதுதான் போகியின் நோக்கம். வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்து எரிப்பது மட்டுமல்ல, மனதில் இருக்கும் தீய எண்ணங்களை நீக்கி, நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற அற்புத தத்துவமும் இதில் அடங்கி உள்ளது.
ஆனால், பொருட்களை எரித்து புகையை வெளியிடுவதுதான் போகி என்ற எண்ணம் மக்களிடையே வேரூன்றி விட்டது.  இதை சம்பிரதாயத்துக்காக செய்தால் பரவாயில்லை. அதிக அளவில் பொருட்களை எரித்து, சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை. குறிப்பாக, போகி என்ற பெயரில் காற்றை மாசுபடுத்தும் வகையில் டயர்கள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது, பட்டாசுகள் வெடிப்பது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *