Sunday, January 21, 2018

.

முருகபூபதியின் “பாட்டி சொன்ன கதைகள்” இலங்கையில் மூன்றாவது பதிப்பு வெளியீடு!

முருகபூபதியின் “பாட்டி சொன்ன கதைகள்”  இலங்கையில் மூன்றாவது பதிப்பு வெளியீடு!

முருகபூபதி 1997 இல் வெளியிட்ட பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம்) நூலின் மூன்றாவது பதிப்பு கொழும்பில் அண்மையில் வெளியாகியுள்ளது.

இலக்கியன் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலின் முதல் பதிப்பை மல்லிகைப்பந்தல் 1997 இல் சென்னையில் பதிப்பித்திருந்தது.

சென்னை குமரன் பதிப்பகத்தினால் அச்சிடப்பட்ட இந்நூல், சிறுவர் இலக்கிய வரிசையில் சென்னை நூலக அபிவிருத்தி சபையினால் அங்குள்ள ஆரம்ப பாடசாலைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு மீண்டும் ஒரு பதிப்பு வெளியானது.

இருபது வருடங்களிற்குப்பின்னர் குமரன் பதிப்பகத்தின் ஏற்பாட்டில் இலக்கியன் வெளியீட்டகத்தால் ஓவியங்களும் இடம்பெற்ற மற்றும் ஒரு பதிப்பு வெளியாகியுள்ளது.

சிறுவர்களை கவரும் வகையில் ஓவியர் ஆர். கௌசிகன் வரைந்த வண்ணப்படங்களுடன் பாட்டிசொன்ன கதைகள் மீண்டும் வெளியாகியிருக்கிறது. 1996 ஆம் ஆண்டில் பாரிஸில் இருந்து வெளிவந்த ‘ தமிழன்’ வார இதழில் பாட்டிசொன்ன கதைகள் வெளியாகி, முன்னர் நூலுருவானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

” வாய்மொழி மூலம் கதை என்று சொல்லப்பட்ட கலை தோன்றியதே இந்தப்பாட்டிமாரிடமிருந்துதான். தாங்கள் கண்டது, கேட்டது, அனுபவத்தில் அறிந்தது எல்லாவற்றையும் சேர்த்து செதுக்கிக் கதை பண்ணுவதில் இந்தப்பாட்டிமார்கள் தனித்தகுதி பெற்றுத்திகழ்ந்துள்ளதுடன், அக்கலையைக் காலங் காலமாக வாய்மொழி மூலம் தங்கள் பேரர்களிடம் சொல்லிச்சொல்லியே தக்கவைத்துக்கொண்டு வந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதொன்றாகும்”

– டொமினிக் ஜீவா – மல்லிகை ஆசிரியர்

” எவரும் எவராகவும் மாறமுடியாது. அவரவர் தத்தமது தனித்துவத்தை பேணவேண்டும். நீயா? நானா? உயர்வு என்ற

வாதத்தில் நன்மையும் விளையாது. பகைமைதான் வளரும். ஒரு கருமத்தை செய்துமுடிக்க தந்திரங்கள் பல செய்யக்கூடிய மூளையும் அவசியம். காட்டு ராஜா சிங்கத்தையும் மடக்கக்கூடிய வல்லமை தந்திர புத்தியுள்ள நரியிடம் இருக்கிறது. இவ்விதமாக உருவகம் மூலம் சொல்லப்படுகிறது. அரசியலையும் இக்கதைகள் தொட்டிருந்தாலும் எவரையும் வஞ்சிக்காத பாணியில் எழுதப்பட்டிருக்கிறது.”

எஸ்.கே. காசிலிங்கம் – தமிழன் ஆசிரியர்

” சிறுவர் இலக்கியங்கள் என்றாலே மரம், செடி, கொடிகள், மிருகங்கள் யாவும் பேசத்தொடங்கிவிடும். அதற்கு இப்புத்தகமும் விதிவிலக்கல்ல. அச்சூழல் சிறுவர்களை கவரக்கூடியவை. அவர்களுக்கு அக்கதைகளைக்கேட்பதில் ஆர்வம் அதிகரிக்கிறது”

எஸ்.கணேஷ் ஆனந்தன் – தினகரன் வாரமஞ்சரி

“பாட்டி சொன்ன கதைகள் புத்தகத்தில் உள்ள அத்தனை கதைகளையும் நான் படித்துச்சுவைத்தேன். அவை யாவும் சிறந்த, அறிவிற்கு விருந்தான அம்சங்களாகவே அமைந்திருந்தன. இக்கதைகளில் அறிவுறுத்தப்பட்டது சமுதாய சீர்திருத்தமே. கேள்விஞானத்தினால் பாட்டி சொன்ன கதைகளை உருவகம் என்ற இலக்கிய வடிவத்தில் சிறைப்படுத்த முனைந்ததன் விளைவாக அவை இப்போது எம்போன்ற சிறுவர்களின் கரங்களில் தவழ்ந்திடும் வேளையில் அவர்களின் அறிவுத்திறன் மென்மேலும் மெருகேற்றப்படுகிறது.”

கல்யாணி இரத்தின சிங்கம் – கடிதங்கள் நூல்

” ஆசிரியர் காட்டும் உண்மைகள் சிறுவர்களுக்குப்பொருத்தமான அறிவுறுத்தல்களாக இருக்கின்றன. ஆயினும் இவை அந்த அளவில் நிறைவுபெறுவனவாக தோன்றவில்லை. இவற்றுக்கு மற்றுமொரு பரிமாணமும் இருப்பது தெரிகிறது. இந்த நூலின் கதைகள் சிறுவர் மாத்திரம் அன்றி வளர்ந்தோரும் படிப்பதற்கு ஏற்றவை. ஆகவே, அவர்கள் படிக்கும்போது தத்தமது அறிவுநிலைக்கு ஏற்றவாறு புதிய உண்மை புலப்படும். தத்துவ

விரிவு நிகழும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு நோக்கும்போது இந்நூலின் கதைகள் சிறுவர் மாத்திரமன்றி வளர்ந்தோரும் படிப்பதற்கு ஏற்றவை- படிக்க வேண்டியவை என்பது நிதர்சனமாகிறது.”

வ.இராசையா ( கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டம் – தகவம்)

பிரதிகளுக்கு: இலக்கியன் வெளியீட்டகம்

Ilakkiyan Publishing House – 39, 36 th Lane, Colombo, Srilanka.

மின்னஞ்சல்: kumbhlk@gmail.com

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *