Sunday, January 21, 2018

.

கல்…புல்… காகம்…9…..நாவல்!… சங்கர சுப்பிரமணியன்.

கல்…புல்… காகம்…9…..நாவல்!… சங்கர சுப்பிரமணியன்.
அப்பாவும் தங்கையும் பேசிக்கொண்டிருப்பதை அருகிலிருந்து பார்த்தபடியிருந்த உலகநாதனுக்கு
பார்த்து பார்த்து நடத்தி வைத்த தங்கையின் திருமண வாழ்க்கை இப்படி பாழாய் போய் விட்டதே
என்ற துக்கம் தொண்டையை அடைத்தது. உறவினர்களும் நண்பர்களும் திருநெல்வேலியை விட்டு
அவ்வளவு தூரத்தில் மதுரைக்கு ஏன் தங்கையை கட்டிக்கொடுக்கிறாய் என்றெல்லம் கேட்டதற்கு
அவர் சொன்ன ஒரே பதில் மாப்பிள்ளைக்கு நல்ல உத்தியோகம் அத்தோடு மாப்பிள்ளை கண்ணுக்கு
லச்சனமாக இருக்கிறார் என்பதே. இப்போது அவரது ஒரு காலும் எடுக்கப்பட்டு சுய நினைவின்றி
பிதற்றிக் கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க்கையில் அவருக்கு தங்கையின் வாழ்க்கை இப்படியா
ஆகவேண்டும் என்ற எண்ணம் அவரை உலுக்கியது.
பெரும்பாலும் அக்காலத்தில் பெண்பிள்ளைகளை அருகிலேயே திருமணம் செய்து கொடுத்து
பக்கத்தில் வைத்து பார்த்துக்கொள்வார்கள். அதனால் உலகநாதன் குடும்பத்தினர் பெண்ணை வெளி
மாவட்டத்தில் கொடுத்ததற்கு பெரிய சீமையில் இல்லாத உத்தியோகமென்றும் இவர்கள் வசதிக்கு
ஏற்றபடி இங்கேயே ஒரு பண்ணையார் குடும்பத்தில் கொடுத்திருக்கலாம் என்று வம்பு பேசினார்கள்.
என்ன லச்சனமான மாப்பிள்ளை இங்கே என்ன ஆட்களெல்லாம் குரங்கு மாதிரியா இருக்கிறார்கள்
என்றும் கிண்டலும் செய்தார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் ஊர் வாயில் மெல்லுவதற்கு
அவல் கிடைத்த மாதிரி தங்கையின் நிலை ஆகிவிட்டதே என்ற நினைப்பும் ஒருபுறம் வாட்டியது.
இதையெல்லாம் நினைத்தபடி தங்கையை அவர் பார்க்கவும் அவள்,
“ஏன் அண்ணா நீங்களாவது ஒருமுறை மதுரைக்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்ற நிலைமையை
அறிந்து வரக்கூடாதா?’ என்று கேட்டாள்.
“என்னம்மா மனோன்மணி இப்படிச் சொல்லிட்ட. அதைப்பற்றி நான் நினைக்காமல் இருப்பேனா?”
” பின் ஏன் அண்ணா ஒருவரும் ஒரு முயற்சியும் எடுக்காம சும்மா இருக்கீங்க?”
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை மணி. அப்பாவுக்கு முன்போல் ஓடிஆடித் திரியமுடியல. வேறுயாரையும்
இதற்கு அனுப்ப முடியாது. நான்தான் போய்வரவேண்டும்……” என்று மெல்ல பேச்சை நிறுத்தினான்.
“அப்படின்னா போய் வரவேண்டியது தானே. இதைவிடவும் உங்களுக்கு முகியமான வேலை இருக்கோ?”
என்றாள்.
“உனக்கு தெரியாதது ஒன்றுமில்லை. சம்பாநெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராய் உள்ளது. அதற்கு
அறுவடைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். மேலக்கல்லூரில் தென்னந்தோப்பிலும் தேங்காய்
முற்றி பறிக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கும் நான் தான் போயாக வேண்டும். என்னதான் நமக்கு
பயந்து வேலைசெய்யும் நம்பிக்கையான ஆட்கள் இருந்தாலும் நேரில் சென்று கவனிக்கவிட்டால்
எல்லாம் சரியாக நடக்கும் என்று சொல்லமுடியாது” என்றதும்
“அவரவர்களுக்கு அவரவர்கள் வேலைதான் பெரிதாய் போயிற்று. என் நிலைமையைப்பற்றி யாரும் ஏதும்
கவலைப்படுவதாய் தெரியவில்லை” என்று விரக்தியாய்ப் பேசினாள்.
“அப்படியெல்லாம் நினக்கவில்லை. கண்டதையும் எண்ணி மனதை வருத்திக்கொள்ளாதே. அடுத்த வாரம்
நான் மதுரைக்கு போக அப்பாவும் நானும் முடிவு செய்துள்ளோம்” என்று
தங்கையையை ஒருவாறு அமைதிபடுத்தியபடி மற்ற பணிகளைச்செய்ய அங்கிருந்து புறப்பட்டார். நேரம்
தான் மனிதர்களின் மனநிலையை மாற்றுகிறது. அன்பான தங்கை இப்படிஎல்லாம் அவனிடம் பேசியது
கிடையாது. நடந்த விபத்தும் கணவரின் வீட்டிலிருந்து சரியான தகவல் எதுவும் அவளுக்கு தெரியாததாலும்
உண்டான சூழலே அவளை இப்படியெல்லாம் பேசவைக்கிறது. உலகநாயகம் குடும்பதாருக்கு மதுரையில்
இருக்கும் நிலவரத்தை அப்போதைக்கு அப்போது தெரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால்
மனோன்மணியின் காதுக்கு எந்த விபரத்தையும் கொண்டுசெல்வதில்லை. இப்போதுதான் விபத்து நடந்த
அதிர்ச்சியிலிருந்து மீண்டு உடல் நிலையில் சற்று முன்னேறி இருக்கிறாள். அதற்குள் இன்னொரு
அதிர்ச்சியை தற்போதைக்கு கொடுக்கவேண்டம் என்ற காரணத்தினால் மட்டுமே உண்மை நிலவரத்தை
மனோன்மணிக்கு சொல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.
ஆனால் எப்படியாவது என்றாவது ஒருநாள் சொல்லித்தானே ஆகவேண்டும். உடனே சொல்லவும் துணிவில்லை.
அதனால் காலங்கடத்தி வந்தார்கள். எனவே ஒரு வாரம் கழித்து மதுரை சென்று வந்தபின் அப்போதுதான்
குணசேகரனின் நிலைபற்றி சொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
(தொடரும்)

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *