Sunday, January 21, 2018

.

ஆன்மிக அரசியல் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த ஆன்மா-ஆன்மிகம் என்பதெல்லாம் பித்தலாட்டம்!

ஆன்மிக அரசியல் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த ஆன்மா-ஆன்மிகம் என்பதெல்லாம் பித்தலாட்டம்!
இப்போதைய தமிழ்நாடு அரசியல் நிலவரப்படி, தினமும் யாராவது ஒருவர் ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி ரஜினியை லைம்லைட்டுக்கு கொண்டு வந்தபடியே இருக்கிறார்கள்.
ஆன்மிகம்-பித்தலாட்டம் 
திருச்சி- பெரியார் மணியம்மை கல்லூரியில் ஜன.05-ஆம் தேதி உலக நாத்திகர்கள் மாநாடு நடந்தது. இதில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “””ஆன்மிக அரசியல் என்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த ஆன்மா-ஆன்மிகம் என்பதெல்லாம் பித்தலாட்டம்”’’ என்றார். அதற்கு முன்பு சென்னையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் “”ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் வெளிப்பாடுதான் ரஜினியின் ஆன்மிக அரசியல்” என பொளேரென போட்டுத் தாக்கினார்.
தி.மு.க. டென்ஷன்!
தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு, “தென்னிந்தியாவின் மூத்த தலைவர்’ என்றுதான் புகழும் கலைஞரை ஜனவரி 3-ந்தேதி சந்தித்தார் ரஜினி. மீடியாக்களில் பரபரப்பாக இருந்த இந்த சந்திப்பு, மு.க.ஸ்டாலினுக்கும், கோபாலபுரத்துக்கும் மகிழ்ச்சியானதாக அமையவில்லை. காலையிலிருந்து அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டு, மாலையில் கலைஞரின் உடல்நிலையைப் பொறுத்து அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டது. கலைஞருடனான சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த ரஜினி, “”புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, புதுக்கட்சி தொடங்குவதற்கு ஆசிர்வாதம் வாங்கினேன்” என்று சொன்னதை ஸ்டாலின் ரசிக்கவில்லை.
நலன் விசாரிக்க வருவதாக சொல்லிவிட்டு, புதுக்கட்சிக்கு ஆசிர்வாதம் வாங்கினேன் என்று ரஜினி சொல்வது சரியா என்கிற ரீதியில் கோபாலபுரத்தில் இருந்தவர்களும் ஆதங்கப்பட்டனர். ரஜினி புறப்பட்ட பிறகு, மீடியாக்களை சந்தித்த ஸ்டாலின், “”இது பெரியார்-அண்ணா-கலைஞர் பக்குவப்படுத்திய மண். இங்கே ஆன்மிக அரசியல் எடுபடாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் தோற்ற வரலாற்றை நாடு பார்த்துள்ளது” என்றார் சூடாக. ரஜினி விசிட்டின்போது அவருக்கு சால்வை எதுவும் போடப்படாததையும், ஒருவித ஒவ்வாமை வெளிப்பட்டதையும் சுற்றி இருந்தவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆர்.எம்.வீ. சந்திப்புக்குப் பின் 
ஜனவரி 03-ஆம் தேதி  கோபாலபுரம் இல்லத்தில் கலைஞரைச் சந்தித்த ரஜினி, மறுநாள் எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான ஆர்.எம்.வீரப்பனை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் ஆலோசனைகளை ஆர்.எம்.வீ.யிடமிருந்து கேட்டறிந்துள்ளார் ரஜினி.
ஆன்மிக அரசியல் குறித்து ரஜினியிடம் விளக்கமாகக் கேட்ட ஆர்.எம்.வீ., “”உங்களோட இந்த அரசியல் ஆரம்பத்தில் “பிரைட்’டாகத்தான் இருக்கும், ஆனா ஃபியூச்சர் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. ஏன்னா இது பெரியார், அண்ணா வளர்த்த திராவிடபூமி. இங்கே பகவத்கீதை நீதிமன்றங்களிலும் மேல்தட்டு வர்க்கத்திலும் மட்டும்தான் இருக்கு. பெரும்பான்மை மக்களுக்கு கீதைன்னா என்னன்னே தெரியாது. அதனால் நீங்களும் கீதையிலிருந்து ஸ்லோகம் சொல்வதைவிட்டுவிட்டு, தமிழ் வழியில் பேசினால்தான் திரும்பிப் பார்ப்பார்கள்” என பல்வேறு ஆலோசனைகளை ரஜினிக்கு வழங்கியுள்ளார். ரஜினியும் இதுகுறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறார்.
இதன் வெளிப்பாடுதான், பத்திரிகையாளர்களிடம் ஆர்.எம்.வீ. பேசும் போதுகூட, “””கட்சிப் பெயரையும் கொள்கைகளையும் ரஜினி அறிவித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், அந்தக் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிக் கூற முடியும்” என பட்டவர்த்தனமாகப் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட காவி சாமியார்களின் அரசியல் ஆலோசனைகள் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது என்றும் திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை போன்ற தமிழ்ப்பாடல்களை முன்னிறுத்தி இந்த மண்ணுக்கேற்ற ஆன்மிகத்தைப் பேச வேண்டும் என்றும் ரஜினிக்கு நெருக்கமான பலரும் தெரிவித்திருப்பதால், அரசியல் ரூட்டில் மாற்றம் காண நினைக்கிறார் ரஜினி.
மக்கள் மன்றமும் சௌந்தர்யாவும்
 
ரஜினி தினமும் ஏதாவது ஓர் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பும் வரிசையில் புதிய அறிவிப்பை கடந்த 06-ஆம் தேதி வெளியிட்டார். “அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ என இதுவரை இருந்தது, இனிமேல் “ரஜினி மக்கள் மன்றம்’ என பெயர் மாற்றமாகியுள்ளது. இந்த பெயர் மாற்றம், கட்சியின் பெயர், கொடியின் நிறம், நிறம் சொல்லும் செய்தி என அனைத்தையும் வடிவமைப்பது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாதான். சௌந்தர்யாவுக்குத்  துணையாக அவரது தோழிகள், ஐ.டி. படித்த இளைஞர்கள் கொண்ட படை, சென்னை- தேனாம்பேட்டையில் ராப்பகலாக இயங்கி வருகிறது.
30 பேர் டீம்
 
சௌந்தர்யா தலைமையில் ஒரு டீம் இயங்கினாலும் ரசிகர் மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர் வி.எம்.சுதாகர் தலைமையில் முரளி, சிவா, சம்பத், என்.எஸ்.ராமதாஸ், சூர்யா  ஆகியோர் அடங்கிய டீம் பதிவு செய்யப்படாத மன்றங்களை விரைவில் பதிவு செய்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், முறைப்படி உறுப்பினர் அட்டை வழங்குதல், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை உடனுக்குடன் தலைமைக்குத் தெரியப்படுத்துதல் போன்ற வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
ரஜினி மனைவி லதாவின் மேற்பார்வையில் மேல்தர மற்றும் நடுத்தர மக்களை எப்படி “அப்ரோச்’ பண்ணுவது, பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடியாக ரஜினியை எப்படி “ரீ-ஆக்ட்’ செய்ய வைப்பது என மற்றொரு டீம் ஜரூராக களம் இறங்கியுள்ளது. மேற்கண்ட இரண்டு டீம்களிலும் சேர்த்து 30 பேர் இருக்கிறார்கள்.
பின்னணி டீம் 
கள வேலைகளுக்கு ஆட்களை நியமித்துவிட்டாலும், அரசியலுக்கு பணமே பிரதானம் என்பது ரஜினிக்குத் தெரியாமலா இருக்கும்? அவரின் தெரிதலுக்கு ஏற்றாற் போல், சில கோடீஸ்வரர்கள் ரஜினியுடன் கைகோர்த்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சுரேஷ். பில்டிங் கட்டும் தொழிலில் கோடி கோடியாகக் குவிக்கும் சுரேஷ், ரஜினிக்கு மிக நெருக்கமானவர். பல வழிகளில் ரஜினியின் கட்சிக்கு ஃபைனான்ஸ் இன்சார்ஜ் இவர்தான்.
இதற்கடுத்த இடத்தில் இருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த லண்டன் தொழிலதிபரான  லைக்கா புரொடக்ஷன்ஸின் தலைமைச் செயல் அதிகாரியான ராஜு மகாலிங்கம். இவர் லைக்காவிலிருந்து விலகி, ரஜினியின் கட்சியில் சேரும் திட்டத்தின் பின்னணியில் இருப்பது லைக்கா ஓனர் சுபாஷ்கரன்தான்.
இவர்கள் தவிர, இப்போது புதிதாக ரஜினியுடன் ஓர் இளைஞர் வலம் வருகிறார், அவர் பெயர் சத்யா. ரஜினியின் மனைவி லதாவுக்கு பி.ஏ.வாக இருந்த இந்த சத்யா, முழுக்க முழுக்க ரஜினியின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பீட்டா போட்ட பிரேக் 
ரஜினி தரப்பு இப்படி ஸ்பீட் காட்டிக் கொண்டிருக்க, விலங்குகள் நல அமைப்பான பீட்டா ஒரு பிரேக் போட்டுள்ளது. ஞாயிறன்று மதுரை அழகர் கோவிலில் மாவட்டத் தலைவர் ரபீக் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கொதிப்பான பீட்டா, ‘””நீங்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அதே சமயம் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சிக்கு உங்களின் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருப்பதை உடனே நீங்க தடுத்து நிறுத்த வேண்டும்” என ரஜினிக்கு கடிதம் எழுதிவிட்டது.
இதென்னடா புதுவம்பு என நினைத்த ரபீக், ரஜினி சொல்வதற்கு முன்பாகவே கிடாவெட்டை ரத்து பண்ணிவிட்டு, “கிடா வெட்டுதான் இல்லை, ஆனா கறிவிருந்து கண்டிப்பாக உண்டு’ என்றார். கடையிலிருந்து இறைச்சி வாங்கி விருந்து வைக்கும் ஏற்பாடுகள் விறுவிறுப்பாயின.
பொறுப்பு வேணாம் 
ரஜினி மன்ற மாவட்டத் தலைவர்கள் ஓரளவு வசதி வாய்ப்புடன் இருந்தாலும் நகர, ஒன்றிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்போது அந்தப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கே கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என தலைமையிலிருந்து சொன்னதற்கு முக்கால்வாசிப்பேர் பொறுப்பு வேண்டாம் என மறுத்திருக்கிறார்கள்.
அப்படி பொறுப்பை மறுத்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியப் பொறுப்பாளர் ஒருவரிடம் இதுபற்றிக் கேட்ட போது, “”நான் எப்போதும் தலைவரின் ரசிகன்தான். கட்சி ஆரம்பிச்சதும் போஸ்டர் ஒட்டுவேன், கோஷம், ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு செலவு பண்ணுவேன். பொறுப்பு கொடுத்துட்டா ஏகப்பட்ட காசை இறைக்கணும். கல்யாண வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. பையன் இப்பத்தான் படிச்சு முடிச்சிருக்கான், அவனுக்கு ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணணும். இதையெல்லாம் யோசிச்சுத்தான் பொறுப்பு வேணாம்கிறேன்” என்றார்.
எல்லாப் பக்கமும் ரஜினி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. ரஜினிக்கோ ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.
-ஈ.பா.பரமேஷ்வரன்
படங்கள்: எஸ்.பி.சுந்தர், அசோக்

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *