Sunday, January 21, 2018

.

வடக்கில் 80 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி

வடக்கில்  80 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி
கடந்த மூன்றாண்டு காலத்தில் அரசாங்கம் அமுலாக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து திருப்தி அடைய முடியும். இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம்  கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றிரவு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்  ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது. தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்காமல், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது முக்கியமானதாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி , அரசாங்கம் நீதித்துறையின் நடுநிலையை பாதுகாப்பதால், சர்வதேச மனித உரிமை பேரவையின் நிலைமையை சாதகமாக மாற்ற முடிந்துள்ளதாகவும் கூறினார்.
வடக்கில் இராணுவத்தின் வசமிருந்த காணிகளில் 80 சதவீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. எனினும், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு பற்றியும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறதென ஜனாதிபதி தெரிவித்தார்.
சமகாலத்தில் தூய்மையான தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் தேவை உள்ளது. இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சீரான ஒழுக்கத்துடன் கட்டுக் கோப்பாக செயற்படுகிறது. சிறந்த முன் உதாரணங்களுடன் நேர்மையான அரசியல்வாதிகள் உருவாவது அவசியம். எதிர்வரும் தேர்தல்களில் தூய்மையான அரசியல்வாதிகளை தமது பிரதிநிதிகளாக தேர்;ந்தெடுப்பது வாக்காளர்களின் பொறுப்பாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி  ஜனாதிபதி என்ற ரீதியிலும், அரசியல் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலும் தேர்தல் சட்ட திட்டங்களையும், ஆலோசனைகளையும் முறையாக அமுலாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
நீதியான, நியாயமான தேர்தலை நடத்த வழிவகுப்பது இதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் அரசாங்கம் அமுலாக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து திருப்தி அடைய முடியும். இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இலங்கை நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை அனுசரித்து வருகிறது. இதன் காரணமாக கூடுதல் அனுகூலங்கள் கிடைத்து வருகின்றன.
இவ்வாண்டு பெருந்தொகை கடனை மீளச் செலுத்த வேண்டியிருக்கிறது. இது தொடர்பான சவால்களை சிறப்பாக சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். முன்னைய காலங்களில் எழுந்த சில சவால்களை வெற்றி கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டது. பிரச்சினைகளின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் இயங்கியமை இதற்குக் காரணமாகும். சமகாலத்தில் நாட்டில் சுதந்திரமும், ஜனநாயகமும் நிலவுகிறது. இதன் காரணமாக எவரும் சுதந்திரமாக கருத்து வெளியிட முடியும். அரசாங்கம் எப்போதும் இலவச கல்வியை வலுப்படுத்தும் தனியார் கல்விக்கும் பரந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஊழல் மோசடி விசாரணைகளில் குறைபாடுகள் இருந்தாலும், அதில் பெரும் முன்னேற்றம் உள்ளது. நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குகின்றன. சட்டவாட்சியை வலுப்படுத்தி நாடென்ற ரீதியில் முன்னேறிச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எதிர்கால சந்ததிக்காக சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்ப சகலரதும் அர்ப்பணிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொலைக்காட்சி நிகழ்ச்சி மேலும் குறிப்பிட்டார்.

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *